Sunday, September 12, 2021

முண்டாசுக் கவிஞரும் ! முத்தமிழ் நேயர் மோடியும் !

பாஜக மாநில தலைவரின் கடிதம்.-3

#தமிழக_பாஜக_தலைவர்_கடிதம்




நம் தமிழ் மொழி மீதும், இலக்கியத்தின் மீதும், மாறாத பற்று கொண்ட நம் பாரதப்பிரதமர், நரேந்திர மோடி அவர்கள், தேசிய கவி பாரதி வழியில் பாரத நாடு என்கிற கொள்கைப்பிடிப்பு உள்ளவர். தமிழகத்தில் உரையாற்றும் போது மட்டும் தமிழ் மக்களைக் கவர்வதற்காகப் பேசுகிறார் என்று குற்றஞ்சாட்ட முடியாமல், சர்வதேச மாநாடுகளிலும், நாடாளுமன்ற உரையிலும் பாரதியின் பாடல்களை மேற்கோள் காட்டுவதை வழக்கமாக கொண்டவர்.

"துணிச்சலாக செயல்பட்ட பாரதியாரின் கவிதைகளை நாட்டு மக்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மகாகவி பாரதியின் பாரம்பரியத்திற்கும் தமிழ் மக்களுக்கும் தலைவணங்குகிறேன். இந்த பாரதி பிறந்த மண்ணில் நிற்பதில் பெருமைப் படுகிறேன்." என்றார் பிரதமர் மோடி.

 பாரதியாரின் 100வது நினைவுநாளில், தன் டுவிட்டர் பதிவில் ‘‘சிறப்பு வாய்ந்த சுப்ரமணிய பாரதியாரின் 100வது நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது பெரும் புலமை, நாட்டுக்கு அவர் ஆற்றிய பன்முகப் பங்கு, சமூக-நீதி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மீதான அவரது நன்னெறிகளை நாம் நினைவு கூறுகிறோம்’’ எனக் கூறியுள்ளார்.

இந்த நிலையில்,  உத்தரப் பிரதேச மாநிலம் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் படிப்பிற்கான இருக்கை அமைக்கப்படும்; தமிழ் படிக்கவும் தமிழ் ஆய்வு மாணவர்களுக்கும் பாரதி இருக்கை பயன்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.  இது தொடர்பாக கூறியிருப்பதாவது:-

‘‘உலகின் மிகப் பழமையான மொழியான தமிழின் தாயகம் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இன்று, சுப்பிரமணிய பாரதியின் 100 வது நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக காசியின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான சுப்பிரமணிய பாரதி இருக்கை நிறுவப்படும். இதன் மூலம் ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் பயன் பெறுவர்’’ எனக் கூறினார்.

2021ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி சென்னை அரசு விழாவில் பேசிய போது பாரதியைப் பெருமையுடன் நினைவு கூர்ந்தார். அப்போது பேசிய அவர், ‘’தன் இன்பத்தமிழ்க் கவிதைகளால் இந்திய மக்களின் விடுதலை வேட்கையைத் தூண்டியவர், பெண்ணுரிமை போராளி, சாதி மறுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய சமூக சீர்திருத்தவாதி, “மகாகவி” என போற்றப்பட்ட சுப்ரமணிய பாரதியாரின் நூற்றாண்டு நினைவுநாளில் அவரது தேசப்பற்றையும், மொழிப்பற்றையும் போற்றி வணங்குகிறேன்’’ என மரியாதை செலுத்தினார். 2020 டிசம்பரில் பாரதியை விளித்துப் பேசும்போது. ‘’துணிச்சலாக செயல்பட்டவர் பாரதியார். அச்சமில்லை அச்சமில்லை பாடலை அப்போது மேற்கோள் காட்டி பேசினார்.

2019 செப்டம்பர் 11ம் தேதி, தேசியக்கவி பாரதியாரின் பிறந்த நாளன்று பாரதப் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழில் ``மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் மாமனிதர் சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளன்று அவரை நினைவுகூர்கிறேன். தேசப்பற்று, சமூக சீர்திருத்தம், கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர். அவரது எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் விதமாகவே உள்ளன.

சுப்பிரமணிய பாரதி, நீதி, சமத்துவம் ஆகியவற்றை மற்ற எவற்றிற்கும் மேலாக நம்பினார். `தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்' என்று ஒருமுறை சொன்னார். மனிதனின் அவதியைப் போக்கி அதிகாரமளிக்க அவர் கொண்டிருந்த பார்வையை இது ஒன்றே விளக்குகிறது” என்று தன் ட்வீட்டரில் பதிவிட்டு மரியாதை செலுத்தினார்.

கடந்த 2019 நவம்பர் 24ம் தேதி 'மன் கி பாத்” நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றியபோது, ’'முப்பது கோடி முகமுடையாள், உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்' என்ற பாரதியாரின் பாடலை பெருமை பொங்க மேற்கோள் காட்டி, நமது நாட்டுக்கு 30 கோடிக்கும் மேற்பட்ட முகங்கள் இருந்தாலும், நம் இந்தியத் தேசம் ஒரே ஓர் உடலைத் தான் பெற்றுள்ளது என்று விளக்கம் கூறிப் பேசினார். மேலும் நம் நாட்டில் பல்வேறு மொழிகள் பேசப்பட்டாலும், நாம் அனைவரும் இந்தியர்கள் என்று வேற்றுமையில் ஒற்றுமை காண்கிறோம் என்று பாரதியின் உவமைகளை வியந்து பேசினார் மோடி.

பாரதியின் 139- வது பிறந்த நாளில் இணைய வழி நடைபெற்ற சர்வதேச பாரதி விழாவில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடி, அச்சமில்லை என்றால்தான் இளைஞர்கள் வெற்றி பெற முடியும் என்ற கருத்தினை வலியுறுத்தியும், தமிழ் மகாகவி பாரதியாரின் பெருமைகளை நினைவு கூர்ந்தும் பேசினார். ’’ படைப்பாளி, பத்திரிக்கையாளர், சுதந்திரப் போராட்ட வீரர், பன்மொழி வித்தகர், பெரும் புலவர் என்று பன்முகங்கள் கொண்டவர் பாரதியார், அவர் மிக உயர்ந்த சமூக சீர்திருத்தக் கருத்துக்களைக் கொண்டவர்,  அச்சம் இல்லை.. அச்சம் இல்லை... அச்சம் என்பது இல்லையே என்ற பாடல் வரிகளை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி...  வானமே இடிந்து தலைமீது விழுந்தாலும் சரி அச்சம் இல்லை... அச்சம் இல்லை என்ற இந்தப் பாடலை இளைஞர்கள் உத்வேகமாக கொள்ள வேண்டும் என்றுரைத்தார்.

தேசத்தையும் மொழியையும் உயிராக மதித்துப் போற்றிய பாரதியாரை நாட்டின் பிரதமர் மட்டுமல்ல, மத்திய மந்திரிகளும் ஆராதிக்கின்றனர். மத்திய நிதி அமைச்சர். திருமதி  நிர்மலா சீதாராமன் அவர்கள், மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் மீன் வளத்துறை அமைச்சர் திரு.எல்.முருகன் ஆகியோர் பாரதி பிறந்த மண்ணில் எட்டயபுரத்தில் பாரதிக்கு மரியாதை செய்தார்கள் . மத்திய நாடாளுமன்ற இணையமைச்சர் அர்ஜுனராம் மேக்வால் அவர்கள் திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் இல்லத்திலும் அஞ்சலி செலுத்தினார்.

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை  அழித்திடுவோம் என்றார் பாரதி அதுவே பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டமாக மலர்ந்தது. பெண்களுக்கான சுதந்திரமும், அதிகாரமும் பாரதியின் முக்கிய லட்சியங்களில் ஒன்றாக இருந்தது, பெண்கள் முன்னேற்றத்திற்கு பாரதி முக்கியத்துவம் அளித்ததற்கு ஏற்ப, மத்திய அரசும் 15 கோடி பெண்களுக்கு முத்ரா திட்டத்தின்கீழ் கடன் வழங்கி பொருளாதார வலிமை மிக்கவர்களாக மாற்றி இருக்கிறது.

முண்டாசுக் கவிஞரின் முத்தமிழ் நேயரான மோடி, நமது பாரதியைப் பாரத நாட்டின் வழிகாட்டியாக ஏற்று செயல் படுபவர் என்றால் அது மிகையில்லை. உண்மை.      

நேற்று பரமக்குடியில் உள்ள இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்குச் சென்று மலர்தூவி மனமார்ந்த அஞ்சலி செலுத்தினேன். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டவர், ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகப்  பாடுபட்டவர், அரசியலுக்கு அப்பாற்பட்ட தலைவர் இம்மானுவேல் சேகரனின் நினைவை நாமும் போற்றுவோம்.

அன்புச் சகோதரன் 

உங்க அண்ணா

தடைகளைத் தகர்த்த தந்திமுகன் !

தினமும் உங்களிடம் பேசுகிறேன்