அன்புள்ள தம்பி
வாட்ஸ்அப் வழியாக வந்த உன் அவசரக் கடிதம் கண்டு நொந்தேன். உரிமையுடன் அக்கா என்று அழைத்தாலும் கலாய்ப்பதற்கு இது தான் நேரமா? ஓர் அளவில்லையா? கூட்டணி முறிந்ததால் உழைக்காமல் பதவி சுகத்தை அனுபவித்தவர்களுக்கு இனி வரும் காலம் அரசியல் அனாதை தான் என்பதெல்லாம் பெரிய வார்த்தை தானே? இப்படி எழுதிப் புண்படுத்தாதே தம்பி.
அந்தப் பக்கம் கூட்டணி இல்லை என்றதும் இந்தப் பக்கம் அக்கா இனி என்ன செய்யப் போறீங்கன்னு? நீ கேட்பது நாகரிகமாக உள்ளதா? நான் என்ன இனி வேலைக்கா செல்ல முடியும். என் கௌரவம் இடம் கொடுக்குமா? என் குடும்பத்தினர் தான் ஏற்றுக் கொள்வார்களா? எங்கங்கே எதை எதை வைத்துள்ளேன் என்பதனை அலசி ஆராயவே எனக்கு சில மாதங்கள் ஆகுமே? ஆளுங்கட்சி என்பதால் எதுவும் என் மேல் பாயாமல் இருப்பது உனக்கு தெரிந்தது தானே?
கூட்டணி முறிவென்பது இரண்டு கட்சிகளின் கொள்கை ரீதியானது. ஆனால் என்னைப் போன்றவர்கள் இரண்டு கட்சியிலும் 40 வருடமாக இருப்பதால் எனக்கு என்ன பிரச்சனை வந்து விடும் என்று நம்புகின்றாய்? ஒன்றில் உறுப்பினர் அட்டையிருக்கும். மற்றொன்றில் அந்த அட்டை இருக்காது. எல்லா கட்சியிலும் உடன் பிறவா சகோதர்கள் இருப்பதால் நம் பணி என்பதே அட்டைப்பூச்சி போன்றது தானே. என் அரசியல் வாழ்க்கையென்பது இவர்கள் மாறி மாறி எழுதும் அறிக்கைகளால், பேசும் பேச்சுக்களால், உரையாடும் பேட்டிகளால் முடிந்து விடக் கூடியதா?
மற்றவர்களைப் போல நீயும் அப்படித்தான் நம்புகின்றாயா?
எதற்காக இத்தனை பெரிய பொறுப்பு என்னைத் தேடி வந்தது? என்று நான் யோசிப்பதற்குள் அடுத்தடுத்த காட்சி மாறுவது போல என் வாழ்க்கை முழுவதையும் மாற்றினார்கள். என்னால் யோசிக்க முடியாத அளவுக்கு என் முன்னால் நூற்றுக்கணக்கான கடமைகள் காத்திருந்தது. எனக்கு நிர்வாகம் தெரியாது. நான் படித்த படிப்பு எந்த தகுதியின் அடிப்படையில் வந்தது என்பதும் உனக்குத் தெரியும். படித்து முடிந்து பணியாற்றினாலும் தேச சேவைக்கு வந்த பின்பு துறை சார்ந்த அறிவையும் வளர்த்துக் கொள்ளவும் இல்லை. புரிய வைக்கவும் ஆளுமில்லை.
எனக்கு கொடுத்த பதவியை வைத்து சம்பாதிக்கவும் வழியில்லாமல் நான்கு பக்கமும் கதவு போட்டு வைத்திருந்தனர். கதவுக்குள் இருந்தவர்கள் மாறி மாறி கும்மாங்குத்து குத்தி அலைய வைத்துக் கொண்டேயிருந்தார்கள். என் நிஜமான திறமை என்ன? என்பதனை வெளியே கொண்டு வந்து கொண்டேயிருந்தனர். சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்?
மொழிப் பிரச்சனை முதல் என் அறிவுக்கு எட்டாத அத்தனை பிரச்சனைகளும் என் முன்னால் அணி வகுத்து நின்றது. நான் கவலைப்பட்டதே இல்லை. தமிழக அரசியலில் இதுவரை யார் தரவுகள் வைத்துப் பேசினார்கள்? தகல்பாஜி வேலைகள் செய்வதும், டகால்டி செய்து உருட்டோ உருட்டு என்று உளறுவதும் தானே இங்கே அரசியல் என்று அழைக்கப்படுகின்றது. அப்படித்தான் சமாளித்தேன். தேன் என்று காகிதத்தில் எழுதினால் இனிக்குமா? சுவைத்தால் தானே இனிப்பின் சுவையை அறிய முடியும்.
ஆனால் சமூக நீதியை உயிர் மூச்சாக கொண்டு வாழும் ஊடக நண்பர்களும் சம்பாதிப்பது தான் அரசியல் சேவை என்று இருக்கும் மாற்றுக்கட்சி ஆதரவாளர்களும் அக்கா அக்கா என்று அழைத்து அன்பொழுகப் பேச வைப்பதற்குக் காரணம் என்ன நினைக்கின்றாய்?
எல்லையைத் தாண்டாதே?
எதையும் விளக்கமாகப் பேசாதே?
கட்சி வளர்ப்பில் கவனம் செலுத்தாதே?
கட்சித் தொண்டர்களைக் கண்டு கொள்ளாதே?
புத்திசாலி என்று காட்டினால் புழுதி பறக்கும் என்று அவர்கள் பஞ்சபாண்டவ கட்டளையை ஏற்றுச் செயல்பட்டு வருவதால் தானே இன்று வரையிலும் அய்யாக்கள் குடித்து மிச்சமுள்ள ஆற்றுத் தண்ணீரை இந்த அக்காவும் அருந்த முடிகின்றது?
இது தானே இங்குள்ள அரசியல். இது தானே உண்மையான தேசியம். இப்படித்தானே நாற்பது வருடமாகக் கட்சி வளர்த்து நாங்கள் சீனியர் என்று சொல்கின்றோம்.
அப்படித்தான் எனக்கான அடிமைகளைத் தேடினேன். நான் பேச வேண்டியதை எழுதித்தர ஒருவரும் சிக்கவில்லை. காரணம் என்னை விடப் புத்திசாலிகளாக இருந்தனர். நான் எவருக்கும் எந்தக் காலத்திலும் எதுவும் செய்தது இல்லை. என் குடும்பத்தின் அரசியல் ஆசான் முத்தமிழ் அறிஞரை உள்ளூர தொழுது உள்ளூர் பெருமக்களை அனுசரித்து, எனக்கான தொகுதியைத் தேடி, அங்குள்ளவர்களை அழைத்து மைக் முன்னால் நான் பேசும் போது நிறுத்தி, அவ்வப்போது சாதி சார்பாளர்களை வணங்கி அவர்கள் சாதியை அவர்களுக்கே நினைவூட்டி வரும் எனக்கு என்ன பிரச்சனை வரப் போகின்றது?
நான் ஏன் கட்சிக்காரர்களை, கட்சிக்காக உழைத்தவர்களைக் கண்டு கொள்வதே இல்லை என்று என்னைக் கட்சியில் இருப்பவர்கள் தூற்றுகின்றார்கள்?
உழைத்தவர்களை அணுக முடியாததற்கு ஒரே காரணம் அவர்களின் கைகளில் லஷ்மியில்லை. மாறாகத் தியாகம் என்ற இரத்தக்கறை மட்டுமே இருந்தது.
ஏணிப்படிகள் எப்போதும் நிறுத்திய இடத்தில் தான் இருக்கும். அது தான் உலக நியதி. அதைத்தானே நானும் பின்பற்றி வருகின்றேன் தம்பி. அது தானே இங்குள்ள அரசியல் பண்பாடு.
நாம் செல்லுமிடமெல்லாம் ஏணியைத் தூக்கி அலைந்தால் மாற்றுக்கட்சி சகோதரர்கள் என்ன நினைப்பார்கள். அவர்களால் தானே வளர்ந்தோம். வசதிகளைப் பெற்றோம். கூட்டமென்றாலும் கூச்சப்படாமல் அவர்களைப் பாராட்டி உரக்கச் சொன்னோம். கிஞ்சித்தும் வெட்கமின்றிப் பேட்டிகளில் அவர்களை முன்னிலைப் படுத்தினோம்.
அதாவது ஒரே கல்லில் பல நூறு மாங்காய். ஒரு பக்கம் கொள்கை வேறு. நட்பு வேறு என்று உருட்டலாம். பரம பவித்திரமான காவியின் மகள் நான் என்று அறைகூவல் விடலாம்.
ஆனால் நம் கட்சிக்கான வளர்ச்சிக்கோ, கட்சிக்காகப் பாடுபட்ட, பாடுபடுகின்றவர்களைப் புன்னகை கொண்டே சமாளித்து விடலாம் என்று தானே நினைத்திருந்தேன். ஆனால் கட்சி போகும் பாதையை நினைத்தால் இனி அடிவாங்கும் போல உள்ளதே தம்பி.
காசு கொடுப்பார்கள். வார்டு வாரியாக ஆட்களை அனுப்பி நமக்காக அவர்களே பாடுபடவும் செய்வார்கள். வாக்குச்சாவடிக்குழு முதல் வாக்கு எண்ணிக்கை மையம் வரைக்கும் நம் சுமைகளைச் சுமக்கத் தயாராக இருக்கும் அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்று தான். உங்கள் கட்சியில் உறுப்பினராக மட்டும் இருங்கள். கட்சியை வளர்க்க நினைக்காதீர்கள். மீதியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். என்ன தேவை என்பதனை மட்டும் சொல்லுங்கள். டோர் டெலிவரி.
அப்படித்தானே 40 வருடமாக இருந்தோம். அதன் காரணமாக வெளியே காட்டிக் கொள்ள முடியாத பலவற்றில் பங்குதாரராக இருந்தோம். உறவாக மலர்ந்தோம். உன்னத முதலீடுகள் செய்து தேச சேவைகளை இணைந்தே செய்தோம்.
இப்போது திடீரென்று நாமே களத்துக்குச் செல்ல வேண்டும் என்பதும் இரவு பகல் பாராமல் தொண்டர்களுடன் சேர்ந்து வாக்கு கேட்டு ஒவ்வொரு தெருவுக்கும் சென்றே ஆக வேண்டுமென்பது முறையா தம்பி? உழைத்தே ஆக வேண்டும் என்றால் பதற்றம் வருமா? வராதா?
கொண்டை வைத்த வண்டி என்பது நம் கொண்டை அலங்காரம் போன்றது என்பது அரசியலில் இருக்கும் நம்மைப் போன்ற பெண்களுக்குத் தானே தெரியும். நம் பொருந்தாத ஒப்பனை என்பது நம் முன்னால் பின்னால் வரும் காவல்துறை அதிகாரிகள் போன்றது. பதவி போய்விட்டால் பல் இல்லாத கிழவி போலவே மதிக்கக்கூட மாட்டார்களே. ஆனால் வாக்கு அரசியல் என்பது நம்மைப் போன்ற சேவை மனப்பான்மை கொண்டவர்களுக்குப் பெரிய இடைஞ்சலாக உள்ளது. விரைவில் 33 சதவிகிதம் பெற்றுப் பல நூறு எதிரிகள் உள்ளே வரப் போகின்றார்கள். நிம்மதியாகவே இருக்க விட மாட்டார்கள் போல.
நாம் யாருக்கும் என்ன செய்துள்ளோம்? நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கின்றது? எவர் நமக்கு ஆதரவளிப்பார். கட்சிக்காரர்களை அழைத்தாலே மேலும் கீழும் பார்த்து பராக்கு பார்ப்பது போல நகர்ந்து சென்று விடுகின்றார்கள். இதில் நோட்டா வேறு பயமுறுத்துகின்றது தம்பி. நம் காசு. நம் பணம். நம் உழைப்பு என்று நம்மால் இனி அலைய முடியுமா? சேர்த்து வைத்ததை எப்படி வெளியே எடுக்க முடியும்? கூட்டணி முறிவு என்று செய்தி வந்த நொடியென்பது என் உடம்பு நிலநடுக்கத்தை உணர்ந்தது போலவே உள்ளது தம்பி. நான் மட்டுமல்ல. கட்சியில் 90 சதவிகித பேர்களும் இப்படித்தான் தம்பி. சுகமாகயிருந்தவர்களை சுளுக்கெடுப்பது எப்படி? என்ற புத்தகத்தைப் படிக்கச் சொன்னால் எப்படியிருக்கும் தம்பி?
அதனால் தம்பி , நோட்டா நினைத்து தூக்கம் வராமல் தடுமாறும் நான் வரும் நாட்களில் நம் நட்டா அவர்களை சந்திக்கச் செல்கின்றேன். வந்தவுடன் அக்கா உனக்கு நல்ல செய்தி சொல்கின்றேன்.
கவலைப்படாதே தேர்தல் நெருங்கும் சமயத்தில் காட்சி மாறும். இலையோடு மலரும் சேர்ந்து இருப்பது தான் தாவரவியல் கோட்பாடு. அதைத் தான் நம் தமிழக அரசியல் வளர்ச்சி என்கிறோம். நம்மைப் போன்றவர்களின் வாழ்க்கையின் மலர்ச்சிக்கான அடிப்படை.
நிச்சயம் தாமரை இங்கே மலரும். கூட்டணி கட்சியினர் மலர வைப்பார்கள். நான்கு வருடம் அவர்கள் ஆட்சி பிரச்சனையில்லாமல் இருந்ததற்குக் காரணம் நாம். அவர்கள் லட்சம் கோடிகள் அள்ளிக்குவிக்கக் காரணமாக இருந்தவர்கள் நம்மவர்கள். திடீரென்று நம்மை அம்போவென்று விட்டு விட்டு ஓட்டம் பிடித்தால் நம்மவர்கள் விட்டு விடுவார்களா?
அக்கா உனக்கு மலரோடு மலர்ச்சியான செய்தியைக் கொண்டு வருகிறேன். இனியாவது மானங்கெட்டு ஏன் வாழவேண்டும்? என்று தற்குறித்தனமாக வார்த்தைகள் போட்டு எழுதுவதை நிறுத்தி விடுடா தம்பி.
பாரத அன்னை புகழ் ஓங்குக.
என்றென்றும் தேச பணியில்
அக்கா
No comments:
Post a Comment