Tuesday, May 16, 2023

சொந்த ஊர் பயணம் (தமிழக போக்குவரத்துத் துறை)

கடந்த 24 மாதங்களாக மகிழ்ச்சியாகத் தொழில் செய்து வருபவர்களின் முக்கியமானவர்களில் இரண்டு குரூப் என் கண்களுக்குத் தெரிகின்றது. ஒன்று தனியார் பள்ளி மற்றும் தனியார் கல்லூரிகளை வைத்திருக்கும் உரிமையாளர்கள். எப்போதும் இல்லாத அளவுக்கு அள்ளிக் குவிக்கின்றார்கள். மற்றொருவர் தனியார் பேருந்து உரிமையாளர்களாக இருப்பார்கள் என்றே யூகித்துள்ளேன். வைத்தது தான் சட்டம் என்கிற அளவுக்கு வாழ்வாங்கு வாழ்கின்றார்கள். அரசுப் பேருந்து கட்டண விகிதங்களை விட அவர்கள் கட்டணம் குறைவாக இருக்கின்றது என்பது இந்த முறை பயணத்தின் போது பார்த்தேன். கொஞ்சூண்டு பர்மிட் உடன். பெரும்பாலும் இருக்குமா? இருக்காது என்பது மாப்பிளை வசூல் கணக்கில் உள்ள பட்டியலில் பார்த்தால் நமக்குத் தெரிய வரும்.
முக்கியமாக அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கை முற்றிலுமாக குறைக்கப்பட்டுள்ளது. காரணம் பழைய பேருந்துகள் முற்றிலும் ஓட முடியாத அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது. பழுது பார்க்க நேரமில்லை. விருப்பமில்லை. காசு இல்லை. பழுது பார்த்து தடத்தில் ஓடினால் தனியார் இடம் காசு வராது.

இதன் பாதிப்புகள் பல ஊர்களில் பார்த்தேன். தனியார் வாகனங்களில் கூட்டம் அள்ளுகின்றது. விசேடக் காலம் மட்டும் அல்ல. சாதாரணக் கிராமங்களுக்கு இணைப்பு பேருந்து வசதிகளை அளித்துக் கொண்டு இருந்த வழித்தடங்களில் இந்த பெருச்சாளிக்கூட்டம் கை வைத்துள்ளது. என்ன ஒப்பந்தம்? யாருடன் ஒப்பந்தம்? மாதம் இதன் மூலம் மட்டும் எத்தனை நூறு கோடி வசூலாகின்ற விபரங்கள் மேல் மட்ட அளவில் தொடர்பு இருந்தால் தெரிய வாய்ப்புண்டு.

இரண்டு பெருச்சாளிகளில் யார் ஆட்சியில் இருந்தாலும் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் என்பது மொத்தமாகவே 25 சதவிகித மக்களுக்கு நூறு சதவிகிதம் உடையதாக இருக்கும். மற்றொரு 25 சதவிகிதம் வாங்கி விற்க என்ற நிலையில் இருப்பவர்களுக்குச் சென்று சேரும். ரேசன் அரிசியைத் தங்கம் போல நினைப்பவர்கள் ஒரு பக்கம். அதனைக் கோழித் தீவனத்திற்கு விற்பவர்கள் மற்றொரு பக்கம். மீதம் ஐம்பது சதவிகிதம் ஊழலுக்கு என்பது இங்கேயுள்ள எழுதப்படாத பொது விதி.

பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம் என்பது கிராமத்து மாணவிகளுக்கு பல வகையில் உதவுவதை இந்த முறை ஆசிரியர் ஒருவரிடம் பேசிய போது புரிந்து கொண்டேன். தங்கள் கிராமத்திலிருந்து தினமும் 15 ரூபாய் கொடுத்து (தினமும் 30 ரூபாய் மாதம் 1000 ரூபாய்) குறிப்பிட்ட பயிற்சிகளுக்கு வர முடியாமல் இருந்த மாணவிகள் தற்போது அதிக அளவில் இந்த திட்டத்தின் மூலம் பயணிப்பதைப் பார்த்தேன். நான் மேலே சொன்ன மாதிரி பாதிக்குப் பாதி திமிர் எடுத்த கோஷ்டிகளும் வெளியே சுற்றிப் பல பஞ்சாயத்துக்களை வீட்டுக்குக் கொண்டுவருவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

முன்பு இருந்த பெருச்சாளி ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கியது. இப்போது இந்தப் பெருச்சாளி 4000 பேருந்துக்கு ஒப்பந்தம் போட்டுள்ளதாக அறிவித்து உள்ளது. ஆனால் எல்லா வண்டிகளும் சிவ சிவ சொர்க்க ரதம் போல இறுதி யாத்திரைக்குச் செல்ல உகந்ததாகவே உள்ளது. முதுகுவலியை உருவாக்கி விடுமோ என்று நின்று கொண்டே வந்தேன்.

இந்த முறை நான் அதிகமாக ஆச்சரியப்பட்டது எங்கு திரும்பினாலும் 18 முதல் 23 வயதுக்குள்ள பெண்கள், மாணவிகள் அதிகம் தென்படுகின்றார்கள். வீட்டுக்கு ஒரு பட்டதாரி என்பதற்காக மூன்றாண்டு தொகை என்பதனை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. கல்லூரி அனுபவம் கிடைக்கும். அவ்வளவுதான். சாதாரண வாழ்க்கை. சராசரி வாழ்க்கை. எட்டி மிதித்து உயர்ந்து மேலே வரக்கூடிய மாணவிகளை விரல்விட்டு எண்ணி விடலாம்.

பயணங்களில் மாணவர்கள், மாணவிகள் ரீல்ஸ் மற்றும் ஸ்டோரி என்பதனை மட்டுமே பார்க்கும் வினோதத்தைப் பார்த்தேன். விரலால் தள்ளிக் கொண்டே சென்று கொண்டேயிருக்கும் அவர்களின் லாவகம் எனக்கு எதிர்காலப் பயத்தை உருவாக்கியது. இவர்கள் கல்லூரியை விட்டு வெளியே வந்த சமயங்களில் நிச்சயம் செயற்கை நுண்ணறிவுத் திறன்கள் சந்தையில் எத்தனை வேலைகளைக் காவு வாங்கியிருக்குமோ? எத்தனை துறைகளை மாற்றியிருக்குமோ? அழித்து இருக்குமோ? இனி வரும் காலங்களில் நாலைந்து திறமைகள் நாலைந்து மொழிகள் கற்று இருப்பவர்கள் மட்டுமே அங்கீகாரத்தைப் பெற வாய்ப்புண்டு.

காரைக்குடி, தேவகோட்டை மற்றும் அறந்தாங்கியைச் சுற்றிலும் உள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் பிரதமரின் கிராம இணைப்புச் சாலை என்பதனை மிக அட்டகாசமாக (நேர்மையான ஒப்பந்தக்காரர்) போட்டு உள்ளனர். வடிவேல் சொன்ன துபாய் சாலை போலவே உள்ளது. சாலை வசதிகள் காரணமாகக் கடற்கரையோரங்களில் இருந்து துள்ளத்துடிக்க உயிர் மீன்களை காரைக்குடி வரைக்கும் சுவைக்கின்றார்கள். மற்றொரு ஆச்சரியம் இந்தப் பகுதியில் எந்த இடத்திலும் சுங்கச்சாவடி இல்லை.

அறந்தாங்கியிலிருந்து ஏம்பல் செல்லும் வழியில் ஒரு கிராமத்து உணவகத்தில் சாப்பிட்டேன். ஒரு இட்லி ஐந்து ரூபாய் ஒரு வடை ஐந்து ரூபாய். ஒரு டீ எட்டு ரூபாய். நீண்ட நாளைக்குப் பிறகு சுடச்சுட பாட்டியம்மா கொண்டு வந்து இறக்க கதக்களி ஆட்டம் போட்டேன். காரச் சட்னி சுவையும், பச்சைமிளகாய் சேர்க்காத தேங்காய் சட்னியுடன் முருங்கைக்காய் சாம்பார் என்பதெல்லாம் உண்டு பார்த்தால் தான் தெரியும்? சொர்க்கத்தை எங்கங்கோ தேடுகின்றார்கள்?

ஊருக்குள் நுழைந்து வெளியே வந்து கரூர் எல்லையைத் தாண்டி கொங்கு மண்டலத்திற்குள் நுழையும் வரை தின்ற ருசியான உணவுகள் கொடுத்த மதமதப்பு நம்மை சொக்க வைக்கின்றது. வாழ்வே உணவுக்குத் தானே என்று அங்கே வாழ்பவர்கள் போல மதியம் ஒரு குட்டி தூக்கம், சாயங்காலம் நொறுக்குத் தீனி கடைசியாக இரவு எட்டு மணிக்குள் தூங்க வைத்து விடுகின்றது.

சீக்கிரம் ஊர்ப்பக்கம் மூட்டையைக் கட்ட வேண்டும்.

No comments: