Sunday, May 21, 2023

தாய் மண் நினைவோடு வாழும்

 அன்புள்ள ஜோதிஜி.

இது புத்தக விமர்சனம் கிடையாது. புத்தகம் பற்றியும் அதில் கூறப்பட்ட சம்பவங்கள் பற்றியும் ஒரு மனம் திறந்த மடல்.

இந்த புத்தகம் கொஞ்ச நாளைக்கு முன்னால் என் கண்ணில் பட்டது. இதைப் புரட்டி சாம்பிள் கூடப் பார்க்கவில்லை அப்போது.




காரணம் ஒன்று தான். தலைப்பைப் பார்த்தால் இது ஒன்று தலைவர் பிரபாகரனைப் போற்றுவது போல் போற்றி அதே நேரம் அவரை ஒரு நாத்திகராகவும் முருகனை முப்பாட்டன் என்று கூறுபவராகவும் காட்டி இருப்பார்கள். இல்லையெனில் கிறிஸ்தவக் கைக்கூலியாகவும் போர் வெறி பிடித்த மனநோயாளியாகவும் காட்டி இருப்பார்கள்.இந்த இரண்டு வகைப் புத்தகங்களுக்குத் தான் இப்போது டிமாண்ட்.இதுவும் அப்படி ஒன்றாக இருக்கும் என்று ஒதுக்கி விட்டேன்.

ஆசிரியரின் 5 முதலாளிகளின் கதை படித்து விட்டு அவர் பிற நூல்கள் பார்த்ததும் அவற்றுக்குச் சம்பந்தமே இல்லாமல் இது இருக்க வாசிக்கலாம் என்று எடுத்தேன். சனிக்கிழமை இரவு ஆரம்பித்து ஒரே மூச்சில் முடித்து விட்டேன். உங்களின் இந்த புத்தகத்துக்கு இலங்கைத்தமிழர்களிடம் இருந்தும் ஆதரவு கிடைத்து இருக்குமா என்பதும் சந்தேகமே. காரணம் எங்களில் பெரும்பாலானவர்களுக்கு இன்னமும் தந்தை செல்வாவும் ஜி.ஜி.பொன்னம்பலமும் அவரின் 50க்கு 50 கோரிக்கையும் கூட நியாயமானது தான். அதை நீங்கள் குறை கூறினால் அவர்களுக்குப் பிடிக்காது. ஆனால் நீங்கள் உண்மையை அப்படியே எடுத்து படம் பிடித்துக் காட்டி விடுகிறீர்கள்.

இதற்குப் பெயர் வரலாற்று நூலா?

உங்கள் கடந்த கால வாழ்க்கையை -அதில் உங்களுக்கு எழுந்த சோகங்களைக் கேள்விகளை,அந்த கேள்விகளுக்கு நீங்கள் தேடிய பதில்களை . அவற்றைக் கண்டுபிடித்த போது சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்தவற்றை ஒருவர் கூட இருந்து நேரில் பார்த்தவர்கள் போல எழுதினால் உங்களுக்கு எப்படி இருக்கும்?

1972 ல் சிறிமாவோ பண்டாரநாயக்கா கொண்டு வந்த தரப்படுத்தல் தான் ஆயுதப் போராட்டம் என்கின்ற அளவுக்கு இளைஞர்கள்-யாழ்ப்பாண இளைஞர்கள் போக காரணம்.

அதுவரைக்கும் படிப்பு படிப்பு என்று மட்டுமே இருந்தவர்கள் அவர்கள். எல்லா கல்லூரிகளிலும் வேலைத்தளங்களிலும் மருத்துவராகவும் பொறியியலாளராகவும் அலங்கரித்தவர்கள்-சிங்களப் பகுதிகள் உட்பட.
எனக்கும் ஆயுதப்போராட்டத்துக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது.

நாங்கள் வளர்ந்த போது சிவகுமாரன் குட்டிமணி போராட்டத்திலிருந்து ஆயுதப்போராட்டம் முன்னேறி இருந்தது.
ஆனால் ஆயுதப்போராட்டம் ஆரம்பித்த போது சொன்ன காரணங்கள் சில மாறிப்போய் இருந்தன.

1972 இல் கொண்டுவரப்பட்ட தரப்படுத்தல் இன ரீதியானது.70 வித சிங்களவர் 30 வித சிறுபான்மையோர்.எனவே பல்கலைக்கழக அனுமதியும் அதே வீதத்தில் தான் இருக்க வேண்டும் என்கின்ற விதமான தரப்படுத்தல்.

இது கல்வியை மட்டுமே நம்பி இருந்த யாழ் சமூகத்துக்குப் பேரிடியாக இருந்தது.இதில் தமிழ் மாணவர்களுக்குத் துரோகம் இழைக்கப்பட்டு விட்டது என்று பிரச்சாரம் செய்த அமிர்தலிங்கத்தின் மகன் காண்டீபனுக்கும் பல்கலைக்கழக அனுமதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிட வேண்டிய விடயம்.
நாங்கள் வளர்ந்து வரும் போது எங்களுக்குக் கற்பித்த போராட்ட வரலாறு தந்தை செல்வா அருணாச்சலம் ராமநாதன் போன்றவர்களை மட்டும் அல்ல ஜி.ஜி பொன்னம்பலத்தையும் தமிழர்களுக்காகப் போராடிய சிறந்த தலைவர்களாக தான் காட்டி இருந்தார்கள்.

தமிழர்களுடைய போராட்டம் ஜி.ஜி.ஆல் 50 க்கு 50 கேட்கப்பட்டு பிரித்தானிய யாப்புகள் எல்லாமே தமிழருக்குத் துரோகம் பண்ணி பின்னர் அகிம்சையில் தந்தை செல்வா போராடி -தனிச்சிங்கள பிரகடனத்தை எதிர்த்து. மற்றும் 50க்கு 50 கேட்டு

இந்த 50 க்கு 50 என்றால் என்ன என்பதை எங்களில் பலர் சரியாக புரிந்து கொண்டு இருக்கிறார்களா என்பது கேள்விக்குரியது.
நான் கூட 1990 வரைக்கும் அது என்ன என்றே தெரியாமல் அது நியாயமான போராட்டம் என்றே நினைத்து வந்தேன்.

கடந்த கால சுதந்திரத்துக்கு முற்பட்ட யாப்புகளில் மலையக இந்திய வம்சாவளித்தலைவர்கள் முக்கியமாக நடேச அய்யர் போன்ற உண்மையான தலைவர்கள் கூட இடம்பெற்று இருக்க அவை தமிழர்களால் ஏன் நிராகரிக்கப்பட்டது? அப்படி நிராகரித்த தலைவர்கள் எல்லோரும் ஏன் ஒற்றுமையாக நின்று ஓர் அரசியல் யாப்பைக் கொண்டு வர முன்வரவில்லை?

50 க்கு 50 கேட்ட ஜி.ஜி எதற்கு இந்திய வம்சாவளி மக்களை வெளியேற்றச் சம்மதித்தார்? எல்லா யாப்புக்களையும் நிராகரித்த ஜி.ஜி., 1948 இல் கடைசியில் 1949 இல் அமைந்த முதலாவது அமைச்சரவையில் அமைச்சர் பதவி பெற்றுக்கொண்டு தமிழர் உரிமையைக் காற்றில் பறக்கவிட்டார்.

ஜீஜி மலையக மக்களுக்குத் துரோகம் பண்ணி விட்டார் என்று அவரை விட்டுப் பிரிந்த தந்தை செல்வா ஏன் சாஸ்திரி பண்டா ஒப்பந்தம் மூலம் இந்திய வம்சாவளி தமிழர் வெளியேற்றப்பட்டதற்கு எந்த எதிர்ப்பும் காட்டவில்லை?

இதை எல்லாம் எதிர்த்து அமைத்த தமிழர் விடுதலைக்கூட்டணி அதனுடன் இணைந்து இருந்த -தமிழீழம் வேண்டும் என்ற அதன் கோரிக்கையை அப்படியே ஏற்றுக்கொண்ட அஷ்ரப் க்கு யாழ் தேர்தல் தொகுதியில் ஓர் ஆசனம் கூட ஒதுக்காமல் அவரை ஓரம்கட்டி கடைசியில் மனம் வெறுத்துப்போய் தனியாக முஸ்லீம் காங்கிரஸ் ஆரம்பிக்க காரணமாக இருந்தது?

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் விடை தேடிய போது கிடைத்தது பதில் ஒன்று தான்.

அரசியல் தலைவர்களின் குறுகிய அரசியல் சிந்தனை-சுயநலம்.அவ்வளவு தான்.
1972 இல் தமிழ் மக்களின் கல்விக்குத் துரோகம் இழைத்தது என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்ட அதே நேரத்தில் யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் உயர்குடி மக்களுடன் ஒரே மாதிரி அமர்ந்து கல்வி கற்க கூட மறுக்கப்பட்டது.அவர்கள் தரையில் தான் அமர வேண்டும். இந்த விபரங்கள் கே டானியல் அவர்கள் எழுதிய நாவல்களில் காணலாம். நான் கே டானியல் இந்த நாவல்களைப் படிக்கிறேன் என்று தெரிந்ததற்கே 1986-90 களில் எங்கள் வீட்டில் அதற்குத் தடை விதிக்கப்பட்டது என்றால் 1972 க்கு முற்பட்ட காலத்தில் நிலைமை எப்படி இருந்து இருக்கும் என்று யோசித்துப் பார்க்கலாம். 1947 இல் எல்லோருக்கும் கல்வி என்ற செயல்திட்டத்தை கன்னங்கரே என்ற அமைச்சர் கொண்டு வந்த போது கிழக்கிலங்கை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் மட்டுமே ஆதரித்தார்.தந்தை செல்வா உட்பட அனைவரும் எதிர்த்தனர்.இவர்கள் எப்படி ஒட்டுமொத்தத் தமிழ் இனத்துக்குமான விடுதலை பற்றி யோசித்து இருப்பார்கள்?

தாய்மொழியில் கல்வி என்பதே சிங்களவர் கொண்டு வந்ததால் தான் எங்களுக்கும் கிடைத்தது.இல்லையெனில் ஆங்கிலத்தில் படிப்பதையே பெருமைப்பட்டுக் கொண்டாடி இருக்கும் எங்கள் யாழ் சமூகம்.

உண்மையில் எங்கள் முன்னோர்கள் விட்ட பிழை.

சர் பொன் அருணாச்சலம் மற்றும் சர் பொன் ராமநாதன் இருவரும் கொழும்பு தமிழர்கள். நீங்கள் குறிப்பிட்ட படியே பிறந்த யாழ்ப்பாணத்தோடு எந்த தொடர்பும் இல்லாதவர் மட்டும் அல்ல யாழ்ப்பாணம் என்று சொல்வதையே தவிர்க்கும் தமிழர்கள்.

அவர்களுக்குச் சுதந்திர இலங்கையின் அதிபர் பதவி தங்களுக்குக் கிடைக்கும் என்கின்ற மிதப்பு எண்ணமே அவர்கள் ஒன்று பட்ட இலங்கையை விரும்பக் காரணம். ஏனெனில் அப்போதைய இந்த உயர்பதவி வகிக்கும் யாழ் வம்சாவளி கொழும்புத் தமிழர்கள் என்றால் சிங்களவர்களை ஒதுக்க மாட்டார்கள்.ஆனால் அவர்களை மேட்டுச் சிங்களவர் என்றே குறிப்பிடுவார்கள்.-அதாவது மூடர்கள் என்று.

உண்மையில் இந்த கறுவாத்தோட்டத்து தமிழர்கள் (இவர்களின் பங்களாக்கள் கொழும்பில் கறுவாத்தோட்டம் என்னும் பகுதியிலேயே செறிந்து இருக்கும். அதனால் அப்படிச் சொல்வது வழமை ) உண்மையில் தமிழர்கள் அல்ல. இவர்களும் ஜெ ஆர் போன்ற உயர் மட்டக் கிறிஸ்தவச் சிங்களவர்களும் ஒரே இனம்.-அதிகார வர்க்க பிரிட்டிஷ் அடிப்பொடிகள்.

அருணாச்சலம் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக அமைப்பை உருவாக்கினார் என்றாலே அதிசயம். அவர் சிங்களவர்களைச் சேர்த்து உருவாக்கக் காரணம் சிங்களவர்களுக்கும் சேர்த்துத் தானே தலைமை ஏற்கலாம் என்கின்ற எண்ணம் மட்டுமே.

காலனிய ஆதிக்கத்துக்கு முன்பிருந்தே இருந்த சிங்கள தமிழ் முன்விரோதங்கள் தெரிந்த எந்த தமிழர்களும்-அவர்கள் உண்மையாக இருந்திருந்தால் ஒன்று பட்ட இலங்கையைக் கேட்டு இருக்க மாட்டார்கள்.

சர்.பொன் ராமநாதன் மற்றும் அருணாச்சலம் ஆகியோர் ஒன்று பட்ட இலங்கையைக் கேட்ட போதே அவர்களுடன் சேர்ந்து இருந்த பண்டாரநாயக்கா யாழில் பேசும் போது வடக்கு கிழக்கில் சுயேச்சை அதிகாரம் கொண்ட தமிழர் பிரிவுகளும் மத்தியில் பொது அரசும் அமையும் என்று பேசியவர்.-அவர் அப்போதே கோடிட்டி காட்டினார். சேர்ந்து போராடுவோம் ஆனால் கொஞ்சம் தள்ளியே நிற்போம் என்று. இவர்கள் அப்போதே சுயேச்சை கேட்டு இருந்தால் கண்டிப்பாக இனப்பிரச்சனை சுதந்திரத்தின் போதே தீர்ந்து இருக்கும்.

சிங்களவர்கள் தங்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்ற எண்ணத்தில் ஒன்றிணைந்த போது தமிழ்த்தலைவர்கள் தங்களுக்கான அமைச்சர் பதவிகளுக்கும் சரிசம ஆசனங்கள் பெறுவதன் மூலம் ஒன்று பட்ட அரசின் அதிபராக தங்கள் வருவதற்கும் சந்தர்ப்பங்களை மட்டுமே பார்த்தார்கள்.

ஆசை பேராசையான விபரீதம்.சிங்களவன் தமிழனால் ஆளப்படக்கூடாது என்று அவர்கள் தெளிவாக இருக்கும் போது தமிழர்களும் சிங்களவர்களால் ஆளப்படக்கூடாது என்கின்ற தெளிவான சுயநலமற்ற முடிவை எடுக்க இவர்களால் முடியவில்லை.

இவை எல்லாம் நான் பிறப்பதற்கு முன்னால் நடந்த விடயங்கள். இதில் எங்களுக்குச் சொல்லித்தரப்பட்டத்தைக் கேள்வி கேட்காமல் நம்பிய காலத்திலிருந்து ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த காலத்திலேயே என் வாழ்வின் அனுபவங்கள் அங்கம் ஆகின்றன. எனவே இவை கேள்விகளாக மட்டுமே நின்று விடுகின்றன..

எல்லோரும் பதவி வெறியில் திரிந்தார்கள்.-ராமநாதன் தொடக்கி டக்ளஸ் ,கருணா கடந்து இந்த பட்டியல் நீள்கிறது.

ஆனால் பதவியைத் துச்சம் என மதித்து தன் இனத்தின் விடுதலையே ஒரே லட்சியம் என்று ஒரே ஒரு தலைவன் உருவானான். பல விமர்சனங்களுக்கு மத்தியிலும் தனி ஒழுக்கம் தவறாது தன்னை நிலை நாட்டிக் காட்டினான். அந்த தலைவனின் பின்னால் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் திரண்டார்கள். உயிரைத் தியாகம் செய்தார்கள்.

தலைவர் பிரபாகரனை உள்ளது உள்ளபடி அப்படியே வெளிக்காட்டி விட்டீர்கள்.-அவரின் பக்தியையும் கூட. இன்றுவரைக்கும் அவரை நாத்திகராக பதிவு செய்தவர்களே அதிகம். தமிழகத் திராவிடக் கொள்கைக்கு அப்பாற்பட்டு நாங்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்களாகவே எல்லா மதத்தினரும் இருந்தோம்.

96 இல் வன்னி விட்டு வெளியேறிய நான் 2003 இல் பாதை திறந்த பிறகு வன்னிக்கு மறுபடி போன போது நான் விட்டு வந்த வன்னிக்கும் அப்போதைய வன்னிக்கும் வித்தியாசம் தெரிந்தது. ஒரு தனி நாட்டுக்குள் தனி அரசுக்குள் உள்நுழைவது போல் பிரமிப்பு வந்தது. என் வாழ்நாளில் அந்த தனி அரசு உருவாவதையும் வளர்ந்ததையும் பார்த்தேன். துரதிர்ஷ்ட வசமாக அது விழுந்ததையும் பார்த்தேன்.

இன்று எல்லாமே எரிந்து நீறாகிப் போய்விட்டது. எரிந்து முடிந்த நிலங்களும் இறந்து போன உறவுகளும் வாழ வழியற்று நாதியற்று ஊனமுற்று நிற்கும் ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகளும் மட்டுமே இப்போது அந்த அரசின் எச்சமாக தெரிகின்றது. தமிழீழம் என்கின்ற சுதந்திர தமிழ் நாடு என்பது வெறும் கானலாகிப் போய் விட்டது. எங்களுக்கு அடுத்த தலைமுறையினரில் இந்த தியாகங்களை உணர்வுப்பூர்வமாக நினைக்கும் மக்கள் கூடக் குறைந்து வருகிறார்கள். காலப்போக்கில் பிரபாகரன் என்னும் பெயர் ஓர் அரக்கனின் பெயராக வெற்றி பெற்றவர்களால் மக்கள் மனதில் பதிக்கப்படும் . அதை அடுத்த அடுத்த தலைமுறைகள் நம்பவும் கூடும். அப்படி ஒரு தருணத்தில் உங்களின் இந்த புத்தகம் எங்கள் தலைமுறை வாழ்ந்த வாழ்வை, எங்கள் தலைமுறை சந்தித்த போராட்டத்தை, அதன் நியாயத்தை அதை முன்னெடுத்த தலைவனின் தனித்துவத்தை, நேர்மையை, எதற்கும் விலைபோகாது மக்கள் விடிவுக்குத் தமிழீழம் மட்டுமே தீர்வு என்கின்ற அவர் நம்பிக்கையைப் பற்றி நின்ற விதத்தை உண்மையைத் தேடும் அடுத்த தலைமுறைக்குச் சொல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.

எந்த ஞாபகங்கள் என்னை 10 வருடம் முன்னர் என்னைத் தூக்கமாத்திரை இல்லாமல் தூங்க முடியாமல் பண்ணியதோ எந்த நினைவுகள் இன்றுவரை நெஞ்சில் வேகாத கனலாக இருக்கிறதோ எதை மறக்க நான் தவியாய் தவித்தேனோ அதற்குள் என்னை மறுபடி தள்ளி விடுகிறது இந்த நூல்.

இந்த நூலை வாசிக்க வேண்டியவர்கள் வேறு யாரும் இல்லை.இப்போதைய இலங்கைத்தமிழ் அரசியல் வாதிகள் -அனைவரும். தங்கள் முன்னோர்கள் விட்ட பிழைக்கான தீர்வு அவர்கள் தான் சொல்ல வேண்டும். தலைவர் ஒவ்வொரு மாவீரர் உரையிலும் சொல்லும் வாசகம் "போரை நாங்கள் விரும்பவில்லை.ஆனால் போர் எங்கள் மீது திணிக்கப்பட்டது.- திணித்தவர்கள் சிங்களவர் இல்லை. அன்று ஒன்று பட்ட இலங்கைக்குப் பாடுபட்ட பேராசை பிடித்த தமிழ்த்தலைவர்கள்.

முள்ளிவாய்க்காலில் இருந்து வெளியேறிய மக்களுக்கு வைத்த முகாம்களின் பெயர்களில் ராமநாதன் அருணாச்சலம் பொன்னம்பலம் என்று வைத்த சிங்களவன் தெளிவானவன். அன்று அவர்கள் விட்ட பிழை தான் இன்று இந்த அவலத்துக்குக் காரணம். காலம் சுழன்று மறுபடியும் கறுவாத்தோட்ட தமிழர்களிடம் தமிழனின் இனப்பிரச்சனை போய்ச் சேர்ந்து விட்டது.அது தான் நிஜம். மீட்சி இல்லாத நிஜம்.

தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு என்பார்கள். வீரமும் காட்டிக்கொடுப்பும் அருகருகே இருக்கும்.அது தான் அந்த தனிக்குணம்.

கட்டபொம்மனுக்கு எட்டப்பன்
பண்டார வன்னியனுக்குக் காக்கை வன்னியன்
பிரபாகரனுக்கு கருணாகரன்.
பெயரில் கூட rhyming இருக்கும் பாருங்கள்.அது தான் தமிழன் வரலாறு.

இதை எல்லாம் பார்க்கும் போது புலிகளின் பாடல் ஒன்று ஞாபகம் வரும்.
நாயே உனக்கும் ஒரு நாடா எச்சில் நாடும் உனக்கு வரலாறா ? தாயாள் புலம்புகின்ற வேளை மாற்றான் காளைக்குக் கழுவுகிற கோழை
அருணாச்சலம் ராமநாதன் தொடக்கி இன்று கருணா அங்கஜன் பிள்ளையான் சுமந்திரன் வரைக்கும்.
இன்று ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்து ஒரு தசாப்தத்துக்கும் மேலாக வருடங்கள் கடந்து விட்ட நிலையில், இன்றைய இலங்கையை நினைக்க வேதனையாக இருக்கிறது. சிறு வயதில் படித்த குரங்கு அப்பம் பங்கிட்டுக் கொடுத்த கதை ஞாபகம் வருகிறது.

சிங்கள அரசியல் வாதிகள் தங்கள் பதவிகளைத் தக்க வைக்க இனவாதத்தை ஆயுதமாக்கி தமிழனைச் சிங்களவனுக்கு எதிரியாகி,தமிழனின் உரிமையை மறுத்தார்கள். தங்கள் சொந்த நிலத்தில் தமிழர்கள் உரிமைகளோடு வாழ அனுமதிக்க முடியாமல் அதைச் சகிக்க முடியாமல் இனக்கலவரங்களை உண்டு பண்ணினார்கள். தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கிய போது அமைதியாக பேசித்தீர்க்காமல் யுத்தம் செய்வதற்காகக் கடன் வாங்கியே நாட்டை கடனாளி ஆக்கினார்கள்.

இன்று கடன்காரர்கள் நாட்டைப் பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள். தமிழனின் நிலம் மட்டும் அல்ல சிங்களவனின் நிலமும் பறி போகிறது. இந்திய அரசு தமிழர் பிரச்சினையைத் தவறான கண்ணோட்டத்தில் பார்த்தது. உண்மையில் தமிழர் நலனில் அக்கறையோடு செயற்பட்டு இருந்தால் இன்று இந்திய அரசுக்கும் இலங்கை மீது ஒரு பிடிமானம் இருந்து இருக்கும்.

இப்போது ஸ்ரீலங்கா chi -lanka வாக மாறிக்கொண்டு வருவதைப் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் வேதனை என்ன என்றால் இன்றைய பொருளாதார நெருக்கடி மற்றும் சீன ஆக்கிரமிப்புக்கு மத்தியிலும் தமிழர் நிலங்களில் விகாரைகள் கட்டுவதில் மட்டும் தான் இராணுவமும் அரசும் புத்த பிக்குகளும் முனைப்பாக இருக்கிறார்கள். என்றாவது ஒரு நாள் சீனா முழுமையாக இலங்கையைக் கபளீகரம் செய்யும் பொது தான் இவர்களுக்குப் புத்தி வரும் போலும்.

இதற்கு இடையில் யுத்தம் முடிவுக்குப் பிறகு தமிழர் பகுதியில் சில அரசியல் வாதிகள் இந்த யுத்தம் தேவையற்ற ஒன்று என்று மக்கள் மத்தியில் பதிய வைக்க முயற்சிக்கிறார்கள். உண்மையில் இது தேவை இல்லாத யுத்தம் தானா என்று கேட்டீர்களானால் ….

நிச்சயமாக தேவையே இல்லாத யுத்தம் தான் - சுதந்திரத்துக்கு முற்பட்ட காலத் தமிழ் தலைவர்கள் தங்கள் சுயநலத்தைக் கருதாமல் அன்று ஒன்று பட்ட இலங்கை வேண்டும் என்று கேட்டு முட்டாள்தனம் எதுவும் செய்யாமல் அப்போதே பிரிந்து போக அல்லது சுயாட்சி உடைய தமிழ் ஈழத்தைக் கத்தி இல்லாமல் யுத்தம் இல்லாமல் பெற்று இருந்தார்களே ஆனால் - இந்த யுத்தத்துக்குத் தேவையே இருந்து இருக்காது.

இன்று நாங்கள் கொடுத்த விலைகளுக்குப் பலன் இல்லாமல் போய்விட்டது. யுத்தம் தந்த வடுக்களும் வலிகளும் இழப்புக்களும் எங்கள் தலைமுறையின் இறுதி மூச்சு வரை எங்களை மன அழுத்தத்துக்கு உள்ளாக்கிக் கொண்டு இருக்கப்போகிறது. அதே நேரம் நிகழ் கால இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியும் தொடரும் நெருக்கடிகளும் இலங்கை என்கின்ற பச்சைத்தீவை கடன் தீவாக மாற்றி முழு மக்களையும் இன்னொரு நாட்டுக்கு அடிமையாக்கிக்கொண்டு இருக்கிறது. இலங்கைத் தமிழர்களைப் பொறுத்த வரை எங்களுக்கு இழப்பதற்கு இனி எதுவுமே இல்லை. எல்லாவற்றையும் இழந்து விட்ட நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் உரிமைகளை இழந்து கொண்டு இருக்கின்ற, நிலங்களை இழந்து கொண்டு இருக்கின்ற சிங்களவரை வேதனையோடும் விரக்தியோடும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

காலம் கடந்து தமிழ் நிலப்பகுதியிலாவது தங்கள் பிடியை வைத்து இருக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தியா தனது தூதரகங்களை அமைப்பதையும் கலாச்சார மண்டபம் கட்டுவதையும் ஈழத்தமிழருக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கிறோம் என்கின்ற போர்வையில் தமிழர் நிலப்பகுதியில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்த பாடுபடுவதையும் கூட வேதனை கலந்த சிரிப்புடன் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். எங்களைப் பொறுத்தவரை எல்லாம் இழந்தாகி விட்டது.

எங்களுக்கு ஒரு தலைவன் வந்தான்.அவன் நேர்மையாய் நின்றான். சொன்னதைச் செய்தான்.செய்வதை மட்டும் சொன்னான். ஈற்றில் தன உயிரையும் கொடுத்து முடித்துக்கொண்டான் என்கின்ற திருப்தியுடன் வாழலாம். அவ்வளவு தான்.

இவ்வளவு உண்மைகளையும் தேடி எடுத்து நூலாகிய உங்கள் உழைப்புக்கு தலைவணங்குகின்றேன்.
தாய் மண் நினைவோடு வாழும்
யுகக்கவி
15/10/2022
(புத்தகத்திற்கான முன் பதிவு விபரங்கள் கீழே)

* முன்பதிவு செய்ய கடைசி நாள்: மே 27, 2022 * போன் மூலம் முன்பதிவு செய்ய: 8148080118 * வெளிநாட்டவர்கள் வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 8148080118 புத்தகங்கள் ஜூன் முதல் வாரம் அனுப்பி வைக்கப்படும். ஆன்லைனில் ஆர்டர் செய்யும் லின்க்


No comments: