Thursday, July 04, 2019

கழகம் வேறு. கல்வித்தந்தையர்கள் வேறு.



கழகத்தினர் நடத்தும் கல்விக்கூடங்களின் பட்டியல் வெளிவந்ததும் கலக்கத்துடன் பல இடங்களிலிருந்து வந்து கொண்டிருக்கும் கருத்துக்களைத் தொடர்ந்து வாசிக்க முடிகின்றது.

இங்கு யாரும் இவர்கள் ஏன் கல்விக்கூடங்கள் நடத்துகின்றார்கள்? என்று கேள்வி எழுப்பவில்லை. இவர்கள் சொல்லும் கொள்கைகளை ஏன் இங்கே கடைப்பிடிப்பதில்லை என்ற கேள்வி தான் முக்கியமாக உள்ளது. ஆனால் அதற்குண்டான பதிலைவிட இப்போது அவாள் நடத்தும் பள்ளிக்கூடங்களைப் பற்றிப் பேசத் தொடங்கி உள்ளனர். 

இது தான் தந்திர அரசியல். 

இப்படித்தான் வளர்ந்தார்கள். இதைத் தான் அரசியலில் சமயோசிதம் என்கிறார்கள்.

திமுகவினர் கல்விக்கூடங்களை நடத்தும் போது அதனைக் கல்விக் கொள்ளை என்று கூக்குரலிடுபவர்கள் அவாள்கள் நடத்தும் பள்ளிக்கூடங்கள், அதன் கட்டணக் கொள்ளைப் பற்றி யாரும் மூச்சுவிடுவதே இல்லை. இது தான் சாதீய அபிமானம் என்ற கொள்கை பிரகடனத்தை நண்பர்கள் தங்கள் கருத்துக்களாக இப்போது எழுதத் தொடங்கி உள்ளனர்.

இதில் உள்ள நுண்ணரசியலைக் கவனித்தால் சில விசயங்கள் புரிபடும்.

1. அவாள்கள் நடத்தும் பள்ளிக்கூடங்கள் கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக நடந்து வருகின்றது. அவர்கள் அரசியலில், அதிகார பதவியிலிருந்து கொள்ளையடித்து பள்ளிக்கூடங்கள் கட்டவில்லை. பணம் கட்ட முடிந்தவர்களிடம் வாங்கினார்கள். பணம் கட்ட முடிந்தவர்கள் எதிர்பார்த்த தரத்தினை தொடர்ந்து கொடுத்தார்கள். அப்படித்தான் வளர்ந்தார்கள்.

2. நாங்கள் ஏழை எளிய மக்களின் நல்வாழ்வுக்காக நடத்துகிறோம் என்று எந்த கொள்கை பிரகடனத்தை எந்த இடத்திலும் சொல்வதும் இல்லை. அது அவர்களுக்கு வியாபாரம். வியாபாரத்தில் லாபம் தான் முக்கியம். அந்தந்த சமயங்களில் எவர் ஆட்சிக்கு வருகின்றார்களோ அவர்களை அண்டிப் பிழைத்து தங்களுக்குத் தேவையான காரியத்தைச் சாதித்துக் கொள்கின்றனர். ஆட்சியில் இருப்பவர்களும் தாங்கள் வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு அவர்களுக்குத் தேவையானதைச் செய்து கொடுக்கின்றனர். இந்த இடத்தில் இருவருக்கும் உண்டான பரஸ்பரம் புரிதல் என்பது கொள்கை அல்ல. பணம் தான் என்பதனை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

3. அவாள்கள் நடத்தும் நிறுவனங்களில் முழுமையாக வணிகரீதியாகச் செயல்படுபவர்கள் என்று சொல்லிவிட முடியாது. அறக்கட்டளை வழியாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். லாபம் வந்தாலும் அதனை மீண்டும் மீண்டும் வெளியே எடுக்காமல் தரம் குறித்து விசயங்களுக்குத் தொடர்ந்து செலவளித்துக் கொண்டிருப்பவர்களும் உண்டு.

4. தொடக்கம் முதல் இப்படித்தான் நடத்தி வருகின்றார்கள். இப்போது கட்சித் தலைகளாகக் காலச் சூழலில் மாறியவர்களும், உருவாகியவர்களும், உருவாக்கப்பட்டவர்களும் இந்தப் பள்ளிக்கூட வாசலில் நின்று காத்திருந்து இடம் கிடைக்காதவர்கள் தான் அதிகம்.

5. இன்று கல்வித்தந்தையர்களாக மாறியவர்கள் பத்திருப்பது ஆண்டுகளுக்கு முன் தங்கள் குழந்தைகளுக்காக அவர்களின் வாசலில் போய் நின்று கெஞ்சியவர்கள். அவர்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் தான். ஆனால் இன்று பொருளாதார , அந்தஸ்து , அதிகார ரீதியாக அவர்களை விட மேம்பட்ட இடத்திற்கு வந்தடைந்துள்ளார்கள். ஆனால் அவாள்கள் நடத்தும் கல்விக்கூடங்கள் அன்று போல் இன்றும் உள்ளது. அவர்கள் தரம் என்று சொல்வதை இன்னமும், இன்றும் நம்ப பெரிய கூட்டமே காத்துக் கொண்டு இருக்கின்றது. விண்ணப்பம் வாங்க அதிகாலையில் இடம்பிடிக்கப் பெரிய கூட்டமே அதிகாலையில் தெருவில் காத்துக் கொண்டு இருக்கின்றது. ஏன்?

6. இவர்களுக்குச் சமூகநீதி, சம உரிமை, ஒடுக்கப்பட்டோர் நலவாழ்வு, அவர்களின் முன்னேற்றம், பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை ஒழித்தல், தமிழ்மொழி வளர்ச்சி, பிற்போக்குத் தனங்களை ஒழித்துக் கட்டல் போன்ற ஏராளமான அஜண்டா வைத்திருப்பவர்களுக்கு தாங்கள் நடத்தும் கல்விக்கூடங்கள் வழியாக இதனை எளிதாக நிறைவேற்றலாமே? என்பது தான் முக்கியமான கேள்வியாக இங்கே வைக்கப்படுகின்றது.

அவர்கள் தரம் என்ற பெயரில் மக்களைப் பணம் இருப்பவன், இல்லாதவன் என்று பிரிக்கின்றான். இன்று தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வட்டாட்சியர் பையன் கூட பணம் இருந்தால் அவர்கள் நடத்தும் பள்ளியில் சேர்ந்து விடலாம். ஆனால் நீங்கள் பணத்தையும் வாங்கிக் கொண்டு பொட்டல்காட்டில் கட்டிய கல்விக்கூடங்களை வைத்துக் கொண்டு, வாங்கிய பணத்திற்கு மாணவர்களுக்குத் தேவைப்படுகின்ற தரத்தினை வழங்காமல் அரசியலைப் போலவே இங்கும் கொள்ளையடிப்பதைத் தான் முழு நேரத் தொழிலாகக் கொண்டிருப்பதை எதிர்க்கின்றோம்.

(சென்ற ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ள தேர்வு முடிவில் தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் பாதிக்குப் பாதி தேர்ச்சியடையவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதில் குறிப்பிடத்தக்க செய்தி ஒன்று உள்ளது. ஒரு பாடத்தில் அதாவது பொறியியல் படிப்பில் உள்ள கணக்குப் பாடத்தில் தான் முக்கால்வாசி மாணவர்கள் தேர்ச்சியடையவில்லை. இது அந்தந்த கல்லூரியில் உள்ள ஆசிரியர்களுக்குப் பாடம் நடத்தத் தெரியவில்லையா? அல்லது கணக்குப் பாடமே என்னவென்று தெரியாமல் இது போன்ற கல்லூரிக்கு வந்த மாணவர்களின் தவறா?)

நீங்கள் இது குறித்து ஏன் இப்படி நடந்தது என்று பேசிப் பாருங்கள். அவர்கள் சொல்லும் பதில் இப்படி இருக்கக்கூடும்.

ஏன் பொறியியல் கல்லூரிகளில் தேர்வு வைக்கின்றார்கள்? தேர்வின் மூலமாகத்தான் நல்ல பொறியாளர்கள் கிடைப்பார்களா? இந்த தேர்ச்சி முறையே தவறு? என்று முடிப்பார்கள்.

விழித்துக்கொள்வோரெல்லாம் பிழைத்துக் கொள்வார்.

தொடர்புடைய பதிவுகள்


கலைஞரின் கொள்கை வேறு. அரசியல் வேறு

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தரமற்ற பொறியியல் கல்லூரிகளின் பட்டியல்

சுப வீரபாண்டியன்

ப சிதம்பரம் குடும்பத்தின் சொத்துப் பட்டியல் முதல் பாகம்

பாஜக எதிர்ப்பு போராளிக்குழு சங்கம்

சசிகலா மற்றும் டிடிவி தினகரன் அரசியல் பார்வை

கடவுச்சீட்டு துறையில் நடந்துள்ள முக்கிய மாற்றங்கள்

அதிமுக அமைச்சர் வேலுமணி



Wednesday, July 03, 2019

திமுக கல்வித்தந்தையர்கள்?



சமீபத்தில் மத்திய அரசாங்கம் வெளியிட்ட கல்வி வரைவு திட்டத்தில் மும்மொழி கல்விக் கொள்கையை வெளியிட்டது.  எப்போதும் போலத் தமிழகத்தில் மிகப் பெரிய எதிர்ப்பை சந்தித்தது.  ஹிந்தி புறவாசல் மட்டுமல்ல.  எந்த வாசல் வழியாகவும் தமிழகத்தின் உள்ளே வரக்கூடாது என்பதனை இங்குள்ள கட்சிகள் எதிர்த்தனர்.  குறிப்பாகத் திராவிடக் கட்சியினர் இந்த விசயத்தில் ஆர்வம் கட்டினர்.

இதன் தொடர்ச்சியாக பாஜகவின் ஹெச் ராஜா ஒரு அறிக்கையை வெளியிட்டார்.  அத்துடன் சில ஆதாரங்களையும் உடன் வெளியிட்டார். 

சென்னை மற்றும் தமிழகம் எங்கும்  திமுகவினருக்குச் சொந்தமான கல்விக் கூடங்களின் பட்டியலை வெளியிட்டார்.  

அங்குச் சொல்லிக் கொடுக்கப்படும் ஹிந்தி மற்றும் மற்ற மொழிகள் குறித்து காரசாரமாகப் பேட்டியளித்தார். ஏன் இவர்கள் பள்ளியில் மட்டும் ஹிந்தியை அனுமதிக்கின்றார்கள்.  அரசுப் பள்ளியில் அனுமதிப்பதில்லையே என்று கூடுதலாகக் கேட்டு இருந்தார்.

+++++++


இது நிச்சயம் பாகம் 1 ஆக இருக்கும். இன்னும் பல பாகங்கள் உள்ளது.

அரசியல்வாதிகள் தொழில் நடத்துவது தவறில்லை. அவர்கள் தங்கள் கடுமையான உழைப்பின் மூலமே தங்களுக்கு உரிய இடத்தை அடைந்துள்ளார்கள் என்பதனையும் நான் நம்புகிறேன். அதனை தக்க வைத்துக் கொள்ள மற்றவர்கள் போலவே அனுதினமும் போராடிக் கொண்டு இருக்கின்றார்கள் என்பதனையும் உறுதியாக நம்புகிறேன்.

நான் கேட்க விரும்பும் கேள்விகள் எளிமையானது. எங்களுக்கு எந்தக் கொள்கையும் இல்லை. எல்லாவற்றையும் போல இதுவொரு வியாபாரம். வியாபாரிகளுக்கு லாபம் தான் முக்கியம் என்றால் எந்தப் பிரச்சனையும் இல்லை. யாரும் எந்தக் கேள்வியும் கேட்க உரிமையும் இல்லை.


ஆனால் ஒரு முகம் வியாபாரியாகவும் மறுமுகம் இது பெரியார் மண். இங்கே எவ்விதமான பிற்போக்குத்தனங்களையும் அனுமதிக்க மாட்டோம் என்று கொள்கையோடு வாழும் மகா பெரியவர்களிடம் மட்டும் என்னிடம் கேட்க கேள்விகள் உள்ளது.


யாருக்காவது பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.

1. பகுத்தறிவு கொள்கை என்று கச்சைகட்டி சலங்கை கட்டி ஆடும் பெரியவர்கள் தாங்கள் நடத்தும் பள்ளியில் அட்மிசன் விஜயதசமியில் தொடங்குகின்றது என்று அறிவிப்பு வெளியிடுகின்றார்களே? ஏன்?


2. எத்தனை பள்ளி்களில் பெரியார் படங்களை மாட்டிவைத்து உள்ளார்கள். பெரியார் பிறந்த தினத்தை எத்தனை பள்ளி்ளில் முக்கிய விழாவாக கொண்டாடுகின்றார்களா?


3. தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு இது போன்ற பள்ளிகளில் எத்தனை சதவிகிதம் ஒதுக்கி வருடந்தோறும் அவர்களின் வாழ்க்கையில் விளக்கெற்றி வைக்கின்றார்கள்?

4. தங்கள் கட்சி சார்ந்த பணம் இல்லாத தொண்டர்களின் குடும்பத்திற்கு எத்தனை பள்ளிகள் இலவச படிப்பு படிக்க அனுமதி வழங்குகின்றார்கள்?


5. ஒவ்வொரு பள்ளியிலும் ஆர்எஸ்எஸ் ஊடுருவிகிறது? கூட்டம் நடத்துகிறது? ஷாகா நடத்துகின்றது? என்று குற்றச்சாட்டு சொல்பவர்கள் ஏன் அவரவர் பள்ளியில் திராவிடம் 1 2 3 4 5 போன்ற கூட்டங்கள் நடத்தி திராவிடத்தின் அருமை பெருமைகளை மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து இருந்தால் கடந்த பத்து வருடங்களில் கோடிக்கணக்கான மாணவர்களிடம் புத்துணர்ச்சி உருவாகியிருக்குமே? ஏன் அது நடப்பதில்லை?

6. அரசாங்கம் நடத்தும் கல்வித்துறை என்பது தற்போது கொள்ளையடிப்பது பாதி. கொஞ்சூண்டு கவனிப்பது மீதி என்று தான் உள்ளது. ஆனால் தற்போது அரசாங்கத்திற்குச் சமமாக அனைத்து கட்சிகார்களுக்கும் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் உள்ளது. இவர்கள் கட்சி ரீதியாக எதிர்முனையில் இருந்தாலும் மொத்தத்தில் அண்ணா கொள்கை, பெரியார் கொள்கை என்பதில் தானே வந்து முடிக்கின்றார்கள். அப்படியென்றால் இவர்கள் செய்ய வேண்டிய கடமைகள் ஒன்றல்லவா? செய்ய வேண்டியது தானே?

பின்குறிப்பு

1. தரமற்ற பொறியியல் கல்லூரிகள் என்று அண்ணா பல்கலைக்கழகம் காறித் துப்பிய பட்டியலைப்பற்றி எந்த அரசியல்வாதிகளும் இங்கே பேச மாட்டார்கள்?

2. மத்திய அரசாங்கம் சிறப்புத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்திலும் கல்வி சார்ந்த செயல்பாடுகள் நடந்து கொண்டு வருகின்றது.  அதில் பாதிக்கும் மேலே இங்குள்ளவர்கள் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக எவற்றையும் தமிழகத்தின் உள்ளே அனுமதிப்பதே இல்லை.  காரணம் தமிழர்கள் தமிழ் மொழியை மறந்து விடுவார்களாம்?

3. இப்படி ஒரு திட்டம் செயல்பட்டுக் கொண்டிருப்பது (பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் இடங்களில்) தமிழகத்தில் எந்தப் பத்திரிக்கையிலும் நான் இதுவரையிலும் பார்க்கவில்லை. தமிழகத்தில் ஐந்து இடங்களில் இந்தப் பள்ளிக்கூடம் மத்திய அரசு ஆதரவுடன் நடந்து வருகின்றது.

Eklavya Model Residential Schools

http://vikaspedia.in/…/sc…/eklavya-model-residential-schools

https://tribal.nic.in/DivisionsFiles/sg/ListEMRS060418.pdf

Monday, July 01, 2019

உயர்ந்த மனிதர்கள் 2


வாழும் ஊருக்கும் வாழ்ந்த ஊருக்கும் இடையே ஐந்து மாவட்டங்கள் இருப்பதால் எல்லா இடங்களில் நண்பர்கள், உறவினர்கள், உடன்பிறந்தோர் எனக் கலவையாக வாழ்ந்து வருவதால் ஒவ்வொருமுறையும் சமூகத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளைப் பற்றி இவர்களின் பார்வை எப்படி உள்ளது? என்பதனை அவ்வப்போது அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதுண்டு.

குறிப்பாகத் தொலைக்காட்சிகளில் வரும் விவாத நிகழ்ச்சிகளை எத்தனை பேர்கள் பார்க்கின்றார்கள்? என்று கேட்ட போது பூஜ்யம் என்று தான் வந்தது. என் நெருக்கமான நண்பர் ஒருவர் தொடர்ந்து பார்க்கின்றார் என்பதனை அறிந்தேன். வேறு யார் தான் இந்த நிகழ்ச்சிகளைப் பார்க்கின்றார்கள்? அந்தந்த கட்சியைச் சேர்ந்தவர்கள், அபிமானிகள் என்று வேண்டுமானால் இவற்றைப் பார்ப்பார்கள் போல என்று நினைத்துக் கொள்வதுண்டு.

சேனல் மாற்றும் போது இவர்களின் உரையாடலைக் கவனித்ததுண்டு. முகத்திற்குப் பொருந்தாத ஒப்பனைகளும் , தெருவில் இறங்கிப் பேசினால் காறித்துப்பி விடுவார்கள் என்ற பயமும் இல்லாமல் பேசும் வாய்ச் சொல் வீரர்களைப் பார்த்து வியந்து போயுள்ளேன்.

உன்னையெல்லாம் தெரு நாய் கூட சிந்தாது என்பார்களே அப்படிப்பட்ட பலரையும் இது போன்ற விவாதங்களில் பார்த்துள்ளேன்.

இதற்கெல்லாம் மேலாக அவர்களின் காட்டுக்கத்தல்கள் ஏர்வாடியில் இருப்பவர்களை நினைவுக்குக் கொண்டு வரும்.

இந்த வருடத்தில் தமிழில் அறிந்த முக்கிய வார்த்தை சமூக ஆர்வலர். எந்தச் சமூகத்தில் என்னவிதமான ஆர்வத்தைக் காட்டினார் என்று எந்தத் தொலைக்காட்சியும் சொன்னதே இல்லை.

கேர் ஆஃப் ப்ளாட்பார்ம் என்கிற ரீதியில் இருந்தவர்கள், வாழ்ந்தவர்கள், வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தொடங்கி முன்னாள் கட்டப்பஞ்சயத்து பார்ட்டிகள் வரைக்கும் மொத்தமாக ஏதொவொரு அக்மார்க் முத்திரையுடன் உளறிக் கொண்டிருப்பார்கள். கலந்து கொள்ளும் ஆண்களுக்கு அரங்கத்தின் உள்ளே பவுடர் அடித்து தலைவாரிக் கொள்ள வசதியிருக்கும். ஆனால் பெண்கள் நிச்சயம் மூன்று மணி நேரம் பியூட்டி பார்லர் சென்று வந்தவர்களாகத் தான் இருப்பார்கள்.

குறிப்பிட்ட சேனலில் நிகழ்ச்சி நடத்துபவர்களின் தயவோ, நிர்வாக அனுக்கிரகமோ அல்லது வேறு ஏதோவொன்றின் நிர்ப்பந்தம் மூலம் பாவ விமோசனம் பெற்று இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கும் இவர்களின் முகங்கள் காற்றின் அலைக்கற்றையில் அலைபாய்ந்தபடி தினமும் நம்மை நோக்கி வந்து கொண்டேயிருக்கின்றது. 

உடல் நலம் ஆரோக்கியத்துடன் வாழ்பவர்கள் கூட இது போன்ற நிகழ்ச்சியினை ஒரு வாரம் தொடர்ந்து  பார்த்தால் போதுமானது. உலகில் உள்ள எல்லாவிதமான நோய்களும் உள்ளுக்குள் வந்து சேர்ந்துவிடும்.

பலமுறை மகள்களின் நிறுத்தமுடியாத சண்டைகளை நிறுத்தும் பொருட்டு இது போன்ற விவாத நிகழ்ச்சியின் சப்தத்தை மிக அதிகமாக வைத்து அவர்களை வெறுப்பேத்தி அவர்களின் சண்டைகளை முடிவுக்குக் கொண்டு வருவதுண்டு. பெட்டிக்குள்ளும் சண்டை. வெளியேயும் சண்டை. முடிவுக்கு வந்தவுடன் சேனலை மாற்றிவிடுவதுண்டு.

ஆனாலும் குறிப்பிட்ட சிலர் பேசும் போது மட்டும் அவர்களின் பேச்சை முழுமையாகக் கேட்பதுண்டு.

அதில் ஒருவர் இந்த வருடம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியவர் ஜெயரஞ்சன்.

முகத்திற்கு, வார்த்தைகளுக்கு அலங்காரம் தேவைப்படாமல் தான் நினைத்ததை அப்படியே எடுத்து வைத்தார். கட்சி ஆதரவு எதிர்ப்பு என்கிற நிலைகளைத் தாண்டி பல இடங்களில் வியப்பூட்டினார். பொருளாதாரம் சார்ந்த கட்டுரைகள் என்றாலே புள்ளிவிவரங்கள் என்ற பெயரில் வாசிக்கும் நம் கண்களுக்குள் பூச்சி பறப்பது போலவே இருக்கும். 

ஆனால் வரலாற்றுச் சுவராசியத்தை தன் எளிமையான வார்த்தைகளைக் கொண்டு பலருக்கும் கடத்தியவர். வல்லுநர் என்ற பெயர் கொண்டவர்களெல்லாம் வல்லூறாக மாறிக் கொத்தி கிழித்துக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவனுக்குப் பாடம் நடத்துவது போல அழகாகக் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். 

கேள்வி கேட்பவர் எப்படி மாற்றிக் கேட்டாலும் ஆமா இப்படித்தான்? அதற்கென்ன இப்போ? என்று தெனாவெட்டாக உண்மையை உடைத்துப் பேசினார். நிர்ப்பந்தம் இல்லை. நிச்சயமாக பக்கச் சார்ப்பு இல்லை என்பதனை உறுதியாகச் சொல்ல முடியாவிட்டாலும் சொல்ல வந்த கருத்துக்களை அப்படியே எடுத்துரைத்தார்.

மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் எவரின் ஆட்சியில் என்னவிதமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது? அதன் மூலம் சமூகம் அடைந்த பலன் என்ன? என்பதனை 360 டிகிரி கோணத்தில் அனைத்துப் பக்கங்களையும் எடுத்து வைத்தார். நாம் இதையெல்லாம் வாசித்தது இல்லையே? என்கிற ரீதியில் அவரின் ஒவ்வொரு பேச்சும் இருந்தது.

ஒரு தொழில் நகரத்தின் உள்ளேயும் வெளியேயும் உள்ள அனைத்து விதமான வெளிச்சம் மற்றும் இருட்டு சமாச்சாரங்களை அறிந்தவன் என்ற முறையில் அரசாங்கம் கொண்டு வருகின்ற திட்டங்கள், சட்டங்கள் எந்த அளவிற்குப் பாதிப்பை உருவாக்குகின்றது. எந்த அளவுக்குப் பலருக்கும் பாதுகாப்பாக இருக்கின்றது என்கிற ரீதியில் இந்த முறை மத்திய அரசாங்கம் கொண்டு வந்துள்ள பல திட்டங்களை கவனித்துக் கொண்டு வருகின்றேன்.

நம்மவர்களுக்கு அரசியல் என்பது முகம் சார்ந்தது.

கொள்கை சார்ந்தது என்று வெளியே சொல்லிக் கொண்டாலும் வெறுப்பை விதைப்பதும் விருப்பத்தைத் தெரியப்படுத்துவதும் இதனை ஒட்டியே தான் வருகின்றது.

குறிப்பிட்ட கட்சி ஆதரவாளர் என்றால் போதும் அவர் கட்சியின் நிலைப்பாடு அவரைப் பொறுத்தவரையிலும் ஏற்புடையதாக இல்லாமல் போனால் கட்சித் தலைமை அறிவித்து விட்டால் திருடனுக்கு தேள் கொட்டியது போல இருந்து விடுவார்கள்.

இந்த வருடத்தில் சுட்டிக்காட்டப்பட வேண்டிய முக்கிய உதாரணம் வைகோ. திமுகவில் உள்ள நண்பர்கள் தொடர்ந்த இவரைப்பற்றி எழுதி வந்தார்கள். .

ஆனால் இன்று? திமுக வில் இணைந்து ஸ்டாலினை முதல்வராக்கப் போகின்றேன் என்று சூளுரைத்துள்ளார்.

இன்றைய சூழலில் இந்தியா முழுக்க இப்படித்தான் உள்ளது.

இது போன்ற சூழலில் தான் ஜெயரஞ்சன் அவர்கள் எனக்கு மிக முக்கிய மனிதராகத் தெரிகின்றார்.

YOU TUBE LINK

சென்ற மாத பதிவுகள்

கலைஞரின் கொள்கை வேறு. அரசியல் வேறு

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தரமற்ற பொறியியல் கல்லூரிகளின் பட்டியல்

சுப வீரபாண்டியன்

ப சிதம்பரம் குடும்பத்தின் சொத்துப் பட்டியல் முதல் பாகம்

பாஜக எதிர்ப்பு போராளிக்குழு சங்கம்

சசிகலா மற்றும் டிடிவி தினகரன் அரசியல் பார்வை

கடவுச்சீட்டு துறையில் நடந்துள்ள முக்கிய மாற்றங்கள்

அதிமுக அமைச்சர் வேலுமணி