Saturday, August 03, 2013

நடிகர் பிரகாஷ்ராஜ்

இன்று திரைப்படம் என்பது சினிமா என்ற வார்த்தையாக மாறி விட்டது. இது வெறுமனே பொழுது போக்கல்ல. உலகத் தமிழனின் அன்றாட தலையாய கடமைகளில் ஒன்று. படிக்க, பார்க்க, ரசிக்க என்ற எல்லா நிலையிலும் இது தான் முக்கியமாக மாறியுள்ளது.  

ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டு வெற்றிகரமாக உருவாக்கப்பட்டும் விட்டது. இதிலிருந்து தான் நல்ல கெட்ட விசயங்களையும் எடுத்துக் கொள்ளும் அளவிற்கு வளர்ந்துள்ளோம்.

படம் பார்த்தாயா? என்ற கேள்வி இன்று இந்த படத்தை இன்னமும் பார்க்கவில்லையா? என்பதாக மாறியுள்ளது.

திரை பிரபலங்களை வைத்தே வாழ்வில் வெற்றி பெறுவது எப்படி? என்று போதிக்கப்படுகின்றது. சினிமா என்பது இங்கே அரசியலுக்கு செல்லும் நுழைவாயில். இவர்களே தமிழர்களால் ஆராதிக்கப்பட வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். இவர்களைப் பற்றிய செய்திகள் மட்டுமே இங்கே விபரமாக எடுத்து வைக்கப்படுகின்றது. 

கிசு கிசு முதல் துணுக்கு செய்திகள் எழுதுவர்கள் வரைக்கும் உள்ள அத்தனை பேர்களுக்கும் முக்கியத்துவம் கிடைப்பதால் எளிதான வாசிப்பு கலை இன்று வளர்ந்துள்ளது. வாசிப்பு என்றால் என்ன? என்பதை அறியாமலேயே பல கோடி மக்களும் வளர்ந்துள்ளனர். சினிமாவில் லட்சம் பேர்களில் பத்து பேர்கள் ஜெயித்து வர மீதியுள்ள அத்தனை பேர்களின் வலி நிறைந்த வாழ்க்கையை குறித்து எவரும் கவலைப்படுவதில்லை.  

இருபது வருடங்கள் தங்கள் வாழ்க்கையை தொலைத்து போராடி சந்தர்ப்ப வசத்தில் ஒரு படம் இயக்கி அல்லது நடித்து அதுவும் வெற்றி பெற்று விட்டால் இருபது வருடங்கள் உழைத்து பெற்றிருக்க வேண்டிய வருமானத்தைப் போல பல ஆயிரம் மடங்கு வருமானத்தை சில வருடங்களில் பெற முடிவதால் எந்த துறையில் இருந்தாலும் இங்கே ஒவ்வொருவரின் இறுதி இலக்கும் சினிமாகவே இருக்கின்றது.  

பிரபல்யம் என்ற நிலையை அடைய தேவைப்படும் உழைப்பையும் அந்த வார்த்தைக்குப் பின்னால் உள்ள சவால்களையும், பிரபல்யம் ஆன பிறகும் உருவாகும் சங்கடங்களையும் பற்றியும் இங்கே எவரும் பேசுவதில்லை. 

இதற்கு மேலாக இன்றைய தமிழ் திரைப்படங்கள் என்பது மிகப் பெரிய வணிகம் சார்ந்த ஒரு தொழிலாக மாறியுள்ளதால் அதில் கருத்துக்களை எதிர்பார்ப்பது தவறு என்பதை இன்று பரவலாக ஒத்துக் கொள்ள தொடங்கி விட்டனர்.   இது அனைவரும் பார்க்க வேண்டிய கமர்சியல் சினிமா என்று பேட்டியில் சொல்லப்படுவதால் படம் பார்க்க செல்பவர்களும் பயமில்லாமல் செல்கின்றனர். நம் அவசியமான பொழுதுகளை தெரிந்தே திருடக் கொடுக்கின்றோம். 

மூன்று மணி நேரம் கவலைகள் மறந்து ரசித்தோமா? என்கிற மனோநிலையில் இருப்பதால் அருவாள் தான் கதாநாயகனாகவும்,துப்பாக்கி தான் வில்லனாகவும் வர படபடப்பாய் பார்த்த காட்சிகள் பத்து நிமிடங்களில் மறந்தும் போய்விடுகின்றது.படம் பார்த்தவர்களும் காதல் முதல் கலவரப்படுத்தும் நிகழ்வு வரைக்கும் தைரியமாக கற்றுக் கொண்டால் சமூகத்தில் எளிதில் அங்கீகாரம் கிடைக்கும் என்றும் நம்பத் தொடங்கி விடுகின்றனர்.

கதாநாயகனாக நடித்து வாழ்வில் தோற்றவர்களை விட வில்லனாக நடித்து தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் ஜெயித்தவர்கள் அநேகம் பேர்கள். காலஞ்சென்ற நம்பியார் முதல் இன்று பிரகாஷ்ராஜ் வரைக்கும் எத்தனையோ பேர்களை உதாரணம் காட்ட முடியும்.

நடிகர் பிரகாஷ்ராஜ் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்.  கன்னடம் தாய் மொழியாக இருந்தாலும் அவர் பேசும் தமிழ் ஆச்சரியப்படத்தக்க ஒன்று. ஒரு படம் வெற்றியடைந்ததும் நடிகர் முதல் சார்ந்திருக்கும் மற்ற அத்தனை பேர்களின் வாழ்க்கையிலும் உருவாகும் போலித்தன்மையை ஒப்பிடும் போது மனதில் பட்ட விசயங்களை எழுத்து, பேச்சு வடிவத்தில் சொன்னதோடு தன் சொந்த முயற்சியில் சமூகத்தில் உள்ள பிரச்சனைகளை திரைப்படமாக ஆவணப்படுத்தும் நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்களின் கௌரவம் படம் குறித்து நண்பன் சொன்ன போது உடனடியாக பார்த்தேன். 

நான் தொடர்ச்சியாக மருத்துவர் ராமதாஸ், மற்றும் அதன் தொடர்பான சாதி குறித்த பதிவுகளை எழுதிக் கொண்டு வர முதலில் அந்த படத்தைப் பாருடா என்றான். கூடவே  பிரகாஷ்ராஜ் ஆனந்த விகடனில் எழுதிய சொல்லததும் உண்மை என்ற புத்தகத்தையும் படிக்க சிபாரிசு செய்தான். 

வீட்டில் குழந்தைகள் பள்ளி விட்டு வந்ததும் அதிகபட்சமாக அரைமணி நேரம் அவர்களுக்கு பிடித்த கார்டூன் படங்களை பார்க்கும் சமயத்தைத் தவிர பெரும்பாலும் செய்திகளுக்கு மட்டுமே வீட்டில் தொலைக்காட்சியை பயன்படுத்துவதுண்டு. சனி ஞாயிறு விடுமுறை என்றால் ஒளிபரப்பாகும் படங்களைப் பார்த்து அவர்களை பார்க்க அனுமதிப்பதுண்டு.  ஆனால் நாம் நினைப்பதை விட குழந்தைகள் தெளிவாகவே இருக்கின்றார்கள். 

வன்முறையும், ஆபாசக் காட்சிகளுக்குப் பின்னால் அத்தனை விசயங்களையும் புரிய வைத்த காரணத்தால் தெளிவான மனோநிலையில் இருந்தாலும் குடும்பதோடு உட்கார்ந்து ஒரு படத்தைப் பார்க்கும் போது, அதில் உள்ள வெளிப்படையான வக்கிரத்தை ரசிப்பதில் உள்ள தர்மசங்கடத்தினால் அது போன்ற சமயங்களில் கூட அவர்கள் சேனலை பார்க்கச் சொல்லிவிட்டு நான் ஒதுங்கி விடுவதுண்டு.

இந்த வயதில் இவர்களுக்குத் தேவையில்லை என்று நாம் நினைக்கும் அத்தனை விசயங்களும் பள்ளிகளில் பழகும் பலரின் மூலம் அவர்களுக்கு வந்து சேர்ந்து விடத்தான் செய்கின்றது. இடைவிடாத சுழலில் அவர்களின் சிந்தனைகளில் உருவாகிக் கொண்டிருக்கும் மாற்றங்களை அவ்வப்போது பேசி புரிய வைத்தாலும் அவர்கள் கேட்கும் பல கேள்விகளுக்கு பல சமயம் பதில் சொல்ல முடியாமல் தடுமாறும் நிலைதான் ஏற்படுகின்றது.

அப்படியொரு நிலை சமீபத்தில் உருவானது.

நான் வீட்டில் இருக்கும் சமயத்தில் தொலைக்காட்சியில் செய்திகள் ஓடிக் கொண்டிருக்கும்.  அவர்களும் கேட்டுக் கொண்டே தான் இருப்பார்கள். சமீபத்தில் நடந்த திவ்யா இளவரசன் சம்மந்தப்பட்ட பல நிகழ்வுகளை அவர்கள் பார்த்ததும் அவர்கள் கேட்ட எந்த கேள்விக்கும் என்னால் முழுமையான பதில் சொல்ல முடியவில்லை. காரணம் ஒன்றைப் பற்றி சொல்லும் போது அது சார்ந்த ஒவ்வொரு விசயத்தையும் படிப்படியாக சொல்லிக் கொண்டே வர வேண்டும். 

அவர்கள் மனதில் விஷத்தை விதைக்க விரும்பாத காரணத்தால் இது போன்ற விசயங்களை விவாதிக்க விரும்புவதில்லை. அவர்கள் பயிலும் பள்ளியில் இந்த சாதி குறித்த எந்த எண்ணமும் இல்லாத காரணத்தால் அது குறித்த முழுமையான புரிதல்கள் இல்லை.

மூவரும் கேள்விகளை கேட்க, அவர்கள் உறங்கிய பிறகே பல சமயம் அது குறித்த செய்திகள் சார்ந்த தொடர்புகளை பார்த்துக் கொள்வதுண்டு. இந்த சமயத்தில் தான் நடிகர் பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் அவர் நடித்த கெரளவம் படத்தை பார்க்க வாய்ப்பு அமைந்தது. 

கடந்த சில மாதங்களாக டி யூடிப் மேய்ச்சல் என்பது பலவற்றையும் கற்றுத் தந்து கொண்டிருக்கின்றது. ஆனால் தேடுவதில் சவாலாக இருப்பதால் அப்போது தான் ஸ்ரீவலைப்பக்கம் என்றொரு பதிவு என் கண்ணில் பட்டது. அவர் ரசித்த நீயா நானா தொகுப்பை வரிசைக்கிரமமாக வெளியிட்டு வைத்திருந்தார். 

இது கூட நல்லாயிருக்கே என்று நினைத்துக் கொண்டு கௌரவம் படம் பார்த்து முடித்து அந்த படம் சார்ந்த மற்ற விபரங்களை தேடிக் கொண்டிருந்த போது தான் அந்த படம் உருவான கதையோடு நீயா நானா தொகுப்பில் வந்த சாதி சார்ந்த பல விவாதங்கள் என் கண்ணில் பட்டது.

தனது இரண்டாவது மகளின் காதல் பிரச்சனையினால் தற்போது மீடியா மக்களிடம் மாட்டிக் கொண்ட இயக்குநர் சேரன் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளும், அவர் காதல் குறித்து பேசிய விசயங்களும் இதில் வந்துள்ளது. பாண்டவர் பூமி படத்தில் அண்ணன் தங்கையின் கழுத்தை வெட்டிய போது படம் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் கை தட்டி ரசித்ததை குறிப்பிட்டுள்ளார். பாவம் இன்று சேரன் பிரபல்யம் என்பதன் உண்மையான விலையை கொடுத்துக் கொண்டிருக்கின்றார்.

இதை பதிவில் ஆவணமாக உருவாக்கும் எண்ணத்தில் இங்கே தொடுப்புகளை கொடுத்துள்ளேன். வாய்ப்பு இருப்பவர்கள் நிச்சயம் நேரம் ஒதுக்கி பார்க்கலாம். காரணம் இதில் பேசப்படும் அத்தனை விவாதங்களும் நாம் அத்தனை பேர்களும் கடந்து வந்திருப்பதே.

பல சமயம் பலரும் அனுபவித்து இருக்கக்கூடியதே. 

நடிகர் பிரகாஷ்ராஜ் தயாரித்து நடித்துள்ள கௌரவம் படம் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம்.
16 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பார்க்கவில்லை... பார்க்கத் தூண்டி விட்டீர்கள்...

எம்.ஞானசேகரன் said...

இதைப்பற்றி நானே பதிவெழுதலாம் என்றிருந்தேன் ஜோதிஜி! பாவம் சேரன். காதலுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் எல்லாம் தனக்கென்று வரும்போதுதான் அதன் தீவிரத்தை உணர்கிறார்கள். இரண்டு மாதங்களுக்கு முன்புதான் பிரகாஷ்ராஜ், ராதாமோகன்,சேரன் பங்கு கொண்ட விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியை முழுவதும் பார்க்க நேரிட்டது. உருகி உருகி காதலித்தவர்கள் எல்லாம் தங்கள் சோகக் கதையைச் சொல்ல பரிதாபப் பட்டுக்கொண்டிருந்தார் சேரன். இன்று அவரின் நிலைமையைப் பார்த்தீர்களா? எந்த உண்மையான பாசமுள்ள தகப்பனும் அல்லது குடும்பத்தினரும், கண்மூடித்தானமான, இளம் வயதிற்கே உரித்தான இனக்கவர்ச்சியில் வீழும்போது பிள்ளைகளுக்கு பாதுகாப்பு கொடுக்கவே முனைவார்கள். இந்த காதலர்களோ காமத்தை அனுபவிக்கும்வரை கடவுளே தடுக்க வந்தாலும் அவர்மீதும் காவல்நிலையத்தில் கொலைக்குற்றம் சுமத்துவார்கள்.

ஊடகங்களும் இதெற்கென்றே இருக்கும் ஊதாரிகளும் இதை ஆதரிக்கத்தான் செய்வார்கள். ஆனால் பிள்ளைகள் அதிலும் பெண் கெட்டு நொந்து வீட்டிற்கே திரும்பி வரும்போதும் அல்லது வராமலேயே தற்கொலை செய்துகொள்ளும்போதும் சம்பந்தப்பட்ட குடும்பம்தான் அதை எதிர்கொள்ளுமே தவிர இப்படி இதை வியாபாரமாக்கும் கும்பல்கள் இல்லை. இதைப்பற்றிய பதிவு ஒன்றையும் எழுதவிருக்கிறேன்.

ப.கந்தசாமி said...

//படிக்க, பார்க்க, ரசிக்க//

நம்மளுக்கு முக்கியமான "பதிவு எழுத" என்பதை விட்டு விட்டீர்களே!

தவிர ஐம்பது ரூபாய்க்கு செலவு வைத்து விட்டீர்களே?

Yaathoramani.blogspot.com said...

எதனாலோ இந்தப் படம் மட்டும்
பார்க்க முடியாமல் விட்டுப்போனது
அவசியம் பார்த்துவிடுகிறேன்
அருமையான பகிர்வுக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்

ஜோதிஜி said...

பார்த்து உங்கள் விமர்சனம் எழுத வேண்டுகின்றேன்.

ஜோதிஜி said...

படம் எப்படி?

ஜோதிஜி said...

உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.

ஜோதிஜி said...

அவசியம் பார்க்கவும்

arul said...

thoughtful post

எம்.ஞானசேகரன் said...

“காதலிக்கிறேன்” என்று சொல்லி விட்டாலே கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்து தான் ஆக வேண்டும் என்று நினைப்பவன் வடிகட்டிய முட்டாளாக தான் இருக்க வேண்டும்.சாதிக்காக காதலை தடுத்தால் அது பெரிய அவமானம் தான்.ஆனால் ஒரு வேலைக்கு ஆள் எடுக்கும் போது கூட அவனை பற்றி ஆயிரம் விசயங்களை அலசி ஆராய்கிறார்கள். 8 மணி நேரம் வேலை செய்துவிட்டு போகிற ஒருவனையே அத்தனை விசயங்கள் அலசி ஆராய்ந்து விட்டு பிடித்திருந்தால் தேர்வு செய்கிறார்கள் என்கிற பொழுது தன் மகளுக்கு கணவனாக வரப்போகிறன் எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிக்க ஒரு தந்தைக்கு உரிமை இல்லையா.
இனக்கவர்ச்சிக்கு நல்லவனா கெட்டவனா என பகுத்தறியும் பக்குவம் நிச்சயம் கிடையாது.அவன் குடிகாரனாக பொறம்போக்காக இருந்தாலும் கூட அது பெரிதாக தெரியாது.ஒரு குடிகாரனுக்கு காதல் வந்து விட்டாலும் உடனே கூட்டி சென்று அவன் வீட்டில் விட்டு விட்டு வர வேண்டும் என நினைப்பது அபத்தம். பாலின கவர்ச்சி தீர்ந்து போன பிறகு அழுது ஒப்பாரி வைத்துக் கொண்டு பிறந்த வீட்டிற்க்கு தானே ஓடி வருவார்கள்.
இதயெல்லாம் முன் கூட்டி யோசிக்கும் சக்தி இல்லாத வயதில் ஒரு தந்தையாக அறிவுரை சொல்வது பெரிய சமூக குற்றமா?.

அண்ணன் சேரனை நான் நன்கு அறிந்தவன்.அவர் ஒரு விசயத்தை செய்கிறார் என்றால் ஆயிரம் முறை சிந்திப்பார்.அவர் சிறந்த முற்போக்குவாதி.அவரது மகள்களை இந்த வயதான பிறகும் குழந்தகளை போலவே வளர்த்தார் .அதுவும் அவருடைய இளைய மகள் என்றால் அவருக்கு உயிர்.காதலுக்கு ஆட்சேபனை தெரிவித்திருக்கிறார் என்றால் நிச்சயம் பல சரியான காரணங்கள் இருக்கும்.சேரன் அண்ணனை பற்றி வரும் செய்திகளையும் அதற்க்கு வரும் மோசமான கமெண்ட்களையும் பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது.

முகநூல் தோழர்களே நமக்கு திட்டுவதற்க்கு யாரவது கிடைத்து விட்டால் சலிக்கும் வரை திட்டுவது நமக்கு பொழுது போக்கு.ஆனால் அவரது மகள் ஒரு நாள் “ அப்பா நீங்கள் சொன்னது சரி தான்.நான் வீணாக ஏமாந்து விட்டேன்|” என்று அழுது கொண்டு வந்தால் அது செய்தி ஆகாது,நமக்கு தெரியாது,இன்று அவரை வசை பாடியதற்க்கு மன்னிப்பு கேட்க முடியாது,கேட்பதாலும் எதுவும் மாறிவிடாது.

முகநூல் நண்பர்களே ..காதல் என்று வந்து விட்டால் எதை பற்றியுமே சிந்திக்க மாட்டேன் என்பவர்களை விட,காதல் பற்றிய செய்திகளை கண்டாலே அதற்க்கு எதிர்பக்கமிருப்பவர்களை வில்லனை போல நினைப்பது மிகவும் முட்டாள் தனம்.உண்மை நிலையை என்னவென்று தெரியாமல் ஒரு நல்ல மனிதரை
விமர்சிக்காதீர்கள் உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

முக நூலிலிருந்து....................

எம்.ஞானசேகரன் said...

சேரனுக்கு வக்காலத்து வாங்கவில்லை... ஆனால் ஒரு படைப்பையும் படைப்பாளியையும் எப்போதும் இணைத்து பார்க்க கூடாது என்பது என் கருத்து....காதல் படம் எடுத்து விட்டு சேரன் ஏன் காதலுக்கு எதிரனவராக இருக்கின்றார் என்று கேட்கின்றார்கள்...?,அதற்கு என் பதில் கிழே,.,

நிழல் வாழ்க்கை வேறு... நிஜ வாழ்க்கை வேறு... என்பதை எவரும் புரிந்துகொள்வதில்லை... இரண்டையும் முடிச்சி போடுவதே அபத்தத்தின் உச்சம் என்பேன்....

காதலை ஆதரித்து படம் எடுத்த காரணத்தால் காதலை எதிர்க்கும் இயக்குனரை வசைபாடுகின்றோம்...அதே இயக்குனர் சீரியல் கில்லர் படம் எடுத்து விட்டு, படத்தில் காட்டியது போல இரண்டு கொடுரகொலைகளை அந்த இயக்குனர் செய்து விட்டால் அதை ஏற்றுக்கொள்முடியுமா???

படத்தில் காட்டியது போல இரண்டு கொலை செய்தேன் நிழலில் செய்தேன் அதை ஏற்றுக்கொண்டீர்கள்.. அதையே நிஜத்திலும் செய்தேன் என்று அந்த இயக்குனர் சொன்னால் உங்கள் நிலைப்பாடு என்ன??

செருப்பு கடிக்கும் வலி அதை அணிந்தவனுக்கு மட்டுமே தெரியும், புரியும்...

ஜாக்கி சேகர் தன் பதிவில்.......

Avargal Unmaigal said...

கவிப்பிரியனின் கருத்துகள் பல உண்மையை எடுத்துரைக்கின்றன. அருமையான கருத்துகள் நான் சொல்ல நினைப்பதை அவரே சொல்லிவிட்டார்

Ranjani Narayanan said...

எனக்கும் திரு பிரகாஷ்ராஜ் நடிப்பு ரொம்பப் பிடிக்கும். நாங்கள் இந்த ஊருக்கு வாத புதிதில் அவர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துக் கொண்டிருந்தார். நிறைய தொடர்கள் பார்த்திருக்கிறேன். நான் கன்னட மொழி கற்றதே இப்படித்தான்.

பின்னூட்டங்கள் வழக்கம்போல சுவாரஸ்யம். அதிலும் ஒரு அப்பாவாக திரு சேரனின் நிலைமை நன்றாக சொல்லப்பட்டிருக்கிறது.

ஜோதிஜி said...

வெளிப்படையான மனிதர்.

ஜோதிஜி said...

சேரன் நிகழ்வுகள் பல இடங்களில் முக்கிய பேசு பொருளாக உள்ளது

ப.கந்தசாமி said...

இன்னும் சி.டி. வாங்கலீங்க.