Thursday, July 07, 2022

என்னைச் சுற்றிலும் பெண்கள்

வீட்டில் என்னைச் சுற்றிலும் ஏராளமான பெண்கள். அக்கா, தங்கை, அத்தை, பெரியம்மா, சின்னம்மா என்று வகைதொகையில்லாமல் கூட்டுக்குடும்ப கூட்டத்திற்குப் பஞ்சமே இல்லை. வளரும் போதே பெண்கள் குறித்த எவ்வித கிலேசமும் உருவாகவில்லை.


படித்த பள்ளி முதல் கல்லூரி வரைக்கும் இரு பாலரும் படிக்கின்ற பள்ளி என்பதால் எனக்கு முந்தைய வகுப்பில் பிந்தைய வகுப்பில் குடும்பத்தில் உள்ள யாரோ ஒருவர் படித்துக் கொண்டேயிருந்த காரணத்தால் உள்ளே ஒழுக்கம் என்ற சாட்டை சுழற்றப்பட்டுக் கொண்டே இருக்கும்.  தவறு எதுவும் செய்யவில்லை. வாய்ப்பில்லை. அப்படி எதுவும் நடக்கவே இல்லை. கனவில் கூட நினைத்துப் பார்த்தது கூட இல்லை.

தற்போது நான் வாழ்ந்து கொண்டு இருக்கும்  ஊரில் பெண் என்ற ஜீவநதி எப்படியெல்லாம் கரைபுரண்டு ஓடிக்கொண்டேயிருக்கும் என்பதனை கடந்த 20 வருடங்களில் பல நிகழ்வுகள், சம்பவங்கள்,சொத்து இழந்து தெருவுக்கு வந்து நின்ற குடும்பங்கள் என்று பலவிதமாகப் பார்த்துள்ளேன்.

ஆனால் என்ன காரணமோ பல சமயங்களில் என் உற்ற தோழனாக ஆஞ்சனேயர் என்னை வழிநடத்தியுள்ளார்.  எழுதினால் நம்ப மறுக்கும் பல அற்புதங்கள் என் வாழ்வில் நிகழ்த்தியுள்ளார். என் அறையில் பக்கவாட்டில் இவருக்கு ஒரு இடம் ஒதுக்கியிருப்பேன்.  முக்கால் வாசி பஞ்சாயத்துகள் என் அறைக்கு வராது. 

கூட்டல் கழித்த கணக்குகள் காணாமல் போய்விடும்.  இவன் பொட்டை, நடிக்கின்றான் என்று கண் முன்னே சொன்ன யுவதியை சிரித்துக் கொண்டே பார்த்து கடந்து வந்துள்ளேன்.

இப்படியே தப்பித்து வந்த காரணத்தால் ஒரு சிறப்பு வாழும் போதே கிடைத்தது.

சென்ற வருடம் முக்கியமான ஒரு நண்பர் மகள் திருமணத்திற்கு குடும்பத்தில் உள்ள அனைவரும் சென்னை சென்று இருந்தோம்.

மற்றொரு நண்பர் அவர் வீட்டுக்கு எங்களை வரவழைத்து இருந்தார். என்னை வைத்துக் கொண்டே பெண்கள் நலக்கூட்டணியினர் மூன்று பேர்களிடமும் அவர் நேர்காணல் எடுத்துப் பல கேள்விகள் கேட்டுக் கொண்டே வந்தார். 

கடைசியாக 

"ஒரே கேள்வியை மூன்று பேர்களிடமும் கேட்பேன். அப்பா இருக்கின்றார் என்று சமாளிக்கக்கூடாது. அப்படியே உண்மையைச் சொல்ல வேண்டும்" என்றார்.

"உங்கள் அப்பாவிடம் பிடித்த அம்சம் அதாவது நீங்கள் எதிர்காலத்தில் இதனை நாங்கள் பின்பற்ற ஆசைப்படுகின்றோம் என்றால் எதனைச் சொல்வீர்கள்? என்று கேட்டார்.

மூவரும் இப்படிச் சொன்னார்கள். சொன்ன விதம் வெவ்வேறு விதமாக இருந்தது. ஆனால் அர்த்தம் என்பதனை இப்படி எடுத்துக் கொள்ள முடிந்தது.

"அவர் பயன்படுத்தக்கூடிய எந்த பொருளை வேண்டுமானாலும் நாங்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். எதிலும் மறைவு என்பதே இருக்காது. எங்களுக்காக நடிக்கின்றாரா? என்று தெரியாது.  ஆனால் அலைபேசி, கணினி தொடங்கி அனைத்தையும் எங்களுக்காக விட்டுக் கொடுத்து விட்டார் என்றே நினைக்கின்றோம்.  நாங்கள் இவரைப் போல இருப்போமா? என்று எங்களுக்குத் தெரியாது.  எங்கள் பொருட்களை அப்பா எடுத்தால் நாங்கள் அவ்வப்போது திட்டுவோம். அதனால் அவர் எடுக்க மாட்டார். ஆனால் அவர் பொருட்களை எடுப்போம். திட்ட மாட்டார், ஏராளமான அலுவலக தொழிற்சாலை சார்ந்த பெண்கள் எண்கள் அவர் அலைபேசியில் பார்த்துள்ளோம். ஒருவர் கூட அழைத்து நாங்கள் பார்த்ததே இல்லை. என்பது போல சில சம்பவங்களைச் சுட்டிக் காட்டி அவரிடம் பேசிக் கொண்டு இருந்தார்கள்". 

நான் புத்தகம் படித்துக் கொண்டு பக்கவாட்டில் அமர்ந்து கேட்டுக் கொண்டு இருந்தேன்.

நான் இதனைப் பெருமையாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவோ, சுயதம்பட்டம் என்கிற ரீதியில் இதனை இங்கே எழுதவில்லை.  

ஒவ்வொரு நாளும் உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் தான் கடவுள், வழிகாட்டி, ஆசான்.  அதன் பிறகு தான் அப்பா, அம்மா.  

நான் வாழும் ஊரில் பெண்கள் தொடர்பு என்கிற இந்த இரண்டு வார்த்தையினால் அழிந்த, ஓடி ஒளிந்த மிகப் பெரிய சாம்ராஜ்யங்களைக் கண்டு நடுநடுங்கியுள்ளேன்.  எனக்குள் ஆறாத ரணத்தைத் தந்துள்ளது. 

தவறான பெண்கள் தொடர்பு உங்களை விடவே விடாது. விரிவாக எழுத முடியாத அளவுக்கு இதற்குள் பல பிரிவுகள் உள்ளது.  இப்படியெல்லாம் பெண்கள் இருப்பார்கள் என்பது போலப் பல பெண்களை நான் என் வாழ்வில் பார்த்துள்ளேன்.  ஆண் என்பவன் இந்த விசயத்தில் இறங்கி விட்டால் அவர் கடைசியில் விடவே முடியாத நிலையில் மரணத்தைத்தான் தழுவுகின்றான்.

இந்த விசயத்திலும் கடன் சொன்ன அரசியல்வாதிகள் மட்டும் தான் பிற்காலத்தில் தலைமைப் பொறுப்புக்கு வருகின்றார்கள்.

இதன் காரணமாக நான் பேசும் நண்பர்களிடம் குழந்தை வளர்ப்பு என்பதனை திரும்பத் திரும்ப யோசிக்காமல் சொல்லிக் கொண்டேயிருப்பேன்.

12 ஆம் வகுப்பு வரைக்கும் உங்கள் நடத்தை மூலம் உங்கள் குழந்தைகளுக்கு ஒரு தாக்கத்தை உருவாக்கி விடுங்கள். அதன் பிறகு இயற்கை அவர்களை நல்வழிப்படுத்தும் என்று உறுதியாக நம்புங்கள்.


2 comments:

  1. அருமை... அருமை...

    வளத்துடன் வாழ்க...

    ReplyDelete
  2. உண்மை நண்பரே! தனது நடவடிக்கைகள் மூலமே தன் குழந்தைகள் வாழ்வில் ரோல் மாடலாக ஒரு தகப்பன் இருக்க முடியும். வேறு வழியே இல்லை.

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.