Saturday, June 22, 2019

சசிகலா Vs டிடிவி தினகரன்

முப்பது வருடங்களுக்கு மேலாகத் தமிழகத்தை மறைமுகமாக ஆண்டு சசிகலா ஏன் முழுமையாகத் தோற்றார்? என்பதற்கும், மிஸ்டர் கூல் என்று அழைக்கப்படும் மக்கள் செல்வன் வாயால் வடை சுட்டும் ஏன் பூஜ்யத்தைப் பெற்றார் என்பதற்கும் நீங்கள் விடை தேடிப் போனால் உங்களுக்குக் கிடைக்கும் உண்மை வியப்பாக இருக்கும்?

அதிகாரத்தின் மேலடுக்கிலிருந்து கொண்டு வருடந்தோறும் தேசியக் கொடி ஏற்ற வாய்ப்பு பெற்றவர்களுக்கும் , அதன் உள்ளே ஒழிந்து கொண்டு சுவைப்பவர்களுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. மேலே இருப்பவர்களுக்கு அதிகாரிகள் உதவுவார்கள். உள்ளே இருப்பவர்களுக்கு அடியாட்கள் தான் உதவுவார்கள்.

இரண்டும் வெவ்வேறு. முன்னது சட்டப்பூர்வமாகத் தெரியும். பின்னது சிக்கினால் சின்னாபின்னம் தான். அப்படித்தான் சசிகலா சிக்கி இன்று கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கின்றார்.

இதை ஏன் இங்கே சொல்ல வேண்டும்?

எடப்பாடி முதல்வராக வருவதற்கு அவர் நேரம் காலம் இறைத்த பணம் எந்த அளவுக்கு உதவியதோ அந்த அளவுக்கு அணை போட்டுப் பாதுகாத்துச் சிந்தாமல் சிதறாமல் தண்ணீரைக் கடைமடை வரைக்கும் பாய்ச்ச உதவியவர்களில் முக்கியமானவர்கள் தங்கமணி, வேலுமணி கோஷ்டிகள்.

ஓபிஎஸ் எப்படி உதயகுமாரை நம்புகிறாரோ அவரை விட பத்து மடங்கு இருவரையும் எடப்பாடி நம்புகிறார். காரணம் சாதி பாசம் ஒரு புறம். மற்றொருபுறம் திருடனுக்குத் திருடன் தான் நண்பனாக இருக்க முடியும் என்ற பொதுவிதியும் இங்கே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கஜா புயல் தாக்கிய போது வைகோ முதல் பலரும் அமைச்சர் உதயகுமார் செயல்பாடுகளைப் புகழ்ந்து தள்ளினர். திமுகவில் கூட பலரும் பாராட்டிப் பேசினார். அவரும் இரண்டு மூன்று நாட்களாகக் கண் துஞ்சாது அதிகாரிகளுடன் சேர்ந்து களப்பணி ஆற்றினார்.

ஆனால் இப்போது தமிழ்நாட்டின் தலைநகரே காலியாகிவிடும் போல என்று தண்ணீர் பஞ்சம் குறித்து பலரும் குய்யோ முய்யோ என்று கத்தினாலும் வேலுமணி அசைந்து கொடுக்கத் தயாரில்லை. ச்சும்மா தமாஷ் பண்ணாதீர்கள். அதெல்லாம் டூப்பு. எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள்..... என்று கூசாமல் அடித்து விடுகின்றார்.

ஏன் இப்படி?

காரணம் மேலே சொன்ன சசிகலா பாணி தான்.

சசிகலா கடைசிவரைக்கும் கணக்குப் பிள்ளையாகவே இருந்தார். வாங்குவது, மிரட்டுவது, சேர்ப்பது, பாதுகாப்பது, மாற்றுவது என்று தொடர்ந்து ஒவ்வொருவரின் கண்ணில் விரல் விட்டு ஆட்டிக் கொண்டிருந்தார். காலம் மாறியது. பெங்களூர் கொண்டு போய்ச் சேர்த்தது.

அதிகாரம் என்றால் என்ன? அதன் நுணுக்கம் எவ்வாறு எங்கங்கு பிரதிபலிக்கும் என்பதனை உணராத அபலையாக இன்று சின்ன அறைக்குள் காரம் போன கடுகு போல வாழ்கிறார். ஆனால் அவர் பார்த்து வளர்ந்த பிள்ளைகள், வளர்த்த பிள்ளைகள் அனைத்தும் பல பதினாறு அடிகள் பாய்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

மக்கள் பரபரத்துக் கொண்டிருந்தாலும் எங்கே அடிப்பது? எதன் மூலம் அடிப்பது? யார் மூலம் அடிப்பது? என்று மூன்று கொள்கைக்குள் சுற்றிச் சுற்றி வருகின்றார்கள். அவர்கள் தங்களுக்குத் தகுந்தாற் போல உள்ள அதிகாரிகளை மட்டும் தான் அருகே வைத்துள்ளார்கள். அவர்களும் கூச்சப்படாமல் தண்ணீர் பிரச்சனை குறித்து வாய் திறக்காமல் இருக்கின்றார்கள். மீறிப் போனால் உலகப் பொதுமுறை ஒன்று இருக்கிறதே. அதைச் சொல்லிவிடலாமே?

இதெல்லாம் திமுக காலத்தில் நடந்த பிரச்சனை. நாங்கள் என்ன செய்ய முடியும்?

வேலுமணி குறித்து அவரின் ஊழல் திருவிளையாடல் குறித்து இதுவரையிலும் எத்தனையே இயக்கங்கள், நபர்கள் காது கிழியக் கத்திப் பார்த்து விட்டார்கள். ம்கும்... பத்திரிக்கைகளும் ஊடகங்களும் அவர்களது தனி தர்மத்தை விடாது கடைபிடித்து வருகின்றார்கள்.

ஒரு சின்ன உதாரணத்தைப் பார்த்து விடுவோம்.

திமுக அப்பாவு கதறிய கதறல் இது. அவர் ஆர்டி மூலமாகப் பெற்ற தகவல் இது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதாகத் தெரியவில்லை. காரணம் என்ன? கிடைக்கும் தொகையைப் பங்கு வைத்தால் முழுமையாக வந்து சேராது என்ற ஒரே காரணம் மட்டுமே? அது எப்படி செயலாக்கம் பெறுகின்றது என்பதனை இந்த சிறிய உதாரணம் நமக்குப் புரிய வைக்கும்.
தெருவிளக்கு அனைத்தும் எல்இடி பல்புகள் மாற்றப்பட வேண்டும். மின்சார சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும். எர்த் ஒயர்கள் இல்லாத இடத்தில் அதையும் சரி செய்ய வேண்டும்.
செய்தார்களா?

ஆமாம், எப்படிச் செய்தார்கள்?

ஒரு எல்இடி பல்பு விலை (20 வாட்ஸ் திறன் கொண்ட) 3,550 ரூபாய். ஆனால் இவர்கள் வாங்கிய விலை 14,996 ரூபாய். ஒரு கம்பத்திற்கு எர்த் ஒயர் கொடுக்க ரூபாய் 150 முதல் 250 வரை தான் செலவாகும். ஆனால் இவர்கள் கணக்கு காட்டியுள்ளது 750 ரூபாய். இந்த திட்டத்திற்கு அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட தொகை 870 கோடி. செலவளித்ததாக காட்டப்பட்ட தொகை 1800 கோடி. ஆயிரம் கோடிக்கும் மேல் மேலிருந்து கீழ் வரை ஏப்பம் விட்டு இருக்கின்றார்கள்.

அதிகாரம் என்றால் என்னவென்றே தெரியாத அதன் சுவையை மட்டுமே நக்கித்தின்ற சசிகலா போலவே இன்றைய அதிமுக அமைச்சர்களை மோடி தண்டிப்பார் என்றால் நீங்கள் நடப்பு அரசியல் புரியாதவர் என்று அர்த்தம்.

அதிகாரம் என்பது எந்த இடத்தில் எப்போது தேவைப்படுமோ அந்த இடத்தில் சரியாகப் பயன்படுத்துவார்கள்.

அதுவரையிலும்?

ஊடகங்கள் விவாத மேடையில் மக்களின் நலனைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்கள். சென்னை மக்கள் துடைக்க காகிதத்தைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுவார்கள்.

12 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

ஒரு முக்கியமான ஒப்பீட்டை விட்டுவிட்டீர்களே ஜோதிஜி! அதிமுகவில் சசிகலாவோ இப்போது தங்கமணி வேலுமணிகளோ சாப்பிடுவதற்கு முன்னுதாரணமாக இருந்த திமுக! ஆட்சியில் இல்லாத காலத்தில் கூட எப்படி அதிமுகவினரோடு கூட்டுச் சேர்ந்து காசுபார்ப்பதென்ற கலையில் கில்லாடி திமுகவை விட்டு விட்டு அரசியல் பேசிவிட முடியுமா?

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அரசியலில் இதெல்லாம் ஏற்றுக்கொள்கின்றார்களே? பொதுமக்களும் நாளடைவில் அடுத்தடுத்து பிரச்னை வரும்போது மறந்துவிடுகின்றோமே.

கரந்தை ஜெயக்குமார் said...

முனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்களின் கருத்தை வழிமொழிகின்றேன்

KILLERGEE Devakottai said...

//திருடனுக்குத் திருடன் தான் நண்பனாக இருக்க முடியும் என்ற பொதுவிதியும் இங்கே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்//

செருப்படி வாசகம் நண்பரே...
"எது நடந்தாலும்" ஊடகங்களுக்கு மட்டும் நல்ல தீனியே...

நம்பள்கி said...

நல்ல இடுகை; ஆனால் முழுமையானது அல்ல! பல உண்மைகள் எழுதப்படாமலேயே உள்ளது..அதாவது ஊடங்கங்கள், மக்கள், இணையம் இப்படி எல்லாமே மௌனியாக இருந்ததில் காரணம் என்ன? உங்களுக்கு தெறியாதது இல்லை. பின் எப்படி மறந்தீர்கள்?

சசிகலா ஒரு முகமூடி என்பதை விட...she was a punch bag. ஊழல் செய்தது ராணி; ஜெயிலில் வாடுவது பினாமி! கொஞ்சம் வழிந்த தேனை நக்கியிருக்கிறார். ராணியின் ஊழலுக்கென்றே செய்யப்பட்ட "கவசம் சசிகலா." இது சு. சாமி முதல் சோ வரை அந்த கும்பல் ஒன்று கூடி எல்லாமே சசியை மட்டுமே சாடினர். "அதற்கு பொது மக்களும் விலை போய்விட்டனர்."

உங்கள் இடுகையில் மக்கள், ஊடகம், இணையம் எல்லாம் இப்படி பேசி பேசி திமுகவை திட்டி திட்டி வாய்தா ராணியை மறைத்து விட்டா மாதிரி...உதாரணமாக...

// இதெல்லாம் திமுக காலத்தில் நடந்த பிரச்சனை. நாங்கள் என்ன செய்ய முடியும்///

நீங்களும் உங்கள் இடுகையில் வாய்தா ராணியை சுலபமாக விட்டுவிட்டார்கள். இரும்பு மனுஷி என்று சொல்லப்படுபவர் எல்லா அதிகாரமையத்தையம்---name it; she did it-- ஆட்டு ஆட்டுஎன்று ஆட்டு வித்தார்...கூடவே தன் ஊழலை மறைக்க சசிகலாவையும் ஆட்டுவித்தார் என்பதே ஊரறிந்த உண்மை---இந்த உண்மை உங்களுக்கு தெரியாதது ஆச்சரியமே ஜோதி!

ஜோதிஜி said...

நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்தையும் தொடர் பதிவாக ஏ1 கிரிமினல் குறித்து ஏற்கனவே எழுதி விட்டேன். நீதிமன்ற தீர்ப்பு முதல் அப்போது நடந்த நிகழ்வுகள் வரைக்கும் பதிவு செய்து உள்ளேன். இந்த இடுகை இப்போது உள்ள அமைச்சர்களைப் பற்றி மட்டும் பேசுகின்றது. குறிப்பாக தண்ணீர் பிரச்சனை சென்னையில் இருந்தாலும் வேலுமணி என்ன செய்கின்றார் என்பது பற்றி. அவர் துறை சார்ந்த ஊழல் குறித்து.

நன்றி

ஜோதிஜி said...

தீனி என்பது சம்பாரிப்பது ஒரு பக்கம். மற்ற சில விசயங்களையும் கவனத்தில் கொண்டு செயல்படுகின்றார்கள். ஊடகத்துறையில் இருப்பவர்களுடன் பேசிப் பாருங்க. நாம் பார்ப்பது படிப்பது செய்திகளே அல்ல. வடிகட்டி வருவது மட்டுமே.

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

நீங்க சொல்வது உண்மை. மற்றொருபுறம் மக்கள் இதனை மனதளவில் ஏற்றுக் கொண்டு விட்டார்கள். பழகி விட்டார்கள்.

ஜோதிஜி said...

அவர்கள் ஆயிரம் லட்சம் என்பதோடு நின்றார்கள். இவர்கள் கோடியில் வந்து நிறுத்தி உள்ளார்கள்.

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு அண்ணா.

Anonymous said...

ஆமாம் அவர்கள் லட்சம் கோடி இவர்கள் இப்பதான் கோடிக்கு வந்துருக்காங்க