Tuesday, September 29, 2009

யாரு கோடு கிழிச்சா? இப்படி கூறு பிரிச்சா?
புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் தொடர்ச்சி 35
இந்தியாவிற்குள் நடந்த போராட்டங்களும், தலைவர்களின் முன்னேற்பாடுகளும், இடைவிடாமல் நடந்த அஹிம்சையான, ஹிம்சையான கலவரங்களும் கிட்டத்தட்ட ஆங்கிலேயர்களை இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்தே ஆக வேண்டிய சூழ்நிலையில் தான் இருந்தார்கள். ஜின்னாவின் நேரிடைய நடவடிக்கைகள் உருவாக்கிய கலவர வித்துக்கள் செடியாகி மரமாகி பூத்து கனியாக மாற மாற கண்ணியமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருந்த அத்தனை மனித இனமும் கதறத் தொடங்கி விட்டது.
சுதந்திரம் கொடுக்க முன்னேற்பாடுகள். அத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி வந்த ஜின்னா வெற்றிக் கோட்டின் அருகே வந்துவிட்டார். பாகிஸ்தான் என்ற பரிசுத்தமானவர்கள் வாழும் பூமிக்கான இடம் குறித்து, எல்லை குறித்து, வாழ்வாதாரங்கள் குறித்து உரையாடல் தொடங்கியது.
இந்த நேரத்தில் இதை இந்த இடத்தில் சொல்ல வரக்காரணம் என்ன?
இங்கு நடந்த உரையாடல் தான் பஞ்சாப் மாநிலம் பற்றி எறியக் காரணம். நடந்த இடப்பெயர்ச்சி, அவல மக்கள், கண்ணீர், கதறல், இழந்த சொத்துக்கள், கொலை, கொள்ளை, கற்பழிப்பு கண்களுக்கு தெரிந்த வரையில் அகதிகளின் நீண்ட்ட்ட்டட வரிசை. இந்த உரையாடல் நடந்த விபரம் தெரிந்தால் தானே மொத்தத்தையும் உள்வாங்க முடியும்?
கலவரம் ஏன் உருவாகியது? பின்னால் உள்ள காரணம் தான் என்ன? பஞ்சாப்பை பிரிக்க வேண்டிய அவஸ்யம் என்ன? ஒரு வேளை பிரிக்காமல் இருந்தது இருந்தால் இந்த அவலங்கள் நடந்து இருக்காதே?
முதலில் ஜின்னா உரையாடலைத் தொடங்கினார்.
"இந்தியா எப்போதுமே ஒரே நாடாக இருந்தது இல்லை. தேசப்படத்தில் அது அப்படித் தோன்றுகிறது. அவர்களது கடவுளான பசு எனக்கு உணவு. நாங்கள் எப்படிச் சேர்ந்து வாழ முடியும் " என்றார் ஜின்னா.
இவ்வளவு காலமும் எப்படிச் சேர்ந்து வாழ்ந்தீர்களோ அப்படி? " என்றார் மவுண்ட்பேட்டன் பிரபு.
பிரிக்காமல் வாழ்ந்தால் எதிர்கால வல்லரசுக்கான தகுதி, போன்ற பல விதங்களையும் ஜின்னாவிடம் பல நாட்கள் எடுத்துக்கூறினாலும் ஜின்னா காதில் போட்டுக்கொள்ள தயாராய் இல்லை. காரணம் அவரைப் பொறுத்தவரையில் நேரு என்பவர் கர்வம் பிடித்த காஷ்மீர் பிராமணர். தன்னுடைய இந்துந்துவ கொள்கையை தன்னுடைய மேல் நாட்டு கல்விக்கடியில் மறைத்து வைத்து இருப்பவர். காந்தியோ இந்துத்துவத்திற்கு புத்துயிர் ஊட்டும் தந்திர நரி.
இவர்களுடன் நாம் எப்படி சேர்ந்து வாழ முடியும்?
சோர்ந்து போய்விட்டார் மவுண்ட் பேட்டன் பிரபு. உறுதியாக இறுதியாக தன்னுடைய கொள்கையை எடுத்துரைத்தார் ஜின்னா. "இந்தியப் பிரிவினை என்பது இயற்கையான விஷயம். அந்தப் பிரிவினையின் மூலம் ஏற்படும் பாகிஸ்தான் பொருளாதார விஷயங்களில் நிறைவு பெற்றதாக இருத்தல் வேண்டும். அப்படியானால் பஞ்சாப் மற்றும் வங்காளம் இரண்டும் பாகிஸ்தானில் இணைய வேண்டும் " என்றார்.
"அது எப்படி? மைனாரிட்டியாக உள்ள முஸ்லீம்கள், மெஜாரிட்டியாக உள்ள இந்துக்களால் ஆளப்படக்கூடாது என்பது தானே உங்கள் பாகிஸ்தானின் அடிப்படை வாதம்? அப்படியானால் வங்களாத்திலும் பஞ்சாப்பிலும் மைனாரிட்டியாக உள்ள இந்துக்களை பாகிஸ்தானுக்குள் திணிக்க வேண்டுமென்பது என்ன நியாயம்? உங்களது இஸ்லாமிய நாட்டுக்காக நீங்கள் கூறும் வாதப்படி பார்த்தால் வங்காளத்தையும் பஞ்சாபையும் வெட்டித்தான் தீரவேண்டும் என்கிற கட்டாயம் எனக்கிருக்கிறதே " என்று கேட்டார் மவுண்ட் பேட்டன்.
"அப்படி இந்த இரு மாகாணங்களும் பிளக்கப்பட்டால் பொருளாதார ரீதியில் இசைவில்லாத ஓரங்களில் கண்ட விதத்தில் செல்லரிக்கப்பட்ட பாகிஸ்தான் தான் எனக்குக் கிடைக்கும் " என்றார் ஜின்னா.
செல்லரித்தது போன்ற பாகிஸ்தானைக்கூட அவருக்குக் கொடுக்க விரும்பாத மவுண்ட் பேட்டன் " அப்படியானால், அப்படிப் பொருளாதார ரீதியில் பலவீனமான ஒரு பாகிஸ்தான் எதற்கு? எனக்கோ வங்காளத்தையும், பஞ்சாப்பையும் பிரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இந்தியாவின் ஆறு லட்சம் கிராமங்கள் ஒவ்வொன்றிலும் சிறு சிறு எண்ணிக்கையில் உள்ள முஸ்லீம்கள் அனைவரும் உங்கள் பாகிஸ்தானுக்குள் வரப்போவதில்லை. நீங்கள் பாகிஸ்தான் என்பதாக ஒரு இஸ்லாமிய நாடு அமைந்த பிறகும் அதே அளவு எண்ணிக்கையில் அல்லது சற்றுக் கூடுதலாக இங்கே முஸ்லிம் மக்கள் இருப்பார்களே? அப்படியானால் உங்கள் பாகிஸ்தானுக்கு என்ன பொருள்? "
" இப்போதே பிரிவினையை எதிர்பார்த்து பஞ்சாப் பகுதியில் ஏராளமான கொலைகளும், கொள்கை என்ற பெயரில் பல கொடூரங்களும் நடந்து கொண்டு இருக்கிறது. பிரிவினை என்று ஒரு கோடு கிழிக்கப்பட்டால் அது ஏராளமான மனித உயிர்கள் பலியாவதற்கும், செல்வங்கள் நாசப்படுத்தப் படுவதற்கும் காரணமாக அமைந்து விடும் " என்றார் மவுண்ட் பேட்டன் பிரபு.
"யுவர் எக்ஸ்லென்ஸி, நீங்கள் தவறாகக் கணக்கிடுகீறீர்கள். பிரிவினை என்பது ஒரு முறைதான். நாங்கள் விரும்பும் தனிநாடு என்று ஒன்று கிடைத்து விட்டால் அப்புறம் எதற்கு இரு சமூகத்தினரும் அடித்துக்கொள்ள போகிறார்கள்."
இதற்கு ஆதாரமாக ஜின்னா அவர்கள் அப்போது நடந்த ஒரு இரு சகோதரர்களின் வழக்கை எடுத்துரைத்தார். சண்டையிட்டுக் கொண்டுருந்த இரு சகோதரர்கள் பாகம் பிரித்த பிறகு இரு சந்தோஷமாய் வாழ்வதாக எடுத்துக் கூறினார்.
இந்தப் புள்ளியில் தொடங்கிய விவாதம் கடைசியில் கோடு போட்டு நடந்த அத்தனை அவலங்களையும் பார்த்த மக்களை அனாதையாக்கியது. உலகம் பார்த்திராத அத்தனை அக்கிரமங்களும் நடந்தது.
கதை ஜின்னா. திரைக்கதை மவுண்ட் பேட்டன் பிரபு. வசனம் பேசியது மக்கள். ஆனால் மொத்தத்திற்கும் இயக்குநர் பொறுப்பை ஏற்றவர் கோடு கிழித்த சிரில் ராட்கிளிப் என்பவர்.
அவர் போட்ட கணக்கில் ஜனத்தொகையை கணக்கில் கொண்டு முஸ்லீம்கள் அதிகமாக வாழும் பகுதி (50,00,000) பாகிஸ்தானுக்கும், இந்துக்கள் (50,00,000) பெருவாரியாக வாழும் பகுதி இந்தியாவுக்கும் என்கிற அடிப்படையிலும், இயற்கை அமைப்புகளையும் வைத்து பஞ்சாப் மாநிலத்தை பிரித்தார்.
ஆனால் அவர் எந்த சிந்தனையில் அடிப்படையின் கீழ் கோடு கிழித்தாரோ அதிலும் பல சிக்கல்களை இயற்கை உருவாக்கி வைத்து இருந்தது.
இயற்கையும் ஒரு வகையில் கொடூரத்திற்கு காரணமாய் அமைந்து விட்டது.
அன்று கிழித்த கோட்டை தாண்டியதால் இராமயாணம்? இப்போது கிழித்த கோட்டால் பரிசுத்த பூமியில் பரிதவித்த மக்கள்?

தேன் கூடு thamizmanam.com/bloglist.php?id=5625


2 comments:

அது ஒரு கனாக் காலம் said...

நன்றாக வருகிறது பதிவு .... இத்தனை விஷயங்கள் உள்ளதா , முன்பே தெரிய வில்லையே என்ற என்னத்தை ஏற்படுத்தி ...படிக்கும் பொழுதே.... நவ ரசங்களில் பாதி வந்து விடுகிறது ..

ஜோதிஜி said...

பதிவின் தொடக்கத்தில் நானும் "எந்த காழ்ப்பு உணர்வும் இல்லாமல் பகிர்ந்து கொள்கிறீர்கள்" என்றீர்கள். இந்த பதிவின் தொடக்கத்தில் நானும் தொடர்கின்றேன் என்றீர்கள். எத்தனை புதிய நட்புகள், ஆத்மார்த்த உணர்வாளர்கள், தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணத்தில் வலை தளத்தை பயன்படுத்துபவர்கள் இன்று நேரிடையாக எந்த இணைப்பு வலை தளமும் இல்லாமல் தேவியர் இல்லத்திற்கு வந்து கொடுத்துக்கொண்டுருக்கும் ஆதரவு அத்தனையும் உங்களுக்கும் நாகாவும் சமர்ப்பணம். ஒவ்வொரு காலைப்பொழுதில் தூக்கத்தில் இருந்து எழுப்பி கலைத்து இல்லத்தரசி கணிணி முன் அமரவைத்து விட்டு நகர்கிறார்.