Saturday, June 18, 2022

ஒருங்கிணைந்த தஞ்சை மண்டலம் இனி பாஜக வசம்

பாஜக மற்றும் அண்ணாமலை குறித்து இணையத்தில் வருவதை விட மற்ற எந்தந்த இடங்களில் எப்படியான தாக்கம் உருவாகியுள்ளது? என்பதனை நான் இரண்டு வழிகளில் தினமும் சோதிப்பதுண்டு.
1. காரைக்குடியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமப்புற உள்பகுதியில் என்னுடன் படித்து தற்போது அரசு பள்ளிக்கூட ஆசிரியர் பணியில் உள்ள நண்பர்களிடம் பொதுவாக கேட்பது போல அரசியல் நிலவரம் குறித்து கேட்பேன். அவர்கள் கோபம், ஆத்திரம், விருப்பம் போன்றவற்றை உரையாடல் மூலம் உணர்ந்து கொள்வேன்.  

(அண்ணாமலை அவர்கள் ஒரு தொண்டரின் வீட்டுக்கு திடீரென்று சென்று திருமண மண்டபத்திற்கு சென்றது பெரும்பாலான கிராமங்கள் வரைக்கும் சென்று சேர்ந்துள்ளது)  நீண்ட நாளைக்குப் பிறகு மகிழ்ச்சி.

2. என் உறவில் உள்ள முக்கியமான நபர்களிடம் குறிப்பாக பெண்களிடம் அண்ணாமலை அவர்கள் குறித்த ஏதாவது ஒரு செய்தி குறித்து போகிற போக்கில் விசாரிப்பேன்.  தற்போது மோடி வைத்து உருவாக்கப்பட்ட மாயை 20 சதவிகிதம் குறைந்துள்ளது. இன்னமும் இயல்பு நிலைக்கு வரவில்லை.  ரேசன் பொருட்கள் சரியாக விநியோகம் செய்யாமல் இருப்பது கிராமப்புற மக்களை அதிக கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.  திமுக என்றால் திருட்டுப்பயலுக என்று தெரிந்து வாய்ப்பு கொடுத்து தான் பார்போம் என்று என்னிடம் சொன்ன அத்தனை பேர்களும் இத்துடன் இவர்கள் முடிந்தார்கள் என்று சாபமிடுவதைப் பார்க்கும் அண்ணாமலை அவர்கள் கிராம மக்களிடம் சென்று சேர்ந்துள்ளார் என்பதனை உறுதியாக சொல்ல முடிகின்றது.

குறிப்பாக கும்பகோணம் கூட்டத்தைப் பார்க்கும் போது உறவினர்கள் ஒன்று கூடி கொண்டாட வரும் கொண்டாட்ட திருவிழா போல மக்கள் மனதில் உற்சாகத்தைப் பார்க்கின்றேன்.

அடுத்த மாதம் அண்ணாமலை அவர்கள் மாநிலத் தலைவராக பொறுப்பேற்று முதல் வருடம் முடியப் போகின்றது. 

என் பார்வையில் தமிழக அரசியல்வாதிகள் சாதிக்காத சாதனையைச் சாதித்துள்ளார் என்பேன்.

காலம் கற்றுக்கொடுக்கும்.

()()()

நாகப்பட்டினம் முன்னாள் கம்யூனிஸ்ட் MP - S.G.முருகையன் என்பவர் அரசியல் காரணங்களால் (1979 என்று நினைவு) படுகொலை செய்யப்பட்டார். 

இன்று அவரது மகன் பாஜகவில் இணைந்துள்ளார்.  

டெல்டா மாவட்டங்களை அண்ணாமலை குறி வைப்பது மிகவும் திறம்படத் திட்டமிட்ட நிகழ்வு. 

திராவிடமோ, பொது உடமைக் கோட்பாடோ, காங்கிரசோ - அரசியல்ரீதியாக அவற்றை ஒரு சித்தாந்த ரீதியாகப் பயின்றவர்கள் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் அதிகம். அங்கேதான் நிலப் பிரபுத்துவம், பொது உடைமை இயக்கம், தேசிய இயக்கம், திராவிடிய நாத்திகம், வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்கள் ஊருக்கு ஊர் கட்டியமைத்த ஆன்மீகம்... இப்படி வெவ்வேறு வகைப்பட்ட - ஒன்றுக்கு ஒன்று முரணான - எதிரான கோட்பாடுகள் போட்டி போட்டுக் கொண்டு செழித்தன. 

எந்தவித சித்தாந்தமும் பயிலாமல் - கொள்கை நாட்டமும் இல்லாமல் - சினிமா நடிகன் கட் அவுட்டுக்குப் பால் ஊற்றுபவனை விட - ஏதோ ஒரு சித்தாந்தத்தில் எப்போதோ தன் வாழ்வில் கால் ஊன்றியவனை வென்றெடுப்பது எளிது - அவனுக்கு அவன் இதுவரை பெரிதென்று எண்ணிய சமூக - அரசியல் கோட்பாடு இப்போது காலச் சூழலுக்குப் பொருந்தாமல் உளுத்துப் போய்விட்டது என்பதை எடுத்துச் சொன்னாலே போதும்! 

மே.வங்கத்திலும் திரிபுராவிலும் பாஜகவின் அசுர வளர்ச்சி இப்படித்தான் நிகழ்ந்தது - கேரளத்தில் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது - தஞ்சை மண்ணிலும் நிகழும்!No comments: