Sunday, October 15, 2023

எம்ஜிஆர் வழங்கிய கொடையால் கருணாநிதி திமுக தலைவரானார்

 திமுக நிறுவனர் அண்ணாதுரை அவர்கள் மறைந்த போது தமிழகத்தில் இருந்த திமுக வின் அமைப்பின் எண்ணிக்கை 18,000 (2024 ஜனவரி மாதம் வரப்போகும் அரசியல் வரலாறு புத்தகத்தில் இது குறித்து ஓர் அத்தியாயத்தில் எழுதியுள்ளேன்).  மாவட்டம் தோறும் திமுக வின் மன்றம், பாசறை, படிப்பகம் போன்ற பல பெயர்களில் இயங்கியது.  நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். இருந்தது என்று நான் இங்கே எழுதவில்லை.  இயங்கியது என்று தான் எழுதியுள்ளேன்.  காரணம் ஒவ்வொரு  ஊரிலும் (குக்கிராமம் வரைக்கும்) பத்துக்குப் பத்து அறை போன்ற அமைப்பில் (90 சதவிகிதம் கீற்றுக் கொட்டகை தான்.  மழை பெய்தால் ஒழுகும்) நெருக்கியடித்துக் கொண்டு படித்தவர்களை நானே என் சிறு வயதில் பார்த்துள்ளேன். நான் நூலகம் விடுமுறை தினங்களில் அங்கே போய் வந்துள்ள பத்திரிக்கைகளைப் படித்துள்ளேன்.


எம்ஜிஆர் வழங்கிய கொடையால் கருணா திமுக வை தனதாக்கிக் கொண்டார். தன் ஆட்களை மட்டுமே பார்த்துப் பார்த்து நியமித்துக் கொண்டார்.  கரையான் புற்று உருவாக்க கருநாகம் வந்து அமர்ந்து பரிபாலனம் செய்யத் துவங்கியது.  ஆனால் தக்க வைத்துக் கொண்டவர் சும்மாயிருக்கவில்லை.  கிடைத்த ஒவ்வொன்றையும் தனதாக்கிக் கொள்ள மக்கள் செல்வாக்கு பெற என்ன செய்ய வேண்டுமோ ஒன்றன் பின் ஒன்றாகச் செய்து கொண்டே வந்தார்.

அரசியலில் எவையெல்லாம் ராஜதந்திரம் என்ற அத்தியாயத்தில்  வருகின்றதோ அவற்றையெல்லாம் கூச்சப்படாமல் செய்தார். கட்சிக்குள் யோசிக்கத் தெரிந்தவர்களை, தெளிவானவர்களைக் கழிவாக்கினார். அதனைத் தனக்கு உரமாக மாற்றிக் கொண்டார்.   இறுதியில் திமுக என்பதனை திருக்குவளை மு கருணாநிதி என்பதாக மாற்றி வெற்றி பெற்றார். எம்ஜிஆரை வெளியேற்றவும் முடிந்தது. வைகோ வை அரசியல் அனாதையாக்கவும் முடிந்தது. 

மகனுக்குத் தான் கட்சி என்பதனை மறைமுகமாகக் கட்சிக்காரர்களுக்கு உணர்த்தவும் முடிந்தது. 

ஆனால் கடைசி காலம் வரைக்கும் கடைக்கோடி திமுக தொண்டன் என்பதனை மதித்தார். விரும்பினார். அவன் தேவைகளை மற்றவர்களை வைத்து ஓரளவுக்கேனும் சூழல் பொறுத்துச் செய்ய வைத்தார். என் தாத்தா என் அப்பா இன்று நான் என்று கூச்சப்படாமல் அவர்கள் பேசுவதற்குப் பின்னால் வெறும் உளறல் மட்டும் காரணமில்லை என்பதனை நம்புங்கள். பல காரணிகள் உள்ளது என்பதனை ஏற்றுக் கொள்ளுங்கள்.

•••

அண்ணாதுரை 1957 எதிர்க்கட்சியாகத் தமிழக சட்டமன்றத் தேர்தலில் வென்று சென்று அமர்ந்த சமயத்தில் நாங்களும் அந்தப் பக்கம் வருவோம் என்று சி சுப்ரமணியம் அவர்களிடம் சவால் விட்டுப் பேச முடிந்ததற்குக் காரணம் அண்ணா தான் உருவாக்கியிருந்த கட்சி அமைப்பை நம்பினார். மேலும் மேலும் படிப்படியாக உருவாக்கினார். கட்சிக்காரர்களை மதித்தார். இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட தலைவர்களை உருவாக்கினார். எளிதில் அணுகக்கூடியவராக இருந்தார்.

எம்ஜிஆர் நான் பணம் தருகின்றேன் என்று சொன்ன போது உன் முகம் போதும் ராமச்சந்திரா என்றார்.  கட்சி யாருக்கும் அடிமையாகிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். பேசிப் பேசியே தனக்குப் பின்னால் கூடிய கூட்டத்தை நம்ப வைத்தார். அந்த நம்பிக்கையை இறுதி வரைக்கும் காப்பாற்றினார்.  அவர் உருவாக்கிய அமைப்பு இறுதி வரைக்கும் சிதையாமல் இருந்தது.  அடுத்தடுத்த கட்டத்தில் இருந்தவர்கள் தத்தமது பொறுப்பு உணர்ந்து தங்கள் எல்லைகளை மீறாமல் அண்ணாவுடன் ஒத்துழைத்த காரணமே திமுக என்ற கட்சி 1967 ல் தமிழகத்தை ஆளத் துவங்கியதற்கான முதல் புள்ளியாக இருந்தது.

இப்போது வரைக்கும் அந்த நடைமுறை தான் உள்ளது. மக்களை இரண்டாம் பட்சமாக நம்புகின்றார்கள். தங்கள் கட்சியில் உள்ள அமைப்புகளை முதன்மையாகக்  கருதுகின்றார்கள். இதன் காரணமாக மக்கள் நலன் சார்ந்த பெரிய முன்னெடுப்புகளை திமுக கண்டு கொள்வதில்லை.  தெளிவாக ஒழுங்காக ஆட்சி செய்தாலும் கவிழ்த்து விடுவார்கள் என்று தெரியும் என்பதனை கவனத்தில் வைத்தே செயல் படுகின்றார்கள்.  முக்கியமான பத்திரிக்கையாளர்கள், அது சார்ந்த நிர்வாகங்கள், அவற்றின் பலகீனங்களைத் தனதாக்கிக் கொள்ளுதல், நீதிமன்றம் சார்ந்த அமைப்புகள், அரசு ஊழியர்கள் என்று அச்சாணியைச் சுற்றி இயங்கும் அனைத்துச் சக்கரங்களையும் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதை ஒவ்வொரு நாளும் உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கின்றார்கள். அதற்காகக் கட்சியில் உள்ள  பணம் இருப்பவர்களைச் செலவழிக்க வைப்பது மிக மிக அதிகம்.  கருணாநிதியால் இங்கே பலன் பெறாத பத்திரிக்கையாளர்கள் ஒருவர் கூட இருக்க முடியாது.  அப்படி இருந்தால் அவர் துறையை விட்டு விலகிச் சென்று இருப்பார்.  இதில் பிராமணர்கள் பிராமணர்கள் அல்லாதவர்கள் என்ற பாரபட்சமே இல்லை.  ஆனந்த விகடனில் இருந்த வெளிவந்தவர்களை அவர்கள் பின்புலம் காரண காரியங்களைத் தேடிப் பிடித்துப் படியுங்கள்.

•••

2021 தேர்தலில் எடப்பாடி ஒரு வாசகம் சொன்னார்.  

"இவர்கள் வைத்துள்ள சொத்துக்களைக் கணக்கிட முடியாது. எந்தந்த இடங்களில் எந்த நபர்களிடம் எந்தந்த துறைகளில் வைத்துள்ள முதலீடு என்பது நீங்களும் நானும் நினைத்தே பார்க்க முடியாதது.  அதனால் தான் என்னைப் போன்ற நபர்களை இவர்கள் எதிரியாகப் பாவித்து அதிகாரத்தின் உள்ளே வர அனுமதிப்பதில்லை"  என்ற பொருள்படும்படி பேசினார். ஜெயலலிதா தன் ஆயுள் காலத்தில் திருடியதை விட எடப்பாடி கோஷ்டி பல மடங்கு அதிகம் செய்தனர் என்பது எந்த அளவுக்கு உண்மையோ ஒவ்வொரு முறையும் திமுக செய்கின்ற அனைத்து விதமான தவறுகளும் அதிமுக செய்வதைப் பார்த்துத் தான் தொடங்குகின்றது.  

ஜெ முதல் முறையாக ஆட்சிக்கு வந்த போது ஊழல் என்பது கோடியைத் தாண்டியது. அந்தப் பாதை இன்று பல்லாயிரம் கோடியில் வந்து நிற்கின்றது.  எடப்பாடி பேசியதில் முக்கால் வாசி உண்மையுண்டு. 

***

இன்று வெளிநாட்டுக்கு எந்தந்த வகையில் பணம் கடத்தப்படுகின்றது என்று அனைவருக்குமே தெரிகின்றது.  பிடிஆர் சொன்ன அறுபதாயிரம் கோடி என்பது என் யூகப்படி பத்தில் ஒரு மடங்காக இருக்கும் என்றே நம்புகின்றேன்.  எடப்பாடி மற்றும் கடந்த இரண்டு வருடங்களில் தமிழகத்தில் மணல் கொள்ளை மூலம் மட்டும் 7 லட்சம் கோடி இவர்கள் இருவரின் கைகளில் தான் உள்ளது என்பதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  மற்ற துறை பணம் என்பது தனி.  அதனால் தங்களைப் பங்காளிகள் என்று அழைத்துக் கொள்கின்றனர்.

***

அதிமுக என்பது அதிகாரம் என்பதனை திருட என்பதாகவே வைத்துள்ளனர். காரணம் அவர்களுக்கு வேறு எதுவும் தெரியாது. தெரிந்தவர்களை உள்ளே அனுமதிப்பதும் இல்லை. ஆனால் திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழக அதிகாரம் என்பதனை தங்களைச் சுற்றியே இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். நம்புகின்றனர். அதற்காகவே செயல்படுகின்றனர். எத்தனை வழிகள் உள்ள அத்தனை வழிகளையும் தெளிவாக உருவாக்கி வைத்துள்ளனர்.  எம்ஜிஆர் கருணா கட்டுப்பாட்டில் தான் நிர்வாகத்தை நடத்தினார்.  எடப்பாடியும் அப்படியே. விதிவிலக்கு ஜெ.  கண்ணில் விரலை விட்டு ஆட்டினார்.  சசிகலா தான் கிள்ளிக் கொடுத்தார்.

***

2021 மே மாதம் ஆட்சிக்கு வந்த முதல் நாள் தொடங்கிய திமுக கடந்த இரண்டு வருடத்தில் எத்தனை எத்தனை உள் அரங்கு கூட்டங்கள், எத்தனை எத்தனை வெளிக்கூட்டங்கள், தனிப்பட்ட சிறிய பெரிய விழாக்கள்.  எங்குத் திரும்பினால் சுவரொட்டி.  ஒவ்வொரு இடத்திலும் உங்களையும் என்னையும் போன்ற சாதாரண மனிதர்களின் முகம் தான் இருக்கும். இவர்கள் தான் பேச வேண்டும். அவர்களிடம் தான் அனுமதி வாங்க வேண்டும் போன்ற பஞ்சாயத்துக்கள் திமுக அதிமுக வில் இருக்காது.  புத்திசாலிகளை நம்புவதில்லை. அவர்களை கொல்லைப்புறமாக வரவழைத்துப் பேசுவார்கள். அதிகாரம் வந்தவுடன் மட்டுமே வேறு வகைகளில் பயன்படுத்திக் கொள்ள முடியுமா என்று பார்ப்பார்கள். ஆனால் தேர்தலில் வெல்லும் வரைக்கும் இது போன்ற நபர்களை அண்டக்கூட விடமாட்டார்கள். 

அவர்களுக்குப் பணம் அல்லது சாதி முக்கியம். இன்றைய சூழலில் காலை முதல் மாலை வரை எந்த ஊடகமாக இருந்தால் இவர்கள் முகத்தைத்தான் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கி விட்டனர்.

***

செயல்பட்டுக் கொண்டேயிருக்கின்றார்கள்.

செயல்பட வைக்கின்றார்கள்.

செயல்படக்கூடியவர்கள் எங்கேயிருந்தாலும் தனதாக்கிக் கொள்கின்றார்கள். மறவாமல் வந்தவர்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்து கொடுத்து கட்சிப் பணி ஒன்றே அவர்களது பணியாக இருக்க வேண்டும் என்று மாற்றி விடுகின்றார்கள்.  

ஊடகத்தில் பேசக்கூடியவர்களைக் கவனித்துப் பாருங்கள்.  அவர்கள் கட்சி ஆதரவுத் தளத்தில் நின்று பேசுவதில்லை. எதிரே இருப்பவர்களை அழித்து ஒழிக்க வேண்டும் என்பதில் வெறித்தனமாக இருப்பதில் தான் குறியாக இருக்கின்றார்கள். சமூக வலைதளத்தில் நான்  பாஜக ஆதரவாளன் என்று சொல்லக்கூடிய ஆண் பெண்கள் திமுகவின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களை ஏன் என் மானசீகம் என்று சொல்கின்றார்கள்? என்பதனை யோசித்துப் பாருங்கள். 

பணம், பதவி, அதிகாரம் போன்றவை மிக முக்கியம். நம் சொந்த வாழ்க்கையில் எவரால் உதவி பெற முடிகின்றதோ அவர் தான் ஆதர்சமாக இருக்க முடியும். இது தானே நிதர்சனம்.  

கடைசியாக...

மக்களுக்கு ஒரு கொள்கை பிடிக்காது, புரியாது, முழுமையாக தெரியாது என்றால் அதனை அப்படியே உல்டாவாக மாற்ற வேண்டும் என்பதனை தமிழக அரசியல் களத்தில் ஒரே குலம் ஒருவனே தேவன் என்று மாற்றிக் காட்டியவர் அண்ணாத்துரை. காரணம் வாக்கு அரசியல் என்பது பல கோடி மூளைகளுடன் தொடர்புடையது.  அவர்கள் நம்ப மறுக்கும் விசயங்களை திமுக அதிமுக எப்போதும் செய்யவே செய்யாது.  

அதனால் தான்  அதிகாரத்தின் உச்சியில் பொம்மையை அமர வைத்த போதிலும் அதனைச்சுற்றி இயங்கும் ஒவ்வொரு வளையமும் தனக்கான கடமையை இன்று வரையிலும் மிகச் சரியாகச் செயல்பட்டு வருவதை நான் வியந்து பார்த்து வருகின்றேன்.

அளவுக்கு மீறித் தனி மனிதர்களைத் துதி படாதீர்கள்.  நேரு, இந்திரா, ராஜீவ் வரை இன்று படாதபாடு படுகின்றார்கள். அவர்கள் நினைத்தே பார்த்து இருக்கமாட்டார்கள். 

நான் தமிழக அரசியலைப் புரிந்த வரைக்கும் கவர்ச்சி என்ற சொல்லுக்கு சொந்தக்காரராக விளங்கிய ஒரே ஒரு நபர் எம்ஜிஆர் மட்டுமே. சாதாரண பொதுமக்களைத் தவிர அனைத்து அமைப்புகளும் எம்ஜிஆரை கோமாளி போலவே பார்த்தனர்.  அவரை நம்பவே இல்லை. 

ஆனால் கிராமத்து மக்கள் அவர் மேல் வைத்திருந்ததை என்னால் இன்று வரையிலும் புரிந்து கொள்ளவே முடியவில்லை.  (புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளேன். முனைவர் ராஜராஜேஸ்வரி என்பவர் ஆராய்ச்சிக் கட்டுரையே எழுதியுள்ளார்)

சமூகவலை தளத்தில் ஒவ்வொருவரும் பத்திரிக்கையாளர். ஒவ்வொருவரும் சமூக ஆர்வலர். அனைவருமே தலை தான். எவரையும் கரிஸ்மா என்று ஏற்றி விடாதீர்கள். ஒரு வெங்காயமும் புடலங்காயும் இல்லை.   கடந்த முப்பது ஆண்டுகளில் பத்திரிக்கைகளும் ஊடகமும், தனிப்பட்ட கொள்கை கொண்ட ஊடக நிர்வாகமும் தமிழகத்தின் தலைவிதியை ஒவ்வொரு முறையும் நிர்ணயித்தார்கள். இன்று வரையிலும் நிர்ணயிக்கின்றார்கள் என்பதனை எப்போதும் கவனத்தில் வைத்திருங்கள். 

சமூகவலைதளத்தில் பிம்பங்களை உருவாக்கினாலும் இப்போது கூடுதலாகப் பணம் பேசுகின்றது. நான் ஏற்கனவே எழுதியபடி தமிழகத்தில் தலைவிதி என்பது தேர்தலுக்கு முந்தைய அந்த மூன்று நாட்கள் தான்.  அது தான் இங்கே அனைத்தையும் தீர்மானிக்கின்றது. தீர்மானிக்கும்.

டிஎன் சேஷன் ஓரளவுக்குத் தேர்தல் ஆணையத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளைச் சரி செய்தார்.  அதன் பிறகு இன்று வரை அந்த அமைப்பு ஆழ்ந்த தூக்கத்திற்குச் சென்று விட்டது.  மற்ற மாநிலங்களை விடப் படு கேவலமாகச் சொல்லக்கூடிய வகையில் பணமும் பொருட்களும் இங்கே தேர்தல் சமயங்களில் புழங்குவதை மத்திய அரசால் (அவர்கள் தமிழகத்தில் மேல் கண் காது மூக்கு வைத்திருக்கின்றார்கள் என்று நம்பினால்?) பாதிக்குப் பாதியேனும் நிறுத்த முடியாதா?  எத்தனையோ சீர்திருத்தங்கள் மசோதாக்கள் கொண்டு வந்து வெற்றி மேல் வெற்றி என்று ராஜநடை போடக்கூடியவர்களுக்குத் தேர்தல் சார்ந்த சீர்திருத்த விசயங்களில் ஏன் மெதுவாகச் செயல்படுகின்றார்கள்?  ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு வந்தாலும் அது ஓர் அமைப்பைத்  தொடக்க காலத்தில் இருந்தது போலவே சரி செய்யத் தொடக்கப் புள்ளியாக இருக்குமே தவிர அந்த அமைப்பில் உள்ள குறைபாடுகளை நீக்குமா?

தெலுங்கு படம் போல உடனே கையை முறுக்கிக் கொண்டு போய் நிறுத்தச் சொல்ல மாட்டேன்.  கட்சியோ நிறுவனமோ நாடோ படிப்படியான அமைப்பு என்பது இல்லாமல்  வில்லாதி வீரன் சூராதி சூரன் என்று நீங்கள் சொல்லாம். பாராட்டி எழுதலாம். தவறில்லை. 

ஒரு கருணாநிதி தான் இங்குள்ள அனைத்துத் தவறுகளுக்கும் காரணம்  குற்றம் சாட்டக்கூடியவர்கள் பல கருணாநிதிகளை இங்கே உருவாக்கிக் கொண்டு இருக்க நீங்கள் காரணமாக இருக்காதீர்கள் என்கிறேன். ஆனால் கருணாநிதியால் வாழ்ந்தவர்கள் அநேகம் பேர்கள்.  அரசியலில் இன்று வளர்ந்த பல பேர்கள் அவரை எதிர்த்து அல்லது அவர் தயவால் மட்டுமே வளர்ந்து வந்தனர். ஆனால் கோவை குண்டு வெடிப்பு முதல் அதற்குப் பிறகான உயிர் இழப்பு வரை இன்று வரையிலும் சங்கம் சார்ந்த எத்தனை பேர்களின் குடும்பத்துக்கு பெரிய பொறுப்புகளுக்கு வந்தவர்கள் உதவி உள்ளனர் என்பதனை உங்களுக்குத் தெரிந்தால் கீழே எழுதுங்களேன்?  குறைந்தபட்சம் அவர்களை சந்திக்க அனுமதியாவது கொடுத்து இருப்பார்கள் என்று நம்புகின்றீர்களா ? 

அமைப்பு. கொள்கை, வெளிப்படையான நிர்வாகம் இவற்றை நம்புங்கள்.  செயல்படாத பட்சத்தில் விமர்சனம் வைக்கத் தயங்காதீர்கள்.  உங்களுக்கும் எனக்குப் பின்னாலும் இந்த நாடு என்பது இருக்கும்.  நீங்கள் கொண்டாடக்கூடிய மனிதர்கள் உங்களையும் என்னையும் போல இறந்து தான் போகப் போகின்றார்கள்.  

2024 பாராளுமன்றத் தேர்தல் முடிவு வரும் போது தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் சாவடி வாரியாக நீங்கள் பார்க்கும் எண்ணிக்கை உங்களுக்குப் பல புரிதலை உருவாக்கும்.  அதுவரைக்கும் நான் நெகடிவ் ஆக எழுதுகின்றேன் என்று எரிச்சல்படாதீர்கள்.  

காரணம் அப்போது தான் உங்களுக்குப் புரியும்? 

மோடி அவர்கள் இன்று லடாக் மாவட்டத்தில் கட்டக் கடைசி கிராமத்தில் ஐஸ்கட்டியை உருக்கி  7 5 ஆண்டுகளாக தண்ணீர் என்பதாக குடித்துக் கொண்டு இருந்தவர்களுக்கு குடிநீர் குழாய் வழியாக தற்போது முதல் முறையாக குடிப்பதற்குக் காரணம் அமித்ஷா. ஆச்சரியமாக உள்ளதா? மோடி வந்த முதல் ஐந்தாண்டு காலத்தில் உத்திரபிரதேசத்தின் கிழக்கும் மேற்கும் அலைந்து கட்டமைப்புகளை உருவாக்கியதும், வாக்குகளாக மாற்றியதும் யார்? அமித்ஷா தான். அமைப்பு என்பது மிக மிக முக்கியம் என்பதனை அவர் உணர்த்திக் காட்டினார்.  அதிகப்படியான எம்பி களை பெற்றதற்கு இந்த உழைப்பே காரணம்.  அது தான் இன்று வரையிலும் மோடி அவர்களால் கனடா வை லெட் ஹேண்டில் டீல் செய்ய உதவுகின்றது. நம்மை ஆச்சரியப்பட வைத்துக் கொண்டு இருக்கின்றது.

கட்சியின் கட்டமைப்பு மூலம் தான் ஓட்டுக்களை உருவாக்க முடியும். பெற முடியும். 

மாறுதல் கொண்ட எண்ணம் கொண்டவர்களையும் வட்டத்திற்குள் வரவழைக்க முடியும்.

மேலே உள்ள முதல் கட்ட பேச்சு மற்றும் வழிகாட்டல் கலந்த உழைப்பும் கீழே உள்ள ஒருங்கிணைப்பும் ஒன்று சேர்வதால் தான் திமுக அதிமுக என்பது இங்கே நிரந்தரமாக நம்மால் ஆள முடியும் என்று நம்பும் அளவுக்குப் பயமுறுத்தி வைத்துள்ளனர்.

கட்சி கட்டமைப்பு, அதில் உள்ள படிப்படியான நிலையில் உள்ளவர்களை அரவணைத்து அவர்களுடன் உரையாடி அவர்களை உற்சாகப்படுத்தி அங்கீகாரப்படுத்தி கௌரவமாக வைத்திருக்கும் போது மட்டுமே ஓட்டுக்கள் பெட்டிக்குள் சென்று சேரும்.

அரசியலில் தொழிலில் உங்கள் எதிரிகளிடமிருந்து தான் கற்றுக் கொள்ள முடியும். பரஸ்பரம் நான் லைக் போடுகிறேன். நீ எனக்கு முறைவாசல் செய் போன்ற எழுத்துக்கள் கழிப்பறை காகிதம் என்பதனை நினைவில் வைத்திருங்கள். ஒருவர் எழுதியதைப் படித்தால் வெளிக்காட்டிக் கொள்ள விருப்பம் இல்லாது போனாலும் உள்ளூற நமக்கு தொடர்ந்து அதிர்வுகளை உருவாக்கும் அளவுக்கு அந்த எழுத்து நமக்கு பாதிப்பை உருவாக்க வேண்டும்.

மாற்றம் வராது போனால் விழலுக்கு இறைந்த நீர் பயிர்களை வளர்க்க உதவாது. கட்சிக்காக நிஜமாக உழைத்த பல ஆயிரம் குடும்பங்களைத் தெருவில் நிறுத்தவே உதவும்.

No comments: