Tuesday, January 18, 2022

தமிழக கல்வித்துறையின் எதிர்காலம்?

உங்கள் வீட்டு அறையில் கிழக்குப் பார்த்த ஜன்னலை சூர்யோதய நேரத்தில் திறந்து வையுங்கள்.



ஜன்னல் கிழக்குப் பார்த்து உள்ளது - அதன் வலது மூலையில் - தென் முனையில் சூர்யோதயம் நிகழும். அங்கே ஜன்னல் ஃப்ரேமில் சாக் கட்டியால் ஒரு மார்க்!

அதே போகப்போக அதே கிழக்கில் நடு மத்தியில் மார்ச் - 15 க்கு மேல் - சூரியன் சரியாக பூமத்திய ரேகைக்கு நேராக உள்ள காலம்! அப்போது ஜன்னல் ஃப்ரேம் மத்தியில் ஒரு புள்ளி!

பிறகு ஜூலை 15 தேதி அடையும் போது மெல்ல மெல்ல - கிழக்குப் பார்த்த ஜன்னலின் இடது கோடியில் - வட முனையில் சூர்யோதயம்! அங்கு ஒரு புள்ளி!

இப்போது தென்முனையில் இருந்து வட முனைக்கு அந்த நேர்கோட்டில் சூர்யனின் நகர்வே உத்தராயணம்!

ஜூலை 15 முதல் அடுத்த ஜனவரி 14 வரை வலது புறமாக - தென்முனை நோக்கி சூர்யோதய ஒளியின் நகர்வே தட்சிணாயணம்!

நமக்கும் வட துருவப் பகுதிகளுக்கும் இப்போது குளிர்காலம்! சூரியன் இப்போதுதான் தென்முனையில் இருந்து வட முனை நோக்கி தை 1 அன்று நகரத் தொடங்கி உள்ளான்!

எனவேதான் டிசம்பர் - ஜனவரி மாதங்களில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் அமெரிக்காவின் தென்கோடிப் பகுதியான டெரா டெல்ஃபியூகோ - போன்றவற்றில் இப்போது சம்மர் - கோடைக்காலம்!

அதுவே ஜூன் - ஜூலை நமக்கெல்லாம் கடும் கோடை - ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் குளிர்காலம்! தென்துருவத்தை ஒட்டிப் போனால் சூர்ய ஒளி நேரமே அப்போது மிகக் குறைவு. அதுவே அப்போது வட துருவத்தை ஓட்டிய நார்வே போன்ற நாடுகளில் சில நாள் சூரிய அஸ்தமனமே இருக்காது!

குழந்தைகள் இருக்கும் வீட்டில் GLOBE & ATLAS அவசியம்!


()()()



கடந்த நூறு நாட்களாக அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களைக் கவனித்து வருகின்றேன். அரசு பள்ளிக்கூட ஆசிரியைகள் (நான் பார்த்துக் கொண்டு இருக்கும்) தெய்வங்கள் என்றே முடிவுக்கு வந்துள்ளேன்.  காரணம்...

1.  ஒரு வகுப்புக்கு 55 மாணவிகள் என்றால் கடந்த மூன்று மாதங்களும் பாதிக்குப் பாதி தான் வந்துள்ளனர்.  என்ன கெஞ்சினாலும் பள்ளிக்கு வருவதில்லை. வீடு வரைக்கும் ஆள் போன போதும் பெற்றோர்கள் வேலைக்கு அனுப்புவதில் தான் குறியாக இருக்கின்றார்கள்.  இன்றைக்குக் கிடைக்கும் ஷிப்ட் வேலை மூலம் வரக்கூடிய வருமானம் அவர்களுக்குப் பெரிதாக உள்ளது.

2. ஒவ்வொரு மாவட்டத்திற்கும்    கல்வித்துறை அதிகாரி இருப்பார். அவரின் முக்கியமான வேலை என்பது அரசு பள்ளிக்கூடங்களின் வளர்ச்சியை (தேர்ச்சி சதவிகிதம் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை) கண்காணிப்பது.  தன் அதிகார வரம்பிற்குள் முடிந்த அளவுக்கு மாவட்டத்திற்குள் இருக்கும் அரசு பள்ளிக்கூடத்திற்குத் தேவைப்படுவதைச் செய்து கொடுப்பது. 

குந்தாணி போலவே இங்கு ஒருவர் இருக்கின்றார்.  அரசாங்கத்திற்கு நீட் பிடிக்கவில்லை என்கிற போது நீங்கள் ஏன் நீட் பரிட்சை இலவசமாக சொல்லிக் கொடுக்க ஆட்களை வெளியே இருந்து அழைத்து வருகின்றீர்கள் என்று ஆசிரியைகளை மிரட்டும் அளவுக்கு நல்ல மனிதராக இருக்கின்றார். 



3. 10,11,12 படிக்கும் மாணவிகளில் தனியார் பள்ளி என்றால் தமிழ் வாசிப்பது சிரமம். 60 சதவிகித மாணவிகள் பொட்ட உரு திறமைசாலிகளாக இருக்கின்றார்கள். 12 ஆம் வகுப்பு படிக்கும் தனியார் பள்ளி மாணவிகளில் பத்து சதவிகித மாணவிகள் மட்டுமே சொந்தமாக ஆங்கிலத்தில் எழுதும் அளவுக்குத் திறமைசாலியாக உள்ளனர்.  ஐந்து சதவிகித மாணவிகள் மட்டும் இயல்பாக ஆங்கிலம் பேசும் அளவுக்கு உள்ளனர்.  அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளில் அரசு பொதுத் தேர்வு என்றால் மாதிரி கேள்வித் தாள் இல்லாமல் போனால் கஷ்டம் என்கிற அளவுக்கு நம் கல்வித்திட்டம் உள்ளது.

4. அரசுப் பள்ளிகளின் வெக்கேசனல் குரூப் என்ற பிரிவில் பயிலும் மாணவிகளில் 90 சதவிகிதம் எழுதப் படிக்க விரைவாக வாசிக்க, மனப்பாடம் செய்ய என்று எல்லாவிதங்களிலும் கடினம் என்கிற நிலையில் இந்தப் பிரிவுக்கு வந்து சேர்கின்றார்கள்.  அரசாங்கம் முழுமையாக ஆசிரியர்களை நியமிக்கவில்லை.  வெளியே வசூல் செய்து ஆசிரியைகளை வரவழைத்து நடத்துகின்றார்கள்.  சம்பளம் கொடுக்க முடியாத போது ஆசிரியைகள் வருவதில்லை.  ஏற்கனவே கல்வி ரீதியாக பின்தங்கிய மாணவிகளின் நிலைமை பார்க்க கண்ணீர் வரவழைப்பதாக உள்ளது.

5. தனியார் பள்ளிக்கூடம் சிறப்பு. அருமை என்பதோ அரசு பள்ளிக்கூடம் மோசம். கொடுமை என்பதோ இல்லை.  நான் கடந்த இரண்டு வருடங்களாக கவனித்த வரைக்கும் எவரவர் வீட்டில் தங்கள் குழந்தைகள் என்ன படிக்கின்றார்கள்? இன்று என்ன பாடம் நடத்தினார்கள்? என்ன புரிந்து கொண்டாய்? இன்று என்ன வீட்டுப் பாடம்? கொஞ்சம் வாசித்துக் காட்டு? என்பது போன்ற உரையாடல்கள் நடக்கும் வீட்டில் மட்டும் தான் இன்றைய சூழலில் குழந்தைகளைக் கவனிக்க முடியும். கண்காணிக்க முடியும். கணிக்க முடியும்.  இல்லாவிட்டால் அலைபேசி உருவாக்கிய தாக்கத்தைக் கொண்டுள்ள ஒவ்வொரு மாணவிகள் (மாணவர்கள் தனிக்கதை) போக்கு என்பது கரணம் தப்பினால் மரணம்.



இந்த நிமிடம் வரைக்கும் எடப்பாடி அரசு வழங்கிய மடிக்கணினி மற்றும் மிதிவண்டி வழங்கப்படவில்லை. கல்வித்துறை அத்துவானக்காட்டுக்குள் இருப்பதாகவே தெரிகின்றது. இப்போது இருக்கும் ஆணையர் இன்னமும் பல மடங்கு விரைவாக செயல்படாத பட்சத்தில் நிறையவே கஷ்டம்.

அமைச்சருக்கு அவர் தாத்தா அப்பா செய்த காரியங்கள் செய்யவே சரியாக இருக்கும்.  அது தான் இவருக்கும் தெரியும். 

ஆணையர் நந்தகுமார் தான் பத்து லட்சம் மாணவர்களைக் காப்பாற்ற வேண்டும்.

இந்த வருடக் கல்வியாண்டோடு மொத்தம் மூன்று வருடங்கள் தமிழக மாணவர்களின் மனநிலை, அறிவு போன்ற அனைத்தும் மிகப் பெரிய கேள்விக்குறி?

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

கோவிந்தா கோவிந்தா...!