Wednesday, March 01, 2023

ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது.

5 ஜி ஏலம் முடிந்து அந்த நாளே நான் யாரையும் நேரிடையாகச் சென்று சந்திக்க தேவையில்லாமல் எங்களுக்கான சான்றிதழ் மின்னஞ்சல் வாயிலாக எங்களிடம் வந்து சேர்ந்தது. இது நம்ப முடியாத அதிசயம். என் வாழ்நாளில் இது ஆச்சரியம் என்பது போன்ற அர்த்தத்தில் ஏர்டெல் முதலாளி 2022 மத்திமம் பகுதியில் 5ஜி ஏலத்தில் கலந்து கொண்ட பின்பு ஊடகத்தில் சொன்ன வார்த்தைகளை படித்த பின்பு எனக்கு ஆச்சரியமில்லை. காரணம் நான் மோடி அரசாங்கத்தை விரும்புவதற்குக் காரணம் இந்த வெளிப்படைத்தன்மை, தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் விதம், அனைவருக்கும் சமமான வாய்ப்பு என்று பலவற்றை என்னால் சுட்டிக் காட்ட முடியும். ஆனால் அந்த ஏலத்தில் முதல் நபராக அதிகத் தொகை கட்டி அதிக அளவு அலைக்கற்றை அளவு பெற்ற மகா ஆத்மா அம்பானி குழுமம். ஏறக்குறைய 88000 கோடி. நான் சென்ற வருடத்தின் இறுதியில் எழுதினேன். திருப்பூரில் 2023 முதல் 90 நாட்களுக்குள் 5 ஜி சேவை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று எழுதியதன் தொடர்பான மேலும் சில தகவல்கள்.




வாசிக்கத் துவங்கும் முன் நன்றாக மூச்சை இழுத்து விட்டுக் கொள்ளலாம். இன்னும் பிஎஸ்என்எல் க்கு 4ஜி அனுமதி (திருப்பூரில்) கிடைக்கவில்லை. தற்போது இந்த சேவை இல்லை. வங்கிகளில், தபால் நிலையங்களில் அவர்கள் படும் பாடுகளும், வரிசையில் நிற்கும் வாடிக்கையாளர்கள் பேசும் பேச்சுக்களைத் தொகுத்தால் அதுவொரு தனிப் புராணம்.
ஐஓபி வங்கியில் 50 பேர்கள் இருந்த இடத்தில் இப்போது ஐந்து பேர்கள் தான் இருக்கிறார்கள். வடகிழக்கு வட இந்திய மக்கள் தலை தான் அங்கங்கே தெரிகிறது. அதே போல தபால் நிலையங்கள் அதிக வருவாய் ஈட்டக்கூடிய அளவில் மத்திய அரசு மாற்றி உள்ளனர். ஆனால் பணிபுரிபவர்கள் தம் கட்டி கணினி மேல் ஏறி அமர்ந்தாலும் ஓர் என்ட்ரி போட முடிவதில்லை. எப்போது சமிக்ஞை வந்து இணையம் வேலை செய்யுமோ அப்போது தான் என்ட்ரி போட்டுத் தருகிறார்கள். அடுத்த வேலையை அப்படியே நிறுத்தி வைத்து அவர்களுடன் நாமும் பதற்றமாய் நிற்கும் அழகை ரசிக்க கூடியதாக இல்லை. தங்கள் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு கூடச் சரியான இணையம் வழங்காமல் இருப்பதற்கு மத்திய அரசுக்கு என்ன காரணம் இருக்கும்? என்பதனை என்னால் யோசித்துக் கூட பார்க்கத் தெரியவில்லை.






இனி ஜியோ பைபர்.....
மூன்று வாரங்களுக்கு முன்பு ஒருவர் வந்து எங்கள் சந்தின் ஒவ்வொரு முனையிலும் ஆழமான பள்ளம் தோண்டிக் கொண்டு இருந்தார். அவர் வேலை பள்ளம் தோண்டுவது மட்டும் தான். அடுத்த நாள் காங்கீரட் கலவை கூடவே படத்தில் உள்ள கம்பம். ஓர் ஆச்சரியம் என்னவென்றால் இந்த வேலைகளைக் கவனிக்க ஒருவர் கூட வரவில்லை. ஆனால் 7 நாட்களுக்குள் நான் இருக்கும் பகுதி பக்கத்தில் உள்ள குடியிருப்புப் பகுதி என்று 300 முதல் 600 வீடுகள் இருக்கும் பகுதி முழுக்க இதே போன்ற அமைப்பில் கம்பம் ஊன்றி விட்டுச் சென்றதை ஆச்சரியமாக பார்த்தேன். அடுத்து என்ன செய்வார்கள் என்பதனை கவனித்துக் கொண்டே இருந்தேன். நேற்று வந்தனர். மூன்று பேர்கள். ஓர் ஓட்டுநர். ஒரு சிறிய சரக்கு வாகனம். உள்ளே பெரிய ரோலரில் மாட்டப்பட்ட கேபிள் ஒயர். ஒருவர் கம்பத்தில் ஏறி அடுத்த கம்பத்துடன் மற்றவர் இணைக்க இப்படி கண் இமைக்கும் நேரம் என் சந்து சுற்றிலும் மாட்டி விட்டுச் சென்றனர்.
அவர்கள் செய்த வேலையை அதில் உள்ள பொருட்களை ஆர்வக்கோளாறு காரணமாக காலையில் நடந்து சென்ற போது புகைப்படம் எடுத்து வந்து ஆராய்ந்தேன்.
இந்த கேபிள் ஒயர் வேகமாக அலைக்கற்றையை எதன் உதவியின்றியும் கடத்த வல்லது என்று தொடங்கி அதன் சரித்திரச் சான்றுகள் ஒவ்வொன்றாகப் படித்து கொண்டே வந்தேன். கூடவே இதன் விலை என்ன என்று பார்த்த போது மீட்டர் 66 ரூபாய் என்று போட்டு இருந்தும். அதுவும் மன்காபூர் விலை என்பதாகவும் கூகுள் சொன்னது.
ஆகா நம்ம மொட்டை பாஸ் ஆயிற்றே என்று ஆவலுடன் மேலும் தேடிப் பார்த்த போது
மன்காபூர் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிழக்கில் அமைந்த பூர்வாஞ்சல் பகுதியில் உள்ள கோண்டா மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும்.
தமிழகத்தில் நம்பர் ஒன் முதல்வர் நம்பர் ஒன் மாநிலம் என்று சொல்லக்கூடிய அளவில் உள்ள இங்கே எந்தப் பேரூராட்சியில் தமிழகத்திற்கு தேவையான கேபிள் ஒயர் தயாரிக்கும் தொழிற்சாலையிருந்தால் கீழே தெரிவிக்கவும்.
600 வீடுகள் என்றால் இரண்டு அல்லது நான்கு வீடுகளுக்கு ஒரு கம்பம் ஊன்றி இணைப்பு கொடுத்து விட்டுச் சென்றுள்ளனர். இதன் நோக்கம் இனி வரும் காலங்களில் கணினி மட்டுமல்ல தொலைக்காட்சி முதல் பெரும்பாலான அனைத்து உபகரணங்களும் 5ஜி மூலம் இயக்க வாய்ப்பதிகம் என்பதால் இந்தச் சந்தை என்பதனை தனியாருக்கு மத்திய அரசு வழங்கி உள்ளனர் என்பதாக எடுத்துக் கொள்வதா? பிஎஸ்என்எல் என்பது உப்புக்குச் சப்பாணி போல இருந்து தொலையட்டும் என்பதாகப் புரிந்து கொள்வதா?
உங்கள் வீட்டுக்கும் முக்கிய சாலைக்கும் 1300 மீட்டர் இருப்பதால் எங்களால் கேபிள் வழங்க இயலாது. அந்த கேபிள்க்கு நீங்கள் பணம் கட்ட வேண்டியதாக இருக்கும் என்று ஜேடி பெண்மணி அதிகாரி 24 மாதங்களுக்கு முன்னால் என்னிடம் வாக்குவாதம் செய்தது நேற்றும் இன்றும் என் காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றது. இப்போது என் வாசலில் உபி யில் தயாரிக்கப்பட்ட
12 Core Fiber Optic Cable 24f Adss, 500m at Rs 66/meter in Mankapur
மொத்த இந்தியாவை ஒரு பக்கம் ஏர்டெல் மற்றொரு பக்கம் ஜியோ எடுத்துக் கொண்டு விட்டனர்.
நீங்கள் ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது.
😁

No comments: