Tuesday, October 24, 2023

தரமான உணவென்பது இங்கே கனவு தான்.

நேற்று பூஜைப் பொருட்கள் வாங்கச் சென்ற போது தான் கவனித்தேன்.  ஒவ்வொரு இடத்திலும் கூட்டம் இருந்தது.  ஆனால் எள் போட்டாலும் எண்ணெய் ஆகின்ற அளவு என்பது போலக் கூட்டத்தைப் பார்க்க முடியவில்லை.  காய்கறிகளின் விலை மட்டும் நூறு சதவிகிதம் வியாபாரிகள் ஏற்றியுள்ளனர்.  கத்திரிக்காய் ஒரு கிலோ ரூபாய் நாற்பது என்று இருந்தது. நேற்றும் இன்றும் ரூபாய் 110. முருங்கைக்காய் இந்த பருவகாலத்தில் குப்பையில் கொட்டும் அளவுக்கு ஒரு கிலோ முப்பது ரூபாய்க்குள் இருந்தது. இப்போது ஒரு காய் பத்து ரூபாய். நான் ஏற்கனவே எழுதியது போல மளிகை சாமான்கள் விலை அனைத்தும் டபுள் ட்ரிபிள்.  




ஏற்கனவே நண்பர்கள் இந்த சமயத்தில் ஜிஎஸ்டி வடிவத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என்று எழுதியிருந்தார்கள்.  அதற்கெல்லாம் வாய்ப்பே இருக்காது என்று நம்பினேன்.  எரிவாயு உருளைக்கு 300 ரூபாய் என்பது மிகப் பெரிய ஆச்சரியம். சாதனையும் கூட.  நிச்சயம் சாதாரண மக்களுக்கு வரப்பிரசாதம். பெட்ரோல் விலை ஒரு வருடத்திற்கு மேலோக (ஒன்னேகால் வருடமாயிற்று) 103 ரூபாயில் வைத்திருப்பது மிகப் பெரிய சாதனை தான்.  ஆனாலும் விலை வாசி ஏற்றம் என்பது வெகு ஜன மக்களுக்குப் பலவற்றை எட்டாக்கனியாக மாற்றியுள்ளது என்பதும் உண்மை.

சந்தையில் எண்ணெய் மற்றும் நெய் இவை இரண்டும் எந்த பிராண்ட் பெயரில் வந்தாலும் அதில் அசல் மற்றும் தரம் என்பது 50 சதவிகிதம் கூட இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கத் தோன்றுகின்றது.  காரணம் இவர்கள் அனைவரும் விளம்பரம் என்பதனை மட்டுமே நம்புகின்றார்கள்.  விளம்பரம் செய்யாவிட்டால் நம் பொருள் விற்பனையாக வாய்ப்பே இல்லை என்று கருதிச் செயல்படுகின்றார்கள்.  நேற்று நடந்த ஒரு நிகழ்வைக் குறிப்பிட விரும்புகின்றேன்.

கடந்த இரண்டரை வருடமாக ஆவின் என்பதனை மறந்தே விட்டோம்.  அந்த நிறுவனத்தை சில்லு சில்லாக பெயர்த்து எடுத்து விட்டார்கள். இன்னமும் அதைப் பற்றிக் கவலைப்பட யாருமில்லை.  எத்தனை முறை விலையுர்த்தினாலும் தரமில்லை. நண்பர் இங்குள்ள புஷ்பா தியேட்டர் அருகே ராமலிங்கம் நெய் கடையை எனக்கு அறிமுகம் செய்து வைத்திருந்தார். அவர்கள் தனிப்பட்ட முறையில் தயாரிக்கின்றார்கள் என்றார்.  ஏற்கனவே ஒரு முறை சென்று வாங்கி வந்தேன். ஒப்பீட்டளவில் சுமாராக இருந்தது.  இந்த முறை உள்ளே நுழைந்து அவர்கள் சட்டியில் இருக்கும் நெய்யை (ஓரத்தில் கையை வைத்து ஒரு சொட்டு எடுத்து) முகர்ந்து பார்த்த சமயத்தில் அங்கிருந்த பெண் எதிர்ப்பைத் தெரிவித்தார். மற்றொருவரும் கூட்ட சமயத்தில் இப்படியெல்லாம் செய்யாதீர்கள் என்றார்கள். 

அவர்களின் நடவடிக்கை வியப்பாக இருந்தது.  கூடவே பாட்டிலில் உள்ள நெய்யை வாங்கிச் செல்லுங்களேன் என்று நிர்ப்பந்தம் செய்யக் கடைக்கு வெளியே வந்து விரலில் உள்ளதை முகர்ந்து பார்த்த போது டால்டா வாடை வந்தது. புரிந்து கொண்டு பெருமாள் கோவில் அருகே உள்ள நெய் கடைகளை ஆராய்ந்து ஒரு கடையை தேர்ந்தெடுத்தோம்.  ராமலிங்கம் கடையில் ஒரு கிலோ 680 ரூபாய் என்றார்கள்.  இங்கே 600 என்றார்.  80 சதவிகித கலப்படம். நெய் என்ற வடிவத்தில் ஒரு பொருளாக இருந்தது.  இது போன்ற கடைகளில் திரும்பப் பேச முடியாது. இறுதியில் வன்முறையில் தான் முடியும்.

இதே போல பிராண்ட் வடிவங்களில் உள்ள எந்த நெய்யாக இருந்தாலும் அது நெய் அல்ல என்பதனை உறுதியாகச் சொல்ல முடியும்.  ஆனால் இதில் மற்றொரு பக்கம் உள்ளது.  வீட்டுக்கு அருகே பாலுக்காக மாட்டுப் பண்ணை வைத்திருப்பவர்கள் விற்கும் நெய் வாங்கினால் போதும்.  காய்ச்சும் போது வீடு முழுக்க மணக்கும்.  ஆனால் அரை கிலோ ஆயிரம் ரூபாய் அருகே வருகின்றது.  சாதாரண குடும்ப வருமானம் உள்ளவர்களுக்கு இது போன்ற விலை உயர்ந்த தரமான நெய் என்பது வெறும் கனவு தான்.

கடைசியில் சில கடைகள் அலைந்து அமுல் நெய் உள்ளதா என்று பார்த்தோம்.  ஒரு கடையில் இருந்தது.  ஒரு கிலோ 725 ரூபாய் என்று டப்பாவில் இருந்தது.  விழாக் காலத் தள்ளுபடி என்று ராமலிங்கம் கடையில் சொன்ன அதே ரூபாய் 680 என்றார்கள்.  இன்று அமுல் நெய்யில் செய்யப்பட்ட சர்க்கரைப் பொங்கல் என்பது தேவாமிர்தமாக இருந்தது.  குஜராத் எங்கே உள்ளது? திருப்பூர் எங்கே உள்ளது. இதயத்தை அமுல் வருடியது போல இருந்தது.  அவ்வளவு சிறப்பான நெய்யாக உள்ளது.

விலைவாசி உயர உயர, உங்களால் ஒரு பொருளை வாங்க முடியாத நிலைக்குச் செல்லும் போது எளிய மக்களுக்கென்று ஒரு தனிச் சந்தை உருவாகின்றது. எண்ணெய், நெய் தொடங்கி பயறு பருப்பு என்று எல்லா இடங்களிலும் மூன்றாம் தர பொருட்கள் தான் புழங்கும்.  விலைகள் மாறுபடும்.  உணவகம் முதல் சாதாரணப் பொதுமக்கள் வரைக்கும் இது வரப்பிரசாதம். அவர்களுக்குத் தெரியும். வேறு வழியில்லை.

முக்கியமான சந்தையில் புழங்கும் தேயிலைத்தூள் வகைகள் 95 சதவிகிதம் அசல் அல்ல.  பிராண்ட் பெயரில் உள்ளதும் அப்படித்தான் உள்ளது.  தரமில்லா பொருட்களின் கூடாரமாக இந்தியா மாறியுள்ளது என்பேன்.  குறிப்பிட்ட சில காரியங்களைத் தவிர மத்திய அரசு இந்த விசயத்தில் எந்த நடவடிக்கையும் எடுத்ததே இல்லை. கண்டு கொள்வதும் இல்லை. எதில் ஜிஎஸ்டி போடலாம் என்பதில் அதிகாரிகள் கவனமாக இருப்பார்கள் போல.

மைதா பொருட்கள் தவறு என்று அத்தனை பேர்களும் கூவிக்கூவி ஆரோக்கியம் குறித்துச் சொன்னாலும் பேக்கரியில் பப்ஸ்தான் முக்கிய உணவுப் பொருளாகவே பலருக்கும் உள்ளது.  சில தினங்களுக்கு முன் ஒரு சிறுவன் பப்ஸ் தின்று புட் பாஸ்சன் ஆகி இறந்து விட்டான் என்று செய்தித் தாளில் படித்தேன். சூடாக்கி சூடாக்கி அதனை அப்படியே வைத்து விற்கும் போது உள்ளே இருப்பது முழுமையான நஞ்சு ஆகும். அப்படித்தான் பிரியாணி முதல் பேக்கரி ஐட்டங்கள் வரைக்கும் இன்று உள்ளது. மக்கள் பழங்கள் வாங்குவதில்லை. பேக்கரியை தவிர்ப்பதும் இல்லை.

இன்று தமிழகத்தில் புரோட்டா இல்லாவிட்டால் பாதி ஜனத் தொகை செத்து விடுவார்கள் போல.  காரணம் 25 ரூபாய் இரண்டு புரோட்டா தின்று விட்டு நகர்ந்து விடலாம்.  சுகாதாரமற்ற முறையில் சாக்கடை அருகே இருந்தாலும் வண்டிக்கடையில் பத்து ரூபாய் இரண்டு வடை சாப்பிட்டு விட்டு வேலைக்குச் சென்று விடலாம்.

மத்திய மாநில அரசுகள் தொழிலதிபர்களைச் சங்கடப்படுத்தக்கூடாது என்பதற்காகவே பல  சமயம் தெரிந்தே செய்கின்றதா? அனுமதிக்கின்றதா? என்று பலமுறை யோசித்துள்ளேன்.

தரமான உணவுகளை விரும்புகின்றவர்கள் வரும் காலங்களில் ஒரு வேளை மட்டும் உண்டால் போதும் என்கிற நிலை விரைவில் வந்து விடும் என்றே நம்புகின்றேன். அது அரசாங்கம் நமக்குத் தொப்பை குறைய அளித்த வாய்ப்பு என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

No comments: