Friday, September 24, 2021

நாற்கரக் கூட்டமைப்பு மாநாடு எனும் க்வாட் நாடுகள் மாநாடு

 'உலகத் தலைமை கொள்ளும், உன்னதத் தலைவர் மோடி!'

பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே... அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே..... 

அனைவருக்கும் வணக்கம்.

ஐக்கிய நாடுகளின் இந்த ஆண்டிற்கான பொதுச்சபைக் கூட்டம், மற்றும் நாற்கரக் கூட்டமைப்பு மாநாடு எனும் க்வாட் நாடுகள் மாநாடு, ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகப் பாரதப் பிரதமர் அமெரிக்கா சென்றிருக்கிறார்.


கோவிட்19 நோய்த்தொற்று பரவலுக்குப் பிறகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன்னுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த இருப்பது உலகளாவிய முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் ஜோ பைடன் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் முதல்முறையாக சந்திக்க இருக்கிறார் என்பதால் இந்தப் பயணம் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் உலகின் மிகச் சக்திவாய்ந்த அமைப்பான நாற்கரக் கூட்டமைப்பின் இக்கூட்டத்தை வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் காணொளியில் இல்லாது நேரடியாகக் அதிபர் ஜோ பைடன் கூட்டியிருக்கிறார். இக்கூட்டத்தில் நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் அதிபர் யோஷி ஹிடே சுகா, ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்நால்வரும் என்ன பேசப் போகிறார்கள் என்பதை உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. 

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சுனாமியை தொடர்ந்து ஜப்பான் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பேரழிவு நிவாரணப் பணிகளில் ஒத்துழைக்க, ஜப்பான் இந்த  நாற்கரக் கூட்டணியை உருவாக்கியது. 2007ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் இந்தக் கூட்டணியை நாற்புறப் பாதுகாப்பு உரையாடல் என்று பெயரிட்டு முறைப்படுத்தினார். இடையில் தொய்வு அடைந்திருந்த இந்த நான்கு நாடுகளின் கூட்டமைப்பு, தற்போது மீண்டும் புத்துயிர் பெற்று அதன் நோக்கங்களை விரிவுபடுத்தியுள்ளது. 

தற்போது  இந்த நான்கு நாடுகளுக்கிடையேயான சர்வதேசக் கூட்டுறவையும் நெறி முறையையும் வகுப்பதற்காக நமது பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களை உலகத் தலைவராக முன்னிறுத்தி இம்மாநாடு மீண்டும் கூடுவது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளுக்குக் கிடைத்த வெற்றியாக மதிக்கப்படுகிறது. 

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, இந்தக்கூட்டமைப்பைத் தீவிரமாக எதிர்த்து வந்த சீன அரசு, 2018 ஆம் ஆண்டு இந்த க்வாட்  கூட்டமைப்பைத் தலைப்புச் செய்திகளைத் தரும் அமைப்பு என்று எள்ளி நகையாடியது. 

கீழ்த்திசை நாடுகளில் சீனா மெதுவாக தன் ஆதிக்கத்தை வளர்த்துக்கொண்டு வருகிறது. வருங்காலத்தில் சீனாவின் ஆதிக்கம் உலகளாவிய அச்சுறுத்தலையும் உருவாக்கும் என்றும் நம்பப்படுகிறது. ஆகவே இந்த நான்கு நாடுகளின் கூட்டமைப்பின் மூலம்,  இந்தோ பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பை  உறுதிப்படுத்துவது இந்தியாவிற்கு மிகவும் அவசியமாகிறது. 

இந்த மாநாட்டில் உலகின் மிக முக்கியமான அம்சங்கள் விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய கோவிட் 19 நோய்த் தொற்று குறித்து விவாதிக்கப் படலாம், சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்தும், பருவநிலை மாற்றங்கள் குறித்தும், புதிய அறிவியல் தொழில்நுட்பப் பரிமாற்றங்கள் குறித்தும், நாடுகளுக்கிடையேயான இன்டர்நெட் இணையத் தொடர்புகள் குறித்தும், இந்தியப் பெருங்கடல் பகுதி மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஏற்படும் இயற்கைச் சீற்றங்கள் குறித்தும், இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் தேவைப்படும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும், பிற நாடுகளிலிருந்து வரும் அச்சுறுத்தல் ஆபத்து குறித்தும், தீவிரவாதங்கள் குறித்தும், ஆப்கானில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்தும் பெரிதாக விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் கூட்டமைப்பின் ஏதாவது ஒரு நாட்டுக்கு ஆக்கிரமிப்பு ஆபத்து ஏற்படும் போது, ஏனைய நாடுகள் உதவிக்கு வருவதை உறுதிப்படுத்தும் ஒப்பந்தம் ஏற்படுவது குறித்தும் நாற்கரக் கூட்டமைப்பு மாநாட்டில் விவாதிக்கக்கூடும். ”இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடனான எங்கள் குவாட் கூட்டாண்மை 2022 ஆம் ஆண்டின் இறுதியில் உலகளாவிய விநியோகத்தை அதிகரிக்க இந்தியாவில் குறைந்தது 1 பில்லியன் தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்ய உதவுகிறது. மேலும் நாங்கள் தெற்கில் உற்பத்தியை வலுப்படுத்த உதவுகிறோம்.”என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருக்கிறார்.

பாரதப் பிரதமர் மோடி அவர்களின் அனுமதியுடன் அமெரிக்காவில் தயாராகும் ஒரு பில்லியன் தடுப்பூசி மருந்துகளை இந்தியாவில் விற்பனை செய்ய அமெரிக்கா திட்டமிடுகிறது என்று பொய்ச் செய்திகளைப் பரப்பியவர்கள் மத்தியில் அமெரிக்கா தங்களுக்குத் தேவையான மருந்துகளை இந்தியாவிலிருந்து பெற்றுக் கொள்வோம் என்று கூட்டத்தொடருக்கு முன்னரே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்திருப்பது இந்தியாவிற்கான மிகப்பெரிய வெற்றி. 

ஆகவே உலகத் தலைவர்கள் எல்லாம் உயர்த்திப் பிடிக்கும் உன்னதத் தலைவராக  ஒரு சர்வதேச ஆளுமையாக நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திகழ்கிறார் என்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சியளிக்கும் செய்தி. 

தமிழக பாஜக தலைவர் திரு.கே. அண்ணாமலை அவர்களின் தொண்டர்களுக்கு எழுதும் கடிதத்தை பேச்சு வடிவில் கேட்க

Listen to "'உலகத் தலைமை கொள்ளும், உன்னதத் தலைவர் மோடி!' 

https://anchor.fm/jothig/episodes/Annamalai-Letter---12-e17qg9d 

வையத்தலைமை கொள்ளும் திரு. நரேந்திர மோடி அவர்களின் பயணமும் கூட்டமும் வெற்றிகரமாக அமைய நாட்டு மக்கள் சார்பாக நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.

அன்புச் சகோதரன்

உங்க "அண்ணா" · 

No comments: