1990க்கு முன்னால் பிறந்தவர்களிடையே நடந்த உரையாடலில் ஏதோவொரு சமயத்தில் இந்த வாக்கியம் கட்டாயம் இடம் பிடித்திருக்கும். "ஆமா இவர் பெரிய டாடாவாக்கும்".? டாடா என்ற சொல் கோடீஸ்வர சொல்லாக இங்கே உச்சரிக்கப்பட்டது. அதுவே கடந்த 25 ஆண்டுகளில் "ஆமா இவர் பெரிய அம்பானி பரம்பரையாக்கும்"? என்பதில் வந்து முடிந்துள்ளது.
ஒருவர் ஐந்து தலைமுறையில் சாதித்த சாதனைகளை மற்றொருவர் ஒரே தலைமுறையில் அள்ளிக் குவித்து மகன்களிடம் கொடுத்து விட்டுச் சென்று விட்டார். நாம் திருபாய் அம்பானி குறித்து, அவரின் வெற்றிக்கதைகளைப் பற்றிப் பேசப் போவதில்லை. அவரின் வாழ்க்கையை Hamish McDonald எழுதிய The Polyester Prince என்ற புத்தகம் திருபாய் அம்பானி உயிருடன் இருந்த காலம் வரைக்கும் இந்தியாவில் கிடைக்க முடியாத அளவிற்கு அவரைப் பற்றி குறுக்கு வெட்டு நீள்வெட்டுப் பார்வையை வாசிப்பவர்களுக்கு தந்தது.
நம் அரசாங்கம் கதவு ஜன்னல் அனைத்தையும் சாத்தி வைத்து, கை கால்களையும் கட்டி வைத்து, தொழிலதிபர்கள் முன்னேற வேண்டும் என்று சொன்னால் எப்படியிருக்கும்? அப்படித்தான் இந்தியா 1990 வரைக்கும் இருந்தது. அதையே அம்பானி தனக்கு சாதகமாகப் பார்த்தார். "எனக்கு ஓட்டைப் பிரித்து வெளியேறுவதைத் தவிர எனக்கு வழியில்லை" என்பதாக அவரின் வாழ்க்கை நமக்கு பலவற்றைப் புரிய வைக்கும்.
இந்தியப் பங்குச் சந்தையை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிறுவனம் ரிலையன்ஸ். இப்போது வரைக்கும் இந்தியாவின் மொத்த நிதியில் மூன்று சதவிகித நிதியை ரிலையன்ஸ் என்ற தனியார் நிறுவனம் தான் இந்தியாவிற்கு வழங்கிக் கொண்டிருக்கிறது என்பதனை கவனத்தில் வைத்திருங்கள். மிகப் பெரிய அளவில் வேலைவாய்ப்புகளை வழங்கிய உருவாக்கிய நிறுவனம் ரிலையன்ஸ். வெளிநாட்டு நிறுவனங்கள் அஞ்சி தயங்கிய பல காரியங்களை தன் உழைப்பால் சாதித்தவர் அம்பானி.
அம்பானி இறந்தார். மகன்களுக்கு அரசாங்கமே பஞ்சாயத்து செய்தது. நீதிமான்கள் மயில் இறகால் தடவி நீதிக்கதைகளுடன் போதனைகள் சொல்லிச் சமாதானப்படுத்தும் அளவிற்கு அவர்களின் செல்வாக்கு காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரைக்கும் ஆட்சி செய்தது. மக்களுக்குச் சேவை செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பல சமயங்களில் ரிலையன்ஸ்க்கு சேவை செய்வதே சிறப்பு என்கிற ரீதியில் செயல்பட்டதெல்லாம் வரலாற்றுச் சம்பவம்.
அப்பா மறைவிற்குப் பிறகு இரண்டு மகன்களில் ஒருவர் வென்றார். ஒருவர் வீழ்ந்தார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி (அப்போது நிதியமைச்சர்) "மை சன் இது ரொம்ப தப்பு" என்று பஞ்சாயத்துத் தலைவராகவும் மாறினார்.
உண்மையிலேயே அவர் பகிங்கரமாக "இருவரும் எனக்கு மகன்கள் தான்" என்று அறிவித்த ஆச்சரிய வார்த்தைகளெல்லாம் இந்தியத் தொழில் சரித்திரத்தில் உள்ளது. "உங்கள் சண்டை சச்சரவு காரணமாக இந்தியப் பங்குச் சந்தை படு பாதாளத்தில் போய் நின்று விடும்" என்று மற்ற வேலைகளை அனைத்தையும் விட்டுவிட்டு இதில் அதிகம் கவனம் செலுத்தினார். கடைசியின் அம்மா கோகிலா பென் அம்பானி வந்து கண்ணீர் சிந்த பாசக்கார பயலுக வழிக்கு வந்தார்கள்.
இதுவல்ல நமக்கு முக்கியம். தோற்றுப் போன கடைக்குட்டித் தம்பி என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதற்கு உதாரணமாக இருந்தார் என்பதனைவிட சமீபத்தில் மறைந்த அமர்சிங் வரலாற்றை நேர்மையாக யாராவது எழுதினால் அதில் பாதிப் பக்கங்கள் கடைக்குட்டி சிங்கத்தின் தோற்ற வரலாறு நிரப்பும். திருப்பூர் முதலாளிகள் போல அனில் அம்பானி இன்னமும் திருந்தாத முதலாளியாக இருப்பது அவரின் தனிப்பட்ட கொள்கை. நாம் அதற்குள் செல்லத் தேவையில்லை.
பந்தயத்தில் வென்ற முகேஷ் அம்பானி கொரானா காலத்தில் எப்படிச் செயல்பட்டார் என்பது தான் தொழில் ஆர்வம் உள்ளவர்களுக்கும், வெற்றி பெற்ற, பெற்றுக் கொண்டிருக்கும் தொழிலதிபர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்களுக்கும் தேவைப்படுகின்ற முக்கியமான தகவல் ஒன்றுள்ளது.
தொழில் சமூகம் என்பது மேலை நாட்டில் வேறுவிதமானது. இந்தியாவில் முற்றிலும் வேறுவிதமானது. இங்கு சாதி, மதம், அதிகாரச் செல்வாக்கு, அதிகாரிகளின் ஆதரவு, அரசியல் கட்சிகளின் ஆதரவு, எதிர்ப்பு, உள்ளூர் குண்டர்களின் கடைக்கண் பார்வை போன்ற அனைத்தையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். நடிகைகளின் கிசுகிசுகளை மட்டுமே தொடர்ந்து வாசித்துப் பழகியவர்கள், அரசியல் சச்சரவுகளைத் தினந்தோறும் முக்கியத்துவம் கொடுத்து வாசிப்பவர்கள் கட்டாயம் இங்குள்ள தொழில் சமூகத்தில் நடக்கும் நல்லது கெட்டது என்று அனைத்தையும் தெரிந்து கொண்டே ஆக வேண்டும்.
நம் ஊடகங்கள் திரைப்படத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தொழில் துறையினர் குறித்து கவலைப்படுவதில்லை. அப்படியே கவலைப்பட்டாலும் எந்த நிறுவனம் விளம்பரம் தரும் என்ற கூட்டல் கழித்தல் கணக்கிற்கு முடித்து வைத்து விடும். வணிக பத்திரிக்கைள் குறித்த அறிமுகம் இன்றைய இளையர்களுக்கு இருப்பதும் இல்லை. பணம் சம்பாரிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். எப்படி சம்பாரிக்க வேண்டும்? என்பது குறித்தோ? எந்த தொழில் நடைமுறையில் நமக்கு சாத்தியமானது குறித்தோ எவருக்கும் புரிபடுவதே இல்லை. புரிந்தவர்கள் சொன்னாலும் இங்கே எடுபடுவதில்லை. எல்லாமே அரசியல். எப்போதும் இங்கே அரசியல் தான் என்று இருப்பதால் மட்டுமே அதுவே ஒன்றை உருவாக்குகின்றது. அதுவே அழிக்கவும் செய்கின்றது.
கருப்பு வெள்ளை போல எல்லாத் தொழிலும் எல்லா இடங்களிலும் இரவு பகல் என்று இரண்டுமே உண்டு. நேர்மை உழைப்பு மட்டும் இருந்தால் போதும் என்று தன்முனைப்பு பேச்சுகளை முன் உதாரணமாகக் காட்டி நான் உங்களை ஏமாற்ற விரும்பவில்லை. நாம் செய்யக்கூடிய தொழிலுக்கும் இவற்றுக்கும் என்ன சம்பந்தம்? ஏன் குழப்புகின்றாய் என்ற கேள்வி உங்களுக்குள் வரக்கூடும்.
ஒரு சின்ன உள்ளூர் உதாரணம் சொல்கிறேன்.
கொரானா காலம் தொடங்குவதற்கு முன்பு எங்கள் வீட்டின் அருகே தெருவோரத்தில் குறிப்பிட்ட பகுதியில் சனி ஞாயிறு அன்று வரிசையாக மீன் கடைகள் போட்டு விற்றுக் கொண்டிருப்பார்கள். ஞாயிறு அன்று மீன்கடைகள் மட்டும் மொத்தம் 22. இது தவிர கோழிக்கடைகள் மற்ற இறைச்சிக் கடைகள் என்று அந்தப் பகுதியே மக்கள் கூட்டத்தில் அலைமோதும். நான் ஒவ்வொரு வாரமும் செல்லும் போது மாறிக் கொண்டேயிருக்கும் விலைகளைக் கவனித்து பல விதங்களில் ஆராய்ச்சி செய்வதுண்டு. அருகேயிருக்கும் பவானி சாகர் மற்றும் மேட்டூர் அணைகளிலிருந்து தான் மீன்கள் வருகின்றது. ஏனிந்த அதிகப்படியான விலை என்று என் ஆராய்ச்சியைத் தொடங்கினேன். அதாவது ஒரு கிலோ 130 ரூபாய் விற்றுக்கொண்டிருந்த மீன்கள் 200 ரூபாய்க்கு வந்து நின்ற போது தான் பலரிடமும் விசாரிக்கத் தொடங்கிய போது தான் எனக்கு பல உண்மைகள் தெரிய வந்தது. தொழில் சமூகத்தின் பக்கவாட்டு விளைவுகள் மூலம் எந்த அளவுக்கு விலை ஏற்றுகின்றது. அது எப்படி நுகர்வோருக்கு வந்து சேர்கின்றது என்பதனை புரிந்து கொண்டேன்.
அணைகளில் இயற்கையாக செயற்கையாக வளரும் மீன்களை ஒப்பந்த அடிப்படையில் தான் இடைவெளி விட்டு ஒப்பந்தக்காரர்கள் வலைவீசி அள்ளுகின்றார்கள். இதில் கட்சி கட்டிங் என்பது அந்தந்த பகுதியில் செல்வாக்கு செலுத்தும் ஆளுங்கட்சி நபருக்குச் சென்று விடும். மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படுவது மற்றொரு தொகை. கூலியாட்கள் தொகை, ஒப்பந்தக்காரர்களின் லாபம் இவை அனைத்தும் சேர்ந்து தான் ஒரு கிலோ மீன் வாங்கச் செல்லும் வியாபாரிகளின் தலையில் ஏறுகின்றது. வாங்குபவர் தன் வாகனச் செலவு, கூலியாள் செலவு தன் லாபம் என்பதோடு கடைக்கு வந்து சேர்கின்றது. கடையில் பணிபுரிபவர்களின் செலவு சேர ஒரு கிலோ இந்த விலை என்பதாக முடிகின்றது. இத்துடன் முடிவது இல்லை. கடை போடுவதற்கு மாநகராட்சி அதிகாரிகள், அந்தப் பகுதியில் உள்ள அனைத்துக் கட்சியில் உள்ளவர்களுக்கு வழங்கும் நிதி இதுவும் இத்துடன் சேர்கின்றது.
எங்கள் பகுதியில் அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் என்று தரம் வாரியாக பிரித்து ஒரு கடைக்கு ஆயிரம், ஐநூறு, இருநூற்று ஐம்பது என்பது கட்டிங் செல்கின்றது. அதிமுக கட்சி ஒரு கடையில் 1000 ரூபாய் வாங்கினால் அன்றைய ஒரு நாள் தினத்தில் கட்சிக்காரர் ஒரு மணி நேரத்தில் 22 000 எளிதாக சம்பாரித்துச் சென்று விடுகின்றார். இதே போல ஒவ்வொரு கடைகளும் கொடுக்க வேண்டும். இவையெல்லாம் போக மாநகராட்சி ஊழியர்கள், காவல்துறை அதிகார வர்க்கம் வசூலிக்கும் தொகை தனியானது. கடைசியில் அந்தப் பகுதி துப்புரவுத் தொழிலாளர்கள் வரைக்கும் வந்து நிற்கின்றது.
கூட்டிக் கழித்துப் பாருங்கள். ஒரு கடை போட்டு மீன் விற்பவர் குறைந்தபட்சம் நான்கு மணி நேரம் கடை போடுவதற்கு மூவாயிரம் ரூபாய் வழங்கினால் மட்டுமே வியாபாரம் செய்ய முடியும். ஒரு கிலோ ஐம்பது ரூபாய் விலையுள்ள மீன் நுகர்வோருக்கு வந்து சேரும் போது 200 ரூபாயாக மாறுகின்றது. இதில் பாடுபட்டு உழைப்பவர்கள் (ஒப்பந்தக்காரர் மற்றும் மீன்கடை போடுபவர்) இருவரின் லாபம் ரூபாய் ஐம்பது என்று வைத்துக் கொண்டாலும் பாதிக்குப் பாதி நம்மூர் பரதேசிகளுக்குத்தான் போகின்றது. காரணம் பரதேசி என்பவர்கள் பிச்சையெடுத்து வாழ்பவர்கள் என்றே நம் புராண இதிகாசங்கள் நமக்கு உணர்த்துகின்றது.
இது சின்னக் கடைகளில், வாரம் தோறும் போடப்படும் கடைகளில் இப்படியென்றால் பெரிய சிறிய நடுத்தர வர்க்க நிறுவனங்கள் மற்றும் கடைகளில் கட்சிக்காரர்கள் வசூலிக்கப்படும் தொகை அது தனியானது. வருடத்தில் நான்கு முறையாவது இது நடக்கும். "கூட்டம் நடத்துகின்றோம். கூழ் ஊற்றுகின்றோம்" என்பதாக இது விரிந்து கொண்டே போகும்.
ஆனால் கடைசியில் நாம் யாரைக் குறை சொல்கின்றோம். "படுபாவி பய. அநியாய விலை விற்கின்றான்" என்கிறோம். இவர்களுக்கே இப்படி என்றால் பெரிய நிறுவனங்களில் நிலை எப்படியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். ஆனால் நாம் அவர்களை "கார்ப்ரேட் திருடர்கள்" என்று பழித்து பாவத்தைச் சம்பாதித்துக் கொள்கின்றோம். சூழல் பொறுத்து, வியாபாரங்கள் பொறுத்து ஆயிரம் லட்சம் கோடி என்பதாக வலைபின்னல் பெரிதாகிக் கொண்டே போவது இந்தியாவில் மட்டும் தான் என்று எண்ணி விடாதீர்கள். வளரும் நாடுகள் அனைத்திலும் இப்படித்தான் வியாபாரச் சமூகம் தங்களைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடிக் கொண்டேயிருக்கிறது என்பதனையும் உங்கள் கவனத்தில் வைத்திருக்கவும். ஏன் மேலைநாடுகளில் கீழ் நிலையில் லஞ்சம் ஊழல் இல்லை என்பதற்கு ஒரே காரணம் அங்கே அரசியல் வேறு. நிர்வாகம் வேறு. இரண்டும் தனித் தனியாக தங்கள் கடமைகளைச் செய்து கொண்டிருப்பதால் ட்ரம்ப் விமானநிலையத்திற்குள் சென்றாலும் ஒரே மாதிரி தான் நடத்தப்படுவார். கடைக்கோடி அமெரிக்கன் சென்றாலும் அதே தான். நம்மூர் போல 120 அடி கட் அவுட் வைத்து "வயிற்றுப் போக்கு நோயைச் சரிசெய்து அமெரிக்காவில் இருந்து திரும்பி வரும் எங்கள் குலத் தங்கமே" என்பது போன்ற ப்ளெக்ஸ் போர்டு வைப்பதை நம்மால் நினைத்தே பார்க்க முடியாது. பிச்சு பிடுவார்கள் பிச்சு.
டாடா ஆலமரம் போல விழுது பரப்பி உலகம் முழுக்க தன் தொழில் சாம்ராஜ்யங்களை எந்த அளவுக்குப் பரப்பி வெற்றி கண்டார்களோ அம்பானி என்றால் பாலிஸ்டர் மற்றும் அதனைச் சார்ந்த துணைப் பொருட்கள். "ஒரே கூரையின் கீழ்" என்று இன்றைய வணிக உலகம் வலியுறுத்துவதை தன் கொள்கை கோட்பாடாக வைத்து தேக்கு மரம் போல விலையுயர்ந்த "வெகுமதியான தொழில் சாம்ராஜ்யத்தை" அமைத்தவர் அம்பானி. கடன் இல்லாத நிறுவனம், வாடிக்கையாளர்களை கணவானாக மாற்றிய நிறுவனம் என்று பல நல்ல பக்கங்கள் உண்டு. உலகம் முழுக்க பெட்ரோல் என்ற எரிபொருளுக்கு மாற்றுத் துறைகளைக் கண்டறிவதும், அது சார்ந்த துறைகள் படிப்படியாக வளர்ந்து கொண்டிருக்கும் இப்போதைய சூழலில் முகேஷ் அம்பானி எடுத்த முடிவுகள் கொரானா காலத்தில் அவருக்கும் பம்பர் லாட்டரி பரிசினைத் தந்தது. கூடவே அவர் சொத்து மதிப்பு எகிறியது. உலகப் பணக்காரர் என்ற வரிசையில் ஒன்பதாவது இடத்திலும் கொண்டு வந்து நிறுத்தியது. அதுவும் இந்தியாவே முடங்கிக் கிடந்த ஏப்ரல் மே ஜூன் மாதங்களில் தான் சாதனை நிகழ்த்தினார் முகேஷ் அம்பானி.
நாம் ஏற்கனவே பார்த்த தொழில் நுட்பங்கள் மூலம் உலகத்தை ஆண்ட, ஆண்டு கொண்டிருக்கும் உலகப் பிதாமகன்கள் உருவாக்கிய பாதையில் இன்று ஒவ்வொரு தொழிலும் அதன் முகத்தை மாற்றிக் கொள்ளத் துவங்கியுள்ளது என்பதனை நீங்களும் நானும் அறிந்தே வைத்துள்ளோம். பெட்ரோல் என்ற ஒற்றை வார்த்தை தான் ரிலையன்ஸ்னின் உயிர் மூச்சு. காலம் மாறுகின்றது. இனியும் அம்பானி லாபம் இதில் எடுக்க வாய்ப்பில்லை என்பதனை உணர்ந்து கொண்ட மூத்த மகன் தொட்ட துறை உள்நாட்டுச் சில்லறை வர்த்தகம். ஆயில் என்பது மூன்றெழுத்து அண்ணன். ஜியோ என்பதும் அதன் கூடப் பிறந்த மூன்றெழுத்து தம்பி. எரிபொருள் எப்படி இந்தியச் சந்தைக்கு முக்கியமோ அதே போல மற்றொரு பொருள் முக்கியமாகக் கடந்த பத்தாண்டுகளில் மாறியது. அதன் பெயர் டேட்டா. காற்றை வித்து காசாக்க முடியுமா என்ற விவாதமும் காற்றில் ஊழல் பண்ண முடியுமா? என்ற பேச்சும் கலந்து வந்த அதே 1ஜி 2ஜி 3ஜி 4ஜி யே தான். இப்போது 5ஜிக்கு உலக சமூகம் வந்து நின்றாலும் நம்மூர் மக்கள் அல்லோ அல்லல்லோ என்று மரத்தின் உச்சியின் நின்று கத்துவதும் கதறுவதும் நின்றபாடில்லை. இத்துறையில் நுழைந்த முகேஷ் செய்த செயல்பாடுகள் எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. "ஜியோ மார்ட்" என்ற கூரையின் கீழ் ஒவ்வொன்றாக உள்ளே நுழைத்து அதற்குப் பாதுகாப்பு அரணாக ஃபேஸ்புக் (செல்லக்குட்டி தம்பியை அடுத்துப் பார்க்கப் போகிறோம்) வாட்ஸ்அப் செயலிகளை அமைத்து வீட்டுக்குள் எட்டிப் பார்த்து உங்கள் தேவைகளைச் செய்யப் போகின்றார்கள்.
3 comments:
மிகவும் தெளிவான புரிந்து கொள்ளும்படியான அருமையான விளக்கம்.. 2006/2007 கால கட்டங்களில் திண்டுக்கல்லில் வேலை பார்த்து கொண்டிருந்த போது, எங்கள் நிறுவன நிர்வாக இயக்குனர் சைக்கிளில் வைத்து துணி வியாபாரம் தன்னுடைய ஆரம்ப காலத்தில் செய்ததாக அலுவலகத்தில் பேசி கொள்வார்கள்.. இன்று வரை இந்த நிகழ்வு ஆச்சரியப்படுத்தி கொண்டே இருக்கும்.. முகேஷ் / அனில் அம்பானி இருவரும் வளர்ந்ததில் எனக்கு பெரிய வியப்பு இல்லை.. விதை திருபாய் அம்பானியோடது.. இருப்பினும் தன் இடத்தை முகேஷ் அம்பானி தொடர்ந்து தக்க வைத்து கொண்டிருப்பது மிகவும் சவாலான ஒன்று..
எந்த வியாபாரத்திலும் ஆரம்ப நிலை கடுமையானது.. சவாலானது. சுருங்க கூறின் வியாபார அறிவை எப்படி வளர்த்து கொள்வது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.. இதுவரை யாரும் செய்யாத புதிய நடைமுறையில் தொழில் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் மனதின் ஓரத்தில் ஓடி கொண்டே இருக்கிறது.. யாருடைய பாதையிலும் பயணிக்காமல் புதிய பாதை அமைத்து பயணிக்க வேண்டும் என்பது என் விருப்பம்.. ஒரு ஆயிரம் குடும்பத்திற்கு அரணாக விளங்க வேண்டும் என்பது விருப்பம்..
எண்ணமே வாழ்க்கை. எண்ணம் தான் வாழ்க்கை. உங்கள் வாரிசுகள் உங்கள் மூலம் பலன் பெற வாய்ப்புண்டு. வாழ்த்துகள்.
ஒரு கிலோ ஐம்பது ரூபாய் விலையுள்ள மீன் நுகர்வோருக்கு வந்து சேரும் போது 200 ரூபாயாக மாறுகின்றது. இதில் பாடுபட்டு உழைப்பவர்கள் (ஒப்பந்தக்காரர் மற்றும் மீன்கடை போடுபவர்) இருவரின் லாபம் ரூபாய் ஐம்பது என்று வைத்துக் கொண்டாலும் பாதிக்குப் பாதி நம்மூர் பரதேசிகளுக்குத்தான் போகின்றது.
அருமையான உதாரணம் .
அதிகாரிகள் ,கட்சிக்காரர்கள் போன்றவரின் செயலை உரித்துக் காட்டுகிறது .
மற்ற உதாரணம் பார்ப்போம் .
அரசு ரோடு போடுகிறது , கட்டிடம் கட்டுகிறது .
வளர்ச்சி திட்டங்களை அறிவிக்கின்றது .
பாதி பணம் போக வேண்டியவர்க்கு போய் சேர்ந்து விடும் .
மிச்ச பணத்தில் எதோ கட்டுவார்கள் .
தொழிலை நடத்துவது எளிது அல்ல . ஆர்டர் வர வேண்டும் .
அப்புறம் மூலப்பொருள் வேண்டும் . வேலை செய்ய ஆட்கள்
அப்புறம் பணத்தை வசூல் செய்யவும் வேண்டும் .
செலவு கம்மியாக இருந்தால் வருவது லாபம் .
இது விவசாயத்திற்கும் பொருந்தும் .
இந்த பாடுபடுவதற்கு பதிலாக ஒரு சேகர் ரெட்டியாகவோ
அடலீஸ்ட் ஒரு மினிஸ்டர் பி ஏ ஆகவோ இருப்பது லாபம் .
நோகாம நொங்கு திங்கலாம் .
Post a Comment