Sunday, December 09, 2012

காரைக்குடி உணவகம் - அளவில்லா சாப்பாடு



எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடனும். 
எப்பொழுது வேண்டுமானலும் சாப்பிடனும். 
எல்லாவ்ற்றையும் சாப்பிடனும். 

ஆனால் ஆரோக்கியத்தில் குறையேதும் வந்து விடக்கூடாது.

இதுதானே நாம் அனைவருக்கும் இருக்கும் ஆசை?. 

ஆனால் எதார்த்தம் என்பது எல்லா இடங்களிலும் தலைகீழாகத்தானே இருந்து தொலைக்கின்றது.

என் தாத்தா இறந்த போது வயது 84. இரண்டு ஈடு இட்லி சாப்பிட்டு முடித்த பிறகு தான் எதிரே இருப்பவர்களிடம் பேசத் தொடங்குவார்.  அடுத்து வேகம் மட்டுப்படுமே தவிர குறையாது. ஒரு ஈடு என்பது எட்டு என்ற எண்ணிக்கை கொண்டது. சாம்பார் சட்னி போன்ற சமாச்சாரங்கள் என்றால் தூக்கி கடாகி விடுவார். அம்மியில் அரைத்த மிளகாய் துவையல். செக்கில் ஆட்டிய நல்லெண்னெய். கலந்து கொண்டு குழப்பிக் கொண்டு தின்பதைப் பார்ப்பவர்களுக்கு பேதி வந்து விடும். ஆனால் காலையில் அருகே இருந்த ஊரணிக்கரையில் ஏழெட்டு சுற்று வந்து விடுவார்.  மாலையில் 4 கீலோமீட்டர் தொலைவில் உள்ள கோவிலுக்கு தினந்தோறும் சென்று வருவதை பார்த்து இருக்கின்றேன். தூங்கும் போது சொல்லிவிட்டு தான் படுத்தார். காலையில் எழுந்த அவர் உடம்பு இருந்தது. உடம்பில் மூச்சு இல்லை.

அப்பாவுக்கு 60வது வயது முடியும் வரைக்கும் உணவு விசயத்தில் அப்பனுக்கு தப்பாத பிள்ளையாக இருந்தார். அசைவ வெறியர் என்றே அழைகக்லாம். ஆனால் கடைசி காலத்தில் வந்த சர்க்கரை நோயை அவர் பொருட்படுத்தவே இல்லை.

பெரும்பாலும் சர்க்கரை நோயாளிகளை கவனித்துப் பாருங்கள்.  சர்க்கரை நோய் வந்துள்ளது என்று தெரிந்ததும் மருத்துவரிடம் செல்லத் தொடங்குவர். தினந்தோறும் மருத்துவர் சொல்லும் மருந்துக்களையும் எடுத்துக கொள்வர்.  ஆனால் நாளுக்குள் நாள் உடம்பு இளைத்துக் கொண்டேயிருக்கும். குறிப்பிட்ட காலத்திற்குள் ஆளே அடையாளம் தெரியாமல் மாறியிருப்பார்.  

அப்படி என்றால் உண்ட மருத்தின் பலன் தான் என்ன? வைத்திருந்த கட்டுப்பாடுகள் என்ன தந்தது என்றால் மிஞ்சுவது ஒன்றுமே இல்லை. இதற்குப் பினனால் உள்ள மருத்துவ தண்டவாளங்களை புட்டுப்புட்டு வைத்துக் கொண்டிருக்கின்றார் சென்னையில் உள்ள ஒரு இஸ்லாமிய மருத்துவர். மருந்தில்லா மருத்துவம் என்ற பெயரில் சென்னை, கோவை போன்ற இடங்களில் கூட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றார். அதைப் பற்றி அடுத்த வாரம் எழுதுகின்றேன்.

எனக்குத் தெரிந்து அரசியல்வாதி வைகோ ஒருவர் தான் சர்க்கரை நோயை எப்படி கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதையும், உடல்நலத்தையும் எப்படி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதை நடைமுறை சார்ந்த விசயங்களில் சாதிதது காட்டிக் கொண்டிருப்பவர்.  

இதைப் போலத்தான் அப்பாவும் மருத்துவர் கொடுத்தனுப்பும் எந்த மருந்துகளையும் உண்ண மாட்டார். அதுவொரு மூலையில் கிடக்கும்.  காரணம் சாப்பாடு மேல் கைவைத்து விடுவார்கள் என்ற பயம்.  மாரடைப்பில் தான் மரணம் அடைந்தார். எளிதான முறையில் இயல்பாக பேரூந்தில் வந்து கொண்டிருந்த போது தான் இறந்தார்.  ஆனால் கடைசி ஒரு வருடத்தில் தான் நோயின் தாக்கம் அதிகமாக இருந்தது.  உணவு தான் அவரை மனிதனாக சுறுசுறுப்பான இளைஞராக கடைசிவரையிலும் கொண்டு செலுத்தியது. 

20 வயது வரைக்கும் நாம் சாப்பிட்ட சாப்பாட்டின் அளவுக்கும் 40 வயது ஆனதும் மாறிப்போவதற்கான ஒரே காரணம் நமது உழைப்பின் அளவும் தன்மையும் மாறிவிடுவதே. 

கடநத நான்கு வருடங்களாக நான் ஒரே எடை அளவு. அதே தன்மை. குடும்ப நோய்கள் எதுவும் இதுவரையிலும் அண்டவில்லை. எந்த உடற்பயிற்சியும் செய்வதில்லை. பலசமயம் அவசர வேலையின் பொருட்டு அதிகாலை 4 மணிக்கு வெளியே செல்லும் போது  பருத்த உடம்பை தூக்கிக் கொண்டு மூச்சு வாங்கிக் கொண்டு நடைபயிற்சி என்று பலரும் செல்வதை பார்த்துக் கொண்டே செல்வதுண்டு. 

என் கட்டுப்பாடு. என் ஆரோக்கியம். என் விருப்பம்.

கட்டுப்பாடு இருந்தால் வாழ்க்கை. கட்டவிழ்த்து விட்டால் கருமாதி. இதுதான் எளிய தத்துவம்.

ஆனால் நானும் சாப்பாட்டு ராமன் தான்.  

கட்டுப்பாடு என்று எத்தனை வைத்துக் கொண்ட போதிலும் சமயம் கிடைத்தால் விளாசி தள்ளிவிட்டு அப்புறம் அய்யோ அம்மாவென்று தடுமாறுவதுண்டு. இருந்தாலும் என்னை மாற்றிக் கொள்ள எண்ணமில்லை என்பதை விட மனமில்லை என்பது தான் உண்மை. ஆனால் உடம்பில் எதையும் தங்கவிடுவதே இல்லை. 

காலையில் நீங்கள் கழிப்பறை சென்று உட்கார்ந்தவுடன் குறுகிய நேரத்தில் வெளியே வந்து விட முடிந்தால் நீங்க லட்சாதிபதி. அங்கே போய் முக்கல் முனங்கலுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டியிருக்குது என்றால் உடல் மன ஆரோக்கியத்தின் தன்மையை அதிகப்படுத்த வேண்டும் என்று அர்த்தம். 

இரவில் படுத்த அதிகபட்சம் அரைமணி நேரத்திற்குள் ஆழ்ந்த தூக்கம் உங்களை தழுவிக் கொள்கின்றதா?  நீங்க தான் கோடீஸ்வரன். ஆனால் இங்கே பலருக்கும் கனவில் வருபவர்கள் தான் உதவி புரிகின்றார்கள்..

காரணம் உண்பது உறங்குவது இந்த இரண்டுக்குள் தான் நம் அத்தனை பேர்களின் வாழ்க்கையும் இருக்கிறது.

பெரிய நாம் நினைத்தே பார்க்க முடியாத என்று ஏராளமான காரியங்களை மனதில் வைத்திருப்போம். ஆச்சரியமான சாதனைகள் என்று எத்தனை நாம் கடந்து வந்தாலும், கடக்க நினைத்தாலும் அடிப்படையில் இரவு வந்தால் படுத்தவுடன் தூக்கம் வர வேண்டும்.  மூன்று வேளையும் பசியெடுத்தால் தான் சாப்பிட முடியும்.  வயிறு தொடர்ந்து பொருமிக் கொண்டேயிருந்தால் சீக்கிரம் நாலு பேர்கள் நம்மை தூக்கப் போகின்றார்கள் என்று அர்த்தம்.

பல சாதனைகள் செய்து விட்டு தனது உடம்மை வேதனையாக வைத்துக் கொண்டால் என்ன ஆகும்? 

வாழ்க்கை முழுக்க சோதனை தான். 

இஞ்சித்தேன்.

சென்னைக்கு சென்ற போது பலாப்பட்டறை ஷங்கருடன் பேசிக் கொண்டிருந்த போது தான் இந்த இஞ்சித்தேன் அருமையை உணர்ந்து கொண்டேன். அதன் பிறகு வலைதளங்களில் பார்த்த போது தங்கம் பழனி என்பவர் அருமையாக பல விசயங்களை எழுதிக் கொண்டு வருவதையும் பார்க்க முடிந்தது.  பல நண்பர்களுடனும் இது குறித்து பேசி கடைசியாக இஞ்சித் தேன் மூலம் நாலைந்து மாதமாக குடும்பத்தில் பறந்து கொண்டிருந்த காந்தித்தாத்தாவை தற்போது தான் நிறுத்த முடிந்ததுள்ளது.

இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி (சிலர் காய வைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.  ஆனால் இஞ்சியை காய வைத்தால் சுக்கு என்று மாறி அதன் தன்மையும் மாறி விடும் என்றும் சொல்கின்றார்கள்) அதனை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.  இஞ்சியில் கழுவிய தண்ணீர் பதம் சென்றதும் இஞ்சியின் அளவுக்கு மிதக்கும் அளவுக்கு சுத்தமான தேனில் மூன்று நாட்கள் ஊறவைக்க வேண்டும். மூடியுள்ள பாத்திரத்தை வெயிலில் வைத்து விடுங்க. மூன்று நாளில் இஞ்சி தேனை நன்றாக ஊறிஞ்சி விடும். 

காலையில் பல்துலக்கி விட்டு வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி தேனுடன் எடுத்து (தேனும் இஞ்சியும் சேர்ந்து இருக்க வேண்டும்) சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகள்?.

முக்கியமான நோய் எதிர்ப்புசக்தி உருவாகும். எதிரிகளை சமாளிக்க பணத்தைப் போல மனமும் உடலும் உறுதியாகத்தானே இருக்க வேண்டும். 

பருவநிலை மாற்றத்தில் வரும் சளித் தொந்தரவு காணாமல் போய்விடுகின்றது.

எதை வேண்டுமானாலும் உங்கள் வாழ்வில் விரும்பி சேர்த்துக் கொள்ளுங்க. ஆனால் சளியை உடம்பில் சேர்க்கத் தொடங்கினால் சனி பகவான் சிநேகம் பிடிக்க வருகின்றார் என்று அர்த்தம். விரும்பாமலேயே உள்ளே வந்து விடும். பிறகு நீங்களே விரும்பினாலும் வெளியே செல்லாது. 

தேன் இஞ்சி உண்ணும் பழக்கத்தை தினந்தோறும் பயிற்சியில் கொண்டு வரும் போது தான் நன்றாக பசியெடுக்கும். தேனின் மருத்துவ குணங்களை பக்கம் பக்கமாக எழுதலாம். இது நாங்கள் அனுபவத்தில் கண்டு கொண்டிருக்கும் உண்மை. 

அதியமானுக்கு ஔவையார் கொடுத்த நெல்லி

அடுத்து அனைவரும் அன்றாட வாழ்வில் எடுத்துக் கொள்ள வேண்டியது நெல்லி.  இப்போது இதுவும் தேன் நெல்லி என்கிற ரீதியில் வந்து கொண்டிருக்கின்றது. காசைக் கொடுத்து ஏமாறாமல் நாமே முழு நெல்லிக்காய் வாங்கி வந்து நறுக்கி தேனில் ஊறவைத்து சாப்பிடலாம். அல்லது அப்படியே தினந்தோறும் ஒன்றாக பச்சையாக சாப்பிடலாம்.  குழந்தைகளுக்கு சாறாக மாற்றி தினந்தோறும் அரை டம்ளர் கொடுத்து வரலாம்.

இதிலும் முக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தி. இதிலும் கதை கதையாக எழுத வேண்டிய ஏராளமான சமாச்சாரங்கள். இயற்கை மருத்துவம் குறித்து ஏராளமான வலைப்பூக்கள் உள்ளது. தேடிப்பாருங்கள்.

நாம் சாப்பிடும் சாப்பாட்டில் அளவு தேவையில்லை. எதுவும் சாப்பிடலாம். எப்போதும் சாப்பிடலாம். ஆனால் அது உடம்பில் தங்கிவிடக்கூடாது என்பதை கவனத்தில் வைத்திருக்க வேண்டும். சக்தியாக மாற்றப்பட்டு இருக்க வேண்டும்.  பணத்தை வீட்டில் சேர்த்து வைத்தால் வெகுமானம்.

செரிக்காத சமாச்சாரத்தை உடம்பில் சேர்த்து வைத்தால் என்னவாகும் என்பது தெரியும் தானே?  செரித்தால் நல்லது. செரிக்காவிட்டால்? 

வாயை பொத்திக் கொண்டு இருப்பது அதை விட நல்லது.

இது ரெண்டு மட்டும் தான் இன்றைக்கு உள்ள காரைக்குடி உணவத்தின் சாப்பாடு. 

சாப்பாட்டு ராமன்கள் இந்த இரண்டையும் தினந்தோறும் செய்து வந்தாலே  மகிழ்ச்சியாக விரும்பியதை சாப்பிட்டலாம். ஆனால் நிச்சயம் நம்மிடம் உள்ள காந்தி தாத்தா சிரிக்கும் பணம் பையிலிருந்தபடியே நம்மைப் பார்த்து சிரித்துக் கொண்டிருப்பார்.

இன்னும் கொஞ்சம் போடும்மா என்று குழந்தைகள் ஒரு கட்டு கட்டுவதை வேடிக்கை பார்த்தபடியே நாமும் நைஸாக இன்றைக்கு ரொம்ப நல்ல சமைச்சருக்கே என்று  கேட்டு வாங்கி சாப்பிடலாம்.

ஒரு நிறுவனத்தின் முதலாளியின் முக்கிய வேலை என்ன தெரியுமா?

மூன்று வேளையும் தான் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்து மாத்திரைகளை வரிசைப்படி எடுத்துக் கொடுக்க ஒருவரை தனியாக வைத்துள்ளார்.  நிறுவன வேலை பாதி.  இந்த வேலை மீதி.

 எப்பூடி?

அந்த மளிகைச் சீட்டு போலவே இருந்த பட்டியலைப் பார்த்து பயந்தே போய்விட்டேன்.

ஆனால் கடந்த ஒரு வருடமாக அதே நோய்கள், மேலும் மேலும் வீர்யமான மருந்து மாத்திரைகள்.

எங்கே நிம்மதி தான் என்ற வாழ்க்கை தான்.

இயற்கை மருத்துவம் தாமதமாகத்தான் பலன் தரும். ஆனால் நிரந்தரமாக நோயிலிருந்து விடுபட்டு விடலாம். அண்டை வீட்டுக்காரர் நம்மைப் பார்த்து பொறாமைப்பட ஒனிடா டிவி தேவையில்லை. நெல்லியும் இஞ்சியுமே போதுமானது. 

அசைவ உணவு பிரியர்கள் மட்டும் இந்த தலைப்பை படிக்கவும்.


Photo : 4Tamil Media.Com

Thursday, December 06, 2012

குழந்தைகள் - புரிதலின் தொடக்கம் நேசிப்பு


ஒவ்வொரு முறையும் திருவண்ணாமலை செல்லும் போதும், சென்ற வந்த பிறகும் அந்த ஊரைப்பற்றி, அங்கு வாழந்து கொண்டிருக்கும் மக்களைப் பற்றியும் அதிகம் யோசித்துருக்கின்றேன்.

இந்தியாவில் புனிதம் என்று சுட்டிக்காட்டப்பட்ட இது போன்ற ஊர்கள் அங்குள்ள கோவில்களை வைத்தே வளர்கின்றது. மக்கள் வந்து கொட்டும் வருமானம் அனைத்தும் கோவிலுக்குத்தான் என்றாலும் ஊரின் கட்டமைப்பில் எந்த மாறுதலும் உருவாகிவிடுவதில்லை. உருவானாலும் கூட ஆமை வேகம் தான். குறிப்பிட்ட திருவிழா நாட்களில் கூட செல்பவர்களுக்கு பயமும் பல பாடங்களும் தான் கிடைக்கின்றது. 

இன்று இது போன்ற புனித தலங்களுக்குச் செல்லும் மனிதர்கள் ஒரு சுற்றுலா மனோநிலையில் தான் செல்கின்றார்கள். 

தொடக்கத்தில் வாழ்ந்த மனிதர்கள் இது போன்ற தலங்களுக்கு செல்ல நினைத்தாலே தனது வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு உணவு முதல் உறவு வரை உள்ளும் புறமும் பரவச நிலையை உருவாக்கிக் கொண்டு தான சென்றார்கள். பாதயாத்திரை என்பது ஆரோக்கியத்தின் ஒரு அங்கமாக இருந்தது. இன்று அனைத்தும் மாறிவிட்டது. மலையில் இருக்கும் சாமியை தரிசிப்பதை விட கேபிள் கார் பயணத்தை அனுபவிக்கச் செல்பவர்கள் தான் அநேகம் பேர்கள்.

மக்களின் வேண்டுதல்களும் மாறியுள்ளது. உடம்புக்கு தேவைப்படும் ஆரோக்கியத்தை மனதுக்கு அமைதி என்பதை பொருளாதாரம் சார்ந்த வேண்டுதல்கள் தான் இன்று அதிகமாகியுள்ளது. நினைத்தவுடன் செல்வது. வேண்டியவுடன் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்று துரித உணவகத்தினைப் போலவே இன்று ஆன்மீகம் வளர்ந்துள்ளது.

விருப்பங்களை சுமந்து கொண்டு செல்வதற்குப் பெயர் ஆன்மீகம் அல்ல. அது வியாபாரம். அது தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. 

ஆனால் என் நோக்கம் ஆன்மீகத்தை தாண்டியும் சில புரிதல்களை தெரிந்து கொள்ளும் பொருட்டு இருந்தது. இரட்டையர் என்று தெரிந்ததும் அழைத்து உறவுகளிடம் சொன்னேன். போடா கிறுக்குப் பயலே. உனக்கு எல்லாமே விளையாட்டு தான் என்றார்கள்.

நான் மனதில் வைத்திருந்தபடி ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினேன். திருவண்ணாமலைக்கு மாதம் ஒரு முறை செல்லும் பழக்கம் என்பது மாறி வாரம் ஒரு முறை என்பதாக மாறியது.  அலைச்சலும் அவஸ்த்தைகளும் என்றாலும் நமக்கு பிடித்த ஒரு விசயத்தை செய்யும் போது எந்த கஷ்டமும் நமக்கு இயல்பானதாகவே தெரியும்.

அக்காவும் அருகே உள்ள ஊரில் தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.  ஆனால் இது போன்ற விசயங்களில் மற்றவர்களின் அறிவுரையைக் கேட்கும் மனோநிலையில் நான் இல்லை.

அறிமுகம் இல்லாத திருவண்ணாமலை என்ற ஊரில் அலைந்து திரிந்து நான் விரும்பியவாறு அமைந்த மருத்துவரின் பெயர் உஷா கல்யாணி. மனித உருவில் வாழும் தெய்வம் என்று தான் போற்றப்பட வேண்டும். அவர் கணவர் இறந்து போன போதிலும் அவரின் இரண்டு பெண் குழந்தைகளையும் மிக உயரிய படிப்பில் இதே மருத்துவ துறையில் தான் படித்துக் கொண்டிருந்தனர். இரண்டு மகள்களும் படிப்புக்காக ஒரு பக்கம்., இவர் இங்கேயென்று மாதம் முழுக்க ஓய்வில்லா பணியில் தான் இந்த சேவையை செய்து கொண்டிருந்தார்.

திருவண்ணாமலை அரசு மருத்துவராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தார். அங்குள்ள அரசு மருத்துவமனையிலும் வெற்றிகரமாக முடித்து, தனியார் மருத்துவமனையில் உள்ள ஏற்றுக் கொண்ட கடமைகளை முடித்து தன்னுடைய வீட்டிலும் மருத்துவ சேவை செய்த அவரின் நேர ஒழுங்கும், காசுக்கு ஆசைப்படாத குணாதிசியங்களையும் இன்று நினைத்தால் கூட ஆச்சரியமாகவே இருக்கிறது. பலசமயம் என் அவசரத்தின் பொருட்டு அரசு  மருத்துவமனைக்கே சென்று இருக்கின்றேன். பலருடனும் உரையாடி இருக்கின்றேன்.

அவர் வீட்டில் நான் பார்த்தவரைக்கும் வந்த அத்தனை பேர்களும் மிக எளியவர்களாகத்தான் இருந்தார்கள்.  பத்து ரூபாய் என்பது மிகப் பெரிய தொகை என்பதான பல மனிதர்களை அங்கே தான் சந்தித்தேன்.

தொடக்கத்தில் அவரை சந்தித்த போது என் விருப்பங்களையும் ஆசைகளையும் சொன்ன போது வினோதமாக பார்த்தார். ஆனால் கடைசியில் இப்படித்தான் சொல்லி எங்களை குழந்தைகளோடு பாராட்டி வழியனுப்பி வைத்தார்.

அவர் சொன்ன வாசகம் இப்போதும் நினைவில் இருக்கிறது. 

எத்தனையோ விதவிதமான மனிதர்களை என் தொழில் வாழ்க்கையில் சந்தித்துள்ளேன்.  அத்தனையிலும் நீங்க வித்யாசம் என்றார். நான் அவரைப் பற்றி மனதில் வைத்திருந்ததை என்னை புகழ்வதாக ஏற்றுக் கொண்டு அமைதி காத்தேன். காரணம் அவர் குழந்தை பிறப்புக்கு குறித்த நாட்கள், எதிர்பார்த்த நாட்கள் என்று அத்தனையும் கடந்து போயிருந்தது.  நான் சொன்ன நாள் நெருங்கி வந்தது.  அன்று தான் சரியாக இருக்கும் என்று அவருடன் இருந்த குழுவினர் சொன்ன போது தான் உங்க விசயத்தில் மட்டும் நான் ஒவ்வொருமுறையும் பல வினோதங்களைப் பார்க்கின்றேன் என்றார்.

நான் குறிகளை வெறுப்பதும் இல்லை. அதிக அளவு விரும்புவதும் இல்லை. அதை ஒரு ஆலோசனையாகத்தான் எடுத்துக் கொள்கின்றேன். உழைப்புக்கு அப்பாற்பட்ட ஏராளமான விசயங்கள் இந்த உலகில் இருக்கத்தான் செய்கின்றது. விஞ்ஞானத்திற்கு புரியாத பல புதிர்கள் பல உள்ளன. நம்புவதும் நம்பாததும் அவரவர் அனுபவங்கள் தரும் பாடங்களே. இதை விவாதிக்க வேண்டிய அவசியமேயில்லை. 

ஆனால் இதை வைத்துக் கொண்டே காலம் தள்ளுபவர்களையும், காசாக்க நினைப்பவர்களையும் நினைக்கும் போது தான் பலருக்கும் தந்தை பெரியார் உதவி புரிகின்றார். திருவண்ணாமலை கோவிலில் கர்ப்பகிரகத்திற்கு மிக அருகில் நடுசாம பூஜை வரைக்கும் பலநாட்கள் இருந்துள்ளேன். உணர்வும், உயிரும் ஒன்றாக கலந்திருந்த அந்த காலத்தையும் கடந்து வந்துள்ளேன். 

ஒரு கிறிஸ்துவ மருத்துமனையில் தான் இருவரும் பிறந்தார்கள்.  ஊரிலிருந்து அம்மா முதல் அத்தனை பேர்களையும் வரவழைத்து இருந்தேன்.  

அம்மா குழந்தைகளை பார்க்கும் வரையிலும் இரட்டையர் என்பதை நம்பவே மாட்டேன் என்றார். அந்த சிறிய இரண்டு உருவங்களை கையில் கொடுத்த போது இதென்ன கொடுமையா இருக்கு? என்று ஆச்சரியப்படார்.  நம்ம வம்சத்திலே இப்படி இரட்டை வந்ததே இல்லையே என்றார்.  எனக்கும் வியப்பு தான். விஞ்ஞானத்தை தாண்டியும் பல உண்மைகள் இருக்கிறது என்பதை உணர்த்திய பாடங்கள் இது. விஞ்ஞானத்தை இந்த இடத்தில் பொருத்திப் பார்த்துக் கொண்டாலும் தவறில்லை.. .

இருவரில் ஒருவர் எடைகுறைவு என்றதும் அப்போது தான்   அவரை பாதுகாக்கப்பட் வேண்டிய கருவிகளின் பழுதை  உணர்ந்தார்கள். அழைத்தவர்கள் வந்தபாடில்லை. நிமிடங்கள் மணிகளானது.  நாட்களாக மாறியது. ஆனால் கடந்து கொண்டேயிருந்தே தவிர அடுத்த மூன்று நாட்களில் அவர்களால் எந்த உருப்படியான முன்னேற்பாடுகளையும் செய்து தரமுடியவில்லை. வருத்தங்களை மீறி அப்போதும் விதியின் கரத்தின் விளையாட்டு பொம்மை போலத் தான் நாங்கள் இருந்தோம்.

எல்லாமே முயற்சிக்கு அப்பாற்பட்டது என்பதை மீண்டும் ஒரு முறை உணர்ந்து கொண்டேன். 

முடிந்தவரைக்கும் முயற்சிக்கின்றோம். பல சமயம் ஜெயித்ததும் நம் முயற்சி என்கின்றோம்.  இல்லாவிட்டால்?  ஆனால் நான் எப்போதும் விதி மதியை இரண்டு தண்டவாளங்களாகத்தான் கருதுகின்றேன். அவசர உதவிகள் என்று அடுத்தடுத்து நகர்ந்து கொண்டே வந்த போதிலும் எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிடைக்காமல் போக ஒருவர் மூச்சு விடவே சிரமப்படத் தொடங்கினார்.

ஆனால் அப்போது கூட உஷா கல்யாணி அசரவில்லை.  அவர் பழக்கத்தில் உள்ள மற்ற பகுதிகளில் உள்ள மருத்துவர்களை, அவர்கள் வைத்திருக்கும் கருவிகளை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளும் அளவிற்கு உதவி புரிந்த போலும் காலம் கடந்த ஞானத்தில் முடிவுகள் பயத்தோடு பார்க்கப்பட்டது. 

இயல்பாக இருந்த என்னிடம் சங்கடப்பட்டு இறுதியாகச் சொன்னார்.

அவர் குழுவினர் எடுத்த முடிவுகளை புறந்தள்ளி உங்கள் அறிவியலை விட என் உணர்வுக்ள் சொல்லும் முடிவே மேலானது என்று தான் திருப்பூருக்கு அழைத்து வந்தேன்.   அன்று அவர் திகைத்துப் பார்த்த பார்வை இன்றும் மனக்கண்ணில் நிழலாடுகின்றது.  பெண் குழந்தைகள், அதுவும் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு ஊனமானால் உறவுகள் பார்வையில் எப்படியிருக்கும் என்ற எண்ணங்கள் ஒவ்வொரு பக்கத்தில் இருந்தும் என்னை அம்பாகத்தாக்கியது.

இங்கே குடும்ப வாழ்க்கை முடிவுகள் என்பது ஒருவருடன் முடிந்து போவதில்லை. கணவன், மனைவி என்று தொடங்கி ஒரு பட்டாளமே சம்பந்தப்படுகின்றது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கொள்கைகள். அதுவே சரியென்று திணிக்கப்படுகின்றது. சம்பந்தப்பட்டவர்களின்  உணர்வுகள் மதிக்கப்படுவதேயில்லை. 

காதல் திருமணங்கள் தோல்விக்கு இரண்டு காரணங்கள் 

ஒன்று பணம்  மற்றொன்று உறவுகளிடமிருந்து கிடைக்காத அங்கீகாரம்.  

பணம் இல்லாத போது அடிப்படை வாழ்க்கையே சிதைகின்றது.  அந்த சிதைவு மனபிறழ்வை உருவாக்கி பித்துப் பிடிக்க வைத்து திசை மாற வைக்கின்றது. ஏமாற்றங்களை தாங்க முடியாமல் பரஸ்பரம் ஒருவர் மேல் ஒருவர் குற்றச்சாட்டிக் கொண்டு தாங்கள் கொண்ட காதலை நரக வாழ்க்கைக்கு அர்ப்பணிக்கின்றார்கள். ஆனால் இங்கு பெண் குழந்தைகள் என்பதால் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

ஆனால் நான் உறுதியாக இருந்தேன்.

குழந்தைகளை அழைத்து வந்த பிறகு திருப்பூருக்குள்ளும் தேடல் தொடங்கியது.  எடை குறைந்த குழந்தைகள் சந்திக்கும் சவால்களின் முக்கியமானது வலிப்பு நோய். எப்போது வரும்? எதனடிப்படையில் வரும் என்றே தெரியாது.  தனியாக இருந்த மனைவி தடுமாறிய காலங்கள் அது. 

அடுக்கு மாடி குடியிருப்பு என்பதால் அறிவுரைக்கு மட்டும் பஞ்சமே இருக்காது.  ஆனால் அவரவர் கொண்ட பயத்தின் சாயலை நன்றாகவே நம்மால் புரிந்து கொள்ள முடியும்.  திடீரென்று அலுவலகத்திற்கு அழைப்பு வரும். பதறிக் கொண்டு ஓட வேண்டியிருக்கும்.  வீட்டுக்கும் மருத்துவமனைக்கும் வண்டியில் வைத்துக் கொண்டு அலைந்த பயணங்களை இப்போது நினைத்துப் பார்க்கின்றேன். உயிர் போய் உயிர் வந்தது என்பார்களே. அத்தனையும் அனுபவித்து இருக்கின்றேன். பெண்களின் தைரியத்தை இது போன்ற இக்கட்டான தருணங்களில் தான் பார்க்க முடியும்.  ஆனால் நம் பெண்களின் தைரியம் என்பது இறுதியில் கண்ணீரில் தான் முடிகின்றது. . 

திருப்பூரில சுக்கூர் என்றொரு குழந்தைகளுக்கென்று பிரபலமான மருத்துவர் இருக்கிறார்.  ஆனால் ஒரு பெரிய பிரச்சனை உண்டு. உடனடி நிவாரண்த்தில் தான் கவனம் செலுத்துவார்.  குழந்தைகள் தாங்குமா என்பதைப் பற்றி பிறகு தான் யோசிப்பார். 

ஆனால் அவரும் பயமுறுத்தினார். ஊனம் உருவாகும் வாய்ப்புகளைத்தான் விவரித்தார்.  என் மனம் ஏற்றுக் கொள்ளவேயில்லை.  காரணம் தலைமுறையில் ஊனமானவர்களே இல்லை. அமைதியாகவே வாழ்ந்து ஆராவாரமற்று தான் இறந்துபோயிருக்கிறார்கள்.  விஞ்ஞானம் சொல்லும் கருத்துக்களை மனதில் உள்வாங்கிக் கொண்டே ஒவ்வொன்றாக பிரித்துப் பார்க்கத் தொடங்கினேன்.  முதலில் குழந்தையின் உடம்பில் எதிர்ப்பு சக்தியும் பலமும் வேண்டும். அதன் பிறகே மற்றவற்றை யோசிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அடுத்த மருத்துவரை மனம் தேடத் தொடங்கியது.

தேடலின் இறுதியில் இறுதியாக ஷெரிப் காலணியில் உள்ள சிவகாமி என்ற மருத்துவர் கிடைத்தார். கொண்டு போயிருந்த ஆவணங்களை பரிசோதித்து விட்டு இருவரையும் பார்த்தார். தயங்காமல் கேட்டார். 

"இந்த குழந்தை இதுவரைக்கும் பிழைத்திருப்பதே அதிசயம்" என்றார். 

நான் அமைதியாக இருந்தேன்.

அடுத்த கேள்வி அதைவிட சுவராசியமானது. 

"மேற்கொண்டு எப்படி இவரை வைத்து சமாளிக்கப் போறீங்க?" என்றார்.

மனைவி அழுததை வேடிக்கை பார்த்த என்னை மருத்துவர் வினோதமாக பார்த்தார்.  

"உயிரை விட சம்மதிப்பேன். ஆனால் ஒருவரைக்கூட இழக்க சம்மதிக்க மாட்டேன்" என்ற போது தான் என்னைப் பற்றி முழுமையாக விசாரித்து என் விருப்பப்படி ஒத்துழைக்கத் தொடங்கினார்.

"இயற்கை முறையில் உங்கள் மருத்துவம் இருக்கட்டும். குழந்தைகக்கு உடல் வலு வேண்டும். அதன் பிறகு மற்றதை நான் பார்த்துக் கொள்கின்றேன்" என்றேன். 

"எல்லோரும் இப்படித்தான் சொல்கிறார்கள்.  ஆனால் பொறுமையாய் கடைபிடிப்பதே இல்லை. உடனடி நிவாரணத்தில் தான் இன்றைய உலகமே ஓடிக் கொண்டிருக்கிறது" என்று புலம்பியபடி பால் மற்றும் கோதுமை நிலக்கடலையுடன் சேர்த்து அரைக்க வேண்டிய சமாச்சாரங்களையும் சொல்லி அதை கொதிக்க வைத்து பாலாக மாற்றி குழந்தைகக்கு கொடுக்க வேண்டிய விதங்களைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.  

"முப்பது நாட்கள் கழித்து வாருங்கள்.  எப்படி குழந்தை இருக்கிறது என்பதை வைத்து தான் மேற்கொண்டு முடிவைச் சொல்வேன்" என்று பயமுறுத்தியே அனுப்பினார். 

அவருக்கு இரண்டு இடங்களில் மருத்துவமனைகள் இருந்தது. ஒரு மாதம் கழித்து மற்றொரு மருத்துவமனையில் அவரைப் பார்க்க நாங்கள் சென்றடைந்த போது கூட்டம் இல்லாமல் தனியாக ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். இரண்டு பேரையும் அவர் டேபிள் மேல் படுக்க வைத்த போது அவர் கேட்ட கேள்வி "அந்தக்குழந்தை எங்கே?" என்றார்.

இவர் தான் அவர் என்றோம்.  விக்கித்துப் போய்விட்டார்.  காரணம் ஒரே மாதத்தில் 1.750 கிராம் கூடி மூன்று கிலோவிற்கு அருகே கொண்டு வந்திருந்தோம். இப்போது இருவரும் சமமாக இருந்தனர்.

"நம்ம முடியாத அதிசயத்தை சாதித்து காட்டியிருக்கீங்க" என்று என் கைகளை வாங்கி குலுக்க முற்பட்ட போது மனைவியின் கரத்தை எடுத்து அவர் கையில் வைத்தேன்.

அன்று தான் என் மனைவி என் வேகத்தின் முழுப்பலனை முழுமையாகவும் என் நேசிப்பின் அருமையையும் உணரும் நேரமாக இருந்தது.  

மேலே நாம் பார்த்த அவர் இப்போது எப்படி இருக்கின்றார் தெரியுமா?

"அப்பா.அம்மாவுக்கு சமைக்கவே தெரியல.எதிலும் காரமே இருப்பதில்லை.நாக்குக்கு விளங்கலை"என்கிறார். சாப்பாட்டில் உள்ள காரம் தந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே சிரிக்கின்றேன்.

வார்த்தையிலும் வாழ்க்கையிலும் காரஞ்சாரமாகத்தான் வளர்கின்றார்.  .

நடைவண்டி பயணம் தொடரும்.....

தொடர்புடைய பதிவுக்ள்

வாங்க

போங்க

Wednesday, December 05, 2012

குழந்தைகள் 3 - மனம் என்பது வாழ்க்கை.


ஒவ்வொருவரும் தாங்கள் கடந்து வந்த வாழ்க்கையில்  ஏதோவொரு தருணத்தில் பரதேசி கோலம் பூண்டுருப்போம். உடைகளால் என்பது மட்டுமல்ல.  உள்ளத்தால் வாழ்ந்திருந்தாலும் பரதேசி தான். 

படித்த புத்தகம், பார்த்த படம், பாதித்த காட்சிகள் என்று நாம் வாழும் வாழ்க்கையை சரிதானா? என்று சில அதிர்வுகளை உருவாக்கியிருக்கும். பைத்தியம் பிடிக்காத குறையில் பரிதவித்துருப்போம். இதற்கென்ன மருந்து? என்று அலைந்திருப்போம். 

அப்போது சிலருக்கு புத்தி வேகமாக செயல்படுகின்றது. பகுத்தறிய தொடங்கும். புதிய அனுபவங்களை கற்றுக் கொள்ள தயாராய் இருப்பார்கள். மேலும் யோசிப்பை பலப்படுத்தும். ஆனால் பலருக்கும் உள்ளுற இருக்கும் சக்தி இனி இறையே கதியென்று ஆன்மீகத்தை நோக்கி நகர்த்தி விடுகின்றது.

நானும் கடந்து வந்துள்ளேன். 
ஆன்மீகம் என்பதை அழகாய் நெருங்கிப் பார்த்த தருணமது. இறைவன், உருவங்கள், அது வலியுறுத்தும் சக்திகள், உணர்த்தும் பாடங்கள் என்பதைத் தாண்டியும் அறிந்து கொள்ளும் ஆவலில் அலைந்துள்ளேன்.. 

உணர்ச்சிக்குவியலாய் வாழ்ந்த வாழ்க்கையில் உணர்வை இழுத்துப் பிடித்து ஒரு புள்ளியில் சேர்க்க பாடுபட்ட நேரம் அது.

இன்று திரையில் நடிப்பவர்களும், ஆன்மீக உரைகள் மூலம் கலக்கிக் கொண்டிருப்பவர்களும் திருவண்ணாமலை பக்கம் போகாத காலத்தில் நான் அங்கே தொடர்ச்சியாக சென்று கொண்டிருந்தேன். வாழ்க்கை குறித்த தேடலுடன் ஏராளமான ஆசைகளையும் சுமந்திருந்த எனக்கு அதிலிருந்து விடுபடத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். 

நம்மிடம் உள்ள ஒவ்வொரு ஆசைகளும் தான் நம் வாழ்க்கை நகர்த்துக்கின்றது. அதுவே குறிப்பிட்ட காலத்திற்குள் இயல்பான பழக்கமாகவும் மாறிவிடுகின்றது.

கிடைத்து விட்டால் புத்தியைக் குறித்து பெருமிதம் கொள்கின்றோம். கிடைக்காத போது சக்திகளை தூற்றுகின்றோம் அல்லது துணைக்கு அழைக்க முயற்சிக்கின்றோம்.

அவர் சொன்னார், இவர் சொன்னார், அந்த பத்திரிக்கையில் வந்தது என்று ஒவ்வொருவரும் தங்கள் விருப்பங்களை,ஆன்மிகத் தேடலை உள்ளிருந்து தேடுவதில்லை. வெளியிலிருந்து தான் தேடுகின்றார்கள். 

இன்றைய ஆன்மீகம் குறித்த நம்பிக்கைகள் அனைத்தும் பேச்சு மூலம் மட்டுமே அடுத்தவருக்கு கடத்தப்படுகின்றது. நம்ப வைக்கப்படுகின்றது. அந்த கோவிலுக்குள் நுழைந்தேன். மெய் மறந்து நின்றேன் என்ற வார்த்தைகள் தான் இங்கே பலருக்கும் வேதவாக்காக தெரிகின்றது. இறை சக்தியை மட்டுமல்ல. இன்று எதையுமே உணர்ந்து கொள்பவர்கள் குறைவு. உணர்ந்ததாக நடிப்பவர்கள் தான் அதிகம். 

இதுவே படிப்படியாக கடத்தப்பட்டு கோவிந்தா போடும் கூட்டம் தான் நாளுக்கு நாள் அதிகமாகின்றது.  தன் உள்ளத்தையும் புரிந்து கொள்ளாமல்  அது தரும் உணர்வுகளையும் அறிந்து கொள்ள மனமில்லாமல் வாழும் வாழ்க்கையைத் தான் இங்கே பலரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். 

எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் ஆசாமியாகத்தான் வாழ்ந்து முடிக்க வேண்டும். 

ஆனால் வயதும் வாழ்க்கையும் கொடுத்த அதிர்வுகளை அடக்க வேண்டும் என்று முயற்சித்தேன். எதையும் தெரிந்து கொள்ள வேண்டும் அதனை புரிந்து கொள்ள வேண்டும் என்பதன் தொடர்ச்சியாக தெரிந்தது.

அறியும் ஆவல் இருந்தது. எந்த குருவையும் தேடியதில்லை. எனக்கு தேவையானதை அறிந்து கொண்டதோடு புரியவும் தொடங்கியது. ஆனால் இன்று அதனையும் கடந்து வந்துள்ளேன்.

குழந்தைகள் வளரத் தொடங்கும் போது நம்முடைய கலாச்சாரத்தில் இந்த ஆன்மீகம் இரண்டறக் கலந்து விடுகின்றது. குழந்தை வளர்ப்பின் ஒரு அங்கமாகவே கருதப்படுகின்றது. கிராமத்து வாழ்க்கையில் சாமி என்பது கண்டிப்பு வாத்தியார் என்பது போலத்தான் உருவகப்படுத்தப்படுகின்றது

தப்பு செய்யாதே.  கண்னைக்குத்திடும் என்று சொல்லியே தப்புக்களை மட்டும் அதிகம் செய்ய தூண்டப் படுகின்றது. 

ஒன்று மறுக்கப்படும் போது அல்லது மறைக்கப்படும் போது அங்கே தெளிவு கிடைப்பதில்லை. ஆசைகளும் பிடிவாதமும் தான் அதிகமாகின்றது. தெரிந்தவர்களும் முறைப்படி சொல்லிக் கொடுப்பதும் இல்லை. குரு என்றால் அவர் முன்னால் பணிந்து போக வேண்டும் என்பதே பலரின் கனவுகளை சிறுவயதிலேயே மலர விடாமல் தடுத்து விடுகின்றது.

ஆனால் நான் தெரிந்து கொள்ளவும் முயற்சிக்கவில்லை. சொல்லித் தந்தவர்களை மதித்ததும் இல்லை. மதிக்காத போது மிதிபடுவது இயல்பு தானே? அது தான் நடந்தது. மிதிபடாத மண் பானையாக மாறுவதில்லை.

குழந்தைகளின் வேகம் என்பது இரத்தம் சம்மந்தப்பட்டது மட்டுமல்ல. அது உணர்வு சம்மந்தப்பட்டது.  வளர்ந்தபிறகு உங்களுக்குள் எத்தனையோ கொள்கைகளை உருவாக்கி வைத்திருப்பீர்கள். வாழ்வில் சந்தித்த உங்களின் ஒவ்வொரு அனுபவமும் ஏராளமான பாடங்களை கற்றுத் தந்துருக்கும். அது சரியா தவறா? என்ற ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து கொண்டேயிருந்தாலும் முடிவு தெரியாமலேயே சிலவற்றை ஏற்றுக் கொண்டும் மறுத்தும் இருப்பீர்கள். இறுதியாக ஏதோவொரு உருவகம் உங்களுக்குள் உருவாகியே இருக்கும். 

இதுபோன்ற தருணத்தில் புதிய விசயங்கள் உங்கள் மனம் ஏற்றுக் கொள்வது கடினமாக இருக்கும். திறந்த பானையில் மட்டுமே தண்ணீரை ஊற்ற முடியும்.. 

ஆனால் குழந்தைகளின் மூளையில் உள்ள ந்யூரான்களில் எந்த செய்திகளையும் பதித்து விடலாம். ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கும் போது சொல்கின்ற விதம் தான் முக்கியம்.  பிறப்பில் புத்திசாலி என்ற குழந்தைகள் இங்கே யாருமில்லை. வளர்ப்பும் அவர்களை அணுகிய விதமும் தான் முக்கியமாக இருக்கின்றது. . 

ஊனமுற்ற குழந்தைகளைக் கூட நொண்டிக்குசும்பு என்பார்கள். நொஞ்சான் பிள்ளைகள் கூட குடும்பத்தில் சவாலாக இருப்பதை பார்த்திருப்போம். குழந்தைகளின் மூளை என்பது எதனாலும் பாதிக்கப்படாமல்  இருக்கும் போது எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள முடிகின்றது. எல்லாவற்றையும் குழந்தைகள் விரும்புவதால் இங்கே பலருக்கும் பயம் வந்து விடுகின்றது. இந்த பயம் தான் பலவற்றை மறைக்கத் தூண்டுகின்றது. 

இந்த வயதில் உனக்கு இது தேவையில்லடா.... என்று சொல்ல வைக்கின்றது.

அய்யோ இதை தெரிந்து கொண்டால் கெட்டுப் போய்விடுவானோ என்று எண்ணத் தோன்றுகின்றது. ஆனால் கெட்டுப் போவதன் அர்த்தத்தையும் எவரும் புரிந்து கொள்ளப்படுவதில்லை என்பது தான் இங்கே ஆச்சரியமான விசயம். குடிகாரர்கள் மேதைகளாக இருந்திருக்கிறார்கள். கொடூரமானவர்கள் தலைவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள். 

கெட்டுப் போவதென்பது உடம்பா? மனசா?  

கெட்ட பழக்கங்கள் உள்ள வளர்ந்த மனிதர்களின் உடம்பின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.  உறுப்புகள் செயல் இழக்கத் தொடங்கும் போது அதன் வேகமும் கிரகிக்கும் வீர்யமும் மாறத் தொடங்குகின்றது. வயதாக. சோர்வும் சேர்ந்து விட காலப்போக்கில் ஏக்கம் தான் மிஞ்சுகின்றது. 

ஆனால் பத்து வயதிற்குள் இருக்கும் எந்த குழந்தையுமே கெட்ட பழக்கங்களை கற்றுக் கொள்வதில்லை. பேசும் வார்த்தைகள் கூட வீட்டுக்குள் கேட்கும் வார்த்தைகள் மூலமே வருகின்றது. சிறுவயதில் குழந்தைகளின் மனசை பாதிப்படையச் செய்ய முடியுமே தவிர அதிலும் கூட முழுமையாக மாற்றம் செய்ய முடியாது. 

குடிகார தகப்பனின் செயலை தினந்தோறும் பார்க்கும் அத்தனை குழந்தைகளும் குடிகாரர்களாகவா மாறுகின்றார்கள். கணவனை மீறி காமத்துக்கு அலையும் பெண்களைப் பார்த்து அவரின் பெண் குழந்தைகள் அத்தனை பேர்களும் காமாந்தாகியாகவா வாழ்கிறார்கள்?.

சூழ்நிலை என்பது ஒரு முக்கிய காரணி.  ஆனால் அதுவே எல்லா நிலையிலும் பொருந்துவதில்லை. என் நண்பன் பத்தாம் வகுப்பு வரைக்கும் ஐந்து பாடங்களிலும் தேர்ச்சி அடைந்து பார்த்ததில்லை. ஆனால் கல்லூரி வரைக்கும் அவனை அடிக்க ஆளே இல்லை என்பதாக மாறிப்போனான். அதே அப்பா. அதே அம்மா. குடும்பத்தில் எப்போதும் இருந்த வறுமை.

என்ன காரணம்?

தொடக்கத்தில் பாடங்களில் கவனம் செலுத்தும் பல குழந்தைகள் காலப்போக்கில் மாறிவிடுகின்றார்கள்.

வேலை பார்க்கும் இடங்களில்  கேட்டுருப்பீங்களே?

சொல்லி புரியவைப்பா? என்று. ஆனால் இங்கே எவரும் புரிய வைக்க முயற்சிப்பதே இல்லை.  காரணம் கவனிப்பும், அனுசரனையும் குழந்தைகளை மட்டுமல்ல 

வளர்ந்த மனிதர்களுமே மற்றவர்கள் தனக்கு அனுசரனையாக இருப்பதை மட்டும் தான் விரும்புகிறார்கள்.. இந்த அனுசரனை மனிதர்களை மகத்தான சாதனையாளர்களாக மாற்ற உதவுகின்றது.   

நாம் தான் புரிந்து கொள்வதேயில்லை.  குழந்தைகள் குறித்து, அவர்களின் வளர்ப்பு குறித்து தேவையில்லாத பயங்களை பட்டியலிட்டு நாமும் வாழாமல் அவர்களையும் வாழவிடாமல் நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

சமூகத்தில் நாம் படித்து முடித்து நுழையும் தருணத்தில் எத்தனையோ கனவுகள் உள்ளூற இருக்கும். பலருக்கும் பல விதமான விருப்பங்களை அடைகாத்தே வந்திருப்போம். பலருக்கு. சுற்றுலா, உணவு, வீடு என்று இயல்பான நடைமுறை வாழ்க்கை விருப்பங்கள் இருக்கும். பலருக்கும் வாழ்நாள் முழுக்க உழைத்தாலும் பாதி கூட கிடைப்பதில்லை.

ஆனால் தொடக்கம் முதலே என் விருப்பங்கள் இயல்பான மனிதர்களின் ஆசைகளுக்கு அப்பாற்பட்டதாகவே இருந்தது. அனுபவங்கள் அதை புரியவைத்தது. அனுபவங்களோடு சேர்ந்த வாசிப்பு தான் அருமையாக பொருந்தி விடுகின்றது.  இது போன்ற பொருந்தாத விருப்பங்கள் தான் ஒவ்வொரு சமயத்தில் பல பிரச்சனைகளை என்னிடம் கொண்டு வந்து சேர்த்தது. . 

முதல் பத்து வருடங்கள் திருப்பூர் எனக்கு ஏராளமான அனுபவங்களை தந்திருந்தது. தேடியலைந்த பணம், ஓய்வே இல்லாத உழைப்பு, ஒவ்வொரு சமயத்திலும் கிடைத்த ஏமாற்றங்கள், தேடிக் கொண்டிருந்த அங்கீகாரம் என்ற இந்த நான்கு மூலைக்குள் என் வாழ்க்கை என்னை புரட்டி எடுத்துக் கொண்டிருந்தது. 

என் திருமணம் குறித்து யோசிக்க நேரம் இருந்ததில்லை.  தொழில் மற்றும் அது சார்ந்த எண்ணங்கள், வெற்றி பெற வேண்டிய இலக்கு மட்டுமே உள்ளுற ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் உள்ளுற ஒரு கனவை மட்டும் தனிப்பட்ட முறையில் அடைகாத்து வைத்திருந்தேன். நமக்கு குழந்தை பிறக்கும் போது இந்த திருவண்ணாமலையில் தான் பிறக்க வேண்டும் என்பதை மனதில் வைத்திருந்தேன். நடைமுறையில் அதனை செயலாக்கிய போது எதிர்ப்புகள் என்பது எட்டு பக்கமும் என்னை தாக்கியது. அஞ்சாமல் நினைத்தபடியே ஜெயித்தேன்.

ஏனிந்த விருப்பம் உருவானது என்பதை விட அங்கே என் குழந்தைகளுக்கு கிடைத்த மருத்துவரைப் பற்றியும் குழந்தைகளின் மூன்று வயது வரைக்கும் நான் பார்த்த மருத்துவர்களைப் பற்றியும் தான் நாம் பேசப் போகின்றோம்.

குழந்தைகள் பேசத் தொடங்கும் போது தான் கேள்விகள் வருகின்றது.  அதன் பிறகு அவர்களின் மூளையில் விருப்பமும் ஆசைகளும் பதியத் தொடங்கின்றது.  ஆனால் முதல் மூன்று வருடங்களும் அவர்களின் உறுப்புக்கள் சம்மந்தப்பட்ட ஆரோக்கியத்தில் தான் நாம் கவனமாக இருக்க வேண்டும்.  அஸ்திவாரம் என்பது சாதாரணமாக இருந்தால் அந்த குழந்தைகளின் ஆயுட்காலம் வரைக்கும் அவஸ்த்தை தான்.

கிராமத்து வாழ்க்கையில் பிரசவம் என்பது பத்து நிமிடங்களில் முடிந்த நாட்டு மருத்துவச்சி என்ற ஏதோவொரு கிழவியின் கைங்கர்யமாக இருக்கும். ஆனால் இன்று அது பல லட்சங்கள் செலவு பிடிக்கும் ஆடம்பர சமாச்சாரம். அவஸ்த்தைகள் அதிகமாகி பயத்தை உருவாக்கி, பயத்தோடு வாழ வைத்து உடல் உழைப்பே இல்லாமல் வாழும் பெண்கள் ஏறக்குறைய மறுபிறவி தான் எடுக்கின்றார்கள்.

அவஸ்த்தைகளோடு தான் குழந்தைகளை பெற்று எடுக்கின்றார்கள். இயல்பாக பிறக்க வேண்டிய  பல குழந்தைகள் நேரம் தீர்மானிக்கப்பட்டு வெளியே எடுக்கப்பட வேண்டியவர்களாக மாறிப்போனார்கள்.

அறுவைச் சிகிச்சை அதிகமானதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. இன்று முக்கால்வாசி பெண்கள் அறுவை சிகிச்சை மூலம் அரை மனுஷியாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிற்ர்கள். .

மருத்துவர்களின் பண ஆசையா? பெண்களின் ஆரோக்கியம் தந்த பரிசா? என்பதை விட மாறி வரும் உலகில் தேவைப்படாத மாற்றத்தையும் நாம் விரும்புவதால் இப்படித்தான் நடக்கும் என்பதுடன் இதை விட்டு வெளியே வந்து விடுவோம்.

இன்று உடலுக்கும் உள்ளத்திற்கும் நிறையவே மருந்துகள் தேவைப்படுகின்ற உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். முதல் இருபது வருடங்கள் எனக்கு எந்த மருந்துகளும் தேவைப்பட்டதில்லை. ஆனால் அடுத்த பத்து வருடங்களில் மருந்தே தான் வாழ்க்கையாக இருந்தது.  அந்த அனுபவங்கள் கற்றுத் தந்த பார்வைகள் தான் என் குழந்தைகள் குறித்த கனவின் எல்லைகளை விரிவாக்கியது.

என் திருமணம், எங்கள் குழந்தைகள், குடும்ப ஆரோக்கியம் என்று பரந்து விரிந்தது. ஒவ்வொன்றாக அதனை இப்போது நினைத்துப் பார்க்கின்றேன்.

இரட்டையர்களின் மூன்று வயது வரைக்கும் அடுத்து வந்த கடைக்குட்டி வரைக்கும் மூன்று பெண் மருத்துவர்களை சந்தித்து இருக்கின்றேன்.  

திருவண்ணாமலையில் உஷா கல்யாணி, திருப்பூரில் ஷெரிப் காலணியில் சிவகாமி, மற்றும் கொங்கு நகரில் இருக்கும் சித்ரா.

குழந்தைகளின் முதல் மூன்று வருட வாழ்க்கையில் இவர்களின் வழிகாட்டுதல், அக்கறையான கவனிப்பு, எங்களை புரிந்த கொண்ட விதம் இதற்கு மேலாக மருத்துவத்தை சேவையாக நினைத்த பாங்கு என்று  இவர்களைப்பற்றி சொல்ல நிறைய இருந்தாலும் குழந்தைகளின் பள்ளிக்காக வீடுகள் மாறிய போது, அதற்குப் பிறகு சந்தித்த மருத்துவர்கள் கொடுத்த பயமும் பாடமும் அநேகம்.  

இன்று குழந்தைகள் தும்மினால் பயம்.  இருமினால் அதைவிட பயம்.  மொத்தத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் சூழ்நிலையில் இருப்பவர்களின் வாழ்க்கையில் செத்து செத்து பிழைப்பது தான் நடந்து கொண்டிருக்கின்றது.  குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை எப்போதும் நான் கனவு கண்டதில்லை. ஆனால் ஒரு குழந்தை எப்படி வளர்க்கப்பட வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தேன். இன்று வரையிலும் அப்படித்தான் இருக்கின்றேன்.

காரணம் கிராமத்து கூட்டுக்குடும்பம், பெரிய குடும்பங்களில் வாழ்க்கை வாழ்ந்த ஒவ்வொரு குழந்தைகளும் தாங்கள் மனதில் வைத்திருந்த ஓராயிரம் கனவுகளையும் இழந்து விட்டுத்தான் சமூகத்திறகுள் வருகிறார்கள். நானும் அப்படித்தான் வளர்ந்தேன். சமூகத்திற்குள் வந்தேன். பாதிப்புகளை மனதிற்குள் வைத்திருந்தால் அதற்குப் பெயர் மனநோய்.  அதையே நேர்மறை எண்ணமாக்கி அவரவர் தங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்தால் பாடம்.

ஆனால் இங்கே அனுபவங்களை பாடமாக எவரும் எடுத்துக் கொள்ள விரும்புவதே இல்லை.  ஒவ்வொரு சமயத்திலும் அதனை மறக்கவே விரும்புகின்றார்கள். காரணம் உள்ளூற பொங்கும் இயலாமையின் தவிப்பில் ஏக்கம் தான் இறுதியில் மிஞ்சுகின்றது. கனவுகளை மட்டும் பொறித்துக் கொண்டு எந்த கோழியும் வாழ்வதில்லை. ஆனால் மனிதர்கள் கனவுகளை மட்டும் தான் விரும்புகிறார்கள்.

இதனால் தான் இதுபோன்ற குடும்பத்தில் இருந்த வந்த மாணவர்களின் செயல் திறன் சிறகடித்து பறக்காமல் நொண்டியடிக்கத் தொடங்குகின்றது. பள்ளிக்கூடங்களில் பொறுத்துப் பார்த்த ஆசிரியர்களும் இறுதியில் நீ என்ன கூமுட்டையா? என்று கேட்கின்றார்கள்.

இந்த மருத்து உலகத்தையும் மருத்துவர்கள் தரும் பாடங்களையும் நாம் பார்ப்போம். வாழ்வில் மனிதர்களுக்கு இரண்டு விசயங்கள் மிக முக்கியமானது. அதுவும் குழந்தைப் பருவத்திலிருந்து தான் தொடங்குகின்றது. 

ஒன்று உடல் நலம். மற்றொன்று மனநலம். 

இரண்டும் சரியான அளவில் இல்லாத போது தான் சமூகம் பல சங்கடங்களை சந்திக்க நேர்கின்றது. 

நடைவண்டி பயணம் தொடரும்..........

தொடர்புடைய தலைப்புகள்

.