Tuesday, June 21, 2022

எடப்பாடியும், பன்னீரும்

மோடி சில சமயங்களில் எனக்கு எம்ஜிஆர் போலத் தான் தெரிகின்றார்.  காரணம் தனக்கு உதவி செய்தவர்கள் என்ற விசுவாச எண்ண அடிப்படையில் உதவி செய்தவர்களின் தவறுகளைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றார். அப்படி வளர்ந்தவர் தான் எடப்பாடியும், பன்னீரும்.  



திமுக வந்து விடக்கூடாது என்பதற்காகவும், திமுக வளர்ந்து விடக்கூடாது என்பதனை மனதில் வைத்து மத்திய பாஜக இவர்களை ஆதரித்தது. கடந்த நான்கு வருடங்களில் அதிமுக வில் உள்ள ஒவ்வொருவரும் பல்லாயிரம் கோடி சொத்து சேர்க்க அனுமதித்தது தான் தமிழகம் கண்ட பலன்?

ஏன் மோடி எடப்பாடியைத் தொடக்கத்தில் ஆதரித்தார்? என்பதற்கு ஒரே காரணம் எடப்பாடி எக்காரணம் கொண்டு கட்சிக்குள் மன்னார்குடி மாபியா கும்பல் வந்து விடக்கூடாது என்பதில் ஒரே எண்ணத்திலிருந்தார்.  ஏன் பன்னீரைக் கண்டு கொள்ளாமல் விட்டார்?  ஆற்றில் பாதி சேற்றில் பாதி வாழ்நாள் முழுக்க இருப்பார் என்பதனை மோடி அவர்கள் உணர்ந்து கொண்ட காரணமே முக்கியமானது.

 தமிழகத்தில் எடப்பாடி மோடிக்கு எதிராக மறைமுகமாகச் செய்த காரியங்கள் என்பது ஒரு புறம் இருந்தாலும் இதனை உணர்ந்தே மோடி அமைதியாகவே இருந்தார். கடந்த காலத்தில் ராஜ்ய சபா மூலம்  அதிமுக பாஜக  கொண்டு வந்த திட்டங்களுக்கு அதிமுக உறுப்பினர்கள் ஆதரவு அளிக்கக் காரணமாக இருந்தார் என்பதால் மட்டுமே இன்று வரை எடப்பாடி தலை தப்பிப் பிழைத்துள்ளது.

அதிமுக என்ற கட்சியில் ஜெயலலிதா உள்ளே வந்த பின்பு அதன் குணம் முற்றிலும் மாறிவிட்டது.  எம்ஜிஆர் அதிமுக வேறு.  ஜெ அதிமுக என்பது வேறு.  இரண்டுக்கும் கொஞ்சம் கூட தொடர்பு இல்லை. 

ஜெ வுக்கு என்ன தெரியும்? என்ன தெரியாது என்பதனை அவரிடம் அதிகாரம் இருந்த போது, இல்லாத போது என்று இரண்டு விதங்களையும் வைத்து ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளுங்கள். அது போதும்.

அதிகாரம் இருந்தால் செல்லூர் ராஜு போன்ற கிறுக்கர்களைக்கூட ஊடகங்கள் கொண்டாடுகின்றது அல்லவா?  அதில் வைரண்ட் கிறுக்கு கூட்டத்தின் தலைமை செல் ஜெ.  அதில் உள்ள டிஎன்ஏ நடராஜன். ஆர்என்ஏ சசிகலா.  

அதற்குள் உள்ளே நுழைந்தால் மற்ற அனைத்தையும் மாபியா கும்பலில் உள்ள அத்தனை உறுப்பினர்களையும் என்னால் பட்டியலிட முடியும்.  (தமிழக அரசியல் வரலாற்றில் இந்த குடும்ப உறுப்பினர்கள் தமிழக கஜானாவை எப்படிச் சூறையாடினார்கள் என்பதனை ஒரு அத்தியாயத்தில் எழுதி உள்ளேன்)

ஏன் இப்போது இதைப் பற்றி நாம் பேச வேண்டும்?

நான் பாஜக வை ஆதரிக்கின்றேன்.  இந்த நிமிடம் வரைக்கும் மோடி அரசினை எனக்கு உகந்த அரசாகவே பார்க்கின்றேன்.  இந்தியாவிற்குச் சரியான பிரதமர் திரு. மோடி அவர்கள் என்றே நம்புகின்றேன்.  அதே போல அண்ணாமலை அவர்களை நான் நம்புகின்றேன்.  அவரை என் தலைவர் என்று சொல்வதில் பெருமையடைகின்றேன். 

நிச்சயம் சூறையாடும் கூட்டத்திலிருந்து தமிழகத்தை அண்ணாமலை என்ற இளைஞர் காப்பாற்றுவார் என்றே நானும் நம்புகிறேன். நம்பிக்கை பொய்யாகாது என்பது கடந்த 12 மாதங்களில் திரு. அண்ணாமலை அவர்கள் நிரூபித்துள்ளார் என்றே நினைக்கின்றேன்.

இந்த நிமிடம் வரை அண்ணாமலை மேல் எதிரிகள் வைத்த குற்றச்சாட்டு ஏராளம் என்றாலும் எல்லாமே முனை மழுங்கியதாகவே ஆகி விட்டது. ஒன்று கூட செல்ப் எடுக்கவில்லை.  நெஞ்சமுண்டு நேர்மையுண்டு போடு ராஜா என்று என் கடன் செய்து கிடப்பதே என்று அண்ணாமலை நாள்தோறும் முன்னேறிக் கொண்டே இருக்கின்றார்.

இப்போது நீயா? நானா? என்றொரு போட்டி அதிமுக தலைமையகத்தில் நடந்து கொண்டு இருக்கின்றது.  ஒரு வகையில் இது பாஜகவிற்கு நல்லது.  ஆனால் வெளியே வெளிப்படையாகப் பேச முடியாது. 

ஆனால் பாஜக வில் பதவியில் உள்ள ஒரு கோஷ்டி நிரந்தரமாகச் சாதி அபிமான அடிப்படையில் பன்னீரை ஆதரிப்பதும், அது சார்ந்து தங்கள் கருத்துக்களை எழுதுவதைக் கடந்த மூன்று நாட்களாகப் பார்த்து வருகின்றேன்.  

எல். முருகனுக்கு முன்னால் பதவியைப் பெற்றவர்கள் யார் மூலம் பெற்றார்கள்?  அப்படி பதவியை வாங்கியவர்கள் எப்படி தங்கள் குழுவை அமைத்துக் கொண்டார்கள்? இன்னமும் அந்த குழு யாருக்கு விசுவாசமாகச் செயல்படுகின்றது?  தலைவர் அண்ணாமலை ஒரு பாதையில் செல்ல இந்த கும்பல் வேறொரு பாதையை நோக்கி நகர்வது போன்ற அனைத்தும் கூர்மையாகக் கவனிப்பவர்களுக்கு மட்டுமே புரியும்?

அதிமுக எடப்பாடி, பன்னீர் என்று யாராக இருந்தாலும் அவர்கள் பாஜகவிற்கு துரோக வரலாறு எழுதியவர்கள். எழுதக் காத்திருப்பவர்கள். எழுதுவதையே நோக்கமாகக் கொண்டவர்கள்.  

அண்ணாமலையை திமுக வெறுப்பதை அதிமுக வில் ஒவ்வொரு நபரும் அடி ஆழத்திலிருந்து வெறுக்கின்றார்கள். 

டெல்டா மண்டலத்தை வாரிச்சுருட்டி அண்ணாமலை அவர்கள் தன் சட்டைப் பையில் வைத்திருந்ததைப் பார்த்து இங்குள்ள அத்தனை அரசியல் கட்சியில் உள்ள திருடர்களுக்கும் வயிற்றுப் போக்கு தொடர்ந்து போய்க் கொண்டேயிருக்கின்றது. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அண்ணாமலை அவர்களைத் தலைவர் என்று ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் தடுமாறுகின்றார்கள்.

திமுக ஊழல் கட்சி, திருடர்கள் என்பது எந்த அளவுக்கு உங்களால் உறக்கத் சொல்ல முடிகின்றதோ அதை விட உரக்கச் சொல்ல வேண்டியவர்கள் அதிமுக வில் உள்ள ஒவ்வொரு பிரகஸ்பதிகளும். 

நத்தம் விஸ்வநாதன் இந்தோனோசியவில் வைத்திருக்கும் நிலக்கரி சுரங்கம் பற்றி யாராவது பேசுகின்றார்களா?  நத்தம் சுற்றியுள்ள அத்தனை புறம்போக்கு நிலங்களும் யாரிடம் உள்ளது? கட்டிய கல்லூரிகளைச் சுற்றி வளைந்து குனிந்து தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்தும் என்ன மாயா ஜாலம் நடத்தியுள்ளது? என்பதனை அங்கிருப்பவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். 

ஐவர் கூட்டணி முதல் பெல் கூட்டணி வரைக்கும் உரித்து பிரித்து மேய்ந்தால் இந்திய ராணுவத்திற்கு ஒரு வருடத்திற்கு தேவைப்படுகின்ற ஐந்தே கால் லட்சம் கோடியை எளிதாக பெற்று விட முடியும்.  

அதே போல சசிகலா குடும்பத்தில் மேல் இருந்து கீழ் வரைக்கும் அத்தனை மிருகங்களையும் உரித்தால் இந்திய பட்ஜெட் முப்பத்தி ஒன்பது லட்சம் கோடிக்கு மேலே கிடைக்க வாய்ப்புண்டு என்று நான் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?  

இவையெல்லாம் நிச்சயம் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு ஆவணம் உருவாகும். உருவாக்குவேன்.

 எடப்பாடியும் பன்னீரும் பேசுவதை நாம் இங்கே பேச வேண்டியதில்லை.  ஆனால் பாஜக வில் இருந்து கொண்டு பன்னீர் அதிகாரத்தில் இருக்க வேண்டும். எடப்பாடி இப்படி மாற வேண்டும்? இரட்டைத் தலைமை தொடர்ந்து இருக்க வேண்டும்? என்ற தினமும் எழுதிக் கொண்டு இருப்பவர்களிடம் ஒரே ஒரு வார்த்தை கேளுங்களேன்.

அந்த நபர் ஊரில் அவர் சாதிக்காரன் கூட அவரை அவர் குடும்பத்தை ஆதரிக்க மறுப்பது ஏன்? என்று கேளுங்களேன்.


1 comment:

ஸ்ரீராம். said...

போட்டி, பொறாமை அதிகார வெறி...  இந்த மூன்றும் இந்த இருவரிடமும் இருக்கிறது.  யார் எந்த இடம் என்பதை இப்போதே முடிவு செய்துகொண்டுவிட துடிக்கிறார்கள்.  கட்சி இருந்தால்தான் தங்கள் பதவி என்பதை மறந்து விட்டார்கள் போல..