Sunday, October 01, 2023

இங்கே நாய்கள் குலைக்கும்....

நேற்று காலையில் மகள் வந்து சொன்னார். பெல்ட் குட்டி போட்டுள்ளது என்று.  யாரோ ஒருவர் வீட்டில் வளர்க்கப்பட்ட நாயது.  கழுத்தில் கட்டப்பட்டு இருந்த பெல்ட் உடன் வெளியே வந்து விட்டது.  


நம்மவர்கள் பெண் நாய் என்றால் கண்டு கொள்ளவே மாட்டார்கள்.  சந்துக்குப் பின்னால் இருக்கும் ஒரு குடும்பம் குட்டியாக இருக்கும் வரை ஒரு பெண் நாயை வளர்த்தார்கள். சற்று வளர்ந்தவுடன் அதன் நடவடிக்கை பார்த்து அவர்கள் வைத்துள்ள வாகனத்தில் கொண்டு போய் சிவன்மலை தாண்டி கொண்டு போய் விட்டு வந்தார்களாம்.  அருகில் விட்டால் வீட்டுக்கு வந்து விடுமாம். முன் எச்சரிக்கை என்றார்கள்.

நேற்று முழுக்க தேடிப் பார்த்தேன். பெல்ட் எந்த இடத்தில் குட்டி போட்டது என்று என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. பெல்ட் வெளியே வாடா என்று கத்திப் பார்த்தேன்.  வரவில்லை.  வீட்டின் மாடியிலிருந்து பார்த்துக் கொண்டு இருந்தேன்.  சிறிது நேரம் கழித்து என்னை நோக்கி ஓடி வந்தது.  வெறும் எலும்புக்கூடாக இருந்தது.  மனித இனத்தில் பிரசவ வலியை விட அங்கு நிகழும் நிகழ்வினால் உருவாகும் வாடை என்பது சகிக்கவே முடியாது.  அதை விட பெல்ட் உடம்பில் துர்நாற்றம் வாடை வீசியது.  மயங்கி விழுந்துவிடும் அளவுக்கு இருந்தது.  சில மணி நேரங்களுக்கு முன் பாதுகாப்பற்ற இடத்தில் குட்டிகளை ஈன்ற வலியும் வேதனையும் அதன் முகத்தில் தெரிந்தது.  கையில் இருந்த மொத்த ரொட்டிகளையும் போட்டோம். வெறி வந்தது போல தின்று விட்டு குட்டிகளை நோக்கி ஓடியது.

இவளுக்கு முன்னால் செல்வராணி. இரண்டு முறை பிரசவித்தாள். நாங்கள் தான் பேசி பெயர் வைப்போம். செல்வராணியும் எங்கோயிருந்து எங்கள் வீட்டுக்கு முன்னால் வந்து தனது இருப்பிடமாக மாற்றிக் கொண்டது.  அருகே உள்ள அங்காளபரமேஸ்வரி தினமும் உணவு வழங்குவார்.  குழந்தைகளை விட அதிகம் பாதுகாப்பார்.

ஆனால் நாய்களில் உலகம் மிக மிகக் கொடுமையானது என்பதனை கடந்த ஒரு வருடமாகப் பார்த்து வருகிறேன்.  அதுவும் தெருவில் வளரும் பெண் நாய்கள் வாழ்க்கை என்பது எதிரிகளுக்குக் கூட இப்படியெல்லாம் நடந்து விடக்கூடாது என்பது போலவே உள்ளது.

ஒரு வருடத்தில் செல்வராணி இரண்டு முறை தலா ஏழு குட்டி போட்டது. நேற்று பெல்ட் அதே 7 குட்டி.  புள்ள பெத்த காரிக்கு கிராமத்தில் சொல்லப்படுகின்ற பத்தியச் சாப்பாடு போல மகள்களும் நானும் சேர்த்து செய்கின்ற விசயங்கள் குடும்பத்தில் சண்டைகள் உருவாகக் காரணமாகவும் உள்ளது.  ஆனாலும் முதல் மூன்று வாரங்கள் ஒவ்வொரு பிரசவத்தின் போதும் அதற்குச் சிறப்புக் கவனம் செலுத்தி சாப்பாடு வழங்குகின்றோம்.

நான் சிறுவயதாக இருந்த போது கிராமப் பஞ்சாயத்திலிருந்து பன்றியைப் பிடிக்கப் பயன்படுத்தும் கம்பி வைத்த உபகரணங்கள் வைத்து நாய்களைப் பிடித்து வண்டியில் ஏற்றிச் செல்வார்கள்.  தெரு நாய்கள் கொட்டம் அடக்கப்படும். பல இடங்களில் நாய்கள் மூலம் குழந்தைகள் கடிபடுவதும், துரத்தப்படுவதும் நான் பார்த்தபடியே இருந்தாலும் வீட்டுக்கருகே வந்து சேரும் பெண் நாய்களைத் தவிக்கவிடுவதில்லை. அதிர்ஷ்டவசமாக இவர்கள் யாரையும் எதுவும் செய்வதில்லை.  குட்டிகள் தங்குவதில்லை. எங்கேயோ சென்று விடுகின்றது.

கொடுமை என்னவெனில் பருவகாலம் சமயங்களில் கூட்டமாக வந்து சேரும் ஆண் நாய்கள் செய்யும் வன்முறை கலந்த செயல்பாடுகளைப் பார்க்கும் போது மிரட்சியாக உள்ளது.  புணரும் சமயங்களில் கடிபடும் பெண் நாய்களும், எதிரியாகப் பாவித்து குரல்வளையில் கடித்து ரத்தம் வர வழைக்கும் மற்ற நாய்களும் வாழும் வாழ்க்கையெல்லாம் பார்த்து மனம் மரத்துப் போய்விட்டது.  மேலும் மேலும் பெண் நாய்கள் மேல் காட்ட வேண்டிய அன்பு அதிகரிக்கவே செய்கின்றது. காரணம் தெரியவில்லை. வீட்டில் மஞ்சுளா மகாராணி போலவே வாழ்கின்றாள். ஆனால் தெரு நாய்கள் உலகம் வேறுவிதமாக உள்ளது.

மகள் இன்று காலையில் சொன்ன அறிவுரை.  விலங்குகளின் வாழ்க்கையில் ரொம்பவும் உள்ளே நுழையாதீர்கள்.  மனம் பேதலித்து விடும் என்றார். இப்போது நாய்கள் உறவு கொள்ளும் பருவகாலம். உண்மையிலே நேற்று செல்வராணியை உறவுக்கு அழைத்த ஏழெட்டு நாய்களின் அதீத குரல் கண்டு நள்ளிரவு மூன்று மணிக்கு எழுந்து வெளியே சென்று கம்புகளுடன் துரத்தி முடித்து அதற்குப் பிறகு தூக்கமே வரவில்லை. வீட்டில் உங்களுக்கென்ன லூசு பிடித்து விட்டதா என்கிறார்? மாற்றிக் கொள்ளவும் முடியவில்லை. இதுவரையிலும் செய்த பாவங்களுக்கு உண்டான கடனா என்பதும் தெரியவில்லை. தூக்க கலக்கத்துடன் அதிகாலையில் வேலை விசயமாக ஓட வேண்டியதாகி விட்டது.

பெரும்பாலான குட்டிகள் உயிர் பிழைப்பதில்லை.  தெருவில் ஏதோவொரு சக்கரத்தில் சிக்கி இறந்து விடுகின்றது.  ஒவ்வொரு முறையும் நான் தான் எடுத்துப் புதைக்கின்றேன்.  ஒரு மணி நேரத்தில் நாய்க்குட்டியின் உடம்பு ஊதிப் பெருத்து கணத்து விடுகின்றது. காரியம் முடித்து வந்து அடுத்த இரண்டு நாட்கள் மனம் முழுக்க பாரமாகி விடுகின்றது.

மகள் சொன்ன அறிவுரையை இன்று  காலை முதல் ஃபேஸ்புக்கில் பலரும் எழுதுவதைப் பார்த்து போது யோசிக்கத் தோன்றியது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அரசியல் அபிலாசைகள்.

வீராதி வீரன் சூராதி சூரன் என்று எழுதுவதும் புகழ்வதும் அவரவர் விருப்பம். 

ஆனால் அரசியல் என்பது ஒரு நபர் சிந்தனை சார்ந்தது அல்ல. அது பல நபர்களின் சிந்தனைகளை ஒன்றிணைத்து,  தன் சிந்தனைகளை மேலேற்றி,  இருப்பதற்குள் நல்லவற்றைத் தேர்ந்தெடுத்து ஊழல் இல்லாமல் இடைத்தரகர் இல்லாமல் பயனாளிக்குச் சென்று சேரும் பாதையைக் கண்டறிவது என்பது அது பெரிய தேசிய நெடுஞ்சாலை பாதை பயணம் போன்றது.  என் பார்வையில் நிஜ வாழ்க்கையில் வென்றே ஒரே மனிதர் மோடி மட்டுமே.  தமிழகத்தில் அப்படியெல்லாம் இனி வரும் காலங்களில் நடக்குமா? என்று தெரியவில்லை.

கூடவே அரசியல் கட்சி விவாத அடிப்படையில் பலரும் எழுதுவதைப் பார்த்துப் படிக்கும் போது  தெருநாய்களின் ஓலம் தான் காதில் கேட்கின்றது.  காரணம் அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் எழுதப்படும் அபிலாஷைகளுக்கும் நிஜமாக அவர்கள் விரும்பும் கட்சிக்கும் நடக்கும் சமாச்சாரங்களுக்கும் ஒரு சதவிகித தொடர்புமில்லை என்பதனை கட்சிக்காரர்களுடன் பேசும் போது புரிந்து கொள்ள முடியும்.  துரதிஷடவசமாக எழுதக்கூடியவர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்து எழுதுகின்றார்கள். சிலர் அடிப்படைத் தேவைகளுக்குப் பிரச்சனையில்லாத பசங்க பெண் குழந்தைகளை செட்டில் செய்து பணப் பிரச்சனை இல்லாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தாங்கள் நம்பும் சித்தாந்தத்திற்கு எதிராகச் செயல்படுகின்ற அனைவரையும் பட்டிக்குள் அடைக்க வேண்டிய மிருகங்களைப் போலவே விமர்சிக்கின்றார்கள்.

தெருநாய்கள் சந்துக்குள் குறுக்கும் நெடுக்கும் ஓடித் திரியும் போது குலைக்கும் சப்தங்கள் தந்த எரிச்சலை விட அரசியல் பேச்சுக்கள் நாளுக்குள் நாள் எரிச்சலூட்டி வருகின்றது.  கண்டதையும் கேட்டதையும் அப்படியே எழுதத் தொடங்கினால் கலவர பூமிக்குள் கந்தக வெடியைத் திணிப்பது போல  ஆகி விடுமே என்று அச்சப்பட வேண்டியதாகவும் உள்ளது.

No comments: