25 வருடங்களுக்குப் பிறகு அந்த இடத்தைப் சென்னையிலிருந்து திரும்பி வந்து கொண்டுருந்த போது பார்த்தேன். சொந்த ஊர் நினைவு வந்தது. செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்குள் ரயில் உள்ளே நுழையும் போது நான் பார்த்த ரயில் நிலையத்திற்கு வெளியே தெரிந்த நடைமேடையும் அங்கேயிருந்து பார்த்த அந்த நீண்ட ஏரியும் எனது ஊரில் உள்ள ரயில் நிலையத்தை ஞாபகப்படுத்தியது.
சென்னையிலிருந்து ஒரு மணி நேரம் பயணித்து செங்கல்பட்டு அருகே வந்த போது தான் மனதிற்குள் குளிர்ச்சி வந்தது. ரயில் பயணத்தில் நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டு வந்த காட்சிகளில் நெருக்கியடித்துக் கொண்டுருக்கும் வீடுகளும், வாகன சப்தங்களும், ஏதோவொரு தொழிற்சாலையின் புகையுமாக நாட்டின் தொழில் வளர்ச்சி என்பதை எனக்குள் நினைவு படுத்திக் கொண்டுருந்தது.
சென்னையின் விஸ்தீரணம் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் வாழ முடியாத, வாய்ப்புகளை தேடிக் கொண்டுருப்பவர்களுமாய் இந்த நகரத்தை மொய்த்து இன்று உள்ளே வாழும் மக்களின் தொகை 50 லட்சம். தினந்தோறும் வந்து போய்க் கொண்டுருப்பவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய பத்து லட்சம் பேர்கள்.
அடிப்படை கட்டுமானம் என்று ஒன்று சென்னையில் இல்லவே இல்லை. அது குறித்த அக்கறையும் ஆட்சிக்கு வரும் எந்த அரசுக்கும் இருப்பதாக தெரியவில்லை. சென்னைக்கு வரவே பலரும் விரும்புகிறார்கள். வந்தவர்கள் எல்லோரும் தங்க விரும்புகிறார்கள். தங்களுக்கான வாழ்க்கையை வாழ ஆசைப்படுகிறார்கள். வாய்ப்புகளை தேடி அலைகிறார்கள். முடியாதவர்கள் சாலையோரத்திலும், கூவத்தின் ஓரத்திலும் போய்ச் சேர்ந்து விடுகிறார்கள்.வாழ்க்கையில் பொருளாதார ரீதியில் வளர்ந்தவர்களை காட்டி காட்டி ஊரில் இருப்பவர்களுக்கும் ஆசையை அதிகமாகக்கி விடுகிறார்கள்.இதன் மூலமே இந்த சென்னை இன்று வரையிலும் ஒவ்வொருவரையும் தினந்தோறும் வரவழைத்துக் கொண்டுருக்கிறது.
நான் பார்த்த அந்த நீண்ட ஏரியின் பிரமாண்டமும், அதில் நிறைந்திருந்த தண்ணீரும் எனக்கு அதிக சந்தோஷத்தை தந்தது. உள்ளே நுழைந்த ரயில் மெதுவாக நகர்ந்து கொண்டுருந்தது. நிதானமாக ரசிக்க முடிந்தது. ரயில் பாதை நடைமேடையிலிருந்து பார்க்கும் போது சிறுவனமாக மாறி இறங்கி ஓடிப்போய் ஒரு ஆட்டம் போட்டுவிட்டு வரலாமா? என்று தோன்றியது. மனதிற்குள் புத்துண்ரச்சி பரவியது. ரயில் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்து சிறுவனைப் போல குதுகலித்த என்னை அருகில் இருந்தவர் வினோதமாக பார்த்தார்.
சொந்த ஊரில், ஊருக்கு வெளியே தான் ரயில் நிலையம் இருக்கிறது. இரண்டு ஊருக்கு நடுவே கண்டணூர் - புதுவயல் என்று தென்னக ரயில் வரலாற்றில் ஒரு குட்டியூண்டு ரயில்நிலையம் அது. பரபரப்பான ரயில் மார்க்கமல்ல. எந்த முக்கியத்துவமும் இல்லாதது. காரைக்குடியிலிருந்து மயிலாடுதுறை மார்க்கமாக சென்னை செல்லும் கம்பன் எக்ஸ்பிரஸ். எனக்கு விபரம் தெரிந்த நாளிலில் இருந்து அதே வேகத்தில் தான் இன்று வரை சென்று கொண்டுருக்கிறது. உலகம் முழுக்க மாற்றங்களை தனதாக்கிக் கொண்டேயிருக்க இந்தியாவின் ரயில்வே துறைக்குள் மட்டும் எதுவும் அத்தனை சீக்கிரம் எட்டிப்பார்ப்பதில்லை.
நாம் விஞ்ஞானத்தின் உதவியால் பல விதங்களிலும் வளர்ந்து விட்டோம். ஆனால் நாமே ஒரு குப்பை தான் என்பதை வெளியிடத்தில் நடந்து கொள்ளும் முறையை வைத்து எளிதாக கண்டு கொள்ள முடியும். சக மனதிர்களைப் பார்க்கும் போது பழகும் போது எளிதாக புரிந்து கொள்ள முடியும். அரசாங்க சொத்து என்றால் அதில் காட்டும் அக்கறையற்ற தன்மையை வைத்தே கண்டு கொள்ள முடியும். அவசரம் என்ற பெயரில் காணும் இடங்களில் மிருகம் போல தூக்கி கொண்டு நிற்க முடியும். பின்னால் வருபவர்களை கவனிக்காமல் துப்ப முடியும். பாதி வைத்த உணவுகளை அப்படியே போட்டு விட்டு இருக்கும் இடத்தை ஈ மொய்க்க உதவும் நம்மவரைத் தவிர வேறு எவரையும் உதாரணம் காட்ட முடியாது.
ஆனால் ஊரில் உள்ள ரயில் நிலையத்தில் கூட்டம் குறைவான காரணத்தால் குப்பைகளுக்கும் அசிங்கத்திற்கும் வாய்ப்பு குறைவு. பல சமயம் இந்தப் பக்கத்தின் வழியாக சரக்கு வண்டிகள் மட்டுமே வந்து போகும்.
எனது ஊரிலிருந்து சென்னைக்குச் செல்ல நினைக்கும் குறிப்பிட்ட இன மக்கள் தான் இந்த ரயிலை அதிகம் பயன்படுத்துவார்கள். அவர்கள் குடும்பத்துடன் இந்த ரயிலில் தான் செல்வார்கள். ஆனால் பெரும்பாலும் நான் பார்த்தவரைக்கும் இன்று வரைக்கும் தமிழ்நாட்டில் ரயில் மூலமாக பயணிப்பவர்கள் குறைவு. வேகம் ஒரு காரணமோ? நேர பிரச்சனையோ? எப்போதும் பலரும் பேரூந்துப் பயணத்தைத்தான் இன்று வரையிலும் விரும்புகிறார்கள். இப்போதுள்ள கட்டண வித்தியாசங்களால் மட்டுமே பலரும் இப்போது ரயிலை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
இந்த நீண்ட ரயில் நடைமேடை தான் எனக்கு ஞானம் தந்த போதிமரம். ஒரு முனையில் நடக்க ஆரம்பித்தால் மறுமுனை வரைக்கும் ஐந்து நிமிட பயணத்தில் அடைய முடியும். சாயங்கால நேரத்தில் அங்கே வரும் ஏழெட்டு பயணிகளைத் தவிர வேறு எவரும் அந்தப் பக்கம் கூட எட்டிப் பார்க்க மாட்டார்கள். இந்த இடம் தான் என எதிர்கால கனவுகளை அடைகாத்த ஆலமரம். வீட்டுக்கு பின்புறம் தோட்டம் இருந்தாலும் பள்ளி வரைக்கும் பள்ளிக்கூட மைதானம் தான் சாயங்கால சமயங்களில் படிக்க உதவியது. பல தரப்பு மாணவர்களும் வந்து விடுவார்கள். பெரும்பாலும் பள்ளி முடிந்ததும் விளையாட்டு பிரியர்களின் புகலிடமாக அந்த மைதானம் இருந்தது. கல்லூரி வந்த போது நண்பர்களும் மாறினார்கள். இடமும் மாறியது. கல்லூரி பாடங்களை படிக்க உதவிய இடமாக இந்த ரயில் நிலையம் இருந்தது.
மதிய வெயில் குறையும் போது வீட்டிலிருந்து நடந்து வந்தால் 20 நிமிடத்தில் இங்கே வந்து விடலாம். இருட்டு வரும் வரைக்கும். அங்கேயிருக்கும் ரயில் நிலையத்தை ஒட்டி ஒரு புறம் நீண்ட கண்மாய். எப்போதும் நிறைந்திருக்கும் தண்ணீர். மறுபக்கம் வயல்வெளிகள். கண்ணுக்கு பச்சையாய் இருக்கும். கண்மாய் தண்ணீர் மூலம் காற்றில் வரும் சுகத்தை அனுபவித்துக் கொண்டே மூன்று மணி நேரம் தவம் போல படித்து விடலாம். இரைச்சலின்றி, எந்த தொந்தரவும் இல்லாமல் அந்த பேரமைதி நம்மை நமக்கே உணர வைத்து விடும். ஈ, காக்கை கூட அந்த பக்கம் வராது. ஆடு மேய்ப்பவர்கள் மட்டும் அங்கங்கே இருப்பார்கள்.
உலகத்தை உணர வைத்த காலங்கள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தது. படிக்கும் போது உடன் இருந்தவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். பல இடங்களிலும் பிரிந்து வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள். பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஊருக்குள்ளே, ஊருக்கு அருகே தான் வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள். .
ஆனால் நடந்து முடிந்த மாற்றங்கள் தான் அதிசயமாக இருக்கிறது. பெண்களைக்கண்டாலே தலையை குனிந்தவனுக்கு இன்று பெண்கள் இல்லாமல் இரவு நகராது என்ற நிலையில் வாழ்க்கை மாறியுள்ளது. ஒவ்வொரு முறையும் அடுத்த பத்தாண்டு கழித்து பார்க்கும் போது நர்ம் எப்படியிருப்போம்? இங்கே வருவோமா? என்று பேசியுள்ளோம். ஆனால் இரண்டு பத்தாண்டுகள் கடந்து போய்விட்டது. ஆனால் எவரும் இந்த நடைமேடைக்கு வருவதில்லை. வெளியூர், உள்ளூர் என்றாலும் இந்த பகுதியை பேரூந்து வழியே கடந்து செல்லும் போது கண்களால் பார்ப்பதோடு சரி. மற்றபடி பழைய நினைவுகளைக் கூட அவர்களுக்கு அசை போட நேரமில்லை.
ஒவ்வொருவருடனும் பேசும் போதெல்லாம் உலகப் பிரச்சனைகளை விட அவரவர் சார்ந்த பிரச்சனைகள் தான் பெரிதாக இருக்கும் போல தெரிகின்றது. விரும்பியே ஆக வேண்டிய குடும்ப வாழ்க்கை ஒரு பக்கம். பொருளாதார பிரச்சனைகள் அடுத்த பக்கம் என்று நுகத்தடியில் மாட்டப்பட்ட மாடுகளைப் போல தங்களை மாற்றிக் கொண்டு வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள். ஆனால் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள கைவசம் எதுவும் அவர்களிடமும் இல்லை. அதை நோக்கி யோசிப்பதும் இல்லை.
ஊருக்குச் செல்லும் சமயங்களில் வாடா... அந்தப்ககம் போயிட்டு வரலாம் என்றாலும் வினோதமாக பார்ப்பவர்கள் தான் அதிகம். காரணம் நாம் எல்லாவற்றையும் மறக்கவே விரும்புகின்றோம். இன்றைய பிரச்சனைகள் தான் முக்கியம். ஒவ்வொரு நிமிடமும் வருமானத்திற்கு உண்டான வாய்ப்புகளைப் பற்றி மட்டும் தான் பேச விரும்புகின்றோம்.
சுருக்கமாக பேசு. விரைவாக செயல்படு என்பது தாரக மந்திரமாகவே ஆகிவிடடது. சந்திக்கும் ஒவ்வொருவரும் ஏதோவொரு ஆசைக்கு ஆசைப்பட்டு அடைய முடியாதவர்களாகத்தான் இருக்கிறார்கள். அதற்காக போராடிக் கொண்டுருப்பதாக சொல்கிறார்கள். அடையும் நேரம் தான் தெரியவில்லை என்று நேர காலத்தைச் சொல்லி அலுத்துக் கொள்கிறார்கள்.
நம் செட்டில் படித்த இவன் எப்படி செட்டிலாகி விட்டான் தெரியுமா? வீடு மட்டும் 50 லட்சத்திற்கு கட்டியுள்ளானாம் என்பது போன்ற விசயங்களுக்குத் தான் முக்கியத்துவம் கிடைக்கின்றது. தொழில் சார்ந்து, பணம் சார்ந்து, விருப்பங்களை உள்ளடக்கிய எதிர்கால திட்டங்கள் மட்டும் தான் பேச்சாக இருக்கிறது.
ஆனால் எல்லாவற்றிலும் ஒரு குறுக்குப் புத்தி ஓடிக்கொண்டுருப்பதை இயல்பான உரையாடலில் உணரமுடிகின்றது.
உடுத்திருக்கும் உடை, அணிந்திருக்கும் ஆபரணம் என்று தொடங்கி பயணிக்கும் வாகனம் வரைக்கும் நமது தகுதியாக எடுத்துக் கொள்ளப்படுகின்றது. சமீபத்தில் என்ன படித்தாய்? என்று கேட்டால் கெக்கேபிக்கே என்று சிரிப்பு தான் வருகின்றது. எத்தனை வருமானம் இருந்த போதிலும் உள்ளுக்குள் இருக்கும் அந்த எச்சகலை புத்தி மட்டும் மாறவேயில்லை. பயன்படுத்திக் கொண்டுருக்கும் பல பொருட்கள் அரசாங்கம் கொடுத்த இலவச பொருட்கள். அடுத்து வேறென்ன தருவார்கள் என்ற ஆர்வம் குறைந்தபாடியில்லை. ஒரு முறை இடைத்தேர்தல் வராதா என்று ஏங்குகிறார்கள்.
வாங்கி வைத்திருக்கும் இரண்டு சக்கர வாகனத்தை வீட்டில் வைத்து விட்டு ஓசியில் தொத்திக் கொண்டு செல்லும் சிக்கனம் என்ற ஒவ்வொருவரின்
பின்னாலும் ஓராயிரம் தந்திரங்கள். அத்தனைக்கும் சமூகம் கொடுக்கும் அங்கீகாரம் தான் ஆச்சரியம் அளிக்கின்றது. வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் பெண்களின் மனம் முழுக்க விகாரமாக மாறி தொலைக்காட்சி கற்றுத் தந்த கண்றாவிகளைத் தான் வேதமாக எடுத்துக் கொண்டு வெற்றி பெற்றதாக பேசுகிறார்கள்.
அலைபேசிகளைக்கூட மிஸ்டு கால் கொடுக்கத்தான் அதிகம் பயன்படுத்துகின்றேன் என்று நண்பன் சிரித்துக் கொண்டே சொன்ன போது என்னால் சிரிக்க முடியவில்லை. எத்தனை முறை எது குறித்து பேசினாலும் கடைசியில் காசு சம்பாரிக்க வழி சொல்லடா? திருப்பூர் வந்தால் ஒரு வருடத்திற்குள் சம்பாரித்து விட முடியுமா? என்பவனிடம் எது குறித்து பேச முடியும்?
ரயில் மேடையில் நான் பார்த்த அந்த மரங்களைப் போலத் தான் பல
சமயத்தில் அமைதியாகவே இருந்தேன். பேசத் தொடங்கினால் எதிரே நிற்பவர் மனோநிலை என்ன? பேசுவதை விரும்புகிறாரா? இல்லையா? என்பதைக்கூட யோசிக்காமல் பேசிக்கொண்டே இருப்பவனை என்ன சொல்லி திருத்திவிட முடியும். காது இரண்டு, வாய் ஒன்றும் படைத்த இயற்கையின் கூற்றை எவரும் புரிந்து கொள்ளவில்லை.
கேட்பதில் கவனிக்க முடிகின்றது. கவனிக்கும் போது பேசுவதின் அளவு புரிகின்றது. யோசிக்க அவகாசம் கிடைக்கின்றது. கிடைத்து விட்டானே என்று கொட்டித் தீர்க்கும் அவர்களது அர்த்தமற்ற உரையாடலை உள்வாங்கும் போது எப்படியெல்லாம் பேசக்கூடாது என்பதை உணர்ந்து கொள்ள முடிகின்றது.
அன்று ரயில் நிலையத்தில் பார்த்த மரங்கள் இன்றும் அப்படியே தான் இருக்கிறது. மரத்தில் உள்ள இலைகள் உதிர்ந்து, வெறும் கிளைகள் மட்டும் அப்படியே இருக்கிறது. இலையுதிர் காலத்தால் வந்த மாற்றமல்ல இது. எப்போதுமே இப்படித்தான் இந்த மரங்கள் இருக்கும். வந்து போகும் ஒவ்வொரு ரயிலும் துப்பிய புகையை சுவாசித்து தன் சுயத்தை இழந்து நிற்கும் மரத்தையும் மனிதர்களின் மனோநிலையையும் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள முடிந்தது. .
மரம் என்ற போர்வையில் நின்று கொண்டுருப்பதை கோட்டோவியம் போல ரசித்து பார்த்தேன். மழுங்கடித்த மரமாக இருப்பதைப் போலத்தான் எல்லோரும் மாறிக் கொண்டேயிருக்கின்றோம். பணம் என்ற வஸ்து மனம் என்ற பொக்கிஷத்தை பொட்டலமாக கட்டி பின்னுக்குத் தள்ளிவிட்டது. நாமும் அதைத்தான் விரும்புகின்றோம்.

