Showing posts with label நடிகர். Show all posts
Showing posts with label நடிகர். Show all posts

Saturday, August 03, 2013

நடிகர் பிரகாஷ்ராஜ்

இன்று திரைப்படம் என்பது சினிமா என்ற வார்த்தையாக மாறி விட்டது. இது வெறுமனே பொழுது போக்கல்ல. உலகத் தமிழனின் அன்றாட தலையாய கடமைகளில் ஒன்று. படிக்க, பார்க்க, ரசிக்க என்ற எல்லா நிலையிலும் இது தான் முக்கியமாக மாறியுள்ளது.  

ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டு வெற்றிகரமாக உருவாக்கப்பட்டும் விட்டது. இதிலிருந்து தான் நல்ல கெட்ட விசயங்களையும் எடுத்துக் கொள்ளும் அளவிற்கு வளர்ந்துள்ளோம்.

படம் பார்த்தாயா? என்ற கேள்வி இன்று இந்த படத்தை இன்னமும் பார்க்கவில்லையா? என்பதாக மாறியுள்ளது.

திரை பிரபலங்களை வைத்தே வாழ்வில் வெற்றி பெறுவது எப்படி? என்று போதிக்கப்படுகின்றது. சினிமா என்பது இங்கே அரசியலுக்கு செல்லும் நுழைவாயில். இவர்களே தமிழர்களால் ஆராதிக்கப்பட வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். இவர்களைப் பற்றிய செய்திகள் மட்டுமே இங்கே விபரமாக எடுத்து வைக்கப்படுகின்றது. 

கிசு கிசு முதல் துணுக்கு செய்திகள் எழுதுவர்கள் வரைக்கும் உள்ள அத்தனை பேர்களுக்கும் முக்கியத்துவம் கிடைப்பதால் எளிதான வாசிப்பு கலை இன்று வளர்ந்துள்ளது. வாசிப்பு என்றால் என்ன? என்பதை அறியாமலேயே பல கோடி மக்களும் வளர்ந்துள்ளனர். சினிமாவில் லட்சம் பேர்களில் பத்து பேர்கள் ஜெயித்து வர மீதியுள்ள அத்தனை பேர்களின் வலி நிறைந்த வாழ்க்கையை குறித்து எவரும் கவலைப்படுவதில்லை.  

இருபது வருடங்கள் தங்கள் வாழ்க்கையை தொலைத்து போராடி சந்தர்ப்ப வசத்தில் ஒரு படம் இயக்கி அல்லது நடித்து அதுவும் வெற்றி பெற்று விட்டால் இருபது வருடங்கள் உழைத்து பெற்றிருக்க வேண்டிய வருமானத்தைப் போல பல ஆயிரம் மடங்கு வருமானத்தை சில வருடங்களில் பெற முடிவதால் எந்த துறையில் இருந்தாலும் இங்கே ஒவ்வொருவரின் இறுதி இலக்கும் சினிமாகவே இருக்கின்றது.  

பிரபல்யம் என்ற நிலையை அடைய தேவைப்படும் உழைப்பையும் அந்த வார்த்தைக்குப் பின்னால் உள்ள சவால்களையும், பிரபல்யம் ஆன பிறகும் உருவாகும் சங்கடங்களையும் பற்றியும் இங்கே எவரும் பேசுவதில்லை. 

இதற்கு மேலாக இன்றைய தமிழ் திரைப்படங்கள் என்பது மிகப் பெரிய வணிகம் சார்ந்த ஒரு தொழிலாக மாறியுள்ளதால் அதில் கருத்துக்களை எதிர்பார்ப்பது தவறு என்பதை இன்று பரவலாக ஒத்துக் கொள்ள தொடங்கி விட்டனர்.   இது அனைவரும் பார்க்க வேண்டிய கமர்சியல் சினிமா என்று பேட்டியில் சொல்லப்படுவதால் படம் பார்க்க செல்பவர்களும் பயமில்லாமல் செல்கின்றனர். நம் அவசியமான பொழுதுகளை தெரிந்தே திருடக் கொடுக்கின்றோம். 

மூன்று மணி நேரம் கவலைகள் மறந்து ரசித்தோமா? என்கிற மனோநிலையில் இருப்பதால் அருவாள் தான் கதாநாயகனாகவும்,துப்பாக்கி தான் வில்லனாகவும் வர படபடப்பாய் பார்த்த காட்சிகள் பத்து நிமிடங்களில் மறந்தும் போய்விடுகின்றது.படம் பார்த்தவர்களும் காதல் முதல் கலவரப்படுத்தும் நிகழ்வு வரைக்கும் தைரியமாக கற்றுக் கொண்டால் சமூகத்தில் எளிதில் அங்கீகாரம் கிடைக்கும் என்றும் நம்பத் தொடங்கி விடுகின்றனர்.

கதாநாயகனாக நடித்து வாழ்வில் தோற்றவர்களை விட வில்லனாக நடித்து தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் ஜெயித்தவர்கள் அநேகம் பேர்கள். காலஞ்சென்ற நம்பியார் முதல் இன்று பிரகாஷ்ராஜ் வரைக்கும் எத்தனையோ பேர்களை உதாரணம் காட்ட முடியும்.

நடிகர் பிரகாஷ்ராஜ் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்.  கன்னடம் தாய் மொழியாக இருந்தாலும் அவர் பேசும் தமிழ் ஆச்சரியப்படத்தக்க ஒன்று. ஒரு படம் வெற்றியடைந்ததும் நடிகர் முதல் சார்ந்திருக்கும் மற்ற அத்தனை பேர்களின் வாழ்க்கையிலும் உருவாகும் போலித்தன்மையை ஒப்பிடும் போது மனதில் பட்ட விசயங்களை எழுத்து, பேச்சு வடிவத்தில் சொன்னதோடு தன் சொந்த முயற்சியில் சமூகத்தில் உள்ள பிரச்சனைகளை திரைப்படமாக ஆவணப்படுத்தும் நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்களின் கௌரவம் படம் குறித்து நண்பன் சொன்ன போது உடனடியாக பார்த்தேன். 

நான் தொடர்ச்சியாக மருத்துவர் ராமதாஸ், மற்றும் அதன் தொடர்பான சாதி குறித்த பதிவுகளை எழுதிக் கொண்டு வர முதலில் அந்த படத்தைப் பாருடா என்றான். கூடவே  பிரகாஷ்ராஜ் ஆனந்த விகடனில் எழுதிய சொல்லததும் உண்மை என்ற புத்தகத்தையும் படிக்க சிபாரிசு செய்தான். 

வீட்டில் குழந்தைகள் பள்ளி விட்டு வந்ததும் அதிகபட்சமாக அரைமணி நேரம் அவர்களுக்கு பிடித்த கார்டூன் படங்களை பார்க்கும் சமயத்தைத் தவிர பெரும்பாலும் செய்திகளுக்கு மட்டுமே வீட்டில் தொலைக்காட்சியை பயன்படுத்துவதுண்டு. சனி ஞாயிறு விடுமுறை என்றால் ஒளிபரப்பாகும் படங்களைப் பார்த்து அவர்களை பார்க்க அனுமதிப்பதுண்டு.  ஆனால் நாம் நினைப்பதை விட குழந்தைகள் தெளிவாகவே இருக்கின்றார்கள். 

வன்முறையும், ஆபாசக் காட்சிகளுக்குப் பின்னால் அத்தனை விசயங்களையும் புரிய வைத்த காரணத்தால் தெளிவான மனோநிலையில் இருந்தாலும் குடும்பதோடு உட்கார்ந்து ஒரு படத்தைப் பார்க்கும் போது, அதில் உள்ள வெளிப்படையான வக்கிரத்தை ரசிப்பதில் உள்ள தர்மசங்கடத்தினால் அது போன்ற சமயங்களில் கூட அவர்கள் சேனலை பார்க்கச் சொல்லிவிட்டு நான் ஒதுங்கி விடுவதுண்டு.

இந்த வயதில் இவர்களுக்குத் தேவையில்லை என்று நாம் நினைக்கும் அத்தனை விசயங்களும் பள்ளிகளில் பழகும் பலரின் மூலம் அவர்களுக்கு வந்து சேர்ந்து விடத்தான் செய்கின்றது. இடைவிடாத சுழலில் அவர்களின் சிந்தனைகளில் உருவாகிக் கொண்டிருக்கும் மாற்றங்களை அவ்வப்போது பேசி புரிய வைத்தாலும் அவர்கள் கேட்கும் பல கேள்விகளுக்கு பல சமயம் பதில் சொல்ல முடியாமல் தடுமாறும் நிலைதான் ஏற்படுகின்றது.

அப்படியொரு நிலை சமீபத்தில் உருவானது.

நான் வீட்டில் இருக்கும் சமயத்தில் தொலைக்காட்சியில் செய்திகள் ஓடிக் கொண்டிருக்கும்.  அவர்களும் கேட்டுக் கொண்டே தான் இருப்பார்கள். சமீபத்தில் நடந்த திவ்யா இளவரசன் சம்மந்தப்பட்ட பல நிகழ்வுகளை அவர்கள் பார்த்ததும் அவர்கள் கேட்ட எந்த கேள்விக்கும் என்னால் முழுமையான பதில் சொல்ல முடியவில்லை. காரணம் ஒன்றைப் பற்றி சொல்லும் போது அது சார்ந்த ஒவ்வொரு விசயத்தையும் படிப்படியாக சொல்லிக் கொண்டே வர வேண்டும். 

அவர்கள் மனதில் விஷத்தை விதைக்க விரும்பாத காரணத்தால் இது போன்ற விசயங்களை விவாதிக்க விரும்புவதில்லை. அவர்கள் பயிலும் பள்ளியில் இந்த சாதி குறித்த எந்த எண்ணமும் இல்லாத காரணத்தால் அது குறித்த முழுமையான புரிதல்கள் இல்லை.

மூவரும் கேள்விகளை கேட்க, அவர்கள் உறங்கிய பிறகே பல சமயம் அது குறித்த செய்திகள் சார்ந்த தொடர்புகளை பார்த்துக் கொள்வதுண்டு. இந்த சமயத்தில் தான் நடிகர் பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் அவர் நடித்த கெரளவம் படத்தை பார்க்க வாய்ப்பு அமைந்தது. 

கடந்த சில மாதங்களாக டி யூடிப் மேய்ச்சல் என்பது பலவற்றையும் கற்றுத் தந்து கொண்டிருக்கின்றது. ஆனால் தேடுவதில் சவாலாக இருப்பதால் அப்போது தான் ஸ்ரீவலைப்பக்கம் என்றொரு பதிவு என் கண்ணில் பட்டது. அவர் ரசித்த நீயா நானா தொகுப்பை வரிசைக்கிரமமாக வெளியிட்டு வைத்திருந்தார். 

இது கூட நல்லாயிருக்கே என்று நினைத்துக் கொண்டு கௌரவம் படம் பார்த்து முடித்து அந்த படம் சார்ந்த மற்ற விபரங்களை தேடிக் கொண்டிருந்த போது தான் அந்த படம் உருவான கதையோடு நீயா நானா தொகுப்பில் வந்த சாதி சார்ந்த பல விவாதங்கள் என் கண்ணில் பட்டது.

தனது இரண்டாவது மகளின் காதல் பிரச்சனையினால் தற்போது மீடியா மக்களிடம் மாட்டிக் கொண்ட இயக்குநர் சேரன் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளும், அவர் காதல் குறித்து பேசிய விசயங்களும் இதில் வந்துள்ளது. பாண்டவர் பூமி படத்தில் அண்ணன் தங்கையின் கழுத்தை வெட்டிய போது படம் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் கை தட்டி ரசித்ததை குறிப்பிட்டுள்ளார். பாவம் இன்று சேரன் பிரபல்யம் என்பதன் உண்மையான விலையை கொடுத்துக் கொண்டிருக்கின்றார்.

இதை பதிவில் ஆவணமாக உருவாக்கும் எண்ணத்தில் இங்கே தொடுப்புகளை கொடுத்துள்ளேன். வாய்ப்பு இருப்பவர்கள் நிச்சயம் நேரம் ஒதுக்கி பார்க்கலாம். காரணம் இதில் பேசப்படும் அத்தனை விவாதங்களும் நாம் அத்தனை பேர்களும் கடந்து வந்திருப்பதே.

பல சமயம் பலரும் அனுபவித்து இருக்கக்கூடியதே. 

நடிகர் பிரகாஷ்ராஜ் தயாரித்து நடித்துள்ள கௌரவம் படம் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம்.








Tuesday, October 20, 2009

கலைஞானி கமல்ஹாசன் கலைஞன் கணவன் தந்தை

"காதல் மன்னராக "  பிறகு இவர் தான் "இளவரசன் "  பட்டத்துக்கு வந்தவர்.  காதல் மன்னராக ஆட்சி புரிந்தவர் கூட தன்னுடைய கடைசி காலத்தில் பொருந்தாத காதலினால் தானும் அவஸ்த்தை பட்டு அவரின் மொத்த குடும்பத்தையும் அவஸ்த்தைக்கு உள்ளாக்கினார்.  ஆமாம்" காதலின்" மொத்த குறீயிட்டின் பலமும் பலவீனமும் இது தான்.



அன்று எனக்கு புரியாத வயதில் அடுத்த வீட்டு அக்கா என்னை விரட்டி விட்டு உங்களை ரசித்தார்கள். இன்று என் குழந்தைகளுக்கு புரியாமல் இருந்தாலும் கூட   உங்களை ரசிக்க முடிகின்றது.

ஆனால் இன்றுவரையிலும் வாலிப வாலிபிகளுக்கு ஜிலேபி உண்ணும் மகிழ்ச்சியை தந்தவர்,  தந்து கொண்டுருப்பவர் நம்முடைய கமல் ஹாசன் என்றால் அதில்  ஹாஸ்யம் இல்லை.  நடிகர் சிவகுமார் சொன்னது போல்  " அப்போது  தேடிக்கொண்டுருந்த அழகான முகம்"

 இன்றுவரையிலும் அதை காப்பாற்றி வைத்து இருப்பது வெறும் சாதனை என்ற வார்த்தைகளுக்குள் அடக்கி விடக்கூடியதா?  ஆனால் இந்தக் கமலம் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்த புயல்கள், ஏமாற்றங்கள், இழப்புகள்,சோகங்கள் அத்தனையும் மீறி இன்று கமல் 50.



ஓவியமாய் உள்ளே வந்து கடைசியில் வாணியின் ஓவியம் போல் வாழ்க்கையையும் அமைத்துக்கொண்டீர்கள்?

தாமரைச் சின்னம் கூட பல சமயம் வாடிப்போய் நம்பிக் கொண்டுருந்தவர்களை ஏமாற்றி விட்டதுண்டு.  ஆனால் இந்த கமலம் இன்று வரையிலும் வாடாமல் நம்முடைய தமிழர்களின் வாழ்க்கையையும் பலசமயம் சிந்திக்க வைத்துள்ளார்.
அரசியலில் கலைஞரைப் போல கலையில் இவர் ஒரு ஆச்சரியக் குறியீடு தான். " இசைக்கு ஞானி"  என்ற பட்டம் என்பது இளையராஜாவுக்கு எத்தனை பொருத்தமோ அத்தனை பொருத்தம் இவருக்கு" கலைஞானி "  தொடக்கத்தில் வெறியனாக, ரசிகனாக, பார்வையாளனாக என்னை பரவசமாய் நவரசத்தில் ஆழ்த்தியவர்.  கற்பவர்களுக்கு கரை இல்லை என்று இன்றுவரையிலும் அனைவருக்கும் உணர்த்திக்கொண்டுருப்பவர்.  அதென்னவோ தமிழ்நாட்டில் மட்டும் ஞானி என்றால் பிரச்சனை தான்.


சிந்தனையாளர் ஞானியின் ஓ....... பக்கங்களுக்கு  ஓகோ....... என்று படிக்கவிரும்பாதவர்கள்,  சிறகடித்து காற்றில் பறக்காத சிம்பொனி என்று சீண்டி பார்த்துக்கொண்டுருக்கும் பட்டியலில் இவர் மட்டும் இன்னும் சிக்க மாட்டேன் என்கிறார். எவர் வெறுத்தாலும் ஒதுக்கினாலும் எனக்குள் ஒருவன் தான்.
நடிப்பில் சிறந்தவர் என்றால் நடிகர் திலகம் போதுமே?   எது மக்களுக்குத் தேவை என்று உணர்ந்தவர் என்றால் மக்கள் திலகம் போதுமே?
ஆனால் இவர்கள் இருவரிடத்திலும், தொடர்ந்து வந்து கொண்டுருப்பவர்களிடத்திலும் இல்லாத ஒரு சிறப்பு இவரிடம் உண்டு.

கலைஞானி ஒரு விஞ்ஞானி

தனது கலையை, வாழ்க்கையை, கொள்கையை, எதிர்கால லட்சியங்களை எல்லாவற்றையும் விஞ்ஞானப் பார்வையில் பார்க்கத் தெரிந்த மிகச் சிலரில் இவரும் ஒருவர்.  அதில் தோல்வியும் உண்டு.  தொடர்ந்த வெற்றியும் உண்டு.
அது பலருக்கு புரியாத ஆபூர்வ ராகங்களாக இருந்தாலும் இன்று வரையிலும் வற்றாமல் ஓடிக்கொண்டுருக்கும் மகா நதியாகத் தான் வாழ்ந்து கொண்டுருக்கிறார்.

சாட்டிலைட் உடன் சண்டை பிடிக்காதீர்கள் என்று நுழையும் போதே சமரசம் பேசியவர்.  சண்டியர் தனத்தை குறைத்துக்கொள்ளுங்கள்.  அனைத்து திரை அரங்குகளிலும் வெளியிடுங்கள் என்று சொல்லி வெற்றி விழா பாதையை காட்டியவர்.

திரை உலகில் நுழைந்த போது, வளர்ந்த போது, தடுமாறி நின்ற போது, மேலேறிய போது, மேட்டுக்கு வந்தடைந்த போது, மேலான மக்களுக்கு அறிமுகமான போதும் தன்னால் என்ன முடியும் என்பதை சோதித்து பார்த்தவர்.  மேம்பட்ட நுட்பம் உள்ளே வந்த போதெல்லாம் அதற்குள் தன்னை பொறுத்திப் பார்த்தவர்.

எட்டு மொழி வித்தகம்.  எல்லா நாட்டு திரை அறிவையும் கரைத்துக்குடித்தவர்.  இவரின் பள்ளி அறிவு சொல்லித் தரமுடியாததை இவர் உள் வாங்கி சொன்ன போது உலகில் இவரும் ஒரு முக்கியப் புள்ளி ஆனார்.   வாழ்க்கை முழுவதும் கோரப்பசி.  ருசித்து ருசித்து குடித்தவருக்கு இன்னமும் கலை தாகம் அடங்கவில்லை.

நல்லவற்றை நடிகர் சிவகுமார் மூலம் பெற்றுக் கொண்டு ரசிகர்களை நாலாம்தர குடிமக்களாக மாற்றாதவர்.  நா நயம் நம்மை விட பெற்றவர். நாணயத்தில் வருமான வரி துறையின் குறும்படத்தில் நடிப்பவர்.  அத்தனை இலக்கிய அறிவும் உண்டு.  ஆற்றாமையில் வரும் கடவுள் மறுப்பும் உண்டு.  இவரின் கிசு கிசு செய்திகள் போல் இவரின் வளர்ச்சியில் புசு புசு என்று புழுக்கம் அடைந்தவரும் உண்டு.

திரையையே குடும்பமாக கொண்ட நோக்கத்தால் தான் என்னவோ நூறு படங்கள் முடித்தும் விரும்பக்கூடிய வீட்டை அடைய அதற்கும் இந்த குருநாதர் பாலச்சந்தரின் அதட்டல் அவஸ்மாக இருந்தது.   கட்டிய மணைவியுடன் கொண்ட வாழ்க்கை இறுதியில் கண்ணீரைத் தந்தாலும் புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யமாகவே புதைந்து விட்டது.  எல்லாமே புதுமை.  சிந்தனை மட்டுமல்ல.  குழந்தை பெற்று தாலி கட்டியதும் புதுமை தான்.

பிரிவினைகள் என்பது மனைவியுடன் மட்டுமல்ல.  சகோதரர்கள் கூட என்ற போதிலும் அத்தனையிலும் சாணக்கியன் தான்.



உங்களின் கலைக்கு மட்டுமல்ல .  உங்களின் குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் இவர் தான் கடவுள். உங்களுக்கு இந்த வார்த்தை பிடிக்காவிட்டாலும்?


மாநில பிரச்சனைகள் மீறி மகத்தான மனிதராக காட்டிக் கொண்டவர்.   தலைகோதி, உடை மாற்றி  உள்ளம் கவர்பவர் ஒரு பக்கம்.  ஆனால் அவர் முதல் படம் வருவதற்கும் காரணமாக இருந்தவரும் இவரே.  இன்றளவும் அவருக்கு மட்டுமே போட்டியாக இருப்பவரும் இவரே.  உள்ளத்தை சிரிக்க வைக்க வந்த பல பேர்களில் இன்று வரையிலும் உடலை வருத்தி கலையாத தாகத்தில் தவிப்பவர்களுக்கு தன்னை அர்பணித்துக்கொண்டவர்.


நடிகனாக இருப்பவருக்கு என்ன பாராட்டு பத்திரம்?

ரத்தத்தின் ரத்தமே என்று சொல்லாமல் தந்த ரத்த தானங்கள், உடன்பிறப்பே என்று சொல்லாமல் உடலை தொடக்க காலத்திலேயே தானமாக தந்தவர்.


மதம் இல்லாத பள்ளியை தேர்ந்தெடுத்தபோதே உங்களின் வாழ்க்கையின் பாதை குறித்து பெரிதான ஆச்சரியம் இல்லை. எல்லா நிலையிலும் நாயகன் தான்.

எல்லாவிதத்திலும் முன்னோடி தான்.

அம்மாஞ்சி மலையாள பிரமாணன், தேவர் மகனாக மாறுவார்.  விருமாண்டியின் வீரம் பயமான தெனாலியாக கதைக்க முடியும்.  ஆனால் அவதாரமாக உருவெடுத்து உன் அருகில் தீவிரவாதம் என்பதை உயரத்தில் இருந்து ஊருக்கு உரைக்க முடிகின்ற தைரியசாலி.

மற்றவர்களுக்கு, தொடர்ந்தவர்களுக்கு, நம்பியவர்களுக்கு எதைத்தந்தார்?

சுந்தர் சி, சந்தானபாரதியிடம் கேட்க வேண்டும்.  திரைக்கதை பட்டறையில் பங்கெடுத்தவர்களிடம் கேட்க வேண்டும்.  கமலுக்கு பிறகு விக்ரம் தான் என்று ஞாநியிடம் கேட்க வேண்டும். கற்றது என்னவோ அனந்து, பாலசந்தரிடம் தான்?

ஆனால் இவர் நேரிடையாக மறைமுகமாக மற்றவர்களுக்கு கற்றுக்கொடுத்துக்கொண்டுருப்பவரிடம் எதைக் குறிப்பிட்டு கேட்டு விட முடியும்?

இவர் யார் கைபிடித்தும் வரவில்லை?  அதற்கான அவஸ்யத்தையும் உருவாக்கவில்லை.




உங்களின் கான்சாகிப் நிறைவேறாத லட்சியமாகவே இருக்கட்டும். அதற்குள் சிறுபான்மையினர் கொண்டுள்ள கோபக் கனல் மாறிவிடும் ?


கதை, திரைக்கதை, வசனம், இயக்குநர், தயாரிப்பாளர் என்ற தெரிந்த முகமும், அதிகம் வெளியிடாத கவி படைப்பாளியும், மேம்பட்ட தரமான இலக்கிய அறிவாளியும் எத்தனையோ தசவதாரம்.

இவர் பேசும் பேட்டிகள் புரியாத மொழிகள் என்றாலும் புரிந்தவர்களுக்கு சொர்க்கம்.  அது புஷ் மொழியாக இருந்தாலும் சரி,  இல்லை 
குஷ்  மொழியாக இருந்தாலும் சரி.

 எல்லாமே தனி  மொழி தான்.  சந்தேகம் என்பதே இருக்காது.

காரணம் காதல் காட்சியில் கதாநாயகி முகத்தில் திருக்குறளை அவசரமில்லாமல் படித்து ரசிக்கும் ருசிக்கும் அந்த மூன்றாவது பாலை பார்க்கும் பார்வையாளன் , ரசிகன் வீட்டில் (?) தயாராக இருக்க வேண்டும்?  காரணம் அவர் சொல்வது போல் உள்ளே உறங்ககி கொண்டுருக்கும் மிருகத்தை எழுப்பி விட்டுருப்பார்.

எல்லாமே சரி தான்?

குழந்தைகளுக்கு முதல் தரமாக முதன்மை தரமான கல்வியை வழங்கிய கலைஞானி அவர்களுக்கு தரமான வளர்ப்பை தந்துள்ளாரா?

 உலகளாவிய பார்வைகள் என்பது உள்ளூருக்குள் தான் வாழ்ந்தாக வேண்டுமென்ற அவர்களுக்கு எதிர்காலத்தில் சரியானதாக இருக்குமா? என்பதை அவர் சொல்லும் வார்த்தைகளில்  திருமணம் என்பது விரும்பியவர்களுக்காக செய்து கொண்ட ஒரு சமரசம் என்பதாக எடுத்துக்கொள்ளத் தான் வேண்டும்போலிருக்கு.  காரணம் முன்னோடி என்பவர்களின் தத்துவம் எல்லாம் நமக்கு தொடக்கத்தில் புரியாது.  ஒரு வேளை அவர் கடைசி காலத்தில் அவர் விரும்பியபடி கேரளாவில் ஓய்வு எடுக்கும் நிஜ இந்தியன் தாத்தாவாக வாழும் போது ஒரு வேளை மறு பரிசீலினை செய்வாரா?  அல்லது நாம் தான் அன்று நாம் வாழப் போகும் வாழ்க்கையை மறு பரிசீலினை செய்யக்கூடிய கட்டாயம் வருமா? என்று தெரியவில்லை.

காரணம் ஒவ்வொரு முறையும் அவர் அவசரப்பட்டு சொன்ன போதிலும் இறுதியில் அவரது வார்த்தைகள் தான் ஜெயித்துக்கொண்டுருக்கிறது.

குறிப்பு  
நீண்ட 50 போலவே நீண்டு விட்டது. அதிலும் பிரகாசமானவர், மம்முட்டியானவர், லால், வெங்கி உரை திரையை விரும்பாமல் இருப்பவர்களுக்கும் பொன் உரை.