Monday, August 19, 2013

விகடன் விமர்சனம்
கடந்த 24.07.2013 அன்று ஜுனியர் விகடனில் ஜு.வி. நூலகம் பகுதியில் வெளிவந்த டாலர் நகரம் புத்தகம் குறித்த விமர்சனம் இது.

வந்தாரை வாழவைத்த திருப்பூர் நகரம் இப்போது விரக்தியால் திருப்பி அனுப்பி வருகிறது. `"திருப்பூருக்குப் போனா எப்படியும் பிழைக்கலாம்" என்று நம்பி ஊரை விட்டு ஓடிவருவார்கள்.  

ஆனால் இன்று அந்த ஊரை விட்டு பலரும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட திருப்பூரின் கதை இது. இங்குள்ள ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் எழுத்தாளர் ஜோதி கணேசன் தன்னுடைய அனுபவங்களின் மூலமாக திருப்பூரின் வரலாற்றைச் சொல்கிறார்.

"வேலையிருந்தா போட்டுக் கொடுங்கண்ணே...." எனக் கேட்டபடி சட்டென என் அறையின் உள்ளே நுழைந்தவனைக் கண்டு திடுக்கிட்டு நிமிர்ந்தேன்.  செய்து கொண்டிருந்த வேலை மீதான கவனம் சிதறியது. அனுமதி பெறாமல் கண்ணாடிக் கதவை எப்படித் திறக்க வேண்டும் என்றுகூடத் தெரியாமல் உடைப்பது போல திறந்து உள்ளே வந்து நின்ற அவனுக்கு வயது அதிகபட்சம் 14 இருக்கலாம். செம்பட்டைத் தலையுடனும் மேல் பட்டனை ஊக்கு வைத்து இழுத்தி நிறுத்தியிருந்த அழுக்கான சட்டையுடனும் நின்றான்". என்று இவர் வர்ணிக்கும் காட்சி  திருப்பூரில் நித்தமும் நடப்பது.  

இத்தகைய சின்னஞ்சிறுவர்கள்  எப்படியெல்லாம உழைக்கின்றனர் என்பதை ஜோதி கணேசன் சொல்லும் போது ஆச்சரியமாக இருக்கிறது.

"திருப்பூருக்கு நான் உள்ளே நுழைந்த காலத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த நிறுவனத்தில் நண்டும் சிண்டுமாய் உள்ளே ஒரு பெரிய கூட்டமே இருந்தது. இடுப்பு அளவுக்குக்கூட இல்லாதவர்கள் சிங்கமாய் நடு இரவு வரை பணிபுரிந்து விட்டு மறுநாள் காலை எட்டு மணிக்கு மீண்டும் வந்து வேலைபார்த்துக் கொண்டிருந்தனர்" என்கிறார்.  

வறுமை அவர்களது வாழ்க்கையின் ஒவ்வொரு மணி நேரத்தையும் உழைத்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் செய்தது.

பெண்கள் இரவுகளில் பட்ட பாலியல் கஷ்டங்களையும் கண்ணீருடன் சொல்கிறார்.  இதனால்தான் பழைய தொழிலாளிகள் ஓடிப்போய்விட்டு இந்த இடத்துக்கு புதிய தொழிலாளிகள் வந்து விடுகிறார்கள். கடைசி வரை தொழிலாளியாகவே இருந்தவர்கள் கதை மனதை ரணம் ஆக்குகிறது.

மின்வெட்டு, சாய்ப்பட்டறைகள், மூடல், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் உள்ள தேக்கம், டாலர் வீழ்ச்சி என ஏதோ ஒரு காரணத்தை வைத்து திருப்பூரின் வர்த்தகம் சமீப காலமாக பெரும் சரிவை அடைந்தது.  திருப்பூரை விட்டு இரண்டு லட்சம் மக்கள் வெளியேறி விட்டனர்.  வெளியேற முடியாதவர்கள் வெளிறிப்போய் நிற்கின்றனர்.  

வெள்ளி சனி ஆகிய இரடு நாட்களும் சம்பளநாள் என்பதால் முன்பெல்லாம் தீபாவளி மாதிரி பணப்புழக்கம் இருக்கும்.இன்று எல்லா நாளும் ஞாயிற்றுக்கிழமையைப்போல வெறிச்சோடி கிடக்கிறது. 

புதிய பொருளாதாரக் கொள்கையின் பூமராங் என்ன ஆகும் என்பதற்கு உதாரணம் திருப்பூர் 

தொழில் நகரங்களின் கதைகளை நாம் எப்படி எழுத வேண்டும் என்பதற்கு உதாரணமாக இந்த புத்தகம் இருக்கிறது.

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

/// நாம் எப்படி எழுத வேண்டும் ///

வாழ்த்துக்கள்....

Avargal Unmaigal said...
This comment has been removed by the author.
Avargal Unmaigal said...

ஒவ்வொரு தொழில் துறையில் உள்ளவர்கள் அந்த துறையில் நடப்பவைகளை பற்றி உண்மையான நிலவரங்களை உங்களை போல எழுதினால் அது பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பது என் எண்ணம்.

ஆனால் எழுதுவதும் அதை தெளிவாகவும் சொல்வதும் ஒரு கலை அது உங்களிடம் மிக அதிகமாகவே இருப்பதால் இந்த படைப்பு மிகவும் வெற்றி பெற்று இருக்கிறது


பாராட்டுக்கள் ஜோதிஜி

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

எந்த ஒரு விஷயமாக இருந்தாளுள் நுணுக்கமாக ஆய்ந்து எழுதும் உங்கள் திறனை நினைத்து வியந்திருக்கிறேன். வாங்கிப் படிக்கவேண்டிய நூல் என்பதையே பல்வேறு விமர்சனங்களும் உணர்த்துகின்றன.

'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துக்கள் அண்ணா....
ஊருக்கு வரும்போது தங்கள் புத்தகம் வாங்கிப் படிக்கவேண்டும்...

Unknown said...

அவர்கள் உண்மைகள் எழுதிய அத்தனை வரிகளும் எனக்கும் உடன்பாடாகவே தோன்றுகிறது - தெளிவாக சொல்லும் திறமையின் வெற்றிக்கு வாழ்த்துகள் ஜோதிஜீ

ஜோதிஜி said...

வாழ்த்துகளுக்கு நன்றி நண்பர்களே.

ஊரான் said...

"புதிய பொருளாதாரக் கொள்கையின் பூமராங் என்ன ஆகும் என்பதற்கு உதாரணம் திருப்பூர்"
இன்று இந்தியாவே திரூப்பூராகிவிட்ட பிறகு நாமெல்லாம் எங்கே செல்வது? என்ற கேள்வி மட்டும்தான எஞ்சி நிற்கிறது.

கிரி said...

வாழ்த்துக்கள் ஜோதிஜி. புத்தகம் எழுதியததோட அதை சரியா மார்கெடிங் ம் செய்யறீங்க. இன்னும் பலரை சென்றடையும்.