Wednesday, September 07, 2022

அழுது புலம்பும் மாணவியர்களின் கூக்குரலை யார் கவனிப்பது?

மிக நீண்ட கட்டுரையிது.  நேரம் இல்லாதவர்கள் மாற்றுப் பாதையில் செல்லவும். ஆனால் முக்கியமான கட்டுரையிது.




+++


நேற்று சென்னை வந்து இருந்த அரவிந்த் கேஜ்ரிவால் "புதுமைப் பெண்" திட்டத்தைத் தொடங்கி வைத்து ஆங்கிலத்தில் சிறப்புரையாற்றியதை முழுமையாகக் கேட்ட பின்பு இதை எழுதியே ஆக வேண்டும் என்று தோன்றியது.

சென்ற வருடம் பல நண்பர்கள் உதவியால் அரசு பள்ளிக்கூட மாணவியர்களுக்குப் பல உதவிகள், பயிற்சிகள் வழங்க முடிந்தது.  'இனி என் மகள் படிக்க வேண்டாம்' என்று முடிவு எடுத்து இருந்த சில பெற்றோர்களிடம் பேசி அரசு கலைக்கல்லூரியில் சில மாணவிகளைச் சேர்த்த போது சிலரின் உதவிகளைப் பெற்றோம். உதவிகரமாக இருந்தது. நண்பர்களுக்கு நன்றி.

எடப்பாடி செய்த பாவங்களுக்கு அவர் ஆட்சியில் குறிப்பிடத்தக்க பல நல்ல விசயங்களைச் செய்து உள்ளார்.  அடுத்த 25 ஆண்டுகளுக்கு அது போதுமானது.  மத்திய அரசு உதவியுடன் நம்ப முடியாத அளவுக்கு மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக்கல்லூரி. தன் ஆட்சிக் காலத்தில் 80 சதவிகித வேலைகளைச் சிறப்பாக முடித்து இருந்தார்கள்.  இத்துடன் அரசு கலைக் கல்லூரிகள் பல இடங்களில் திறந்தனர்.

இவை எல்லாம் நான் செய்தித்தாளில் படித்தது. ஒரே ஒரு முறை இங்கு கட்டிக் கொண்டிருக்கும் மருத்துவக்கல்லூரி கட்டிட வளாகத்தை உள்ளே சென்று பார்த்தேன்.  சிறப்பாக வேகமாக வேலைகள் நடந்து கொண்டு இருந்தது.

அருகே அவிநாசி, தாராபுரம் என்று தொடங்கி தமிழகத்தில் பல இடங்களில் கலைக்கல்லூரிகள் தொடங்கியது இன்னமும் என்ன பிரச்சனை? என்பதனை கடந்த சில வாரங்களில் என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

+++

இங்கு இரண்டு கலைக்கல்லூரிகளில் விண்ணப்பித்த மொத்த  மாணவர்கள், மாணவிகள், எத்தனை வகையான படிப்பு போன்றவற்றை முதல் முறையாக  சில வாரங்களுக்கு முன்பு பார்த்தேன். கடைசி வரைக்கும் கவனித்துக் கொண்டே வந்தேன்.  இங்கு எல்ஆர்ஜி (பெண்கள் கலைக்கல்லூரி) சிக்கண்ணா கலைக்கல்லூரி இருபாலரும்) மொத்தப் பட்டியலும் பார்த்தேன்.  

இறுதிப்பட்டியலில் ஒவ்வொரு கல்லூரியிலும் 8500 பேர்கள் இருந்தனர்.  அதாவது எத்தனை பேர்கள் விண்ணபித்து இருந்தார்களோ அத்தனை பேர்களையும் தரவரிசைப்பட்டியலிட்டு (இட ஒதுக்கீடு அடிப்படையில்) இறுதியாக வெளியிட்டு இருந்தனர்.  ஆனால் இங்கு இரண்டு கல்லூரிகளிலும் சில கோர்ஸ் களுக்கு சுழற்சி முறை உள்ளது. சில கோர்ஸ்க்கு தமிழ் வழிக்கல்வி உள்ளது. பெரும்பாலான படிப்புகளுக்கு ஆங்கில வழிக் கல்வி மட்டுமே உள்ளது.  

எப்படி கணக்கீடு செய்தாலும் இரண்டு கல்லூரிகளிலும் ஒரு வருடத்திற்கு அனைத்து விதமான இளங்கலை படிப்புகளுக்குச் சேர்க்க முடிகின்ற அளவு 3000 பேர்கள் மட்டுமே.  மொத்தம் 17,000 பேர்களில் மீதம் உள்ள 14,000 மாணவ மாணவியர்களுக்குக் கல்லூரி வாய்ப்பு என்பதே இல்லை.

அதாவது வசதி உள்ளவர்கள், மதிப்பெண்கள் அதிகம் பெற்றவர்கள், குறிப்பிட்ட கல்லூரியில் தான் படிக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டு தனியார் கல்லூரி பக்கம் சென்றவர்கள், மதிப்பெண்கள் வருவதற்கு முன்பு இங்குள்ள தனியார் கல்லூரிகளில் அட்வான்ஸ் புக்கிங் என்கிற வகையில் ஒரு லட்சம் இரண்டு லட்சம் பணத்தைக் கட்டி சேர்ந்த மாணவ மாணவியர்கள்.

இத்தனை வாய்ப்புகளிலும் சேர முடியாத மாணவ மாணவியர்கள் மட்டுமே அரசு கலைக்கல்லூரிகள் பக்கம் வருகின்றார்கள். அதாவது மதிப்பெண்கள் இல்லாதவர்கள். வசதி இல்லாதவர்கள் இவர்கள் தான் இந்த 14,000 பேர்கள்.  எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. கல்லூரியில் உள்ள முக்கியமான பெண்மணி ஒருவரிடம் விசாரித்தேன்.

"இடஒதுக்கீடு அடிப்படையில், மதிப்பெண்கள் அடிப்படையில், இருக்கும் இருக்கை என்று எல்லாவிதங்களிலும் ஒதுக்கிய பின்பு சில சமயம் அரசு கூடுதலாக பத்து அல்லது இருபது இருக்கைகள் கூடுதலாக சேர்க்க அனுமதி கொடுக்கும். ஆனால் அப்படிப்பார்த்தால் கூட 14,000 பேர்களுக்கும் எங்கும் சீட் கிடைக்க வாய்ப்பே இல்லை" என்றார்?

மறுபடியும் உள்ளே நுழைந்து ஆராய்ந்த போது ஒரு தகவலைப் புரிந்து கொள்ள முடிந்தது.  'ஆல்பாஸ்' என்கிற ரீதியில் ஒன்பது வரைக்கும் கொண்டு வந்து சேர்த்து விடுகின்றார்கள்.  பத்தாம் வகுப்பில் 35 மதிப்பெண் வாங்கினால் பாஸ் என்றால் 25 மதிப்பெண்களுக்கு அருகே வந்தால் இழுத்துக் கொண்டு 35 ஆக மாற்றி தேர்ச்சி அடைய வைத்து 11 ஆம் வகுப்புக்கு வந்து விடுவார்கள்.  இதுவே தான் 12 ஆம் வகுப்பிலும் தேர்ச்சி சதவிகிதம் குறையக்கூடாது என்பதற்காக இந்த முறையை கடைப்பிடிக்கின்றார்கள்.

மாணவ மாணவியர்களை பொறுத்தவரையிலும் தேர்ச்சி  பெற்று விடுகின்றார்கள். ஆனால் சேர வாய்ப்பு இல்லை.  ஐந்து பாடங்களிலும் ஜஸ்ட் பாஸ் என்கிற அளவில் உள்ள மாணவர்கள் மாணவியர்கள் உள்ள சதவிகிதத்தைக் கேட்டால் மலைத்து விடுவீர்கள்.

மற்றொரு விசயம் அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளில்  எந்த அரசாக இருந்தாலும் கண்டு கொள்வது இல்லை என்பது போல உயர்கல்வித்துறையும் அரசு கலைக்கல்லூரிகளில் உள் கட்டமைப்பு வசதிகளைக் கண்டு கொண்டதே இல்லை.  இதில் இணைத்துள்ள படம் என்பது இங்குள்ள எல்ஆர்ஜி கல்லூரியில் ஒரு வகுப்பறையில் எடுக்கப்பட்ட இருக்கைகள்.  இதை விடப் பல அறைகளில் படு மோசமாக உள்ளது.  காரணம் கோவிலுக்குத் தர்மம் வழங்கி தங்கள் பெயரைப் பெரிதாக போட்டுக் கொள்வது போலத் தொகுதி நிதி என்ற பெயரில் சமஉ மற்றும் பல தன்னார்வ மக்கள் பிச்சை போட்டு இது போன்ற கல்லூரிகளை இயங்க வைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

சரி இப்போது விசயத்திற்கு வருவோம்.

புதுமைப் பெண் என்ற திட்டம் என்பது ஆறாம் வகுப்பு முதல் 12 வகுப்பு அரசுப் பள்ளியில் படித்து கல்லூரிக்கு வந்த மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை தமிழக அரசால் வழங்குவது.  இதில் உள்ள நல்லது கெட்டது என்பதனை வேறொரு சமயத்தில் பார்ப்போம்.  இப்போது பேச வேண்டிய முக்கிய விசயம் என்னவெனில் இந்த திட்டத்திற்காக இந்த வருடம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிகளின் எண்ணிக்கை ஆறரை லட்சம் பேர்கள்.  இதில் முதலில் ஐம்பதாயிரம் மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடங்கியுள்ளதாக சொல்கின்றார்கள்.  உண்மை இன்னும் சில மாதங்களில் தெரியும்.

கணக்கீடு செய்து பாருங்கள்.  ஒரு மாணவிக்கு ஒரு வருடத்திற்கு 12,000 ரூபாய் எனில் 50,000 மாணவியர்களுக்கு 600,000,000 ரூபாய்.  இது தவிர மீதம் இருக்கும் ஆறு லட்சம் மாணவியர்களுக்கு வழங்க வேண்டிய தொகையைக் கணக்கீட்டு பார்த்துக் கொள்ளவும்.

கட்டிடங்கள் இல்லை. அதிகமான வசதிகள் இல்லை. அமர சரியான இருக்கை இல்லை. முழுமையாக இரண்டு ஷிப்ட் வைத்து அதிகமான மாணவிகளைப் படிக்க வைக்க முடியும். அரசு கலைக்கல்லூரிகளில் கட்டணம் என்பது மிக மிகக் குறைவு.  அதுவொரு சம்பிரதாயத்திற்காக வைத்துள்ள தொகை மட்டுமே.  ஆனால் உள்ளே வந்தால் ஒரு மாணவர் அல்லது மாணவி மிகுந்த பிரயாசைப்பட்டு மன உறுதியோடு இருந்து படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் படித்து வெளியே வர வேண்டும்.  

அரசு பள்ளிக்கூடங்கள் போல அரசு கலைக்கல்லூரிகளிலும் அடிப்படை ஆன்மா அப்படியே உள்ளது. சிறப்பாக படிக்க முடியும்.  அற்புதமான புரெபசர் மற்றும் லெக்சரர் இருக்கின்றார்கள் என்பதனை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.  இருக்கும் அடிப்படை வசதிகளைக் காப்பாற்றிக் கொள்வது தான் பெரும்பாடாக உள்ளது.

நான் இந்த ஆட்சி தொடங்கிய முதல் நாள் முதல் எழுதி வருகின்றேன்.  இவர்கள் ஆட்சிக் காலம் முடிந்து வெளியே செல்லும் போது தமிழக அரசின் கடன் பத்து லட்சம் கோடியாக மாறியிருக்கும். மத்திய அரசு இனி வாங்க முடியாது என்று தடை போடும் என்கிற அளவுக்குச் செல்லும். அப்போதும் அதனை வைத்து அரசியல் செய்வார்கள்.

+++

நான் மற்றொரு வகையில் என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்ள வேறொரு வகையில் கணக்கீட்டு பார்த்தேன்.  திருப்பூர் என்பது ஒரு மாவட்டம்.   அருகே உள்ள தாராபுரம, பல்லடம், அவிநாசி போன்ற பகுதிகளில் கூட அரசு கலைக்கல்லூரிகள் வந்து விட்டது. அதனையும் மீறி இங்கு மட்டும் இரண்டு கல்லூரிகளில் சேர முடியாத மாணவர்களின் எண்ணிக்கை 14,000 என்றால் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளே அழுது புலம்பும் மாணவியர்களின் கூக்குரலை யார் கவனிப்பது?

காரைக்குடி அழகப்பா கலைக்கல்லூரியிலும் சீட் கிடைக்காதவர்கள் இதை விட அதிகமான மாணவ மாணவியர்கள் இருக்கின்றார்கள். அதே போல பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளில் (ஆலங்குடி போன்ற கிராமங்களை ஒட்டிய பகுதிகள்) அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட புதிய அரசு கலைக்கல்லூரிகள், இது தவிர அந்தப் பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்கள் உருவாக்கிய கல்விக்கூடங்களில் சேர்ந்தது போல மீதம் சேர முடியாத  மாணவியர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம்.

அதாவது 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் ஒவ்வொரு வருடமும் பல்வேறு காரணங்களால் படிக்க முடியாமல் தடுமாறி நிற்பவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம்.  

+++

பத்திரிக்கைகளும், அரசியல்வாதிகளும், பினாமிகளும் இன்று வரையிலும் தனியார் பொறியியல் கல்லூரி மூலம் நடுத்தர வர்க்கத்தைச் சூறையாடுவதை ஒரு கலையாக வைத்துக் கண்கட்டி வித்தை நடத்திக் கொண்டு இருக்கின்றார்களே ஒழியக் கலைக்கல்லூரிகளின் பிரச்சனைகளைப் பற்றி யோசிக்க யாருமே இல்லை.  ஒரு மாணவர் மாணவி மூன்று வருடங்களில் 5000 ரூபாய்க்குள் ஒரு டிகிரியை அரசு கலைக்கல்லூரியில் படித்து ஏதோவொரு வேலைக்கு (குறைந்தபட்சம் ரூபாய் 10,000) போவதும், எந்தவொரு தனியார் பொறியியல் கல்லூரியில் படித்தாலும் கடைசியில் முழுமையாக தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியாதவர்கள் அதே 10,000 ரூபாய்க்குத்தான் வந்து விழுகின்றார்கள்.  

ஆனால் கல்லூரியில் நான்கு ஆண்டு செலவழித்த தொகை குறைந்தபட்சம் 5 லட்சம்.  இப்போது யோசித்துப் பாருங்கள்.  அத்தனை பேர்களும் கல்வி என்ற பெயரில் கடனாளியாகத்தான் இப்போது வாழ்கின்றார்கள். யாரோ யாரோ இவர்களின் பணத்தைச் சூறையாடுகின்றார்கள்.  காரணம் யார் என்று நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

No comments: