Thursday, September 23, 2021

'வெள்ளையனை வெளியேற்றி வெற்றியடைந்த வேட்டி'!

 'வெள்ளையனை வெளியேற்றி வெற்றியடைந்த வேட்டி'!

பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே... அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே.....

அனைவருக்கும் வணக்கம்.

 ' ஆடையில் புரட்சி ' என்ற அற்புதம் நடைபெற்ற நாள், இன்றைக்கு சரியாக நூறாண்டுகளுக்கு முன்,  செப்டம்பர் 22,1921, அன்று மதுரையில் நடைபெற்றது. 

Listen to "'வெள்ளையனை வெளியேற்றி வெற்றியடைந்த வேட்டி'! - (BJP Anna Letter -11)" 

by  ⚓ https://anchor.fm/jothig/episodes/--BJP-Anna-Letter--11-e17ovqq 

ஆங்கிலேயரை எதிர்க்க ‘‘வெடி வேண்டாம், வேட்டி போதும்’’ என சுதந்திரத்தை காந்தியடிகள் நெசவு செய்த கதை சுவாரஸ்யமானது. ஆங்கிலேயருக்கு எதிராக, ஆடைப் புரட்சி செய்தவர் அண்ணல் காந்தியடிகள். 

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடைபெற்ற இந்திய சுதந்திரப் போரில் தமிழகத்தின் வேட்டியின் பங்களிப்பும் இருக்கிறது என்பது ஒரு வியப்பான உண்மை. ஆடையாலே... ஒரு புரட்சியை உருவாக்கி, அன்னியத் துணிகளைப் மறுதலித்து, வெளிநாட்டுத் துணிகளை வெறுப்போம், கதராடை பயன்பாட்டை அதிகரிப்போம், என்ற ஒரு எண்ணத்தை அண்ணல் காந்தியடிகளுக்கு தோற்றுவித்த மண் தமிழ் மண். 


மகாத்மா காந்தியடிகள், செப்டம்பர் 21, 1921, அன்று திருச்சி, திண்டுக்கல் வழியாக மதுரை வந்தபோது வழியெங்கிலும், தமிழக மக்கள் மகாத்மாவிற்கு ரயில் நிலையத்தில் பிரம்மாண்டமான வரவேற்பளித்தனர். அந்த தமிழ்நாட்டுப் பயணத்தின்போது வேட்டியை மட்டுமே உடம்பில் அணிந்திருந்த ஏராளமான ஏழை எளியோரைக் கண்டு இரங்கி, தானும் பகட்டான ஆடைகளைத் துறக்க முடிவு செய்தார். அப்படி  ' ஆடையில் புரட்சி ' என்ற அற்புதம் நடைபெற்ற நாள், இன்றைக்கு சரியாக நூறாண்டுகளுக்கு முன்,  செப்டம்பர் 22,1921, அன்று மதுரையில் நடைபெற்றது. 

தென்னாப்ரிகாவில் கோட்டும், சூட்டும் அணிந்து பழகியிருந்த காந்தி அடிகள் ஏழைகள் ஆடைக்கு வழியின்றிருப்பதை அறிந்திருந்தாலும், எளிமையான ஆடைக்கு மாற உளமாற விரும்பினாலும், தன்னை கதர் வேட்டி மட்டும் கட்டிய எளியோனாய் மாற்றிக்கொள்ளும் மகத்தான இந்த முடிவை எடுப்பதற்கான துணிவை, உறுதியை ஊட்டியது, நம் தமிழ் மண்தான் என்பது நமக்கெல்லாம்  பெருமை தரும் செய்தி . 

காந்தியடிகள் சிந்தனையில் சுழன்றது ராட்டை, ‘‘ராட்டை காக்கும் நம் வீட்டை’’ என்று அவர் விடுத்த அறைகூவல் பட்டிதொட்டி எல்லாம் பரவியது. மக்கள் கதர்த் துணிகளையே பெரிதும் பயன்படுத்தினர். ஒத்துழையாமை இயக்கம் வேகமாகப் பரவப்பரவ, மக்கள் மிகுந்த ஆர்வத்தோடும், தேசபக்தியோடும் கதர் ஆடைகளைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். கதர் வேட்டி சுதந்திரப் போராட்டத்தின் சின்னமாக மாறத் தொடங்கியது.

நம்முடைய நாட்டின் சுயசார்பான நெசவுத் தொழிலை அழித்துவிட்டு ஆங்கிலேய அரசாங்கம் தன்னுடைய துணிகளை இறக்குமதி செய்து அதன் மூலம் மக்களிடம், கொள்ளை லாபத்தை சம்பாதித்துக் கொண்டிருந்த சதி முறிக்கப்பட்டது. வாழ்வாதாரமின்றித் தவித்துக் கொண்டிருந்த ஏழை நெசவாளர்கள், ராட்டையால் வீட்டையும், நாட்டையும் காத்தார்கள். 

கட்டும் ஆடையைக் கூட ஆயுதமாக்கி அரசியல் களத்தில் அதிர வைக்க முடியும் என்ற அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியவர் அண்ணல் காந்தியடிகள். 

1931ல் லண்டனில் நடைபெற்ற இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் இங்கிலாந்து அரசரைச் சந்திக்கச் சென்ற போது, மேற்கத்திய ஆடையின்றி தன்னுடைய கதர் வேட்டியோடு சென்ற கம்பீரம் தான் காந்தியிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். 

அப்படிக் கற்றுக்கொண்டதன் அடையாளமாகத்தான் நம் பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களும், தென்னாட்டில் சீன அதிபர். திரு.ஜீ -ஜின்-பிங் அவர்களை தமிழகத்தில் சந்தித்தபோது, தமிழர் பாரம்பரிய ஆடையான வேட்டியில் சந்தித்தார். அப்போதும் நம் தமிழர் ஆடையான வேட்டியின் பெருமை பல வெளிநாடுகளைச் சென்றடைந்தது.

ஆடைகள் நம் கலாச்சாரம், மற்றும் பண்பாட்டின் வெளிப்பாடு, ஆனால் அதிலும் காந்தியடிகள் காட்டினார் அரசியல் நிலைப்பாடு. காந்தியடிகள் எடுத்த உன்னத முடிவுதான் ஆடையில் புரட்சி. அந்த நிகழ்வின் நூற்றாண்டை இன்று கொண்டாடும் போது, அவரைப்  பின்பற்றி செயல்படுவதே, நாம் அவருக்குச் செய்யும் கைமாறு.

ஆள் பாதி ஆடை பாதி என்பது எத்துணை உண்மையானது. பாதி ஆடையாலே ஆங்கிலேயருடன் மோதி வெற்றிபெற்ற அவரின் தன்னம்பிக்கையே, விடா முயற்சியே, நாம் எல்லோரும் இதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது.  

அன்புச் சகோதரன்

உங்க "அண்ணா"



No comments: