Monday, December 21, 2020

பறவைகளுடன் வாழ்ந்த ஆண்டு 2020

நான் வசிக்கும் இடத்திற்கு அருகே காந்தி நினைவாலயம் உள்ளது. காந்தியின் அஸ்தி இந்தியா முழுக்க குறிப்பிட்ட இடங்களில் புதைக்கப்பட்டு அங்கு அவருக்கு ஒரு நினைவு இல்லம் உருவாக்கப்பட்டது.  



காந்தி திருப்பூர் வந்து கூட்டங்களில் பேசியுள்ளார். இதன் காரணமாக இந்தப் பகுதி காந்தி நகர் என்று ஆனது. 50 வருடத்திற்கு முன்னால் உருவாக்கப்பட்ட இந்த நினைவில்லத்தில் அடர் வனம் போல ஏராளமான பெரிய மரங்கள் உண்டு.  அதிகாலை ஐந்து மணிக்கு நான் இந்த இடத்தைக் கடந்து செல்லும் போதெல்லாம் ஆயிரக்கணக்கணக்கான பறவையினங்களின் ஒலி கேட்டுக் கொண்டேயிருக்கும்.  

நான் இருக்கும் பகுதியில் குறைந்தபட்சம் ஏழெட்டு அலைபேசி கோபுரம் உண்டு. ஆனாலும் பறவையினங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. காலை மற்றும் மாலை வேளையில் வாகனப் போக்குவரத்து எரிச்சலைக் கடந்து நின்று கவனித்தால் விதவிதமான ஒலிகளை ரசிக்க முடியும். அவசரமாகப் பயணிப்பவர்களுக்கு இதன் இதம் புரியாது. நான் பலமுறை இந்த இடங்களில் நின்று கவனித்து நடைபயிற்சியின் போது ரசித்துச் செல்வதுண்டு.

இதனைத் தொடர்ந்து இருக்கும் பகுதிகளில்  முன்னும் பின்னும் பெரும்பாலான இடங்களில் காடுகள் போலச் சிறிய மரங்கள் இருப்பதால் பறவையினங்கள் அதிகம் வாழ்கின்றது. கூடவே மயில்கள் அதிகமாகவும் உள்ளது.

கொரோனா தொடங்கிய மார்ச் ஏப்ரல் காலத்தில் ஊரே அமைதியாக இருந்தது. 

புகையில்லை. வாகனங்களின் ஒலியில்லை. இரைச்சல் இல்லவே இல்லை. மனிதக் கூட்டங்கள் வீட்டுக்குள் முடங்கியிருந்து.  எங்கும் நிசப்தம். 

வீட்டுக்கு முன்னால் அருகே இருந்த சந்துகளில் மயில் கூட்டம் கூட்டமாக கேட் வாக் செல்வது போலச் சென்று கொண்டிருப்பார்கள். மகள்களுடன் காலை மாலை நடைபயிற்சி சமயத்தில் இவர்களுடன் பேச முயல்வோம். மருண்டு ஓடுவார்கள். தோகை விரித்து ஆடுவார்கள். காதலிப்பார்கள். கண் இமைக்கும் நேரத்தில் மூக்கோடு மூக்கு வைத்துக் கொஞ்சிக் கொள்வார்கள். பார்த்துக் கொண்டேயிருப்போம்.

புத்தகம் படிக்க, யூ டியூப் பேச்சுகளைச் சப்தமாக வைத்துக் கொண்டு கேட்கத் தொடக்கத்தில் மாடியில் அமர்ந்திருக்கும் போது அருகே அமைதியாக வந்து நிற்பார்கள். நான் என் வேலையில் கவனமாக இருப்பேன். அவர்கள் அவர்களின் வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். 

மகள்களும் மனைவியும்  தட்டுகளில் அரிசி, கோதுமை, சாதம், ஒரு டப்பா நிறையத் தண்ணீர் என்று காலை ஒரு முறை மாலை ஒரு முறை வைத்துக் கொண்டே இருந்தார்கள்.  பல சமயம் வைப்பது சில மணிகளில் காணாமல் போய்விடும்.

மயில் வரும் போது குயில் வரும். பலவிதமான வண்ண வண்ணப் பறவையினங்கள் வந்து கொண்டேயிருக்கும். கூடவே அணில்கள் வந்து செல்வார்கள். இந்தக் கூட்டத்துடன் சேராமல் காக்கைகள் தனியாகக் கூட்டம் கூட்டமாக வந்து உண்டு விட்டுச் செல்வார்கள். குறிப்பிட்ட நேரத்தில் புறாக்கள் ஸ்டைலாக வந்து இறங்குவார்கள்.

மாடியில் ஒரு மூலையில் தனியாக அமர்ந்து கொண்டு இவர்களைப் பார்த்துக் கொண்டேயிருப்பேன். எப்போது வைப்பார்கள்? என்று தெரிந்து சரியாக அந்த நேரத்தில் வரும் விருந்தாளிகள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேயிருந்தது. மகள்களும் மனைவியும் அலுத்துக் கொள்ளும் நிலைக்கு வந்து சேர்ந்தது.

யூ டியூப் மற்றும் ஆங்கர் ல் குரல் பதிவுக்குப் பேசி பதிவு செய்ய மாடியில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டு பேசிக் கொண்டிருப்பேன்.  இவர்கள் அந்தப் பக்கம் நின்று பேசிக் கொண்டிருப்பார்கள். இவர்களின் குரல்களும் அதில் பதிவாகி விடும்.  நண்பர் இதனைக் கேட்டு விட்டு "ஐபாட்டில் இதனை நான் நடந்து கொண்டே கேட்கிறேன். அடர் வனத்திற்குள் நீங்கள் இருந்து பேசி பதிவு செய்தது போலவே உள்ளது" என்றார்.

இன்று வரையிலும் மாற்றம் இல்லை. 

இப்போது நான் மாடிப் பக்கம் செல்வதில்லை. காரணம் மஞ்சுளா என்னுடன் வந்து விடுகிறாள். நான் வீட்டுக்குள் இருந்தால் என்னுடன் என் காலுக்கு அருகே இருப்பது, நிற்பது, படுப்பது என்று அநியாயக் காதலியாக இருப்பது ஒரு வகையில் மகிழ்ச்சியான இம்சையாகவே உள்ளது.  மேலே மஞ்சுளா சென்றால் வரக்கூடிய புதிய விருந்தாளிகளை விரட்டுவதே முக்கிய வேலையாக வைத்திருப்பதால் தவிர்க்கும் பொருட்டு பறவைகளுக்கு உணவிட மகள்களை மட்டும் அனுப்பி வைக்கிறேன்.

மீண்டும் தொடங்கவும்.

"சமூகத்தைப் புரிந்து கொள்ளுங்கள்"

கொஞ்சம் உழைப்பு. அதிக வைராக்கியம் 2020

இணைய உலகம் 2020

11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மகிழ்ச்சி அண்ணே...

வாழ்த்துகள்...

Mohamed Yasin said...

பறவைகளுடன் பழகுவது ஒரு இனிமையான நிகழ்வு.. நேரம் செல்வதே தெரியாது.. ஆர்வம் இல்லாதவர்களுக்கு இது போல நிகழ்வுகள் சுத்தமாக பிடிக்காது.. சில நிமிடங்கள் செலவழித்தாலே அதிசயம்.. இதில் ஈடுபாடு இருப்பவர்களின் மன நிலையை அவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்..அந்த மகிழ்ச்சியை அவர்களால் மட்டுமே உள்வாங்க முடியும்.. பள்ளி பருவத்தில் புறாக்களோடு மூன்று ஆண்டுகளுக்கு மேல் பழகியவன் நான்.. இன்றும் எங்கேயாவது புறாக்களை காண நேரிட்டால் ஒரு நிமிட பார்வையை வீசாமல் செல்ல மாட்டேன். உங்கள் வீட்டு பறவைகளை கேட்டதாக சொல்லவும்.. நன்றி.

கரந்தை ஜெயக்குமார் said...

பறவைகள்
மனதிற்கு மகிழ்வைத் தருபவை
மகிழ்ந்தேன் ஐயா

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

உள்ளும் புறமும் உணர்ந்தவர்கள் விழிப்புணர்வை அடைந்தவர்கள் அனைவருக்கும் சாத்தியமே. நன்றி.

ஜோதிஜி said...

நன்றி

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இயற்கைச்சூழலோடு இணைந்த வாழ்வு மிகவும் ரம்மியமாகவும், ரசிக்கத்தக்கதாகவும் இருக்கும்.

வெங்கட் நாகராஜ் said...

இயற்கயோடு சூழ்ந்த தங்குமிடம் - சொர்க்கம்! மகிழ்ச்சி!

ஜோதிஜி said...

உண்மை.

ஜோதிஜி said...

நன்றி. மகிழ்ச்சி.

Rathnavel Natarajan said...

அருமை