Sunday, July 31, 2022

31 July 2022 பின்னோக்கி பார்க்கின்றேன்

நான் எழுதுவேன் என்று நினைத்ததே இல்லை.  13 வருடங்களுக்கு மேலாகத் தொடர்ந்து எழுதிக் கொண்டே வருவேன் என்று கனவிலும் நினைத்ததுமில்லை. புத்தகம் வெளியிடுவேன். பிரபல்யங்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள் என்று நினைத்தது கூட இல்லை.  




கலந்து கொண்டு வாழ்த்திய திரு ஞாநி அவர்கள், கம்யூ சட்டமன்ற உறுப்பினர் திரு. தங்கவேல் ஈரோடு மருத்துவர் திரு. ஜீவா  மூவரும் இன்று காற்றில் கலந்து வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். இதைப் போலவே கடந்த ஏழெட்டு மாதங்களில் அண்ணாமலை அவர் ஹோப் யூ டியூப் சேனலில் பேசுவேன் என்பதும், தொடர்ந்து பேசுவேன் என்பதனையும் நினைத்துப் பார்க்கவில்லை.  இன்று வரை 50 தலைப்புகள் மற்றும் உரையாடல்கள் வழியே 15 லட்சம் பேர்களுக்கு மேல் பாதி வருடத்திற்குள் சென்று சேர்ந்துள்ளேன். 

தமிழக அரசியல் வரலாறு என்பதனை தெளிவாக அழகாகக் கடந்த 100 வருடத்தில்  நடந்த ஒவ்வொரு நிகழ்வையும் கோர்த்து தொகுத்து எழுதியுள்ளேன். கிண்டில் பாதிப்பாக வெளியிட்டுப் பல ஆயிரம் பேர்களுக்குச் சென்றும் சேர்ந்து விட்டது.  சுவாசம் பதிப்பகம் சென்னையில் நடைபெறப்போகும் (ஜனவரி) புத்தக கண்காட்சியில் கொண்டு வரப் போகின்றார்கள். அதற்கான வேலை நடந்து கொண்டு வருகின்றது. நிச்சயம் இதுவொரு பேசு பொருளாக மாறும் என்றே நம்புகின்றேன்.

ஈழம் குறித்துக் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு எழுதியவற்றைத் தொகுத்து இலவச மின் நூலாக மாற்றிக் கொடுத்த போது பல லட்சம் பேர்களுக்குச் சென்று சேர்ந்தது. அமேசான் கிண்டில் வழியாக அடுத்த கட்டமாக இன்னும் பலவற்றைச் சேர்த்து வழங்கிய போது சில லட்சம் பேர்களுக்குச் சென்று சேர்ந்தது. பதிப்பக மக்கள் இது பற்றிப் பேசி இதனைக் கொண்டு வர முடியுமா என்று பார்க்கின்றோம் என்று சொல்லி உள்ளனர்.  

கடந்த பத்து வருடங்களில் குறைந்தபட்சம் 300 பேர்களாவது இதனைப் புத்தகமாக மாற்றுங்கள் என்று மின் அஞ்சல் வாயிலாகக் கோரிக்கையாகக் கேட்ட போது என் மனம் மாறவில்லை. இப்போது காலம் ஏதோவொரு கணக்கில் பதிப்பக மக்களைப் பேச வைத்துள்ளது என்றே நினைக்கின்றேன்.  கடந்த சில வாரங்களாகக் கூடுதலாக பத்து அத்தியாங்கள் சேர்த்து எழுதி உள்ளேன்.  அனைத்தும் தமிழர்கள் எந்தப் புத்தகத்திலும் அறியாத தகவல்கள்.  

இதற்காக சிலரின் வழிகாட்டுதல் கிடைத்து.  உற்சாகமாக இருந்தது.  ஈழத்தில் வாழ்ந்தவர்கள் முழுமையாகப் படித்துப் பார்த்து விட்டு சில அடிப்படை வருடம் சார்ந்த உறவுகள் சார்ந்த விசயங்களை மட்டுமே மாற்றினார்கள். மற்றது அனைத்தும் அப்படியே இருக்கட்டும். சிறப்பு என்றார்கள். நன்றி.  இது எதிர்கால ஈழ வரலாறு தேடல் உள்ளவர்களுக்கு புதிய பார்வையை உருவாக்கும் என்றே நம்புகின்றேன்.

கடந்த ஒரு வருடத்தில் படிக்கும் விதம் மாறியுள்ளது.  நேரப் பிரச்சனை மற்றும் உடல் ரீதியான மாறுதல்களின் மூலம் பேச்சு வடிவத்தை ஒலி ஒளி மூலம் கேட்கும் பழக்கம் புதிதாகத் தொடங்கியுள்ளது.  இந்த தலைமுறை போல சிலவற்றை மாற்றிக் கொள்ள வேண்டியதாக உள்ளது.

அளவு கடந்த ஞானமும், நம்ப முடியாத நிதானமும், இடைவிடாத இறைபக்தியும், அலுக்காத உழைப்பும், வாய்ப்புக்காக காத்திருந்த தருணங்களும், ஏமாற்றத்தை எளிதாக ஏற்றுக் கொண்ட நிஜவாழ்க்கை தரிசனங்களையும் தொகுத்து எழுத வேண்டும் என்று நினைத்தாலும் இனி தொடர்ந்து எழுத முடியுமா? என்று யோசிக்கும் அளவுக்கு மகள்களின் அடுத்தடுத்த உயர்வு யோசிக்க வைக்கின்றது.

கடந்த ஜூலை மாதம் தொடங்கிய கற்று களத்தில் இறங்கு யூ டியுப் சேனல் என்பது யூ டியுப் நிர்வாகம் எதிர்பார்த்த குறிப்பிட்ட சந்தாதாரர்கள், குறிப்பிட்ட கால அளவு உள்ள பார்வையாளர்கள் பார்க்கும் நேரம் என்பதனைக்கடந்து வெற்றி பெற்று இன்று அங்கீகாரம் பெற்ற தளமாக மாறியுள்ளது. 

வீட்டில் மற்றொருவர் இந்த வருடம் கல்லூரி செல்கின்றார்.

திருப்பூரில் வந்து வாழ்ந்த வாழ்க்கைக்கு திருப்பூர் குறித்து டாலர் நகரம் என்ற புத்தகம் எழுதி உலகம் முழுக்க இந்த நகர் குறித்து ஆவணப்படுத்தியதைப் போல இந்த வருடம் இங்குள்ள அரசு பள்ளிக்கூட மாணவியர்கள் 52 பேர்களுக்கு நீட் பயிற்சி அளித்தது அது சார்ந்த பணிகளைப் பார்த்தது பெருமையான தருணமாகக் கருதுகின்றேன். 

கடந்த 12 மாதங்களில் நான் செய்த பல சமூக பணிகளுக்கு பத்துக்கும் மேற்பட்ட நண்பர்கள் தங்கள் பொருளாதார பங்களிப்பை வழங்கினர். அவர்களுக்கு என் நன்றி.


2 comments:

KILLERGEE Devakottai said...

தொடரட்டும் பணி வாழ்த்துகள் நண்பரே - கில்லர்ஜி

திண்டுக்கல் தனபாலன் said...

அளவு கடந்த

இகழ்ச்சி
புகழ்ச்சி
+
+
+

வாழ்க... வளர்க...