Thursday, November 26, 2009

நெஞ்சு பொறுக்குதில்லையே

சிங்களர்களின் தந்தை என்று அழைக்கப்படும் சேனநாயகாவின் முழுப்பெயர் டட்லி ஸ்டீபன் சேனநாயகா.  இவர் மட்டுமல்ல இன்று வரைக்கும் இலங்கையை ஆண்டு கொண்டுருக்கும் மொத்த அதிபர்களின் முழு நீளத்தை பார்த்தால் கிறிஸ்துவம் தழுவிய சிங்களர்களே.

தமிழர் இனத்தில் தொடங்கி கிறிஸ்துவத்தில் நுழைந்து இந்த இரண்டுங்கெட்டான்கள் இன்று வரையிலும் மொத்த சிங்களர்களின் ஆதர்சண கடவுள் போல் காட்சி அளிக்கிறார்கள்.  அதனால் தான் உண்மையான புத்தரின் கொள்கைகள் இன்றுவரையிலும் புதைக்கப்பட்டதாய் இருக்கிறது.

சேனநாயகா தொடக்கத்தில் தமிழரால் பொதுவாக உருவாக்கப்பட்ட "சிலோன் தேசிய காங்கிரஸ்" நிறுவன உறுப்பினராக இருந்தவர். தனியாக "ஐக்கிய தேசிய கட்சி"யை தொடங்கி முதல் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக ஜெயித்து வந்தாலும் மைனாரிட்டி அரசாங்கம் தான்.

ஆட்சியில் அமர்ந்த போது தமிழ், ஆங்கிலம், சிங்களத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அன்று இருந்த மொத்த உறுப்பினர்களில் சிங்களர் கட்சி 68 பேர்கள்.  சிலோன் தமிழர்கள் 13 மற்றும் இந்திய வம்சாவளி தமிழர்கள் 7 பேர்கள். மற்றவர்கள் முஸ்லிம்கள், சுயேச்சைகள்.

தமிழர்களின் சார்பாக இந்திய இலங்கை காங்கிரஸ்,  சிலோன் தமிழ் காங்கிரஸ்

அன்றைய தேர்தலில் சேனநாயகாவின் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாக போட்டியிட்ட அத்தனை தமிழ் தலைவர்களுக்கு தோல்வி.  யாழ்பாணத்தில் போட்டியிட்ட ஜீஜீ பொன்னம்பலம் கூட இந்திய வம்சாவளி மொத்த உரிமைப் பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பேன் என்று உறுதி மொழி அளித்து , ஓப்பந்தத்தில் கையெழுத்து போட்டு தான் வெற்றி பெற முடிந்தது.

தனிப்பெரும் கட்சியாக சேனநாயகா உள்ளே வந்தாலும் அவர் மனதின் உள்ளே அலை அலையாக கோப கொந்தளிப்புகள்.

தமிழர்கள் என்ற பெயரில் பூர்வகுடி, இந்திய வம்சாவளி என்று மொத்தமாய் ஆட்சி அதிகாரத்திற்கு உள்ளே வந்த இந்த கதையை இப்பவே சமாதி கட்டிவிட வேண்டும் என்று கையில் எடுத்த ஆயுதம் தான் தோட்டத் தொழிலாளர்கள்.

இந்திய பாகிஸ்தான் குடியுரிமைச் சட்டம்.

அவருடைய அருள் உரையும் அப்படித் தான் இருந்தது.

"சிங்களர்களுக்கு என்று இருப்பது இந்த ஒரே ஒரு சிறிய நாடு. வாழ வந்தவர்கள் நம்முடைய மொத்த உரிமையையும் எடுத்துக்கொண்டு வாழ வேண்டிய சிங்களர்களை அவர்களின் உரிமையை புறந்தள்ளுவதைப் பார்க்கும் போது எப்போது தான் இந்த சிங்களர்கள் தன்னை உணர்வார்களோ?"

பறட்டை பத்த வச்ச மாதிரி கொளுத்தி போட்டு விட்டதோடு மட்டுமல்ல.  தீர்மானமாய், தீர்க்கதரிசமான முன்னேற்பாடுகளையும் செயல்படுத்த தொடங்கினார்.

பாகிஸ்தான் பிரிந்த பிறகு ஜின்னா கூட அங்கு போனதும் உரையாற்றிய உரையாடல்களை பார்த்தீர்களேயானால் ஒரு வகையில் பாவ மன்னிப்பு போல் தான் உணர்ந்து பேசி உள்ளார்.

 "எதிர்காலத்தில் மதம் சார்ந்த பாகிஸ்தானாக இருக்கக்கூடாது.  அப்போது தான் நல்ல எதிர்காலம் இந்த நாட்டுக்கு உருவாகும்".

ஆனால் அதை இன்றுவரையிலும் பின்பற்ற விரும்பாத பாகிஸ்தான் தலைவர்கள் உருவாக்கிய "பரிசுத்தமானவர்கள் வாழும் பூமி" இன்று தினந்தோறும் பிணம் சுமக்கும் பூமியாக ஆகி விட்டது.

ஆனால் இலங்கையில் சேனநாயகா குடியுரிமைச் சட்டத்தை கொண்டு வந்த போது தன்னுடைய அமைச்சரவையில் இருந்த தமிழர்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், பதவி ஆசை காட்டி ஜீஜீ பொன்னம்பலத்தை உள்ளே இழுத்து வெற்றிகரமாக தோட்டத் தொழிலாளர்களை நாடோடி ஆக்கினார்.

கொண்டு வந்த தீர்மானம்(சிலோன் குடியுரிமைச் சட்டம்) அட்டகாசமாக(1948 ஆகஸ்ட் 19) நிறைவேறியது.

தொடக்கத்தில் மலையகத் தமிழர்களுக்கு மொத்த ஆதரவு என்று சொன்ன ஜீஜீ பொன்னம்பலம் ஆறு உறுப்பினர்கள் கொண்ட தன்னுடைய கட்சியில் மூன்று பேர்களை ஆதரவாகவும் மூன்று பேர்களை எதிர்த்தும் போடச் செய்து தனது அமைச்சர் பதவியை உறுதிபடுத்திக்கொண்டார்.

இவருடைய கட்சியில் உறுப்பினராக இருந்த தொண்டைமான் பிறகு வெளியேறி உருவாக்கிய(1949 டிசம்பர் 9) கட்சி தான் "இலங்கை தமிழரசு கட்சி".  அப்போது மலையகத் தமிழர்களுக்கு என்று பாடுபட்டுக்கொண்டுருந்த தந்தை செல்வநாயகத்தை தலைவராக ஏற்றுக்கொண்டார்.

சேனநாயகாவின் அமைச்சரவையில் இருந்து தீர்மானத்தை எதிர்த்து, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து வெளியேறியவர் சுந்தரலிங்கம்.

அப்போது நடந்த வாக்குவாதத்தில் அரசாங்கத்தில் இருந்த ஜெயவர்த்தனே நீங்கள் இந்திய ஆதரவாளர்? என்றதும் அதற்கு தொண்டைமான் சொன்ன வாசகம்.

"என்னை கண்டித் தமிழர் என்பதில் தான் பெருமைபடுகின்றேன்.  ஆனால் இந்த இலங்கை மண் எங்களுடைய முன்னோர்களின் உழைப்பால் இன்று சொர்க்க பூமியாக மாறியுள்ளது"

இலங்கையின் இன்றைய தேசியக் கொடி சிங்கம் தனது காலில் ஒரு கத்தியை வைத்து இருப்பது போல் இருக்கும்.  இந்த தேசிய கொடியைத் தான் இலங்கையின் தேசியக் கொடியாக நாம் அணைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சேனநாயகா சொன்ன தத்துவம் இது.

"கடைசியாக ஆண்ட மன்னர் (கண்டி) ஒரு வகையில் அவரும் தமிழர் தானே?"  அணைவரும் கப்சிப்.

1901 வரைக்கும் இலங்கை ஜனத்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த தமிழர்களையும் ஒரே பிரிவின் கீழ் தான் கொண்டு வந்து இருந்தனர்.  1911 முதல் இந்திய வம்சாவளி தமிழர்கள் என்ற பிரிவை உருவாக்கி ஆங்கிலேயர்கள் உருக்குலைத்தனர்,

1946 கணக்குப்படி மொத்த இலங்கையின் ஜனத்தொகை  67 லட்சம்.  இதில் இந்திய வம்சாவளி தமிழர்கள் 8 லட்சம். இந்திய வம்சாவளி முஸ்லீம்கள் 44 ஆயிரம்.  இலங்கை பூர்வகுடி தமிழர்கள் 7.3 லட்சம்.  ஏறக்குறைய அன்று மொத்த தமிழர்கள் 25 சதவிகிதம் .

இன்று மொத்த இலங்கையின் முகாமில் இருப்பவர்கள் மூன்று லட்சம் என்று கணக்கு சொல்கிறார்கள்.  மற்ற இலங்கையில் பரவியிருக்கும் தமிழர்களையும் எண்ணிக்கையில் வைத்தாலும் மொத்த வாழ்ந்த இரண்டு தலைமுறையின் மற்ற தமிழ் மக்கள்?

ஆங்கிலேயர்களிடம் பேசி ஆட்சிக்கு வந்தாகி விட்டது.
தமிழர்களை யோசிக்க வைத்து சிங்கள கொடியை கொண்டு வந்தாகி விட்டது.
தமிழனை விலைக்கு வாங்கி தமிழர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கை எடுத்தாகி விட்டது.

வயது ஆகிக்கொண்டு இருக்கிறது.  வாரிசை கொண்டு அமர்த்துவது தானே முறை.  ஆனால் அங்கு ஒரு திருப்பம்.

மலையகத்தமிழர்களின் நாடோடியாக ஆக்கப்பட்டதன் பின்னால் உள்ள கதை இன்னமும் சிறப்பாக நம்மை சிந்திக்க வைக்கும்?
இந்த சட்ட தீர்மானத்தை வெற்றிகரமாக சட்டமாக கொண்டு வர உதவியர் அமைச்சர் பதவியின் காரணமாக ஜீஜீ பொன்னம்பலம்.
ஆனால் பல்வேறு போராட்டத்திற்குப்பிறகு உருவாக்கப்பட்ட சட்ட விதிகளின்படி ஐந்து வருடங்கள் இலங்கையில் தங்கி இருந்ததற்கான சான்றிதழ்களோடு, விண்ணப்பத்தை அரசாங்கத்திற்கு அளிக்க உத்தரவு இடப்பட்டது. அரசு 2 வருடங்கள் அதற்கு காலக்கெடு விதித்து இருந்து.

அன்று இருந்த பத்து லட்சத்துக்கு அதிகமான மக்களில் 2 லட்சத்துக்கு குறைவானோர் இந்தக் காலக்கெடுவுக்குள் சமர்பித்து தன்னை நிலைநிறுத்திக்கொண்டனர்.  காரணம் தொழிற்சங்க தலைவராக இருந்த தொண்டைமான் காட்டிய வழி " மொத்தமாக புறக்கணியுங்கள்.  இது ஒரு ஏமாற்று வேலை".  

மொத்தத்திலும் படிப்பறிவு இல்லாதவர்களின் கதி அதோகதியாகிப் போனது.
நான்கு மாதங்கள் முடிவுக்கான நேரம் நெருங்கிய சமயத்தில் தொண்டைமான்  அவரைச் சார்ந்தவர்கள் சமர்பித்து உறுதிபடுத்திக்கொண்டனர்.

பாதிக்கு மேற்பட்டவர்களின் விண்ணப்பம் தவறுகளை சுட்டிக்காட்டி பூதாகரப்படுத்தி நிராகரிக்கப்பட்டது.  பலருக்கு விண்ணப்ப பாரம் வழங்கப்படவே இல்லை.  தெளிவாக செயல்பட்டு இருந்தால் பாதிக்கு மேற்பட்டோர் குடியுரிமை பெறுவதற்கான அத்தனை சாத்யக்கூறுகளும் அன்று இருந்தது.
மலையக மக்களுக்கு என்று பல சங்கங்களை உருவாக்கி, தினந்தோறு பல சச்சரவுகளையும் வளர்த்து விட்டுக்கொண்டு,ஆண்டு சந்தாக்களை வசூல் செய்த அத்தனை தலைவர்களும் நினைத்து இருந்தால் மொத்த மக்களின் விண்ணப்பம் தொடங்கி, தேவைப்படும் ஆவணம் முதற்கொண்டு அத்தனை விசயங்களையும் கனகச்சிதமாக செயல்பட்டு இருக்க முடியும் தானே?

மலையகத் தமிழர்கள் தங்கி இருந்த மொத்த வாழ்க்கைக்கான வசதிகளும் ஏறக்குறைய மாட்டுத் தொழுவம் போன்ற இடங்கள். அவர்களின் கல்வி அறிவு அற்ற அறியாமை பயன்படுத்தி பலரும் கூறு கூறாக பிரித்து மேய்ந்தார்கள்,

அன்றைய காலகட்டத்தில் மலையக தமிழர்களை பெரிதாக கை தூக்கி விட்டவர்கள் என்று எவருமே பெரிதாக தெரியவில்லை.  அவர்களும் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு எவரை நம்புவது என்று திண்டாட்டமாக வாழ்ந்தவர்களின் மொத்த கண்ணீர் கதையும் மிக நீளமானது.

இன்று வரையிலும் இலங்கையின் மொத்த பொருளாதாரத்திற்கும் முக்கிய காரணமாக இருந்த அத்தனை பேர்களும் இந்தியாவில் இருந்து சென்று மலைகளுடன் மண்ணாகிப் போனவர்கள். அன்று இருந்த அத்தனை மலையக தமிழர்களும் காலப்போக்கில் புதைபொருளாக மாற்றம் பெற்றனர்.  சிலர் நாடு திரும்பினர்.

மீதி இருந்த, குடியுரிமையில்லாமல் மேற்கொண்டு வாழ்ந்த மக்களை குண்டர் படைகளைக்கொண்டு, அதிகாரத்தை வைத்து விரட்டி துரத்தி அடித்தனர்.

தமிழர்களுக்கு சிங்களர்கள் பொதுவான எதிரி. ஆனால் மொத்த வாழ்க்கையில் தமிழர்களுக்கு அன்று முதல் இன்று வரையிலும் தமிழன் தானே எதிரி?

சிங்களர்களின் அவதாரமாக உருவான சேனநாயகா ஒரு தந்தையாக இருப்பவர் என்பவர் என்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் தீர்க்கதரிசன பார்வையில் செயல்பட்டு தொடக்க ராஜபாட்டையை ஆரம்பித்து வைத்தார்.

குதிரை சவாரியின் போது, கீழே விழுந்தவர் பின்னாளில் மாரடைப்பால் காலமானார்.  மகன் டட்லி சேனநாயகாவை (அமைச்சர்) வாரிசாக நியமிக்க முற்படுவதற்குள் அப்போது அரசாங்கத்தில் இரண்டாம் இடத்தில் இருந்த பண்டார நாயகா முந்திக்கொண்டார்.

உள்ளே இருந்தால் இனிமேலும் பப்பு வேகாது என்று அதிரடியாக (1951 செப் 2) ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை தொடங்கி தன்னுடைய அதிரடி மக்கள் சேவையை தொடங்க மக்களிடம் சென்றார்.

3 comments:

லெமூரியன்... said...

..........கேட்கவே ரொம்ப அசிங்கமா இருக்கு இந்த தமிழ் தலைவர்களை பற்றின தகவல்கள்....!

thiyaa said...

நல்ல ஆதாரங்களுடன் எழுதியுள்ளீர்கள்
எல்லாம் உண்மைதான்

( நான் நினைக்கிறேன் சிலோன் என்ற சொல் இல்லை என்று "இலங்கை தமிழ் காங்கிரஸ்" தான் அது பின் உடைந்து "தமிழரசுக் கட்சி " தந்தை பேராசிரியர். வி .செல்வநாயகத்தால் நிறுவப்பட்டதாக எனக்கு அவ்வளவாக அரசியல் தெரியாது. பிழையெனில் விட்டுவிடுங்கள் )

ஜோதிஜி said...

நன்றி