Thursday, September 08, 2022

மேலே முழு நேர குடிகாரன் கீழே ரசிகர் மன்ற தலைவன்- தமிழக கல்வித்துறை

 'முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தால்...' அது பழமொழி; 'பொய்யை புள்ளி விபரங்களுக்குள் புதைத்தால்...' அதன் பெயர் திராவிட மாடல். சமீபத்தில் ஒரு மாணவனை கல்லுாரியில் சேர்க்க, திருநெல்வேலி கோட்டத்திற்கு உட்பட்ட அரசு கல்லுாரி ஒன்றுக்கு சென்றிருந்தேன். தெரிந்த முகம் என்பதால் சில மாணவர்கள் வந்து பேசினர். பேசினர் என்பதைவிட அழுது புலம்பினர் என்பதே சரி.தமிழகத்தில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கூடியபடி இருக்கிறது. தரம், திறன் என, அனைத்தும் கூடியபடியே இருக்கிறது.


ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பாக புதிதாக 10 கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ளன. இவை எல்லாம் எப்பேர்ப்பட்ட அயோக்கியத்தனம் என்பது,அந்த மாணவர்களிடம் பேசியபோது தெரிந்தது. எனவே, அதைப் பற்றி கொஞ்சம் ஆழமாக, மக்களிடம் சில கருத்துகளை எடுத்து வைக்கலாம் என்பதற்காக, திருநெல்வேலி கல்விக் கோட்டத்தை மட்டும் ஆராய்ந்து பார்த்தேன்.

8 கல்விக் கோட்டங்கள்

தமிழகத்தில், மொத்தம் எட்டு கல்விக் கோட்டங்கள் உள்ளன. இதன்படி, சென்னை - 10; கோயம்புத்துார் - 20; தர்மபுரி - 22; மதுரை - 29; தஞ்சை - 21; திருச்சி - 19; திருநெல்வேலி - 11; வேலுாரில் - 31 என, மொத்தம் 163 அரசு கல்லுாரிகள், நேரிடையாக தமிழக அரசால் நடத்தப்படுகின்றன. மேலும், 41 உறுப்புக் கல்லுாரிகளை பல்கலைகளே நடத்துகின்றன. அந்த ஆசிரியர்களுக்கு அரசு சம்பளம் கொடுப்பதில்லை; பல்கலைகள் தான் கொடுக்கின்றன. கோவில் பணத்தில் அறநிலையத் துறை 10 கல்லுாரிகளை நடத்துகிறது.இதற்கும் அரசு நிதி கொடுப்பதில்லை.


சென்னையில் உள்ள 10 கல்லுாரிகளிலும், எல்லா ஆசிரியர் பணியிடங்களும் பெரும்பாலும் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளன. அதாவது, மெட்ரோ நகரங்களில் மட்டும் ஆசிரியர்கள், விரிவிரையாளர்கள், பேராசிரியர்கள் பணிகளுக்குப் பிரச்னை இல்லை. ஆனால், கிராமப்புறங்களில் நிலைமை தலைகீழ். உதாரணமாக, திருநெல்வேலி கோட்டத்தில் உள்ள கோவில்பட்டி அரசு கல்லுாரியில், 59 பேராசிரியர்கள் இருக்க வேண்டும். இப்போது வெறும் 12 பேராசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.

அடுத்ததாக, சுரண்டை அரசு கல்லுாரியில், 99 பேராசிரியர்கள் பணி செய்ய வேண்டிய இடத்தில், வெறும் 39 பேராசிரியர்கள் மட்டுமே உள்ளனர். ஆனால், மாணவர்களின் எண்ணிக்கை 3,000. மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள்; இனிமேல் தான் முக்கியமான தகவல் காத்திருக்கிறது.

சாத்தான்குளம் அரசு கல்லுாரியில் பணிபுரியும் அரசு பேராசிரியர்களின் எண்ணிக்கை பூஜ்ஜியம். நான் பொய் சொல்லவில்லை. பின் எப்படி கல்லுாரியில் மாணவர்கள் படிக்கின்றனர்? அங்குதான் திராவிட மாடலின் மகத்துவம் வெளிப்படுகிறது! 'பிரின்ஸ்பால்' என்று ஒருவரை, பல்கலையில் இருந்து, 'டெபுடேஷனில்' அனுப்புகின்றனர். இவர் நிர்வாகத்தை மட்டுமே கவனிப்பார். மாணவர்களுக்கு, 'கிளாஸ்' எடுப்பது, கவுரவ விரிவுரையாளர்கள்.இதில் என்ன கவுரவம் இருக்கிறது? அரசு விரிவுரையாளருக்கு 80 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்றால்; விரிவுரையாளர்களுக்கு 20 ஆயிரம் மட்டுமே நிகர சம்பளமாக வழங்கப்படும்; அது தான் கவுரவம்!

பூஜ்ஜியம்


மேலும், 11 மாதம் மட்டுமே இவர் பணியில் இருப்பார். ஒரு மாத, 'ப்ரேக்'கிற்குப் பின் மீண்டும் பணி வேண்டுமென்றால் மிச்சம் மீதி இருக்கும் கவுரவத்தையும் அடமானம் வைக்க வேண்டும். உறுப்புக் கல்லுாரி, அறநிலைத் துறைக் கல்லுாரி எல்லாம் இந்த லட்சணம் தான்.

இதற்கே மூக்கில் விரலை வைத்தால் எப்படி? நாகமலை அரசு கல்லுாரி, கடையத்தில் உள்ள அரசு கல்லுாரி ஆகியவற்றிலும் பேராசிரியர்களின் எண்ணிக்கை பூஜ்ஜியம் தான். அது மட்டுமா! அண்ணன் சேகர்பாபுவால், கன்னியாகுமரியில் ஹிந்து சமய அறநிலைத் துறையின் சார்பாக அமைக்கப்பட்ட கல்லுாரியிலும், இதே கவுரவம் தான். மூக்கிலிருந்து விரலை எடுக்காமல் இருங்கள், மேலும் ஒரு செய்தி சொல்கிறேன்! இப்படி தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களும் போதாது என்று, மாணவர்களே, ஆளுக்கு 1,500 ரூபாய் திரட்டி பெற்றோர் -- ஆசிரியர் கழகம் வாயிலாக, ஒவ்வொரு கல்லுாரிக்குள்ளும் மாதம் 5,000 ரூபாய் சம்பளத்திற்கு, 40 முதல் 50 ஆசிரியர்களை நியமித்துள்ளனர்.இது சட்டப்படி தவறு தான். ஆனால், இது தான் நடைமுறையில் உள்ளது!


சுருக்கமாகச் சொல்லப் போனால், முறைப்படி நியமனம் பெற்ற பேராசிரியர்கள் 40 சதவீதம்; கவுரவ ஆசிரியர்கள் 30 சதவீதம் மற்றும் மாணவர்கள் தாங்களே நியமித்துக் கொண்ட ஆசிரியர்கள் 30 சதவீதம். போனால் போகட்டும், ஏதோ 40 சதவீதப் பேராசிரியர்கள் இருக்கின்றனரே என்று ஆறுதல் பட்டால், அதிலும் மண்ணைப் போடுகிறது அரசு. அதாவது, மொத்தம் 13 ஆயிரத்து, 500 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 4,500 பேர் மட்டுமே உள்ளனர்.ஆனால், அதில் 3,000, பேர் சென்னை, திருச்சி, மதுரை, கோவை போன்ற பெருநகரங்களில் மட்டுமே பணி புரிகின்றனர். அதாவது, 40 கல்லுாரிகளுக்கு 3,000 பேராசிரியர்கள். மீதமுள்ள 123 கல்லுாரிகளுக்கு 1,500 பேர்.

கிராமப்புற மாணவர்கள் எப்படி உருப்படுவர்? தரக்குறைவான பள்ளிக் கல்வி, தரமே இல்லாத உயர்கல்வி! ஏற்கனவே வறுமை; இந்தச் சூழ்நிலையில் படிக்கும் மாணவனுக்கும், நகர்ப்புற கல்லுாரியில் படிக்கும் மாணவனுக்கும், ஒரே கேள்வித்தாளைக் கொடுத்து ஒப்பிட்டால், விளைவு என்னவாக இருக்கும்? விபரீதமாகத் தான் இருக்கும்!

ஆர்ப்பாட்டம்


கிராமப்புறக் கல்லுாரிகளில் கணிதம், விஞ்ஞானப் பிரிவுகளில் 10 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர். நீங்கள் மயக்கம் போடாமல் இருந்தால், இன்னும் சொல்கிறேன். யு.ஜி.சி., விதிகளின் படி 34 மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர் இருக்க வேண்டும். நீண்ட காலமாகவே தமிழக அரசு, இந்த எண்ணிக்கையை 64 ஆக வைத்துள்ளது. இதுவே ஒரு விதிமீறல். ஆனால் அதை, 100 ஆக உயர்த்த இப்போது திட்டமிட்டு வருகிறது.


அதிக மாணவர்களைச் சேர்த்தால் நல்லது தான். பேராசிரியர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை, கவுரவமாக நியமித்துக் கொள்ளலாம். மாணவர்கள் உட்கார இடம் வேண்டாமா அமைச்சரே? இரண்டு மாணவர்கள் அமர வேண்டிய பெஞ்சில், ஐந்து மாணவர்கள் அமர்த்திருக்கின்றனர்.கூடுதலாக வரும் மாணவர்களை எங்கே உட்கார வைப்பது? முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் இதற்கு ஆலோசனை கேளுங்களேன்! அவர் தான் கழிப்பறைகளை எல்லாம் வகுப்பறைகளாக்கும் வித்தை தெரிந்தவர்!இந்த அலங்கோலங்களால், நம் மாணவர்கள் இழப்பதெல்லாம் என்னவென பார்ப்போம்!


'நாக்' எனப்படும் யு.ஜி.சி., அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகள் தமிழகத்தில் 75 மட்டுமே. மீதமுள்ள 88 கல்லுாரிகளுக்கு? இதுமட்டுமல்ல; நடத்தப்படும், 'கோர்ஸ்'களில் 40 சதவீதம் மட்டுமே யு.ஜி.சி., அங்கீகாரம் பெற்றவை. இந்தக் கொடுமைகள் ஒரு புறமென்றால், எம்.எல்.ஏ.,க்களின் கூத்தாட்டம் வேறு மாதிரி இருக்கிறது. ஒரு கல்லுாரியில், 700 இடங்களுக்கு 8,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தென்காசி சட்டசபை உறுப்பினர் அங்குள்ள கல்லுாரிகளுக்குச் சென்று, 'அப்ளிக்கேஷன் போட்ட எல்லாருக்கும் அட்மிஷன் கொடு' என்று ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்.

அவரைச் சூழ்ந்து கொண்ட மாணவர்கள், 'எங்களுக்கே உட்கார இடமில்லை, எல்லாருக்கும் இடம் எங்கே உள்ளது?' என்று கேட்டனர். 'நான் மொட்டை டியில் கொட்டகை போட்டுத் தருகிறேன்' என்று ஆணவமாகக் கூறியுள்ளார்.'நாங்கள் என்ன மாடுகளா மிஸ்டர் ஆறுமுகம்?' என்று மாணவர்கள் அலறவிட்ட போது 'கப்சிப்!' கோபத்தை பேராசிரியர்கள் மீது காட்டிவிட்டு சென்றுள்ளார். இது யார் குற்றம்?


அவலம்


துணை வேந்தர்களை ஆட்டி வைக்கத் துடிக்கும் முதல்வரின் குற்றமா? ஆசிரியர்களே இல்லாமல் கோவில் பணத்தில் கல்லுாரிகளைத் திறந்த அறநிலையத் துறை அமைச்சரின் குற்றமா? ஒன்றுமே தெரியாத நல்ல பிள்ளை போல் நாடகமாடும் உயர் கல்வித் துறை அமைச்சரின் குற்றமா அல்லது இவர்களை நம்பி ஏமாந்தபெற்றோரின் குற்றமா? தரம்குறைந்த ஆரம்பக் கல்வி, தரமே இல்லாத உயர் கல்வி. 20 ஆயிரம் ரூபாய்க்கு அடிமைகள் போல் விரிவுரையாளர்கள். மாணவர்களே, ஆசிரியர்களை வேலைக்கு அமர்த்தும் அவலம். சமூக நீதியில் ஜாதி மட்டும் தானா? கல்வி வராதா? கிராமப் புறங்களை அது எட்டிப் பார்க்காதா?


பிரபாகரன், எழுத்தாளர்

KKI

No comments: