Wednesday, November 25, 2009

பராசக்தி வாழ நிலம் வேண்டும்

"அதற்கு நீங்கள் "சர்வதேச அரசியல்" படித்து தெரிந்து கொள்ளவேண்டும்"
போகிறபோக்கில் "பேராண்மை" படத்தில் வரும் வசனம் இது.  அந்த மாணவியைப் போலவே நமக்கும் இது குமட்டும் சமாச்சாரம் தான்.

உள்ளுர் வியாதிகளின் தொந்தரவே தாங்க முடியவில்லை..  இதில் உலகத்தில் உள்ள தொற்று நோய்களையும் ஏன் வாங்கிக்கொள்ள வேண்டும்.

அதுவும் இந்த இலங்கைத் தொடரில் உங்களுக்கு இது கேலிக்குறியாகவும் இருக்கும்.  அந்த சிந்தனைகளை ஒரு ஓரமாக வைத்துக்கொண்டு உள்ளே புகுந்து வெளியே வந்து விடுங்கள்.

பின்னால் உதவும்.

அடுத்து வரும் சரித்திர பக்க நிகழ்வுகள் அனைத்தும் சிங்கள தமிழர்களின் பிரச்சனைகள் மட்டுமே.  எந்த நாடும் உள்ளே வரவில்லை.  அல்லது  செய்திக்காக வந்து சேகரித்தவர்கள் மட்டுமே.

பின்னால் வரப்போகும் ஜெயவர்த்தனேக்கு அன்று இருந்த "அமெரிக்க பாசம்" கூட முழுமையானது அல்ல.  அது போல அன்று அமெரிக்காவுக்கு அப்போது இலங்கை என்ற நாடு இன்றைய முக்கியம் போல அத்தனை அவசரமும் இல்லை.

 "சர்வதேச அரசியல்" இருந்தால் மட்டுமே உங்களால் சில விசயங்களை தீர்மானமாக புரிந்து கொள்ள முடியும். முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக சொல்லப்படும் "முள்ளிவாய்க்கால்" குறித்தும், பிரபாகரன் ஆளுமையில் நடந்த தவறான புரிந்துணர்வுகள் சிலவற்றையாவது முழுமையாக இல்லாவிட்டாலும் முக்கியமானதை நீங்களாகவே உணர்ந்து கொள்ள முடியும்.

அடுத்து இந்த இனம் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய முடியும்? என்பதையும் உணர்த்தும்?

"ஜனநாயகம் ஒன்றே போதும்.  அதுவே புனிதமானது. காலம் முழுக்க அதுவே சிறப்பானது?" அன்று முதல் இன்று வரையிலும் இந்தியாவின் ராகம் தாளம் பல்லவி இது.

பசுமை போர்த்திய மலைகள். சொர்க்கம் என்பது மொத்த வீடு. வீட்டில் நான்கு வாசல்கள்.  பள்ளிக்கு செல்லும் போது எந்த வாசல் வழியாக வருவாரோ?  நான்கு புறமும் கார்கள்.

நீங்கள் செவி வழியாவது கேட்டு இருப்பீர்கள்.  இந்திய முதல் பிரதமர் ஜவர்கஹலால் நேருவின் தொடக்க வாழ்க்கையை.  அவரது தகப்பனார் மோதிலால் நேரு வாதாட வரவழைக்க வேண்டும் என்றால் இன்றைய ராம் ஜெத்மலானியின் ஒரு நாள் தொகை.

அன்றைய காலகட்டத்தில். பணத்தின் மதிப்பையும் அவர்களின் சொத்தின் மதிப்பையும் கணக்கில் கொள்ளுங்கள்.

மொத்த அவரின் பரம்பரையில் மூன்று துர்மரணங்கள்.  நாட்டின் வளர்ச்சிக்கு அவர்களின் மரணம் அளித்த பரிசு? மனிதம் குறித்த கேள்விகள்?

இதே நேரு மொத்த சுதந்திர போராட்டத்திற்காக சிறையில் இருந்த நாட்கள், அனுபவித்த நரக வேதனைகள் (காண்க இந்தியா சுந்திரத்தில்) .

" இன்று கைது செய்து புகைப்படத்திற்கு டாட்டா காண்பித்து அடைக்கப்பட்ட மண்டபத்தில் விருந்து உண்டு மாலையில் விடுதலை " என்ற செய்திகள் நமக்கு பல அரசியல் அறிவுகளையும் உணர்த்துகிறது.

"என்ன தாத்தா நீங்கள் கோவணத்தை துண்டையும் கட்டிக்கொண்டு பங்கிங்காம் அரண்மணைக்கு சென்றுவிட்டால் மொத்த இந்தியா ஏழ்மையும் நீங்கி விடுமா? "  காந்தியைப் பார்த்து இன்று வரையிலும் அனைவரும் கேட்கும் கேள்வி.

 நாம் பக்கத்து சந்து வரைக்கும் போவதற்குக் கூட பல முறை நமது ஒப்பனையை பத்து முறை சரி பார்த்துக்கொள்கிறோம்?

நாம் தான் நம்முடைய தராதரத்தை ஒப்பிட்டுக்கொள்ள வேண்டும்.

" சில்லறை(?)க் கட்சிகளை வைத்துக்கொண்டு ஐந்து வருடங்கள் முழுமையாக ஆட்சி புரிந்து விட்டீர்களா?  பம்பாய் கலவரம் முடிந்து மக்கள் இயல்பு நிலைக்கு அவர்களாகவே வந்து விட்டார்கள்.  இனிமேலாவது சிரிப்பீர்களா? "

பன்மொழி வித்தகர் இலங்கைப் பிரச்சனைக்காக இந்திரா காந்தியால் அனுப்பப்பட்ட பிவி நரசிம்மராவ்.

"நான் தூங்கும் போது எடுத்த புகைப்படத்திற்கு நான் பொறுப்பாக முடியுமா?"  அதிர்ஷ்ட விவசாய முன்னால் பிரதமர் தேவகௌடா.

"நான் கூட இந்த நாட்டை ஆளுமை செய்ய முடியும் என்று கனவில் கூட நினைத்து இல்லை.  இது தான் இந்தியாவின் சிறப்பான ஜனநாயகம்".  

மூளை முழுக்க புத்தியை மட்டும் பெற்று தன் தனி மனித உழைப்பால் மட்டும் வளர்ந்த இன்றைய பிரதமர் மன்மோகன் சிங்.  பிறந்தது பாகிஸ்தான் நகரத்தில்.

இது இந்தியாவின் 63 ஆண்டுகால ஜனநாயக அரசியலின் மேடு பள்ளங்கள்.

" பூபாள ராகமும் உண்டு. பூகம்ப வாழ்வியல் வேதனைகளும் உண்டு.  பொழுது புலர்ந்தால் உழைத்தால் தான் நாங்கள் வாழ முடியும்" என்பவர்களும் இன்றுவரையிலும் உண்டு.

"சூரியன் அஸ்தமணம் இல்லாத நாடு" .  இன்றைய பெரியண்ணா அமெரிக்காவைக் கூட தனது "காலணி" போல் வைத்து இருந்த பிரிட்டன்.

இன்று?

400 வருடங்கள் கொண்ட சரித்திரத்தை கொண்ட அமெரிக்கா என்ற ஹிட்டான "நாட்டாமை" திரைப்படத்தின் இடைவேளை இன்றைய காலகட்டத்தில் வந்து உள்ளது.  வியப்படையாதீர்கள்.

பச்சையாக சொல்லப்போனால் ஒபாமா சீனாவிற்கு வந்தது "தர்மம் பண்ணுங்க சாமி".

சிட்டி வங்கி சீட்டிங் வங்கியானதும், தொடர்ந்து 125 வங்கிகள் வராக்கடன் வாங்கியாக ஆனதும் சீனா அமெரிக்காவில் முதலீடு செய்துள்ள 40 லட்சம் கோடிகளை காப்பாற்றுவதற்காக?

சீனா திருப்பி எடுத்து விட்டால் இன்றைய அமெரிக்கா வெறும் பேரிக்காய்.

"வெர்ஸெயில் ஓப்பந்தம்" மூலம் (1783) அமெரிக்க தந்தை ஜார்ஜ் வாசிங்டன் மூலம் தொடங்கிய படம் இது.  இன்று உலகம் முழுக்க வளர்ந்து கொண்டுருக்கும் பல நாடுகளுக்கு இந்த நிமிடம் வரைக்கும் படபடப்பை தந்து கொண்டுருக்கும் அமெரிக்காவின் புனித சேவைகள் இன்றுவரையிலும் நின்றபாடில்லை.

"அடிமைத்தளை" நீக்கிய (1860) ஆபிரகாம் லிங்கன் தொடங்கிய ஓட்டம்.

 "பேசுற ஆங்கிலத்தையாவது நல்லா பேசு ராசா?" என்று பெருமையுடன் சொல்லப்பட்ட Shoe புகழ் புஷ் காலத்தில் தான் ஜெர்க் ஆகி ஒரு திருப்பு முனையில் வந்து நின்றுள்ளது.  திரைப்படத்தில் சொல்வார்களே?   "நாட்".

இந்த நாட்டு தான் "இஸ்லாமிய பயங்கரவாதம்"  என்று  அவர்களை இன்று நாண்டு கொல்ல வைத்துள்ளது.

தனக்கு முள் குத்திவிட்டால் உலகம் முழுக்க "பயங்கரவாதத்தை எதிர்த்து ஒரே அணியில் நிற்கவேண்டும்"

அவர்கள் பார்வையில் இந்தியா என்பது "அணு ஆயுத ஒப்பந்தம் மூலம் மட்டுமே இரு நாடுகளின் ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்"

அமெரிக்க உலக வர்த்தக மையத்தை (26 பிப்ரவரி 1993) யூரியா நைட்ரேட் கொடுத்த ஆட்டத்தில் மொத்த அமெரிக்க ஆட்சியாளர்களின் அத்தனை சுயரூபமும் அன்று தான் வெளிவரத் தொடங்கியது.

பயங்கரவாதம் என்பதை வளர்த்தால் என்ன கிடைக்கும்? என்பதை இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட போது (11 செப்டம்பர் 2001) விடையாக கிடைத்தது.
கென்னடியின் சிஷ்யர் பில் கிளின்டண் சிலவற்றை நமக்குத் தந்தார்.  பெட்ரோலிய எண்ணைய் வியாபாரத்தை எப்படி சிறப்பாக நடத்த வேண்டும்? என்பதை மொத்தமாக அப்பா புஷ்ம் மகன் புஷ்ம் புஸ்வானம் போல் கொளுத்திக் கொண்டாடிய நாடுகள் நமக்கு உண்ர்த்தியது.

"வாக்கு சேகரிக்க சென்றபோது கூட பல அமெரிக்க வெள்ளைத் தோல்கள் தங்களுடைய கருப்பு மனத்தை காட்டாமல் வீட்டுக்குள் கதவை மூடிக்கொண்டனர்"

இன்றைய ஓபாமா உணர்த்தும் வெற்றி இது.

நீங்கள் கழிவரைக்குச் செல்ல நினைத்தால் தண்ணீர் இருக்கிறதா? என்று பார்ப்பீர்கள்.  ஆனால் ஈராக் சதாம் உசைன் தன்னுடைய ஆடம்பர மாளிகையில் உள்ள கழிவு அறைகள் கூட கழட்ட முடியாத தங்க வேலைபாடுகள் உள்ள சாதனங்கள் தான்.

சர்வாதிகாரி, கொடுங்கோலன் இடி அமின் இறந்தது நிம்மதியாக ஆண்டு அனுபவித்து தஞ்சம் வந்த நாட்டில் இயற்கை மரணத்தின் மூலம்.

தொடக்கத்தில் பயந்தாங்கோலி பக்கோடா.  ஓவியம் விற்று பிழைத்தல்.  ஆனால் உலக யுத்தத்தின் சூத்திரதாரி. மொத்த ஐரோப்பாவையும் தன் கால் சட்டை பையில் வைத்துக்கொண்டவர்.  மீசை புகழ் ஒரு பக்கம்.  அவர் வைத்திருந்த யூதர்களின் மரண ஆசை ஒரு பக்கம்.  இன்றைய நவீன தொழில் நுட்பத்தில் தினம் தினம் மரணத்தின் வாயிலில் வாழ்ந்து கொண்டுருக்கும் இஸ்ரேலில் உள்ள யூதர்களிடம் ஹிட்லர் பற்றி கேட்டுப்பாருங்கள்.

கொழும்பு புகழ் நான்காவது மாடி புனித நிகழ்வுகளை அன்றை நாஜிக்களால் உருவாக்கப்பட்ட Concentration Camp பற்றி கேட்டுப்பாருங்கள்.

நிலவரையில் தனக்குத் தானே சுட்டு மாய்த்துக்கொண்ட ஹிட்லரையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

சீனாவின் சிற்பி மா சே துங் சொன்ன "எல்லாமே எல்லோருக்கும் பகிர்தல் மூலம்".

இது அன்றைய சீனா.  ஆனால் இன்றைய சீனா?

பணம் என்பது முக்கியம்.  வளர்ச்சி என்பது அதை விட முக்கியம்.  ஆளுமை என்பது அத்தனையிலும் முக்கியம்.  அப்படியென்றால் கம்யூனிச கொள்கை.

"கிழவியை தூக்கி மனையில் வை.  தாலி கட்டும் போது பார்த்துக்கொள்ளலாம்"

கொள்கைகளை சுவாசக்காற்று போல் சுவாசித்த அத்தனை இளைஞர்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் தியாமென் சதுக்க தரையில் போய் படுத்துக்கொண்டு காது வைத்துக் கேட்டால் உங்களுக்கு அவர்களின் கதறல் ஆவி அமுதா துணையில்லாமலே கேட்க வாய்ப்புண்டு.

இந்தியாவில் ஒரு பெரிய பாலத்தின் கட்டுமானப்பணி முடிய இரண்டு ஆட்சியாளர்களின் பேனாவின் இங்க் தீர வேண்டும். காத்து இருக்க வேண்டும்.  அந்த பத்து வருடத்தில் இன்றைய சீனா நூறு பால கட்டுமானப்பணி முடிந்து பாதி பழைமை பெற்றதாகி இருக்கும்.

இது இன்றைய சீனா.

சிங்கப்பூரில் ஒரு கிராம் ஹெராயின் வைத்து இருந்தால் அடுத்த சில தினங்களில் பிடிபட்டவரின் தூக்கு தண்டணை நிறைவேற்றப்பட்ட செய்தியை தமிழ் முரசில் நீங்கள் படிக்கலாம்.  மற்ற குற்றங்களுக்கு?

முதல் முறை அபதாரம்.  இரண்டாவது முறை ரோத்தாங் என்ற சவுக்கடியுடன் கூடிய சிறைத்தண்டனை.  அப்படியென்னறால் அடுத்த முறை?

மொத்த வருடமும் சிறையில் இருப்பார் அல்லது முக்கிக்கொண்டு நகர்ந்து கொண்டு சாவு எப்போது தமக்கு வரும் என்று காத்துக்கொண்டுருப்பார்.

சின்ன ஊர்.  சிங்கார நாடு சிங்கப்பூர்.

சிங்கப்பூரில் சட்டம் எப்போதுமே தன் கடமையைச் செய்யும்.  அதுவே இந்தியாவில்?

எதிர்கட்சியான பிறகு செய்ய வைக்கப்படும்.

மேலே சொன்ன நாடுகள் மூலம் நான் உண்ர்ந்து கொள்ள வேண்டியது?

ஜனநாயகம் அதுவே எப்போதும் சிறப்பானது?

சர்வாதிகாரம் அது மட்டும் வளர்ச்சிக்கு உதவும்?

அடப்போங்கப்பா?  இரண்டுமே சுத்த ஹம்பக்.   வாழவும் வேண்டும்.  வளர்ச்சியும் வேண்டும்.  நீ பாதி நான் பாதி.  உள்ளே சர்வாதிகாரம்.  வெளியே ஜனநாயக போர்வை.

நாட்டை ஆள வேண்டும் என்று நிணைக்கும் தலைவர்கள், இயக்கத்தின் தலைவர்கள், இனமான போராட்டத்தை வழி நடத்த வேண்டியவர்கள் உணர வேண்டிய முக்கிய பாடங்கள் இது.

என்ன செய்யலாம்?

எதை மட்டும் செய்யக்கூடாது?

மொத்தத்தில் அரசியல் அறிவு என்பது "நல்லவனாக நடி.  நல்லவனாக இருக்காதே"

நேபாளத்தில் மாவேயிஸ்ட் போராடுவது இருட்டான மன்னர் ஆட்சியின் அலங்கோலத்தில் இருந்து மீட்க.

இன்று மீட்டவர்கள் என்ன ஆனார்கள்?  அதிகாரத்தை பெற்றதும் என்ன நடந்தது?

ஆமாம் கொரில்லா யுத்தத்தை தேர்ந்தெடுத்தார்கள்.  மக்கள் ஆதரவு இல்லாமல் அனாதையாக திரிந்தார்கள். ஆனால் அன்று இலங்கை தமிழ் மக்களை "தமிழ் மக்களே விடுதலைப்புலிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டுங்கள்" என்று தொடக்கத்தில் இணைத்த பெருமையும் இலங்கை தலைவர்களுக்கு தான் இருந்தது.

விடுதலைப்புலிகள் கடந்து வந்த பாதைகளைப் பாருங்கள்.........

அறிவுக்களஞ்சியமாக இருந்த யாழ்பாண நூலகத்தை (1981 ஜுன் 1) எரித்து நாசமாக்கினார்களோ? அன்று முதல் ஆதரவுக்கரம் அதிகமானது.

சகபோராளிகளை கொன்ற போது பல காரணங்கள். "கொள்கையாளர்கள் கொள்ளைக்காரர்களாக இருக்க்கூடாது"

தமிழ் தலைவர்களை கொன்ற போது "அப்புறப்படுத்தப்பட வேண்டியவர்கள்"

வீட்டுக்கு ஒரு வாரிசைத் தாருங்கள்.

கட்டாயமாக அவஸ்யமாக நிதி தாருங்கள்.

கட்டுமானப்பணி முழுமை அடைய அல்லது கிரஹகப்பிரவேசத்திற்கு இன்னும் சில வருடங்கள்.
சர்வதேச அரசியலும், நாடுகளும் உள்ளே புகாமல் இருந்து இருந்தால்.

இனப்போராட்டத்தின் எல்லாவற்றையும், உள்ளே உள்ள தவறுகளை, நிகழ்வுகளையும் புதைத்து விடுவோம்.

ஏன் இன்றைய இந்த நிலைமை?

"இன்று இவர்களின் மேலாண்மை ஆதிக்கத்தை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக ரா மூலம் பயிற்சி கொடுக்க முன் வருகிறார்கள்.  நாளை இவர்களே நமக்கு எதிராக திரும்புவார்கள்"

அன்றே மிக தீர்க்கதரிசனமாக இந்தியாவைப் பற்றிய பிரபாகரன் பார்வை இது.

"இந்தியா என்பது என்னுடைய தாய் தந்தை நாடு.  எங்களுடைய தமிழீழ உறவுக்கொள்கை என்பது இந்தியாவிற்கு சாதமாக இருப்பதில் தானே பெருமை"

பிரபாகரனின் அவஸ்யமற்ற ஆசை ஆச்சரியமாக இருக்கிறது.  வாழ்க்கை முழுக்க தீர்க்கமாய் இருந்தவர் எப்படி தீர்மானமாய் நம்பினார்?

ஆனால் மொத்த விதி ?  

ராஜிவ் காந்தி படுகொலை மட்டும் இங்கு நடக்காமல் இருந்தால் இங்கு பலர் இந்நேரம் டவுசர் பாண்டியாகி இருப்பார்கள்?  ஆதரவா?  இல்லையா?
அரசியல் வாழ்க்கையே கேள்விக்குறியாய் சூறாவளியாய் மாற்றி இருக்கும்??

உலக அரசியலை விட, இலங்கை அரசியலை விட பிரபாகரன் குறித்து முழுமையாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால் இனி அவர் வந்து (?) சொந்தமாக சுயசரிதம் எழுதினால் தான் மொத்த சமூகத்திற்கும் புரியும்?

என்ன தான் மனதில் வைத்துருந்தார்?

27 வருடங்கள் சிறையில் பட்ட துன்பங்கள் அனைத்தும் நெல்சன் மண்டேலாவுக்கு உலகம் கொடுத்த மரியாதையில் மறந்து போயிருக்கும்.

அத்தனை கொடூர வாழ்க்கையிலும் யாசர் அரபாத் உலக மேலாதிக்க சக்திகளின் பார்வையில் உன்னதமானவர்.

படுக்கையில் இருந்தாலும் பிடல் காஸ்ட்ரோவை இன்னும் சாகடிக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படும் அமெரிக்கா

தென் அமெரிக்க சாவோஸ் இன்று வரைக்கும் கர்ஜிக்கும் சிங்கம்.

ஏன் பிரபாகரனுக்கு மட்டும் இந்த அங்கீகாரம் கிடைக்க வில்லை?

விஞ்ஞான தொழில் நுட்பத்தை மட்டுமே வைத்துக்கொண்டு போராடிய இயக்கங்களுக்கு மத்தியில் அதுவும் வேண்டும்.  அதற்கு மேல் நம்முடைய வீரமும் வேண்டும் "

வீரனாக வாழ்ந்தவர் வாழ்க்கையின் இறுதி மர்ம முடிச்சு எப்போது அவிழும்?

காந்தி, தோட்டத் தொழிலாளர்களுக்காக சேனநாயகாவுடன் பேச நேருவை அனுப்பினார்.  அன்று தொடங்கிய தோல்வி.  இன்று வரையிலும் இந்தியா என்பது வெறுமனே பக்கத்து நாடு. பாசம் என்பது இந்த நிமிடம் வரைக்கும் வெறும் வேசம் தான்.

ஆயிரம் காரணங்கள்.  லட்சம் அச்சங்கள்.

உலகம் முழுக்க சர்வதேச அரசியல் நீக்கு போக்கு தெரிந்து கொண்ட இனப் போராட்டத்தின் முன்னேற்பாடுகளினால் கிடைத்த வெற்றிகளும், உருவான தோல்விகளும் நமக்கு பல படிப்பினைகளை பாடங்களைத் தருகிறது.

அமெரிக்கா இந்த மூன்றாம் தர வேலைகளை எப்போது தொடங்கியது?  அதன் தாக்கம் இன்று எங்கு வந்து முடிந்துள்ளது?

சீனா இப்போது தான் படபடப்பை ஆரம்பித்து உள்ளது.

இத்தனை விசயங்கள் இதற்கு பின்னால் உண்டா?

தொடரப்போகும் மூன்றாம் பாகம் முடியும் போது தமிழனத்தின் கோரிக்கையை பராசக்தியிடம் வைத்து விட்டு உலகத்தை உலா வருவோம்.
அதன்பிறகு பிரபாகரன் குறித்து, அவர் நடத்திய 33 வருட(1976/2009) போராட்டத்தை பார்க்கலாம்.

சரித்திரம் என்பது இரண்டு பக்கம் மட்டும் உள்ள பணமல்ல.  மூன்றாவது பக்கமும் உண்டு.  பிணத்தின் மேல் ஆளத் துடிக்கும் ஆளுமையாளர்கள்,

அது ரகஸ்யமான அசிங்கமான அந்தரங்கம்.

அத்தனை சீக்கிரமாய் வெளியே வந்து விடாது.  ஆனால் ஒரு நாள் உலகம் அறியும்..  

அதனால் தான் இன்று இந்த இனமான போராட்டம் பலருடைய பார்வையில் கேள்விக்குறியாக? கேலிக்குறியாக?

1 comment:

Anonymous said...

அருமையான கட்டுரை...