கலைஞர் குறித்து யோசிக்கும் போதெல்லாம் ஒரு ஆச்சரியம் என் மனதில் தோன்றும்.
அறிஞர் அண்ணாவிற்குப் பிறகு கலைஞர் தன் திறமையால் அல்லது தன்னுடைய சாமர்த்தியதனத்தால் மட்டுமே திமுகவில் தனக்கான இடத்தை அடைந்தார். எம்.ஜி.ஆர் ஆதரவு அந்தச் சமயத்தில் முக்கியமென்றால் கூடத் தன்னிடம் உள்ள உழைப்பு, மொழிப்புலமை, இடைவிடாத கட்சிப்பணி என்று எல்லாவகையிலும் தன்னைத் தகுதியுடையவராகவே வைத்திருந்தார்.
ஆனால் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் 1970 முதல் 1990 வரைக்கும் கலைஞர் எவரையெல்லாம் ஆதரித்துத் தன் அருகில் வைத்திருந்தாரோ, இவர்கள் எல்லாம் தனக்குக் கடைசி வரைக்கும் ஆதரவாக இருப்பார்கள் என்று கருதியிருந்தாரோ அவர்கள் தான் பின்னாளில் முக்கிய எதிரியாக மாறினார்கள். அப்போது குடும்ப ஆதிக்கம் என்று சொல்ல முடியாது. முரசொலி மாறன் ஒருவர் மட்டும் தான் இருந்தார்.
அவருக்கு உள்ளரசியல், அக்கப்போர்கள், பஞ்சாயத்துக்கள் எதிலும் ஈடுபாடு கிடையாது என்பதனை விட அவர் கடைசி வரைக்கும் ஒரு டெரர் பார்ட்டியாகத்தான் இருந்தார். வாசிப்பிலும் எழுத்திலும் கலைஞர் ஒரு துருவம் என்றால் இவர் வேறோரு துருவத்தில் உச்சத்தில் இருந்தார். இதன் காரணமாகவே கலைஞருக்கு டெல்லி அரசியலில் தளபதியாகவே கடைசி வரைக்கும் இருந்தார். முக்கியமாக வைகோ பிரிந்த போது உடன் சென்ற பாதிக்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் கலைஞரின் மனதில் ஆழமான வடுவை உருவாக்கினார்கள்.
அதற்குப் பிறகு உருவான மனமாற்றத்திற்கு இதுவொரு முக்கியக் காரணமாக இருந்தது. எவரையும் நம்பாதே? எவரையும் வளர்க்காதே? என்ற கொள்கையின் அடிப்படையில் அடுத்தடுத்து ஒவ்வொரு செயல்பாடுகளும் உருவானது. இன்று மருத்துவர் ராமதாஸ் எந்த நிலையிலும் தன்னை வலுப்படுத்திக் கொண்டு உள்ளார். அவரின் இன்றைய முக்கிய வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் கலைஞர். இஸ்லாமியர்களை முழுமையாக நம்பினார். ஆனால் கோவை கலவரம் அவர் மனதில் இனம் புரியாத கேள்விகளை உருவாக்கியது.
உதிரிகட்சிகளைக்கூடத் தோழமையாக மதித்தார். தனக்கு ஆதாயம் என்ற போதிலும் அவர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் இதன் மூலம் அரசியல் அரங்கில் பலருக்கும் கிடைத்தது. இந்து மத நம்பிக்கைகளை அவர் கிண்டலடித்தாலும், விமர்சனம் செய்தாலும் திமுக உறுப்பினர்களை, தொண்டர்களை அவர் முழுமையாகக் கட்டாயப்படுத்தினார் என்று சொல்ல முடியாது. கட்சி வேறு. தங்கள் வாழ்வில் கடைபிடிக்கும் தனிப்பட்ட பழக்கவழக்கங்கள் வேறு என்பதாகத்தான் இன்று வரையிலும் திமுக வின் அடிப்படைத் தொண்டர்கள் கலைஞரின் மதம் சார்ந்த பேச்சுக்களைப் பொருட்படுத்திக் கொண்டதில்லை.
கட்டுமானம் உடையாமல் இருந்தது. கலைஞர் உருவாக்கிய மனிதர்கள் அனைவரும் அரசியல் களத்தில் தலைவர்களாக மாறினார்கள். திமுக வின் வாக்கு வங்கியில் சேதாரத்தை உருவாக்கினார்கள். அவரவருக்குத் தேவையான வசதிகளை அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். ஆனால் தமிழகத்தில் உள்ள எவரும் கலைஞரின் அரசியல் வாழ்வின் ஆணி வேரை அசைத்தது பார்த்தது இல்லை. அப்படிச் செய்த ஒருவர் ப. சிதம்பரம்.
இன்னமும் எனக்கு மங்கலாக நினைவுள்ளது. இந்திரா காந்தி அவர்களிடம் சென்னை விமான நிலையத்தில் கலைஞர் ப. சிதம்பரம் அறிமுகம் செய்து வைத்த புகைப்படம். ஒரு தலை. அதற்குக் கீழே உடம்பு என்ற பெயரில் ஒல்லியான தேகம். முகத்தில் பொருந்தாத கண்ணாடி. செட்டி நாட்டு அரசர் வாரிசு என்ற அடிப்படைத் தகுதி. அதற்கு மேலாக அமெரிக்கா வரைக்கும் சென்று கற்ற கல்வி என்று உள்ளே நுழையும் போதே அடித்தளத்தை வலுவாக வைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தவர் ப. சிதம்பரம்.
ராஜீவ் காந்தி அரசியல் களத்தில் உள்ள வந்த போது ப. சிதம்பரம் தனது தாயக்கட்டை உருட்டத் தொடங்கினார். மொழி பெயர்ப்பு என்ற அறிவின் மூலம் ஆட்டம் சாதகமாகவே போகத் தொடங்கியது. இறுதியில் தமிழர்கள் நினைத்துப் பார்க்க முடியாத இந்தியாவின் உள்துறை, நிதித்துறை என்று பிரதமருக்கு அடுத்த நிலை வரைக்கும் அவரால் பயணிக்க முடிந்தது.
மற்ற அரசியல்வாதிகளைப் பற்றிப் பத்திரிக்கைகளில் படித்ததை வைத்தே எழுத முடிந்த எனக்கு இவரைப் பற்றி உள்ளும் புறமும் ஊருக்கு இருந்த காரணத்தால், மற்ற காரணங்களின் அடிப்படையில் பார்க்க வாய்ப்பு கிடைத்து.
இவரை நம்பி வளர்ந்தவர்கள் இதுவரையிலும் யாருமே இல்லை. இவர் வளர்த்தவர்கள் யாரும் இல்லை. ஒரு வகையில் பார்க்கப் போனால் இவரும் முரசொலி மாறன் போலத்தான். கூர்மதி கொண்டவர்களுக்கு அவர்களின் அறிவே எதிரியாக இருக்கும்.
ஒரே ஒரு முறை மட்டும் ஆச்சரியப்படத்தக்க வகையில் முன்னாள் அமைச்சரும் காலம் சென்ற தமிழக முதலமைச்சர் பக்தவச்சலம் பேத்தியுமான ஜெயந்தி நடராஜன் அவர்களுடன் கொண்ட ஊடல் அது சார்ந்த பல விவகாரங்கள் மட்டும் அம்பலத்திற்கு வந்து அது குடும்ப வாழ்க்கையில் புயலைக் கிளப்பியது. அது தவிர வேறு எந்தச் சிக்கல்களிடம் இவர் சிக்கிக் கொள்ளாமல் வந்ததே ஆச்சரியமானது.
நண்பர் அடிக்கடி சொல்வர்.
காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரைக்கும் எத்தனையோ ஆடிட்டர்கள் இருக்கின்றார்கள். ஒரு தடவைக்குப் பத்து லட்சம் வாங்கக்கூடிய வக்கீல்கள் இருக்கின்றார்கள். எங்கே யாரையாவது இவர் இதுவரையிலும் செய்த ஊழல்களைக் கண்டு பிடிக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்? அது தான் அவரின் திறமை என்பார்.
கடந்த 40 வருடமாக இராமநாதபுரம் மாவட்டமாக இருந்த போதிலும் சரி, பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டமாக இருந்த போதிலும் சரி, இன்று சிவகங்கை மாவட்டமாக மாறி இருக்கும் இப்போதைய சூழல் வரைக்கும் மாவட்டம் முழுக்கத் திருமணம் ஆகாத இளம் பெண் போலச் சோகத்தில் தான் இருக்கின்றது. நாசகார ஆலைகள் இல்லை. மாநில அரசின் முயற்சியின் காணமாக வந்த சாலைகள் தான் தற்போது போக்குவரத்தினை எளிதாக மாற்றியுள்ளது.
எப்போதும் வருவார். அங்கங்கே ஏடிஎம் களை திறந்து வைப்பார். போய் விடுவார். கடைசித் தேர்தலில் ராஜகண்ணப்பன் நினைத்திருந்தால் இவரை உண்டு இல்லை என்று ஆக்கியிருப்பார். என்ன காரணமோ ஜெயலலிதா சொன்ன காரணத்தினால் வென்று மேலே சென்றார்.
இப்போது கூடச் சாலையில் நடந்தால் கூட நாற்பது பேர்கள் கூட இவரைப் பார்க்க, இவரிடம் பேச தொகுதிக்குள் ஆட்கள் இல்லை. ஆனால் உடம்பு முழுக்கப் புத்தி. உள்ளம் முழுக்க ஆச்சரியப்படத்தக்க வகையில் சக்தி. ஆனால் கடைசி வரைக்கும் தன் சமூகம் தன்னை ஒதுக்கிய போதும், தன் தொகுதி மக்கள் தன்னைப் புறக்கணித்த போதிலும் ப.சிதம்பரம் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. இன்று மகாராஷ்டிரா மாநிலத்தின் மூலம் மாநிலங்களை உறுப்பினராக இருக்கின்றார்.
இன்று கலைஞர் குடும்ப உறுப்பினர்கள் மத்திய அரசினை முழுமையாக எதிர்க்க முடியாமல் பம்மிக் கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம் இவர் போட்ட அடித்தளமே. ஆனால் உடன்பிறப்புகள் எவரும் இதைப் பற்றிப் பேசவே மாட்டார்கள் என்பது தான் முரண்நகை.
8 comments:
என்ன தலைவரே கலைஞரை பற்றி சொல்ல ஆரம்பித்து இண்டிரஸ்டிங்காக சொல்லி போகும் நேரத்தில் ஒரு யூ டர்ன் எடுத்து சிதம்பரம்பக்கம் திரும்பி முடித்திட்டீங்ககளே
"சிக்காத" திறமைசாலி...?!
சிலரின் வித்தியாசமான திறமைகளே அவர்களை தனிமைப்படுத்திவிடுகின்றன.
ஒவ்வொரு முறையும் இவர் ஏன் சுருக்கமாக எழுத மாட்டேன் என்று அடம்பிடிக்கின்றார் என்ற உங்களின் ஆதங்கம் இப்போது நிறைவேறி சரியாக எழுதி இருக்கின்றேன் என்று நினைக்கின்றேன். சரியா?
ஒருவீட்டுக்குள் நான்கு திறமைசாலிகள். அழகான விமர்சனம் தனபாலன்.
முற்றிலும் உண்மை. ஆனால் அந்த திறமை எதற்குப் பயன்படுகின்றது? எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது? என்பது தான் இங்கே முக்கியமான கேள்வி?
திறமையா? திருட்டுத்தனமா? பார்வைகள் மாறும்...
திருக்குறள் போல சுருக்கமான ஆனால் நச்.
Post a Comment