Wednesday, November 27, 2019

ரயில் நிலையம்

ஊர்ப்பயணம் என்று திட்டமிட்டாலே மனைவி கதிகலங்குவார்.  காரணம் பேருந்துப் பயணம் என்றால் அரை மணி நேரம் முன்னால் சென்று அமர வேண்டும்.  ரயில்ப் பயணம் என்றால் முக்கால் மணி நேரம் முன்னதாக சென்று இருக்க வேண்டும் என்ற என் கொள்கை அவரை மட்டுமல்ல மகள்களையும் எரிச்சலூட்டும். 

அவர்கள் எனக்குப் புரிய வைக்க முயல்கின்றார்கள். நானே அவர்களை மாற்ற முயல்கின்றேன்.  இரண்டு தண்டவாளம் போலவே செல்கின்றது.  இன்று வரையிலும் இந்தப் பஞ்சாயத்து முடியவே இல்லை.

எந்த இடத்திற்குச் சென்றாலும் அந்த இடத்தை ரசித்து உள்வாங்க வேண்டும். செரித்து எழுத வேண்டும் என்ற என் கொள்கை அவ்வப்போது இவர்களால் மிதிபடும்.  ஆனால் கவலைப்படுவதில்லை. நான்கு திசைகளையும் இழுத்துக் கொண்டு நகர்வது என்பது பாகிஸ்தானும் இந்தியாவும் ஒன்றாக மனப்பூர்வமாகக் கைகோர்ப்பது போல இருக்கும் அல்லவா?  

அதுவும் வாய்ப்பில்லை.  இதற்கும் வாய்ப்பில்லை.

இப்படித்தான் ஊருக்குச் சென்ற போது அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து அலப்பரை கொடுத்த போது மனைவி சுப்ரபாதம் பாடத் தொடங்கினார். உச்சக்கட்டமாக உங்களையெல்லாம் பெத்தாங்களா? செஞ்சாங்களா? என்று கூடுதல் போனஸ் உடன் உச்சஸ்தாயில் அன்போடு கேட்டார்.

அசரக்கூடியவர்களா நாம்?

காலை 7.55 சதாப்தி ரயிலுக்கு  7 மணிக்கே வந்து சேர்ந்தேன்.  திருப்பூர் ரயில் நிலையம் எனக்குப் போதி மரம் போன்றது.  திருப்பூர் வந்த முதல் நாள் முதல் இன்று வரையிலும் இங்குள்ள ஒவ்வொரு பகுதியிலும் என் பாதம் பட்டிருக்கும்.  கஷ்டப்பட்ட காலங்கள் முதல் கண்ணியவான் என்ற நிலைக்கு வந்த காலம் வரைக்கும் இங்கு வந்து விடுவேன்.

ரயில் நிலையத்தில் நிறைய மாற்றங்கள். என் வாழ்க்கையிலும் ஏராளமான மாற்றங்கள்.

இணையச் சேவை இலவசமாகக் கிடைக்கின்றது. தங்குமிடம் வசதிகள் அருமையாக உள்ளது. சரியான நேரத்தில் வண்டி வருகின்றது. உடைந்த ஹிந்தியுடன் கூடிய ஆங்கிலத்தில் அறிவிப்புகள் வருகின்றது. கூட்டம் அதிகமாகி உள்ளது.  இந்தியா முழுக்க இணைக்கக்கூடிய அனைத்து ரயில்களும் வருகின்றது. 

காரைக்குடிக்கு பாசஞ்சரில் பயணத்தில் (திருச்சி சென்று 3 மணி  நேரம் காத்திருந்து மாறிச் செல்ல வேண்டும்) 75 ரூபாய்க்குள் சென்று சேர்ந்து விட முடியும். தற்போது பேருந்து என்றால் 275 ரூபாய் ஆகின்றது,

திருப்பூர் ரயில் நிலையம் என்பது 24 மணி நேரமும் பயணிகள் வந்து போகும் இடமாக இருந்தாலும், வருமானம் பயணிகள் மற்றும் சரக்கு மூலம் அதிக அளவு வந்தாலும் சிறப்பான முன்னெடுப்புகள் இல்லாமல் தான் தவிக்கின்றது. வட மாநிலத் தொழிலாளர்கள் மிக மிக அதிக அளவு ரயில் நிலையத்தைப் பயன்படுத்துகின்றார்கள். கடந்த ஒரு வருடத்தில் பல முறை டெல்லி முதல் சென்னை வரைக்கும் பல மின் அஞ்சல்கள் அனுப்பி உள்ளேன்.

சில மாறுதல்கள் உருவாகின்றது. ஆனால் நிரந்தரமாக நீடித்து இருப்பதில்லை. எந்திரம் வழியே பயணிகள் சீட்டு ஒருவர் கொடுத்துக் கொண்டு இருந்தார்.

ஆனால் அரசு நினைத்தால் தலா மூன்று பேர்களை நியமித்து மூன்று ஷிப்ட்களிலும் எந்திரம் வழியே பயணியர் சீட்டு வழங்க முடியும். வாகனங்களை நிறுத்தும் இடங்களைக் கவனித்தால் சென்னையில் திருட்டுப் பொருட்களை விற்பதற்குத் தனியாக இடம் இருக்கும் சந்தை போலத்தான் வைத்திருக்கின்றார்கள்.

இதற்குள் இருக்கும் அரசியலைக் கேட்கும் போது வருத்தமாக உள்ளது. உலகத்திலேயே நம்மூரில் மட்டும் தான் பணத்தையும் கொடுத்து விட்டு நீ எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது. பொத்திக்கொண்டு போ? என்ற கலாச்சாரம் உள்ளது என்பதனை நினைக்கும் போது பெருமையாக உள்ளது. திருச்சி ரயில் நிலையத்தில் உள்ள அதிகாரியைத் திருப்பூருக்கு மாற்றிக் கொண்டு வாங்க ஆபிசர் என்று சொல்லத் தோன்றுகின்றது.


14 comments:

Unknown said...

It is easy to book online without waiting etc., still see a long line here,! For a city like Thirupur going an hour early to catch a train, is really too much time wasted. Sorry but your family members are right here. ( occasionally the situations warrant going early)
Rajan

ஜோதிஜி said...

அவங்க எப்போதும் சரியாகத்தான் இருக்கின்றார்கள். உங்கள் பெயரை போட்டு இருக்கலாமே பாஸ்.

கரந்தை ஜெயக்குமார் said...

முன்பதிவு செய்து விட்டுச் சென்றால் சில சிரமங்களைத் தவிர்க்கலாம்

raajsree lkcmb said...

//உடைந்த ஹிந்தியுடன் கூடிய ஆங்கிலத்தில் அறிவிப்புகள் வருகின்றது.//

நான் இவ்வளவு நாளும் திருப்பூர் தமிழ்நாட்டில் இருக்கிறது என்றல்லவா நினைத்து கொண்டிருந்தேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

கலாச்சாரம் அப்படின்னா...?

ஜோதிஜி said...

70 ஆண்டு கால இந்திய வரலாற்றில் கடந்த ஐந்தாண்டு காலத்தில் ரயில்வே துறையை அடுத்த பத்தாண்டுகளுக்கும் தேவையான வளர்ச்சியை உருவாக்கி முன்னெடுத்துச் சென்றவர்கள், சென்று கொண்டு இருப்பவர்கள் பாஜக அரசு. அதே போல 70 ஆண்டு கால வரலாற்றில் மாநில மொழிகளை கொலை செய்து குத்துயிரும் கொலையுறுமாக அதனை ஒரு கலை போலவே கூச்சப்படாமல் செய்தவர்கள், செய்து கொண்டிருப்பவர்களும் பாஜக அரசின் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும். மானம் கெட்டவர்கள் அனைவரும் மரியாதையான பதவியில் இருப்பது தான் நம் ஜனநாயகத்தில் முக்கிய அம்சம்.

ஜோதிஜி said...

பர்கர் சாப்பிட்டுக் கொண்டு கோக் உறிஞ்சியபடி என்கு கொஞ்சும் தமிழ் தெரியும் என்பது தான் கலாச்சாரம்.

ஜோதிஜி said...

அதற்கான முழு வசதிகளை இன்னமும் அதிகமாக உருவாக்க வேண்டும். வசதியும் வாய்ப்பும் உள்ளவர்களுக்கு இணையம். இல்லாதவர்கள் பாடு?

G.M Balasubramaniam said...

குறிப்பிட்ட நேரத்துக்கு முன் செல்வது சில எதிர்பாராத நிகழ்வுகளையும் எதிர்நோக்க உதவலாம்

raajsree lkcmb said...

அப்போ சிங்களவர் சொல்வது உண்மைதான் போல. "உங்கள் தமிழ்நாட்டில் (தமிழ்நாடு எங்கள் தாய்நாடு என்பது இவர்கள் பெரும்பாலானோரின் நம்பிக்கை) தமிழர்களுக்கு உள்ள உரிமைகளை விட நாங்கள் உங்களுக்கு கூடுதலாக தந்திருக்கிறோம், அதனால் பொத்திக்கொண்டு எங்களுக்கு அடங்கி நடங்கள்" என்று சொல்கிறார்கள்.
நாங்கள் மூஞ்சியை எங்கே கொண்டு போய் வைத்துக்கொள்வது? தமிழ்நாட்டுக்குள்ளேயே தமிழில் அறிவிப்பு செய்யாதது மத்திய அரசின் தவறு அல்ல, இது தமிழர்களின் கையாலாகாத் தனம் என்பது எனது கருத்து. நாங்கள் இப்படி இருந்திருந்தால் இன்று இலங்கையில் தமிழ் என்ன தமிழர்களே இருந்திருக்க மாட்டார்கள். அரசாங்க அலுவலகங்கள் தொடங்கி சர்வதேச விமானசேவை வரை தமிழ் ஒலிக்க ஏன் எங்கள் நாட்டு அதிபர்கள் கூட தங்களிற்கு தெரிந்த தமிழில் ஐ நா வில் பேச எங்கள் பிள்ளைகள் சிந்திய குருதி கொஞ்சமா நஞ்சமா? இன்னுமே போராடிக்கொண்டுதான் இருக்கிறோம்.
நீங்கள் உங்கள் சொந்த மண்ணில் போராட்டமெல்லாம் கூட செய்ய தேவை இல்லை, ஒரு மாதம் குறிப்பிட்ட சேவையை எல்லோரும் சேர்ந்து புறக்கணித்து பாருங்கள், போராட்டம் செய்யாததை பணம் செய்யும்.

ஜோதிஜி said...

1 தாய் மொழியில் அஆ தெரியாமல் முனைவர் பட்டம் வரைக்கும் இங்கே வாங்கிட முடியும். ஏறக்குறைய 20 வருடங்கள். இங்கு எதற்கும் சலனம் உருவாகாது. அதற்கு இனியும் வாய்ப்பில்லை.https://www.youtube.com/watch?v=tfe2cS4lmAs&feature=youtu.be இதைப் பார்ப்பதற்கு முன்பு மன உறுதியுடன் பார்க்கவும்.

Unknown said...

I signed my name, you didn’t notice it
Rajan

ஜோதிஜி said...

UnKnown ராஜன் என்றே மாற்றிவிடுங்க.

ஜோதிஜி said...

உண்மை.