வாசிக்கத் துவங்கும் முன்
1300 வார்த்தைகள். முக்கியமான வட மாநிலத் தொழிலாளர்கள் குறித்து உண்மை நிலவரங்கள்.
நான் எழுதத் தொடங்கிய நாள் தொடங்கி நேற்று வரை நெருங்கிய நண்பர்கள் தனிப்பட்ட முறையில் அழைத்துக் கேட்கும் ஒரே கேள்வி?
ஏன் இவற்றை எல்லாம் எழுதுகின்றாய்? உன் பாதுகாப்பு முக்கியமல்லவா?
ஆனால் இதுவரையிலும் எதுவும் அசம்பாவிதங்கள் எதுவும் நடந்தது இல்லை. வாசிப்பவர்களுக்குக் கொஞ்சம் கருணை இருந்திருக்கக்கூடும் என்றே நினைக்கின்றேன். இவனாவது இதைப் பற்றி வெளிப்படையாக எழுதுகின்றானே என்று யாரோ சிலர் நினைத்து இருக்கக்கூடும்.
அப்படித்தான் இப்போது பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டு இருக்கும் வடமாநிலத் தொழிலாளர்கள் திருப்பூரில் அடித்துக் கொல்லப்படுகின்றார்கள்? விரட்டியடிக்கப்படுகின்றார்கள்? அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை? என்பது பல கேள்விகளை ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக எழுதுகின்றார்கள். அது குறித்து சில தகவல்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். நீங்கள் இதனைப் பலருக்கும் கொண்டு சேர்க்கும் போது நிச்சயம் வட மாநிலங்களில் வாழக்கூடிய தமிழர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வாய்ப்புண்டு. காரணம் உண்மை தெரிந்தால் எவரும் அமைதியாகிவிடுவார்கள்.
நான் எழுதுவதைக் கட்சி மற்றும் நிறுவனங்கள் சார்ந்த முதலாளிகள் எழுத முடியாது. காரணம் வாசித்து முடிக்கும் போது உங்களுக்கே புரியும்.
()()()
திருப்பூரில் குடிப்பழக்கம் என்பது எப்போதும் இருக்கக்கூடியது தான். ஆனால் அது தனி மனிதர்களின் கடமையைப் பாதித்தது இல்லை. அவனின் பொருளாதாரத்தை அதள பாதாளத்தில் தள்ளியதுமில்லை. ஆனால் சந்துக்குச் சந்து சாராயம் என்று ஒரு தனி நிறுவனத்திற்காக யார் ஆட்சியில் இருந்த போது கொண்டு வந்தார்கள்? அன்று தான் இன்றைய பிரச்சனையின் முதல் அடி எடுத்து வைக்கப்பட்டது. அதுவே படிப்படியாக இன்று 24 மணிநேரம் 365 நாட்களும் மது கிடைக்கும் என்கிற பரிணாம வளர்ச்சிக்கு வந்து நின்றுள்ளது.
மதுப்பழக்கம் பெரிய அளவில் இங்கே பரவுவதற்கு முன் ஒவ்வொரு 5 வருடங்களும் இங்கே தொழிலாளர்கள் உலகில் பெரிய மாறுதல் நடக்கும். பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் இந்தத் தொழிலிலிருந்து வெளியேறி வேறு ஊர் அல்லது வேறு தொழிலுக்குச் சென்று விடுவர். காரணம் 365 நாளும் 24 மணிநேர வேலை என்பதால் எப்போது ஓய்வு? எப்போது பணி? என்ற பாரபட்சமே இல்லாமல் முதலாளிகளும் தொழிலாளர்களும் இரட்டை மாட்டு வண்டி போல ஒருவர் தங்கள் முதலீட்டைப் பெருக்க ஓடிக் கொண்டு இருப்பார். மற்றொரு பக்கம் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த மனைவி மகள் மகனுடன் நிறுவனங்களில் இரவு பகலாக உழைத்துக் கொண்டு இருப்பார்கள். இதன் காரணமாகவே பத்து வருடங்களில் உழைக்க வேண்டிய உழைப்பு என்பது ஐந்து வருடங்களுக்குள் உழைத்த காரணத்தால் உடலும் மனமும் சோர்ந்து போய் பிழைக்க வந்த ஊரை விட்டு சொந்த ஊருக்குச் சென்று விடுவர். (டாலர் நகரத்தில் இதனைப் பற்றி எழுதியுள்ளேன்)
நிறுவனங்களுக்குக் கவலையில்லை. அடுத்தடுத்து ஆட்கள் வந்து கொண்டேயிருப்பார்கள். ஒரு வாரம் பயிற்சி எடுத்தால் அவர் அந்தத் துறைக்குத் தயாராகி விடுவார். இது போன்ற சூழல் தான் திருப்பூர் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு உதவியாக இருந்தது.
இதன் காரணமாக இங்குள்ள அனைத்துத் துணைத் தொழில்களும் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டது. ஒரு துறை பத்து துறைகளை வளர்க்கும். ஒரு முதலாளி ஆயிரம் குடும்பங்களுக்கு அன்னம் அளிப்பார்.
பத்தாண்டுகளுக்கு முன் தொழிலாளர்களின் பெரும்பான்மையினர் எல்லாத் துறைகளிலும் கேரளாவிலிருந்து வந்த ஆண்கள் பெண்கள் ஆதிக்கம் செலுத்தினர். ஆனால் அதில் பல்வேறு சிக்கல்கள் உருவாகத் தொடங்கின. பிறகு பெண்கள் திருப்பூர் பக்கம் அங்குள்ளவர்கள் அனுமதிப்பதில்லை. இப்போது கேரள மக்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. அந்தச் சமயத்தில் தான் வட மாநிலங்களிலிருந்து படிப்படியாகத் தொழிலாளர்கள்
வரவழைக்கப்பட்டனர்.
அழைத்து வரப்பட்டனர்.
கொண்டு வரப்பட்டனர்.
எழுதியுள்ள வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள உண்மையான அர்த்தத்தையும் நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
()()()
ஒரு பக்கம் போட்டி போட்டு மதுக்கடைகள் திருப்பூர் முழுக்க பரவத் தொடங்கிய கால கட்டத்தில் இங்குள்ள எவரும் அதனை எதிர்க்கத் துணிவில்லாமல் அல்லது அதற்கு மாற்று ஏற்பாடு என்ன? என்பதனை யோசிக்காமல் தத்தமது சொந்த அபிலாஷைகள் அடிப்படையில் அமைதி காத்தனர். பூங்கா இல்லை. தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ மருத்துவமனை இல்லை என்று பட்டியலிட்டுச் சொல்லக்கூடிய பல இல்லைகள் உள்ள ஊர் என்பதால் வந்த வட மாநிலத் தொழிலாளர்களுக்கு இவை அனைத்தும் குறையாகத் தெரியவில்லை. அவர்களுக்குத் தங்கள் ஊருக்கு அனுப்பும் அந்தத் தொகை தான் பெரிதாகத் தெரிந்தது. அந்தத் தொகை நம்மவர்களுக்குச் சிறிய தொகையாகத் தெரிந்தது.
ஞாயிறு உள்பட ஏழு நாட்களும் வேலை செய்யக்கூடிய நிறுவனங்களும், ஞாயிறு தவிர மற்ற ஆறு நாட்களும் வேலை செய்யக்கூடிய நிறுவனங்கள் என்பது சந்து சந்து சாராயம் என்று மாறிய கலாச்சாரத்தால் வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்த தொழிலாளர்கள் தற்போது மூன்று நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்கின்றார்கள். இது இப்படியே கடந்து வந்து பாதி நாட்கள் வேலை. பாதி நாட்கள் குடி என்பதாக மாறி விடும் சூழலை நோக்கி சமூகம் சென்று கொண்டிருப்பது கவலையளிப்பதாகவே உள்ளது. ஆனால் கடந்த ஒரு வருடமாக எல்லா இடங்களிலும் மது. எப்போதும் மது. எந்நேரமும் மது என்பதாக மாறியுள்ள சூழலில் தொழிலாளர்களின் வேலைத்திறன் குறைந்து விட்டது. உடலில் உள்ள வலிமையும் மாறி விட்டது.
இது போன்ற சமயங்களில் சர்வதேச சமூகத்துடன் போராடிக் கொண்டு இருக்கும் உற்பத்தி நிறுவனங்கள் கடந்த இரண்டு வருடங்களாகத் தொழிலாளர்களுடன் போராட வேண்டிய சூழல் 24 மணி நேர மதுக்கடைகள் உருவாக்கியுள்ளது. எப்போது வருவார்கள்? எந்த நாள் வருவார்கள்? என்பதனை யூகிக்க முடியாத உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி நின்று போனால் உருவாக்கும் இழப்புகளைத் தவிர்க்க வட மாநில தொழிலாளர்களைக் கொண்டு வந்து இறக்கத் தொடங்கினர்.
()()()
ஒரு முதலாளி வட மாநிலத்தில் உள்ள குறிப்பிட்ட ஊரில் பலரையும் ஒன்று சேர்த்து தன் நிறுவன செலவில் விமானத்தில் அழைத்து வந்தது போல பல நம்ப முடியாத ஆச்சரியமான சம்பவங்கள் இங்கே நடந்து கொண்டு தான் இருக்கின்றது. ஆனால் யாரும் வெளியே பகிர்ந்து கொள்வதில்லை. வடகிழக்கு மாநிலங்கள் தொடங்கி பிமாரு மாநிலங்கள் வரைக்கும் ஆட்களை அனுப்பி, தரகர்களுக்குப் பணம் கொடுத்து, வேலை தெரிகின்றதோ தெரியவில்லையோ, அழைத்து வந்து , தங்க இடம் கொடுத்து , அவர்கள் மொழியைப் புரிந்து கொள்ள அதற்கு ஆட்களை நியமித்து , அவர்களின் கலாச்சார வித்தியாச செயல்பாடுகளைப் பொறுமையாகக் கையாண்டு , படிப்படியாகத் தொழில் கற்றுக் கொடுத்து , கற்றுக் கொடுக்கும் மாதங்களில் குறிப்பிட்ட தொகை கொடுத்து , படிப்படியாக நாகரிகம் முதல் முறைப்படியான தொழில் நுட்பம் வரைக்கும் கற்றுக் கொடுத்து , எந்திரங்களில் அமர வைக்கும் போது அழைத்து வந்த தரகர் பெரிய தொகைக்கு ஆசைப்பட்டு வேறு பக்கம் நகர்த்தி விடாத அளவுக்கு , அணைக்கட்டு ஏற்பாடு செய்து வசதியான விடுதி கட்டி ...........…..
வாசிக்கும் போது மூச்சு விட முடிந்ததா? இப்படித்தான் பல நூறு கோடிகளைப் போட்டவர்கள் இங்கே அவஸ்தைப் பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.
ஆனால் கேடிகள் மது அருந்தி, முன்பணம் கொடுத்தால் தான் நாளை வருவேன் என்று சொல்லி வாங்கி, வராமல் இருந்தால் எப்படியிருக்கும்? அவன் என்ன வேலை செய்தான் என்பதனை அடுத்தவனை வைத்துக் கண்டுபிடிக்கவே அரை ஷிப்ட் ஆகும். எல்லாத் தமிழக தொழிலாளர்களும் இப்படித்தானா? என்றால் இல்லை. பத்தில் ஐந்து பேர்கள் இப்படி உள்ளனர். அடுத்த ஐந்து பேர்கள் விரைவில் குழிக்கு விழுந்து விடுவார்கள் என்று அச்சப்பட வேண்டியதாக உள்ளது.
அதிகாரப்பூர்வ கணக்குப்படி நம் டாஸ்மாக் மூலம் தினமும் குடித்துக் கொண்டு இருப்பவர்களின் எண்ணிக்கை தொண்ணூறு லட்சம். அதாவது ஒரு கோடி. எட்டு கோடி மக்கள் தொகை என்றால் எட்டு பேர்களில் ஒரு பேர் நிரந்தர குடிகாரர் என்பதனை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். இதில் தான் உங்கள் எதிர்கால மருமகன் இருக்கின்றான். உங்களுக்குத் திருமணம் செய்து தர வேண்டிய தகப்பன் இருக்கின்றான். உங்களைப் படிக்க வைக்க வேண்டிய ஒவ்வொரு ஆணும் இதில் இருக்கின்றார்கள் என்பதனை எப்போதும் நினைவில் வைத்திருங்கள். மற்றொரு பிரச்சனை சினிமா. பொழுது போக்கு என்பது தமிழகத்தில் உயிர்மூச்சு போல மாற்றி வைத்த பெருமை யாருக்கெல்லாம் சேர வேண்டுமா? அவர்களுக்குத் தமிழகத்தில் தினமும் ஆட்கள் பற்றாக்குறையால் கருகிக் கொண்டு இருக்கும் நிறுவனங்கள் ஒவ்வொன்றும் நன்றி சொல்ல வேண்டும். காரணம் அந்த மாபியா வை எவராலும் எதிர்க்க முடியாது. கடைசி முக்கியமான காரணம் அலைபேசி. கடந்த இருபது வருட இளைய சமூகத்தின் மொத்த மனோபாவமும் அலைபேசி தான் தீர்மானிக்கின்றது.
()()()
இவை எல்லாம் மேலைநாடுகளில் இல்லையா? அங்கே இது போன்ற புலம்பல் இல்லையே? என்று குறுக்குக் கேள்வி கேட்கத் தோன்றும். அங்கே அதிகாலையில் இரண்டு மடங்கு காசு கொடுத்து வாய் கழுவாமல், பல் விளக்காமல் விஷ சாராயத்தை வாங்கும் கலாச்சாரம் இல்லையே? வெறித் தனமான குடி. விளங்கிக் கொள்ளவே முடியாத குடி.
வெளியே வந்தால் வா வா என்று கடை அழைக்க வாங்கி காசை வீட்டுக்குக் கொண்டு போய் சேர்ப்பதில் மிகப் பெரிய சவால் ஒவ்வொருவருக்கும் உள்ளது.
()()()
இது போன்ற சூழலில் ஒவ்வொரு நிறுவனமும் தத்தமது உள்நாட்டு வெளிநாட்டுக்கு அனுப்பக்கூடிய ஆடைகள் சார்ந்த உற்பத்தி என்பதனை இரண்டு விதமாகப் பிரித்து வைத்து இருக்கின்றார்கள்.
ஒன்று பீஸ் ரேட். மற்றொன்று ஷிப்ட் ரேட். ஷிப்ட் ரேட் என்பது எட்டு மணி நேர வேலை. அதில் வேலை வாங்குவது நிறுவனங்களின் பொறுப்பு. பீஸ் ரேட் என்பது ஒப்பந்தக்காரர்களிடம் பொறுப்பைக் கொடுத்து எனக்கு இத்தனை ஆடைகள் இத்தனை நாளுக்குள் வேண்டும் என்றால் அவர் எத்தனை ஆட்கள் வேண்டுமோ அத்தனை பேர்களை வரவழைத்து முழு உருவ ஆடைகளாகத் தயாரித்துக் கொடுத்து முதலாளிகளில் பேசிய படி பணத்தை வாங்கிக் கொள்வார். அவர் தன்னிடம் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு அவரவர் என்னன்ன வேலைகள் எத்தனை ஆடைகள் தைத்தார்களோ அதற்குக் கணக்கு போட்டுக் கொடுத்து விடுவார்கள்.
ஷிப்ட் ரேட் என்பது பெண்களுக்கு எளிதானது. இயல்பான வேகத்தில் தைக்க முடியும். பீஸ் ரேட் என்பது அதிகம் சம்பாதிக்க வேண்டும். தினமும் 1000 முதல் 1500 வரை சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய ஆண்களுக்கு உரியது. பெண்கள் இதில் இருந்தாலும் எண்ணிக்கை மிகவும் குறைவு.
இந்த பீஸ் ரேட் விசயத்தில் தான் முதல் முறை சில மாதங்களுக்கு முன்பு வட இந்தியத் தொழிலாளர்களுக்கும் நம் தமிழகத் தொழிலாளர்களுக்கும் தகராறு உருவானது. அந்த காணொளியும் கட் செய்து மார்பிங் செய்து வெவ்வேறு விதமாகப் பரப்பினார்கள்.
ஆனால் உண்மையில் நடந்தது என்ன?
()()()
நிறுவன முதலாளி என்பவர் அவர் லாபத்திற்காகத்தான் நிறுவனம் வைத்துள்ளார். பல கோடிகளைக் கொட்டி தினமும் தூக்கமின்றித் தவிப்பவர் தமிழர், வட இந்தியர் என்று பார்க்க முடியாது. அவருக்குப் பெட்டி போக வேண்டும். தொடர்ந்து ஏற்றுமதியாக வேண்டும். வங்கி நிறுவனத்திற்கு வந்து விடக்கூடாது என்ற பதற்றம் குளிர்சாதன அறையில் இருந்தாலும் வரத்தான் செய்யும்.
இதன் காரணமாக ஷிப்ட் ரேட்டில் வட மாநிலத் தொழிலாளர்களை வைத்து அவர் வேலை வாங்கிக் கொண்டிருந்ததை ஏற்கனவே அங்கே பீஸ் ரேட்டில் பணி புரிந்து கொண்டு இருந்த நம்மவர்கள் எதிர்க்கத் தொடங்கினர். அடிதடி உருவானது. நிலவரம் வேறு மாதிரியாக மாறத் தொடங்கியது. ஒரு வழியாக அடக்கப்பட்டது.
இதில் நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விசயம் என்னவெனில் பீஸ் ரேட் தைப்பதில் நம்மவர்கள் இருப்பது போல வட இந்தியத் தொழிலாளர்களும் அதிக அளவில் இருக்கின்றார்கள். அவர்கள் கடமையே கண்ணாக " வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்" போல உழைப்பு உழைப்பு/ உடனே பணம் பணம் என்பதாக கொடுத்த வேலையை வேகமாக முடித்துக் கொடுத்து விடுகின்றார்கள்.
ஆனால் நம்மவர்கள் அதிலும் பிரச்சனைகளை உருவாக்குவதால் நிறுவனங்கள் மொத்த வேலைகளை வட இந்திய தொழிலாளர்கள் வசமே கொடுக்க விரும்புகின்றார்கள். இது தான் இங்கே இப்போது நடந்து கொண்டு இருக்கும் நிதர்சனம். எதார்த்தம்.
இது ஒவ்வொரு நிறுவனங்களிலும் இப்படியே பரவத் தொடங்கியது. பிரச்சனையின் மூலம் என்னவென்றால் எவராக இருந்தாலும் ஆறு நாட்களும் வேலைக்குத் தொடர்ந்து வருவதில்லை. வந்தால் திடீரென்று கிளம்பிச் சென்று விடுவதால் பல பிரச்சனைகள். இது போல வெளிப்படையாக எழுத முடியாத பல விசயங்கள் நடந்து கொண்டு இருந்த காரணத்தால் ஒவ்வொரு நிறுவனங்களும் வட மாநிலத் தொழிலாளர்கள் போதும் என்கிற அளவிற்கு மாறத் தொடங்கினர். இதனையே வட மாநிலத் தொழிலாளர்களும் தங்களுக்குச் சாதமாக மாற்றிக் கொள்ளத் தொடங்கினர்.
பல இடங்களில் பிரச்சனைகள் வந்த அவர்களும் கூட்டமாக எதிர்க்கத் துவங்கினர்.
ஆனாலும் நம்மவர்களால் பொறுக்க முடியவில்லை. வாரத்தில் இரண்டு நாட்கள் பீஸ் ரேட்டில் மூவாயிரம் சம்பாதித்து நான்கு நாட்கள் வேலைக்குச் செல்லாமல் இருந்த பழக்கத்தில் மீண்டு வர முடியவில்லை.
பதிலாக வன்மம், பொறாமை, ஆத்திரம், கோபம் என்று தங்கள் வக்கிரத்தை வெவ்வேறு வழிகளில் காட்டிக் கொண்டு இருந்தாலும் நிறுவனங்கள் அசைந்து கொடுக்கத் தயாராக இல்லை. அதே சமயத்தில் அவர்களால் இவர்களின் அயோக்கியத் தனத்தை மேலோட்டமாக பட்டும் படாமல் மிக நாகரிகமாகப் பேச முடிகின்றதே தவிர வேறு எதையும் செய்ய முடியவில்லை.
அரசாங்க ஆதரவு துளியும் இல்லை.
வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து பக்கம் போட்டியின் காரணமாக ஒவ்வொரு ஒப்பந்தங்களும் சென்று கொண்டே இருப்பதால் இங்கே ஆறு நாட்களும் வேலையில்லை என்பது ஒரு பக்கம். அரசியலில் தங்களை நிலை நிறுத்திக் கொள்வதற்காக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் தொழில் குறித்து அறியாதவர்கள் உருவாக்கும் ஆயிரத்தெட்டு அக்கப் போர்களைக் கடந்து வந்து பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்க்கையளித்த நிறுவனங்கள் இப்போது யாரையும் எதிர்த்துக் கொள்ளவும் முடியாமல் எவருக்கு பதில் அளித்து புரியவைப்பது என்பதும் புரியாமல் தடுமாறி நிற்கின்றார்கள்.
No comments:
Post a Comment