Wednesday, November 20, 2019

மதுரை சம்பத் பார்வையில் 5 முதலாளிகளை கதை

Sampath Srinivasan

4 November at 21:58 ·

Kindle E book 5 Muthalaleegalin Kathai Review

புத்தக விமர்சனம்

நண்பர் ஜோதி கணேசன் ஏற்கனவே காரைக்குடியிலிருந்து புலம் பெயர்ந்து திருப்பூர் வந்தது முதல் ஒரு சாதாரண தொழிலாளியாக கால்பதித்து பின்னலாடை நிறுவனத்தில் பொதுமேலாளராக நிலை நின்றது வரை டாலர் நகரம் என்ற புத்தகத்தில் சொல்லி வந்த போது, அந்த தொழில் சார்ந்து பணிகள், இயந்திரங்கள், பணியாளர்கள், உற்பத்தி முதல் விற்பனை வரை என பல விபரங்களை கட்டுரைகளாக சொல்லிச் சென்றிருப்பார்.

அத்தகைய நகரத்தின் வளர்ச்சி, வீழ்ச்சி, மீண்டெழுதல், மீண்டும் வளர்ச்சி என காலச்சக்கரமாக சுற்றிக் கொண்டிருக்கிற அந்த தொழிலைப் பற்றி இன்னும் ஆவணப்படுத்த வேண்டிய செய்திகள் ஏராளமாக உள்ளது என்ற அடிப்படையில் தற்போது சில முதலாளிகளை அவர்களின் குணாம்சங்கள், தனிமனித ஒழுக்கங்கள் சார்ந்து நின்று, அதோடு பின்னலாடை தொழில் சார்ந்து மேலும் பல செய்திகளை சுவாரசியமாக அடுக்கிக் கொண்டே சென்றுள்ளார்.


முதலாளிகள் வரிசையில் முதல் முதலாளி தனது தொழில் சார்ந்து கடுமையான உழைப்பாளியாக இருந்த போதிலும், ஆண்களும் பெண்களும் அடிமட்ட தொழிலாளிகளாக 12 முதல் 16 மணி நேரங்கள் பணியாற்றுகிற சூழலில் பணம் சார்ந்து, பாலியல் உணர்வுகள் சார்ந்து பணிபுரியுமிடத்தில் பாலியல் அத்துமீறல் சர்வ சாதாரணம் என்ற சூழலில் எவ்வாறு படிப்படியாக உயர்ந்த ஒருவரை ஒரு பெண் ஆளுமை செய்ய நேரிட்டதால் தோல்வியை நோக்கி பரமபத பட பாம்பில் இறங்குவது போல் இறங்கி, துவங்கிய இடமான மீண்டும் டைலராக பணிபுரிவதைச் சொல்லி தவறான பழக்கங்கள் எந்தத் தொழிலையும் சாய்த்து விடும் என்பதை வாசகர்களுக்கு உணர்த்துகிறார்.

மற்றொரு முதலாளியும் ஓரினச் சேர்க்கை என்ற பழக்கத்தினால் தடுமாறியதை, முதலாளிக்கு நெருக்கமாக இருந்த ஒருவர் அந்த பணியிடத்தில் வேறொருவர் வர நேர்ந்தால் பொறாமையில் மேற்கொள்ளும் நடவடிக்கை, கடன்கள், முறையாக திருப்பிச் செலுத்தாமை போன்றவற்றால் வீழ்கிறார். மற்றொரு முதலாளி உறவுகளையாக வளர்த்து விட்டு தனியாக தொழில் தொடங்க வழி வகை செய்தாலும், பின்னாளில் யாரும் கண்டு கொள்ளவில்லை என்பதை பதிவு செய்கிறார். 

மற்றொரு முதலாளி நியாயமற்ற எந்த வழிமுறைகளும் வேண்டாமென்றிருப்பதை, தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டு இருப்பு வைத்துக் கொள்வதை பற்றி தெரிவிக்கிறார். இது ஏறக்குறைய தென் மாவட்டங்களில் நடைபெறும் தானியங்கள், மளிகை போன்றவற்றில் விலையேற்றத்தை எதிர்நோக்கி "அண்ணாச்சிகள்" மேற்கொள்ளும் வியாபார தந்திரத்தோடு ஒப்பிடக் கூடிய நிகழ்வுதான். அந்த முதலாளியின் செயலில் அனாவசிய கடன்கள் தவிர்க்கப்பட வேண்டும், வாங்கிய கடன்கள், பிற பார்ட்டிகளுக்கு கொடுக்க வேண்டிய தொகைகள் உரிய காலத்தில் கொடுக்கப்பட வேண்டும் என்கிற நேர்மை புலப்படுகிறது.

இறுதியில் தானும் ஒரு முதலாளி நிலைக்கு உயர்ந்ததை சொல்லி நிறைவு செய்கிறார். முதலாளிகள் கதை என சுவாரசியத்திற்காக பெயரிட்டிருந்தாலும் உளவியல் ரீதியாக, நகரின், மக்களின் வாழ்க்கை முறைகளோடு இணைந்து பயணித்து ஏராளமான செய்திகளை முன்வைக்கிறார் ஜோதிஜி.

சாயப்பட்டறை விஷ‌யத்தில் முதலாளிகள், நீதிமன்றங்கள், அரசியல் வாதிகள் என பலரும் தொடர்ந்து கண்ணாமூச்சி விளையாடியதை சுற்றுப்புற சூழல் சார்ந்து கவலையோடு பதிவு செய்கிறார். ஒரு புறம் நொய்யலாற்றை மாசு படுத்தியதோடு நில்லாமல், விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் லாபம் ஒன்றே குறி என்ற வகையில் ஆழ்துளை கிணறுகள் தோண்டி பயன்படாமல் இருப்பவற்றில் சாயகக்கழிவுகளை ஊற்றி பூமிக்கு மிகப்பெரிய கெடுதலை செய்திருக்கிறார்கள் என்பதை பதிவு செய்துள்ளார். 

ஒரு வரிச் செய்தியாக பின்னலாடை கழிவுகளை எடுத்து வியாபாரம் செய்பவர் சில ஆண்டுகளில் கோடீஸ்வரராக உயர்ந்துள்ளார் என்பதை சொல்கிறார். ஆம் Seconds Market என்றொரு சந்தை உண்டு. திருப்பூரில் காதர்பேட்டை எனுமிடத்தில் பல நூறு குடும்பங்கள், ஏன் தமிழகம் முழுவதும் நடைபாதை வியாபாரிகள் இவை சார்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. மேலோட்டமாக பார்க்கிற போது அதில் என்ன குறை என நமக்கு தெரியாது ஆனால் ஏற்றுமதி தயாரிப்புகளில் தரக்கட்டுப்பாட்டில் நிராகரிக்கப்படும் எண்ணிக்கைகளை பார்க்கிற போது, 1000 பீஸ் ஏற்றுமதி ஆர்டர் என்றால் 1400 ஆவது தயாரித்தால்தான் 1000 சப்ளை செய்ய இயலும் என்பது காதர்பேட்டை சந்தையை சுற்றி வந்தால் தெரிந்து கொள்ள முடியும். 

அந்த 1400 உற்பத்தி செலவையும் சேர்த்துத்தான் 1000ற்கான விலை நிர்ணயம் செய்யப்படும் என்பதால், Seconds என்பது நிறுவனங்களிடமிருந்து அடிமாட்டு விலைக்கு ஒரு தரகரிடம் இறங்கி அது தமிழகம் முழுவதும் தெருக்களுக்கு வரும் வரை அதை வைத்து பலர் சம்பாதிக்கும் சங்கிலித் தொடர் நமக்கு புரிய வரும்.

மொத்தத்தில் இந்த புத்தகத்திலிருந்து

* மதுப்பழக்கத்தினால் நம் மாநில தொழிலாளர்கள் பலர் தொழிலை விட்டு வெளியேறிவிட்டனர்.

* இந்த தொழிலில் நிரந்தரம் என்பதில்லாமல் மாறிக்கொண்டே இருப்பார்கள் என்பதால், பல பணிகள் ஒப்பந்த முறைகளில்தான் என்பதால் அடிப்படை தொழிலாளர் நலச் சட்டங்கள் சொல்லும் எவ்வித நல வசதிகளும் இந்த தொழிலாளிகளுக்கு இருப்பதில்லை

* புலம் பெயர்ந்த வெளி மாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் இந்த தொழிலுக்கும் வந்து விட்டார்கள்

*லாபம் ஒன்றே குறி என்பவர்கள் மற்ற எந்த அழிவுகளைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்கள்

* பின்னலாடை தொழில் சார்ந்து அச்சுத் தொழில், சரக்கு வாகனம், அரசின் மது பான விற்பனை, முதலீடே இல்லாமல் காசு பார்க்கும் ஏஜெண்டுகள் என பல உப தொழில்கள் வளர்ந்துள்ளன.

* வேலை வாய்ப்பு என்பது இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கிறது, ஆனால் துவக்க காலத்தில் தொழிலாளிகள் வேலை தேடி வந்தார்கள், இன்று முதலாளிகள் பணிக்கு ஆட்களை தேடுகிறார்கள் என சுழற்சி மாறியிருக்கிறது.

இப்படி ஏராளமான செய்திகள் அத்தியாயங்களுக்கு ஊடே விரவியிருக்கிறது.

டீமானிடைசேஷ‌ன் எனும் பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பு, நிழல் பணப்புழக்கத்திற்கு வந்த நெருக்கடி போன்றவற்றால் திருப்பூர் வீழ்ந்ததுதான் சமீபத்திய வரலாறு. அது பற்றி தனியாக ஒரு புத்தகம் எழுதுமளவிற்கு செய்திகள் ஏராளம் உள்ளது என்பதை நானறிவேன். ஜோதிஜி அதிலும் இறங்குவார் என நம்புகிறேன். மொத்தத்தில் விறுவிறுப்பான நடையில் ஏராளமான செய்திகளை கொடுத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் ஜோதி கணேசன்.

நட்புடன்

எஸ்.சம்பத்


#Amazonpentopublish2019
#Longform
#5MuthalaleegalinKathai
#JothiGanesan
#5முதலாளிகளின்கதை


5முதலாளிகளின்கதை

2 comments:

D.Kanagasundaram said...

உங்கள் ஐந்து முதலாளிகளின் கதை புத்தகம் படித்தேன். சொல்லவந்த விசயங்களை சுருக்கமாகவும் சிறப்பாகவும் சொல்லிவிட்டீர்கள்
இதில் சொன்னது அனைத்தும் கதை அல்ல வரலாறு
ஒவ்வொரு முதலாளிகளின் கதைகளும் ஒரு படிப்பினை.
உங்கள் உழைப்பும் இதில் சாமானியபட்டதல்ல எங்கோ தமிழகத்தின் ஒரு பகுதியில் இருந்து இந்த தொழிலில் ஒரு முதலாளியாக உயர்வது என்பதும் ஏறக்குறைய பதினைத்து ஆண்டுகளில் சாத்தியமாக்கியது முதல் நாளில் நீங்கள் கொண்ட பணி அர்பணிப்பும் உங்கள் உத்வேகமும் என்றால் அது மிகையாகாது
நான் இன்னும் உங்கள் டாலர் நகரம் புத்தகம் படிக்கவில்லை
இந்த புத்தகம் அதனையும் படிக்க தூண்டுகிறது
உங்களுக்கு இன்னுமொரு கோரிக்கை உங்கள் ஊரைபற்றி - காரைக்குடி அங்கு உள்ள பெரிய மனிதர்கள்,வீடுகள் ,அவர்கள் பழக்க வழக்கம் குடும்ப அமைப்புகள் ஒரு புத்தகம் இதேபோல் எழுத வேண்டும்
மேலும் ஒரு விஷயம் உங்கள் வீடியோ நவராத்திரி கொலு பார்த்து பிரமித்து போனேன்..
சொந்த ஊர் பற்றிய பதிவுகளையும் படித்து வருகிறேன்
உங்கள் முப்பெரும் தேவியர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் உரித்தாகுக.

வணக்கமுடன்
த.கனகசுந்தரம்

ஜோதிஜி said...

நன்றி கனகசுந்தரம். நீங்க சொல்லியிருப்பது உண்மை. எனக்கு எங்கள் ஊர் சார்ந்த விசயங்களை பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டு. ஊருக்கு வரும் போது அவசியம் வாங்க. வரவேற்கிறேன். அமேசான் தளத்தில் உங்கள் கருத்தினை விரிவாக எழுதி வைக்கவும். நன்றி.