Thursday, December 06, 2012

குழந்தைகள் - புரிதலின் தொடக்கம் நேசிப்பு


ஒவ்வொரு முறையும் திருவண்ணாமலை செல்லும் போதும், சென்ற வந்த பிறகும் அந்த ஊரைப்பற்றி, அங்கு வாழந்து கொண்டிருக்கும் மக்களைப் பற்றியும் அதிகம் யோசித்துருக்கின்றேன்.

இந்தியாவில் புனிதம் என்று சுட்டிக்காட்டப்பட்ட இது போன்ற ஊர்கள் அங்குள்ள கோவில்களை வைத்தே வளர்கின்றது. மக்கள் வந்து கொட்டும் வருமானம் அனைத்தும் கோவிலுக்குத்தான் என்றாலும் ஊரின் கட்டமைப்பில் எந்த மாறுதலும் உருவாகிவிடுவதில்லை. உருவானாலும் கூட ஆமை வேகம் தான். குறிப்பிட்ட திருவிழா நாட்களில் கூட செல்பவர்களுக்கு பயமும் பல பாடங்களும் தான் கிடைக்கின்றது. 

இன்று இது போன்ற புனித தலங்களுக்குச் செல்லும் மனிதர்கள் ஒரு சுற்றுலா மனோநிலையில் தான் செல்கின்றார்கள். 

தொடக்கத்தில் வாழ்ந்த மனிதர்கள் இது போன்ற தலங்களுக்கு செல்ல நினைத்தாலே தனது வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு உணவு முதல் உறவு வரை உள்ளும் புறமும் பரவச நிலையை உருவாக்கிக் கொண்டு தான சென்றார்கள். பாதயாத்திரை என்பது ஆரோக்கியத்தின் ஒரு அங்கமாக இருந்தது. இன்று அனைத்தும் மாறிவிட்டது. மலையில் இருக்கும் சாமியை தரிசிப்பதை விட கேபிள் கார் பயணத்தை அனுபவிக்கச் செல்பவர்கள் தான் அநேகம் பேர்கள்.

மக்களின் வேண்டுதல்களும் மாறியுள்ளது. உடம்புக்கு தேவைப்படும் ஆரோக்கியத்தை மனதுக்கு அமைதி என்பதை பொருளாதாரம் சார்ந்த வேண்டுதல்கள் தான் இன்று அதிகமாகியுள்ளது. நினைத்தவுடன் செல்வது. வேண்டியவுடன் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்று துரித உணவகத்தினைப் போலவே இன்று ஆன்மீகம் வளர்ந்துள்ளது.

விருப்பங்களை சுமந்து கொண்டு செல்வதற்குப் பெயர் ஆன்மீகம் அல்ல. அது வியாபாரம். அது தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. 

ஆனால் என் நோக்கம் ஆன்மீகத்தை தாண்டியும் சில புரிதல்களை தெரிந்து கொள்ளும் பொருட்டு இருந்தது. இரட்டையர் என்று தெரிந்ததும் அழைத்து உறவுகளிடம் சொன்னேன். போடா கிறுக்குப் பயலே. உனக்கு எல்லாமே விளையாட்டு தான் என்றார்கள்.

நான் மனதில் வைத்திருந்தபடி ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினேன். திருவண்ணாமலைக்கு மாதம் ஒரு முறை செல்லும் பழக்கம் என்பது மாறி வாரம் ஒரு முறை என்பதாக மாறியது.  அலைச்சலும் அவஸ்த்தைகளும் என்றாலும் நமக்கு பிடித்த ஒரு விசயத்தை செய்யும் போது எந்த கஷ்டமும் நமக்கு இயல்பானதாகவே தெரியும்.

அக்காவும் அருகே உள்ள ஊரில் தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.  ஆனால் இது போன்ற விசயங்களில் மற்றவர்களின் அறிவுரையைக் கேட்கும் மனோநிலையில் நான் இல்லை.

அறிமுகம் இல்லாத திருவண்ணாமலை என்ற ஊரில் அலைந்து திரிந்து நான் விரும்பியவாறு அமைந்த மருத்துவரின் பெயர் உஷா கல்யாணி. மனித உருவில் வாழும் தெய்வம் என்று தான் போற்றப்பட வேண்டும். அவர் கணவர் இறந்து போன போதிலும் அவரின் இரண்டு பெண் குழந்தைகளையும் மிக உயரிய படிப்பில் இதே மருத்துவ துறையில் தான் படித்துக் கொண்டிருந்தனர். இரண்டு மகள்களும் படிப்புக்காக ஒரு பக்கம்., இவர் இங்கேயென்று மாதம் முழுக்க ஓய்வில்லா பணியில் தான் இந்த சேவையை செய்து கொண்டிருந்தார்.

திருவண்ணாமலை அரசு மருத்துவராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தார். அங்குள்ள அரசு மருத்துவமனையிலும் வெற்றிகரமாக முடித்து, தனியார் மருத்துவமனையில் உள்ள ஏற்றுக் கொண்ட கடமைகளை முடித்து தன்னுடைய வீட்டிலும் மருத்துவ சேவை செய்த அவரின் நேர ஒழுங்கும், காசுக்கு ஆசைப்படாத குணாதிசியங்களையும் இன்று நினைத்தால் கூட ஆச்சரியமாகவே இருக்கிறது. பலசமயம் என் அவசரத்தின் பொருட்டு அரசு  மருத்துவமனைக்கே சென்று இருக்கின்றேன். பலருடனும் உரையாடி இருக்கின்றேன்.

அவர் வீட்டில் நான் பார்த்தவரைக்கும் வந்த அத்தனை பேர்களும் மிக எளியவர்களாகத்தான் இருந்தார்கள்.  பத்து ரூபாய் என்பது மிகப் பெரிய தொகை என்பதான பல மனிதர்களை அங்கே தான் சந்தித்தேன்.

தொடக்கத்தில் அவரை சந்தித்த போது என் விருப்பங்களையும் ஆசைகளையும் சொன்ன போது வினோதமாக பார்த்தார். ஆனால் கடைசியில் இப்படித்தான் சொல்லி எங்களை குழந்தைகளோடு பாராட்டி வழியனுப்பி வைத்தார்.

அவர் சொன்ன வாசகம் இப்போதும் நினைவில் இருக்கிறது. 

எத்தனையோ விதவிதமான மனிதர்களை என் தொழில் வாழ்க்கையில் சந்தித்துள்ளேன்.  அத்தனையிலும் நீங்க வித்யாசம் என்றார். நான் அவரைப் பற்றி மனதில் வைத்திருந்ததை என்னை புகழ்வதாக ஏற்றுக் கொண்டு அமைதி காத்தேன். காரணம் அவர் குழந்தை பிறப்புக்கு குறித்த நாட்கள், எதிர்பார்த்த நாட்கள் என்று அத்தனையும் கடந்து போயிருந்தது.  நான் சொன்ன நாள் நெருங்கி வந்தது.  அன்று தான் சரியாக இருக்கும் என்று அவருடன் இருந்த குழுவினர் சொன்ன போது தான் உங்க விசயத்தில் மட்டும் நான் ஒவ்வொருமுறையும் பல வினோதங்களைப் பார்க்கின்றேன் என்றார்.

நான் குறிகளை வெறுப்பதும் இல்லை. அதிக அளவு விரும்புவதும் இல்லை. அதை ஒரு ஆலோசனையாகத்தான் எடுத்துக் கொள்கின்றேன். உழைப்புக்கு அப்பாற்பட்ட ஏராளமான விசயங்கள் இந்த உலகில் இருக்கத்தான் செய்கின்றது. விஞ்ஞானத்திற்கு புரியாத பல புதிர்கள் பல உள்ளன. நம்புவதும் நம்பாததும் அவரவர் அனுபவங்கள் தரும் பாடங்களே. இதை விவாதிக்க வேண்டிய அவசியமேயில்லை. 

ஆனால் இதை வைத்துக் கொண்டே காலம் தள்ளுபவர்களையும், காசாக்க நினைப்பவர்களையும் நினைக்கும் போது தான் பலருக்கும் தந்தை பெரியார் உதவி புரிகின்றார். திருவண்ணாமலை கோவிலில் கர்ப்பகிரகத்திற்கு மிக அருகில் நடுசாம பூஜை வரைக்கும் பலநாட்கள் இருந்துள்ளேன். உணர்வும், உயிரும் ஒன்றாக கலந்திருந்த அந்த காலத்தையும் கடந்து வந்துள்ளேன். 

ஒரு கிறிஸ்துவ மருத்துமனையில் தான் இருவரும் பிறந்தார்கள்.  ஊரிலிருந்து அம்மா முதல் அத்தனை பேர்களையும் வரவழைத்து இருந்தேன்.  

அம்மா குழந்தைகளை பார்க்கும் வரையிலும் இரட்டையர் என்பதை நம்பவே மாட்டேன் என்றார். அந்த சிறிய இரண்டு உருவங்களை கையில் கொடுத்த போது இதென்ன கொடுமையா இருக்கு? என்று ஆச்சரியப்படார்.  நம்ம வம்சத்திலே இப்படி இரட்டை வந்ததே இல்லையே என்றார்.  எனக்கும் வியப்பு தான். விஞ்ஞானத்தை தாண்டியும் பல உண்மைகள் இருக்கிறது என்பதை உணர்த்திய பாடங்கள் இது. விஞ்ஞானத்தை இந்த இடத்தில் பொருத்திப் பார்த்துக் கொண்டாலும் தவறில்லை.. .

இருவரில் ஒருவர் எடைகுறைவு என்றதும் அப்போது தான்   அவரை பாதுகாக்கப்பட் வேண்டிய கருவிகளின் பழுதை  உணர்ந்தார்கள். அழைத்தவர்கள் வந்தபாடில்லை. நிமிடங்கள் மணிகளானது.  நாட்களாக மாறியது. ஆனால் கடந்து கொண்டேயிருந்தே தவிர அடுத்த மூன்று நாட்களில் அவர்களால் எந்த உருப்படியான முன்னேற்பாடுகளையும் செய்து தரமுடியவில்லை. வருத்தங்களை மீறி அப்போதும் விதியின் கரத்தின் விளையாட்டு பொம்மை போலத் தான் நாங்கள் இருந்தோம்.

எல்லாமே முயற்சிக்கு அப்பாற்பட்டது என்பதை மீண்டும் ஒரு முறை உணர்ந்து கொண்டேன். 

முடிந்தவரைக்கும் முயற்சிக்கின்றோம். பல சமயம் ஜெயித்ததும் நம் முயற்சி என்கின்றோம்.  இல்லாவிட்டால்?  ஆனால் நான் எப்போதும் விதி மதியை இரண்டு தண்டவாளங்களாகத்தான் கருதுகின்றேன். அவசர உதவிகள் என்று அடுத்தடுத்து நகர்ந்து கொண்டே வந்த போதிலும் எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிடைக்காமல் போக ஒருவர் மூச்சு விடவே சிரமப்படத் தொடங்கினார்.

ஆனால் அப்போது கூட உஷா கல்யாணி அசரவில்லை.  அவர் பழக்கத்தில் உள்ள மற்ற பகுதிகளில் உள்ள மருத்துவர்களை, அவர்கள் வைத்திருக்கும் கருவிகளை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளும் அளவிற்கு உதவி புரிந்த போலும் காலம் கடந்த ஞானத்தில் முடிவுகள் பயத்தோடு பார்க்கப்பட்டது. 

இயல்பாக இருந்த என்னிடம் சங்கடப்பட்டு இறுதியாகச் சொன்னார்.

அவர் குழுவினர் எடுத்த முடிவுகளை புறந்தள்ளி உங்கள் அறிவியலை விட என் உணர்வுக்ள் சொல்லும் முடிவே மேலானது என்று தான் திருப்பூருக்கு அழைத்து வந்தேன்.   அன்று அவர் திகைத்துப் பார்த்த பார்வை இன்றும் மனக்கண்ணில் நிழலாடுகின்றது.  பெண் குழந்தைகள், அதுவும் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு ஊனமானால் உறவுகள் பார்வையில் எப்படியிருக்கும் என்ற எண்ணங்கள் ஒவ்வொரு பக்கத்தில் இருந்தும் என்னை அம்பாகத்தாக்கியது.

இங்கே குடும்ப வாழ்க்கை முடிவுகள் என்பது ஒருவருடன் முடிந்து போவதில்லை. கணவன், மனைவி என்று தொடங்கி ஒரு பட்டாளமே சம்பந்தப்படுகின்றது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கொள்கைகள். அதுவே சரியென்று திணிக்கப்படுகின்றது. சம்பந்தப்பட்டவர்களின்  உணர்வுகள் மதிக்கப்படுவதேயில்லை. 

காதல் திருமணங்கள் தோல்விக்கு இரண்டு காரணங்கள் 

ஒன்று பணம்  மற்றொன்று உறவுகளிடமிருந்து கிடைக்காத அங்கீகாரம்.  

பணம் இல்லாத போது அடிப்படை வாழ்க்கையே சிதைகின்றது.  அந்த சிதைவு மனபிறழ்வை உருவாக்கி பித்துப் பிடிக்க வைத்து திசை மாற வைக்கின்றது. ஏமாற்றங்களை தாங்க முடியாமல் பரஸ்பரம் ஒருவர் மேல் ஒருவர் குற்றச்சாட்டிக் கொண்டு தாங்கள் கொண்ட காதலை நரக வாழ்க்கைக்கு அர்ப்பணிக்கின்றார்கள். ஆனால் இங்கு பெண் குழந்தைகள் என்பதால் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

ஆனால் நான் உறுதியாக இருந்தேன்.

குழந்தைகளை அழைத்து வந்த பிறகு திருப்பூருக்குள்ளும் தேடல் தொடங்கியது.  எடை குறைந்த குழந்தைகள் சந்திக்கும் சவால்களின் முக்கியமானது வலிப்பு நோய். எப்போது வரும்? எதனடிப்படையில் வரும் என்றே தெரியாது.  தனியாக இருந்த மனைவி தடுமாறிய காலங்கள் அது. 

அடுக்கு மாடி குடியிருப்பு என்பதால் அறிவுரைக்கு மட்டும் பஞ்சமே இருக்காது.  ஆனால் அவரவர் கொண்ட பயத்தின் சாயலை நன்றாகவே நம்மால் புரிந்து கொள்ள முடியும்.  திடீரென்று அலுவலகத்திற்கு அழைப்பு வரும். பதறிக் கொண்டு ஓட வேண்டியிருக்கும்.  வீட்டுக்கும் மருத்துவமனைக்கும் வண்டியில் வைத்துக் கொண்டு அலைந்த பயணங்களை இப்போது நினைத்துப் பார்க்கின்றேன். உயிர் போய் உயிர் வந்தது என்பார்களே. அத்தனையும் அனுபவித்து இருக்கின்றேன். பெண்களின் தைரியத்தை இது போன்ற இக்கட்டான தருணங்களில் தான் பார்க்க முடியும்.  ஆனால் நம் பெண்களின் தைரியம் என்பது இறுதியில் கண்ணீரில் தான் முடிகின்றது. . 

திருப்பூரில சுக்கூர் என்றொரு குழந்தைகளுக்கென்று பிரபலமான மருத்துவர் இருக்கிறார்.  ஆனால் ஒரு பெரிய பிரச்சனை உண்டு. உடனடி நிவாரண்த்தில் தான் கவனம் செலுத்துவார்.  குழந்தைகள் தாங்குமா என்பதைப் பற்றி பிறகு தான் யோசிப்பார். 

ஆனால் அவரும் பயமுறுத்தினார். ஊனம் உருவாகும் வாய்ப்புகளைத்தான் விவரித்தார்.  என் மனம் ஏற்றுக் கொள்ளவேயில்லை.  காரணம் தலைமுறையில் ஊனமானவர்களே இல்லை. அமைதியாகவே வாழ்ந்து ஆராவாரமற்று தான் இறந்துபோயிருக்கிறார்கள்.  விஞ்ஞானம் சொல்லும் கருத்துக்களை மனதில் உள்வாங்கிக் கொண்டே ஒவ்வொன்றாக பிரித்துப் பார்க்கத் தொடங்கினேன்.  முதலில் குழந்தையின் உடம்பில் எதிர்ப்பு சக்தியும் பலமும் வேண்டும். அதன் பிறகே மற்றவற்றை யோசிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அடுத்த மருத்துவரை மனம் தேடத் தொடங்கியது.

தேடலின் இறுதியில் இறுதியாக ஷெரிப் காலணியில் உள்ள சிவகாமி என்ற மருத்துவர் கிடைத்தார். கொண்டு போயிருந்த ஆவணங்களை பரிசோதித்து விட்டு இருவரையும் பார்த்தார். தயங்காமல் கேட்டார். 

"இந்த குழந்தை இதுவரைக்கும் பிழைத்திருப்பதே அதிசயம்" என்றார். 

நான் அமைதியாக இருந்தேன்.

அடுத்த கேள்வி அதைவிட சுவராசியமானது. 

"மேற்கொண்டு எப்படி இவரை வைத்து சமாளிக்கப் போறீங்க?" என்றார்.

மனைவி அழுததை வேடிக்கை பார்த்த என்னை மருத்துவர் வினோதமாக பார்த்தார்.  

"உயிரை விட சம்மதிப்பேன். ஆனால் ஒருவரைக்கூட இழக்க சம்மதிக்க மாட்டேன்" என்ற போது தான் என்னைப் பற்றி முழுமையாக விசாரித்து என் விருப்பப்படி ஒத்துழைக்கத் தொடங்கினார்.

"இயற்கை முறையில் உங்கள் மருத்துவம் இருக்கட்டும். குழந்தைகக்கு உடல் வலு வேண்டும். அதன் பிறகு மற்றதை நான் பார்த்துக் கொள்கின்றேன்" என்றேன். 

"எல்லோரும் இப்படித்தான் சொல்கிறார்கள்.  ஆனால் பொறுமையாய் கடைபிடிப்பதே இல்லை. உடனடி நிவாரணத்தில் தான் இன்றைய உலகமே ஓடிக் கொண்டிருக்கிறது" என்று புலம்பியபடி பால் மற்றும் கோதுமை நிலக்கடலையுடன் சேர்த்து அரைக்க வேண்டிய சமாச்சாரங்களையும் சொல்லி அதை கொதிக்க வைத்து பாலாக மாற்றி குழந்தைகக்கு கொடுக்க வேண்டிய விதங்களைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.  

"முப்பது நாட்கள் கழித்து வாருங்கள்.  எப்படி குழந்தை இருக்கிறது என்பதை வைத்து தான் மேற்கொண்டு முடிவைச் சொல்வேன்" என்று பயமுறுத்தியே அனுப்பினார். 

அவருக்கு இரண்டு இடங்களில் மருத்துவமனைகள் இருந்தது. ஒரு மாதம் கழித்து மற்றொரு மருத்துவமனையில் அவரைப் பார்க்க நாங்கள் சென்றடைந்த போது கூட்டம் இல்லாமல் தனியாக ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். இரண்டு பேரையும் அவர் டேபிள் மேல் படுக்க வைத்த போது அவர் கேட்ட கேள்வி "அந்தக்குழந்தை எங்கே?" என்றார்.

இவர் தான் அவர் என்றோம்.  விக்கித்துப் போய்விட்டார்.  காரணம் ஒரே மாதத்தில் 1.750 கிராம் கூடி மூன்று கிலோவிற்கு அருகே கொண்டு வந்திருந்தோம். இப்போது இருவரும் சமமாக இருந்தனர்.

"நம்ம முடியாத அதிசயத்தை சாதித்து காட்டியிருக்கீங்க" என்று என் கைகளை வாங்கி குலுக்க முற்பட்ட போது மனைவியின் கரத்தை எடுத்து அவர் கையில் வைத்தேன்.

அன்று தான் என் மனைவி என் வேகத்தின் முழுப்பலனை முழுமையாகவும் என் நேசிப்பின் அருமையையும் உணரும் நேரமாக இருந்தது.  

மேலே நாம் பார்த்த அவர் இப்போது எப்படி இருக்கின்றார் தெரியுமா?

"அப்பா.அம்மாவுக்கு சமைக்கவே தெரியல.எதிலும் காரமே இருப்பதில்லை.நாக்குக்கு விளங்கலை"என்கிறார். சாப்பாட்டில் உள்ள காரம் தந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே சிரிக்கின்றேன்.

வார்த்தையிலும் வாழ்க்கையிலும் காரஞ்சாரமாகத்தான் வளர்கின்றார்.  .

நடைவண்டி பயணம் தொடரும்.....

தொடர்புடைய பதிவுக்ள்

வாங்க

போங்க

14 comments:

அது ஒரு கனாக் காலம் said...

தொடர்ந்து படித்து வருகிறேன் ... இந்த தடவை ( ஆனந்த கண்ணீரோடு )

Anonymous said...

ஜோதிஜி எந்த வயதிலும் நம் உடம்புக்கோ அல்லது நம் நெருங்கிய ரத்த சொந்தங்கள்ளுக்கோ வரும் சோதனையை கடப்பதுதான் மிகவும் கடினமான விஷயம். உங்கள் மன உறுதி அபாரம். வாழ்த்துக்கள். இதை ஒரு பாடமாகவே எடுத்து கொள்கிறேன்.

//விருப்பங்களை சுமந்து கொண்டு செல்வதற்குப் பெயர் ஆன்மீகம் அல்ல. அது வியாபாரம்.

உண்மைதான். யோசித்து பார்த்தால் நானும் அப்படிதான் உள்ளேன். ஒவ்வொரு முறையும் கடவுளை வணங்கும் போதும் எந்த ஒரு வேண்டுகோளும் வைக்க கூடாது என்று நினைப்பேன். ஆனால் முடிவது இல்லை. எப்படி மாற்றிகொள்வது என்றுதான் தெரியவில்லை.

ஜோதிஜி said...

திருப்பூர் குறித்து அதன் அனுபவங்களை பத்து வருடங்கள் கழித்து எழுதி அது தற்போது டாலர் நகரம் என்ற பெயரில் தமிழ்மீடியா தளத்தில் வந்து கொண்டிருக்கிறது சுந்தர். பலரும் தொடர்ந்து படிப்பது ஆச்சரியமல்ல. ஆனால் ஒவ்வொரு பகுதியாக திடீரென்று உள்ளே வந்து (தமிழ் மீடியா தளத்திற்கு) மொத்த அத்தியாயத்தையும் படிப்பவர்களைப் பற்றி அந்த தள ஆசிரியர் வியப்பாக என்னிடம் சொன்ன போது நான் உணர்ந்தது என்ன தெரியுமா?

அனுபவங்கள் என்பது சகாவரம் பெற்றது. துறை சார்ந்த அனுபவங்கள் பலருக்கும் பயன்படுவதைப் போல வாழ்க்கை சார்ந்த அனுபவங்கள் ஒருவர் வாழாமல் தான் வாழ்ந்து பார்த்த அனுபவத்தை தந்து விடும்.

பத்து வருடங்கள் கழித்து குழந்தைகள் கடந்து வந்த பாதையை எழுத்தாக மாற்றும் போது உங்கள் எண்ணம் தான் எனக்கும் இதில் வெளிவரும் ஒவ்வொரு பகுதியையும் திருத்திக் கொடுக்கும் அவருக்கும் தோன்றிய உணர்ர்வுக்ள.

நன்றி சுந்தர்.

ஜோதிஜி said...

நாம் மாற்றங்களை விரும்புகின்றோம். ஆனால் நாம் மாறத் தயாராய் இல்லை என்பதும் உண்மைதானே. என் அம்மா குழந்தைகள் குறித்து வளர்ப்பு குறித்து குடும்பத்தில் பொது இடங்களில் பேசும் போது என்னை (இதில் மட்டும்)ச் சொலலி
அவனிடம் போய் கத்துக்கிட்டு வாங்க என்பார்.

நம் கடமை விதைகளை விதைத்து நல்ல முறையில் காப்பது மட்டுமே. ஆனால் எதிர்காலம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்? நாம் அதற்கும் தயாராக இருக்கவேண்டும். அப்போதும் இந்த ஆன்மீகம் குறித்த தெளிவில்லை என்றால் அந்த சமயத்தில் இன்னமும் (நமக்கு) சிரமம் தான்.

எப்போதும் நான் உணர்ந்த உண்மை. தீதும் நன்றும் பிறர் தர வருவதில்லை.

நன்றி நண்பரே.

வடுவூர் குமார் said...

படிக்கும் போதே பதபதைக்குதே!!

semmalai akash said...

இப்போதெல்லாம் கடவுளிடம் இப்படிதான் வேண்டிக்கொள்கிறார்கள் மிக அருமையா பதிவு தொடர்ந்து வருகிறேன். தொடரவும்.

ஜோதிஜி said...

தாண்டி வந்தாகி விட்டது குமார்.

ஜோதிஜி said...

மாற வேண்டும். மாற்றங்கள் வேண்டும்.

Tamil Online said...

மிகவும் அருமையான பதிவு.
மிக்க நன்றி.

Rathnavel Natarajan said...

இரட்டை குழந்தை பிறப்பு (twins) பற்றிய அருமையான பதிவு.
நன்றி திரு ஜோதிஜி. மிகுந்த சிரமம் தான், எனது தங்கைக்கு இரட்டை குழந்தை தான், ஒரு குழந்தை கிட்டத்தட்ட எங்கள் வீட்டிலே வளர்ந்தது. இப்போது ஒருவன் பி.இ.4வது வருடம் படிக்கிறான், இன்னொருவன் பி.எஸ்ஸி, படித்து முடித்து பெங்களூர் டி.சி.எஸ். கம்பெனிக்கு வேலைக்கு சென்று விட்டான்.
எனது இளைய மருமகள் இரட்டையரில் ஒருவர், அவரது சித்தப்பாவிற்கும் இரட்டையர்கள்.
இரட்டையர்கள் பற்றி ஆராய்ச்சி செய்யலாம்.
எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். வாழ்த்துகள் திரு ஜோதிஜி.

ஜோதிஜி said...

உங்கள் தகவல் அதிக மகிழ்ச்சியை தந்தது. தேவியர் இல்லத்தின் வாழ்த்துக்களை அவர்களிடம் தெரியப்படுத்துங்க.

ஜோதிஜி said...

வருக நன்றி

Raja said...

தங்களின் ஒவ்வொரு பதிவிலும் எதோ ஒன்று கற்றுகொண்டே வருகிறேன்.மிக நுட்பமாக, நுண்ணிய உணர்வுகளை எளிதாக எல்லோரையும் சேரும்படி எழுகிறீர்கள்.நிறைய என்னைநானே மாற்றிக்கொள்ளவேண்டும் என அறிவுறுத்தும் பதிவு எந்த தொடர்.

நன்றி ஜோதிஜி
ராஜா

ஜோதிஜி said...

நமக்கு தேடல் இருக்கின்ற வரைக்கும் நம்மை நோக்கி மாறுதல் வந்து கொண்டே தான் இருக்கும் ராஜா