Wednesday, September 30, 2009

பயணங்கள் முடிவதில்லை


புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் தொடர்ச்சி 36
இந்திய சுதந்திர போராட்டத்தின் முக்கிய நிகழ்வான பஞ்சாப் மாநில பிரித்தல் என்ற நிகழ்வுக்குப் பின்னால் அத்தனை கோரமான மனிதர்களைப் போல அன்றைய இயற்கையும் ஒரு காரணமாக அமைந்து விட்டது.
உண்மை.
அன்றைய பஞ்சாப் மாநிலம் அத்தனை அற்புதம்.
"இந்தியாவின் தானியக் களஞ்சியம் ".
ஆரம்ப கால கட்டத்தில் உள்ளே இருந்த நீர்வளம், நிலவளம் ஓரளவிற்குத்தான் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் ஆங்கிலேயர்களின் நிர்வாகத்தில் உருவாக்கிய நீர்த்தேக்கங்கள், அணைகள், விரிவான முறையில் அமைக்கப்பட்டு இருந்த பாசன கால்வாய் முறைகள், ஆகியவற்றின் மூலம் தரிசாகக் கிடந்த பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களும் பசுமை பூமியாக மாறியது.
இயற்கையிலேயே நல்ல உழைப்பாளிகளான சீக்கிய மக்கள் மேன்மேலும் தங்களுடைய உழைப்பால் உன்னத நிலைமைக்கு கொண்டு வந்தார்கள். அன்றைய கால கட்டத்தில் வாழ்ந்த பல நிபுணர்கள் உருவாக்கி வைத்திருந்த நீர் ஆதார சூத்திரங்கள் பிரிவினையின் போது பலருடைய வாழ்க்கையை சூறாவாளியாக்கப்போகின்றது என்பதை காலம் மட்டுமே உணர்ந்துருக்கும் போல?
பாசனத்திற்கு தேவையான திறக்க வேண்டிய சமாச்சாரங்கள் கோடு கிழித்த ராட்கிளிப் என்ற ஆங்கிலேயர் புரிந்து கொள்ளாதது.
ஆமாம் கோட்டுக்கு இந்தப்பக்கம் பாசன கால்வாய். திறக்க வேண்டிய கருவிகள் பதினைந்து கிலோ மீட்டருக்கு அந்தப் பக்கம். கற்பனையில் கொண்டு வாருங்கள். மனிதன் மனம் எப்படி மாறியது என்று புரிந்து இருக்கும்.
கோட்டுக்கு இருபக்கமும் வாழ்ந்த அத்தனை மக்களுமே பாதிக்கப்பட்டார்க்ள் என்றால் நம்பித்தான் ஆக வேண்டும். கோடு கிழித்தவர் மேல் எந்த தவறும் இல்லை. அவருக்கு மவுண்ட் பேட்டன் பிரபு கொடுத்த அவசரம் ஒரு பக்கம். சுதந்திரத்தை சற்று தள்ளிப்போட்டால் ஆற அமர உட்கார்ந்து மக்களின் வாழ்வாதாரத்தை பேசி யோசித்து உருவாக்கினால் போதும் என்று மன்றாடிப்பார்த்தார். மவுண்ட் பேட்டன் பிரபு மட்டுமல்ல, நேரு, ஜின்னா கூட செவிசாய்க்கவில்லை. பிரித்தே ஆக வேண்டும். மவுண்ட் பேட்டன் பிரபு சொல்லி இருக்கும் ஆக்ஸ்ட் 15 என்பது இறுதியான உறுதியான நாள்.
மூவரும் ஒதுங்கி விட்டார்கள்.
ஓலம் மிஞ்சியது தான் மிச்சம்.
அதனால் தான் " கொள்கை அளவில் சரி. ஆனால் நடைமுறையில் பெரிய விபத்து " என்று வர்ணிக்கப்பட்டது.
வங்காளம் இந்த அடிப்படையில் பிரித்த போது 85 சதவிகிதம் சணல் விளைவிக்கும் பகுதி ஒரு பக்கம் ஒதுங்கியது. கொடுமை என்னவென்றால் மறுபக்கத்தில் சணலை பதப்படுத்தி தயாரிக்கும் மில் ஒன்று கூட இல்லை.
பஞ்சாப் பிரிவினைக்கோடு, காஷ்மீர் அருகே வடக்கு திசையில் இருந்து பஞ்சாபிற்குள் பிரவேசிக்கும் ஒரு கிளை நதியை ஒட்டி ஆரம்பித்து, தென்கிழக்காக நெடுகச் சென்று மாநிலத்தை இரண்டாகப் பிளந்தது. லாகூர் நகரம் பாகிஸ்தானுக்கும், அமிர்தசரஸ் அதன் பொற் கோயிலுடன் இந்தியாவிற்கும் வந்தது. பிரிவினைக் கோட்டால் பாதிக்கப்பட்டவர்கள் இந்துக்கள் என்றாலும் பாதிக்கப்பட்டது பெரும்பான்மையினர் சீக்கியர்கள். இயல்பாகவே போர்க்குணம் படைத்த சீக்கியர்கள் இந்தப் பிளவு காரணமாக ஏற்பட்ட கலவரங்களில் முக்கிய பங்கு வகித்தார்கள்.
மெஜாரிட்டி மக்கள் ஒரு புறம் என்கிற கொள்கைக்கு மாறாக, குருதாஸ்பூர் என்கிற சிறு நகரம். ரவி நதியின் இயற்கை அமைப்பு காரணமாக இந்தியாவுக்கு ஓதுக்கப்பட்டது. அப்படி அது பிரிக்கப்படவில்லையானால் இந்தப் பகுதி மட்டும் இந்திய நிலத்தில் தலை நீட்டிக் கொண்டுருக்கும் தனிப் பகுதியிாகத் தெரியும். அதனைத் தவிர்ப்பதற்காக முஸ்லீம்கள் பெருவாரியாக வாழும் பிரதேசமாக இருந்தும் அது இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்டது.
ஆனால் நில அமைப்பை முன்னிட்டு இப்படிச் செய்ததன் மூலம் ஆங்கிலேயர் சிரில் ராட்கிளிப் தன்னையும் அறியாமல் இந்தியாவுக்கு ஒரு பெரிய பரிசை அளித்துவிட்டார். இன்று வரையில் அத்தனை பாகிஸ்தான் மக்களும் குறை கூறும் பிரச்சனை இதுதான்.
காஷ்மீருக்குச் செல்லும் ஒரே தலைமார்க்கம் குருதாஸ்பூர் மூலம் செல்வதுதான். குருதாஸ்பூர் பாகிஸ்தானுக்குச் கிடைத்து இருந்தால், காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் போயிருக்கும்.
பிரிவினைக் கோட்டின் படி இந்தியப் பகுதியில் (இந்துக்கள், சீக்கீயர்கள்) தலா 50 லட்சம் மக்களையும், பாகிஸ்தான் பகுதியில் (முஸ்லீம்கள்) 50 லட்சம் பேர்களை உள்ளடக்கியதாக இருந்தது. இந்த பண்டப்பறிமாற்றம் அத்தனை மக்களையும் பண்டார பரதேசியாக்கியது என்றால் அத்தனையும் உண்மை.
பாகிஸ்தான் பகுதியில் உள்ள மொத்த தொழிற்கூடங்கள், விளைநிலங்கள் அத்தனையும் பெரும்பாலும் சீக்கியர்களுக்கு சொந்தமாகவே இருந்தது. பிரிவினை அமலுக்கு வந்த போது கொள்கையாளர்கள் என்று சொல்லிக்கொண்டு உள்ளே வந்தவர்களின் கையில் சிக்கி சின்னாபின்னமாகி அத்தனையும் இழந்தார்கள்.
மதம் என்பது இரண்டாம் பட்சம் தான். விரட்டிவிட்டால் மொத்தமும் நமக்குச் சொந்தம். இது தான் முக்கியக் காரணம்.
கொலை, கொள்ளை, கற்பழிப்பு, தீ வைத்தல், அழித்தல் இன்னும் பல..........
பிரிவினையின் உச்சக்கட்டத்தில் கூர்க்கா ரெஜிமெண்ட் தலைமைப் பொறுப்பில் இருந்த காப்டன் அட்கின்ஸ் தான் தங்கியிருந்த கிராமத்து குடியிருப்புக்கு அருகே இருந்த ஓடிக்கொண்டு இருந்த கழிவு நீர் நிறம் மாறி வெகு நேரமாக ஓடிக்கொண்டுருந்தது.
பலவாறு யோசித்திக்கொண்டு பல மைல்கள் நடந்து போய் பார்த்தபோது சுருதி சுத்தமாய் ஒருத்தர் பின் ஒருவராக வெட்டிக்கொன்று கொண்டுருந்தார்கள்.
இந்த இடத்தில் சில ஆச்சரியமாக உண்மையைப் பார்க்க வேண்டும். சீக்கிய மதத்தின் படி முஸ்லீம் பெண் "உறவு " என்பது நினைத்தே பார்க்க முடியாது. ஆனால் நடந்தது உச்சக்கட்ட கொடுமை. மார்பை அறுத்து, கொத்துக் கறியாக்கி, மந்தையாக ஓட்டிச் சென்று கொளுத்தி கொண்டாடினார்கள். உன்மத்தம் வெறி அடங்கவே இல்லை.
அதோ மற்றொரு பக்கம் முஸ்லீம் மக்கள். போட்டி போட்டுக்கொண்டு. பாதிக்கப்பட்டவர்கள் அத்தனை பேருக்கும் சுதந்திரமோ, மவுண்ட் பேட்டன் பிரபு, கோடு கிழித்த புண்ணியவானோ எவரையும் தெரியாது. என்ன நடக்கிறது என்று யோசிப்பதற்குள் தலை தரையில் விழுந்தது.
லாகூருக்கு அருகே ஷேக்புரா என்று வியாபார தலத்தில் (அதிகமாக மக்கள் கூடும் இடம்) அத்தனை சீக்கிய இந்து மக்களையும் ஒரே கிடங்கு போன்ற ஒரு அறையில் அடைத்து சுட்டுக்கொன்றவர்கள் இராணுவத்தில் இருந்து ஓடிவந்தவர்கள், பாகிஸ்தான் போலீஸ் பணியில் இருந்தவர்களும். ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை.
இடப்பெயர்ச்சியின் போது முடிந்தவரையில் கிடைத்த உடைமைகளுடன் கிடைத்த வாகனத்தில் ரயிலில் பயணித்தனர். இரண்டு பக்கமும் காத்து இருந்தவர்கள் கண்களுக்கு சிக்கியர்வர்களை சின்னாபின்னாமாக்கினார்கள்.
ஒரு ரயில் நிலையத்தின் நடைமேடையில் இருபது முப்பது சீக்கியர்கள் சுத்தமாய் தவம் செய்வது போல தன்னுடைய கிர்பான் என்ற வாள் போன்ற ஆயுதத்தை மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்து இருந்தார்கள். பார்த்துக்கொண்டு அவர்களை கடந்து செல்பவர்கள் " உலக அமைதிக்காக" என்று யோசித்துக்கொண்டு கடப்பார்கள். ஆனால் காத்துக்கொண்டுருப்பது அடுத்து வரும் ரயிலுக்காக. ரயில் உள்ளே வருவதற்குள் எந்தப் பெட்டிக்குள் என்ற செய்தியும் வந்து விடும். காவல் காத்துக்கொண்டு வரும் காவலர்கள் இறங்கி வௌியே இறங்கி வந்து தூரமாய் நின்று விடுவார்கள். இரண்டு பக்கமும் கதவு மூடிவிட்டு வேலை முடித்து வௌியே வருவார்கள்.
தண்டவாளம் முழுக்க குருதி ஆறாக ஓடிக்கொண்டுருக்கும்.
இந்த நிலையிலும் பின்னாளில் டில்லியில் நடந்த கலவரத்தின் போதும் மவுண்ட்பேட்டன் பிரபு சொன்ன வாசகம் இங்கு குறிப்பிடத்தக்கது.
"கடமையில் இருக்கும் போது மத துவேஷத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு கடமையை சரிவர செய்யாமல் இருக்கும் எந்த அதிகாரிகளையும் அந்த இடத்திலேயே சுட்டுக்கொன்று விடுங்கள் ".
அத்தனையும் இழந்தேன். உன் ஆசை அடங்கவில்லை. உருக்குலைத்த உயிரின் ஓலம் கண்டும் உன் வெறி அடங்கவில்லை. மதம் என்ற பெயரில் வனமம் சுடுகாட்டாக்கி விட்டதே உன் உள் வாங்கல் இல்லாத மனம் இனி எதைத் தரும்?

No comments: