Wednesday, February 10, 2021

சசிகலா வரவேற்பும் நிகழ் கால சமூகமும்

நாடே கெட்டுப் போய் விட்டது? ஊடகங்களின் அழுகல் நாற்றம் அருவருப்பாக உள்ளது என்று அலறாதீர்கள். உங்கள் பார்வையில் முதிர்ச்சியில்லை என்பதனை முதலில் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களைச் சுற்றியுள்ள சமூகத்தை முழுமையாக உணராமல் உங்கள் விருப்பப்படி சமூகத்தைக் கட்டமைக்க விரும்பாதீர்கள்?

முதல் கட்டமாக உள்ள 25 குடும்பங்கள் அதனைச் சார்ந்து உறவு வட்டங்களில் உள்ள 250 குடும்பங்கள் இவர்களை அண்டிப்பிழைக்கும் 2500 குடும்பங்கள்.


எந்தவொரு கட்சியையும் எடுத்துக் கொண்டு கூர்மையாகக் கவனித்தால் இது தான் இன்றைய தமிழக அரசியலில் அடிப்படையாக இருக்கும்.  தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இவர்கள் இருப்பார்கள். நினைத்தால் கலவரம் முதல் கண்கட்டி வித்தைகளை வரைக்கும் நடத்திக் காட்ட முடியும். 

ஒரு நாளைக்குச் சாப்பாடு போட்டு உனக்கு ஆயிரம் ரூபாய் தருகிறேன். கூட்டத்திற்கு வந்து விடு? என்று சொன்னால் போது பிறந்த குழந்தையையும் கணக்கில் காட்டத் தூக்கிக் கொண்டு வரும் எளிய தமிழ்ப்பிள்ளைகள் வாழும் தமிழகம்.

டிடிவி தினகரன் ஆர் கே நகரில் போட்டியிட்ட போது பணம் கொடுக்க (டோக்கன்)கணக்கு எடுக்கச் சென்றவர்கள் பேசிய பேச்சு காட்சியாக அப்போது வாட்ஸ்அப் ல் வந்தது.  

சென்றவர் "எத்தனை பேரும்மா? இருக்குறீங்க?" என்று கேட்கிறார். வாசலில் இருந்தவர் கணக்கு சொல்லிவிட்டு, "மகன் வேலைக்குச் சென்றுள்ளார். மருமகள் உள்ளே குளித்துக் கொண்டு இருக்கின்றார்? வரச் சொல்லனுமா?" என்கிறார். 
இவ்வளவு தான் இங்குள்ள கட்டமைப்பில் உள்ள புனிதம்.

இவர்களிடம் இருக்கும் பணத்தை வைத்து ஊடகம் முதல் உச்ச நீதிமன்றம் வரைக்கும் உள்ளே நுழைந்து வெளியே வர முடியும். அவர்களின் விருப்பத்தை மக்கள் விருப்பமாக மாற்ற முடியும். ஆசையை வெளிப்படுத்த முடியும். அதுவே உண்மையென்று நம்ப முடியும். காரணம் நம் இபிகோ இப்படித்தான் உள்ளது.
அதிகாரத்தை அடைய ஆசைப்படாதவர்கள் இங்கு யாராவது இருக்கின்றார்களா? இந்த ஆசை யாரோ ஒருவர் பக்கம் செல்லும்படி செய்யும். 

நீ ஒதுக்கினால் நான் அவர் பக்கம் செல்வேன். அவரும் ஒதுக்கினால் அடுத்தவர் பக்கம் செல்வேன். அவர் நல்லவரா? கெட்டவரா? நாணயமானவரா? தியாக சீலரா? என்பது முக்கியமல்ல. நான் உன்னுடன் வந்தால், உன்னைப் பற்றிப் பேசினால் எனக்கு என்ன லாபம் என்ற வணிக வலையின் எதார்த்தம் என்பதனை அமைதியாக உள்வாங்கினால் உங்களால் டென்சன் ஆகாமல் நிஜத்தைப் புரிந்து கொள்ள முடியும்?

அப்பாவும் மகனும் வெளியே வராமல் அடுத்த வேளை சோற்றுக்கு என்ன செய்வது? என்று காத்துக் கொண்டிருக்கும் குடும்பம் குறித்துக் கவலைப்படாமல் ரயில் நோக்கிக் கல்லெறிந்தால் உனக்கான இடஒதுக்கீடு கிடைக்கும் என்று நம்ப வைப்பதும்,  காவல் நிலைய ஆவணங்களில் பெயர் இடம் பெற்று வாழ்க்கையைத் தொலைக்கும் அவனின் கதை அடுத்தவருக்குப் பாடமாக இங்கு மாறாது. காரணம் அடுத்த விட்டில் பூச்சியைத் தயாராக வைத்திருப்பார்கள். காரணம் இதற்குப் பெயர் சமூகநீதி.  அடித்தால் தான் கிடைக்கும் என்றால் அடித்தே தான் தீர வேண்டும் என்பது கொள்கை பிரகடனமாக முலாம் பூசி மாற்றப்படுகின்றது.

அரசுப் பணத்தைக் கொள்ளையடித்தார். கொள்ளையடித்தவருக்கு உதவி புரிந்தார். காரணமாக இருந்தார். சிறை சென்றார். திரும்ப வருகின்றார் என்றால் அது தியாகத்தின் வடிவமாக மாற்றுவது அது குற்றவாளிக்குக் கொடுக்கப்படும் மரியாதையல்ல. குற்றவாளிக்கு எதிராக உள்ளவருக்கு அளிக்கப்படும் எச்சரிக்கை.  

ஆதரிப்பவர்கள் சொல்லும் காரணம் அவர் மட்டும் தான் இந்த நாட்டில் தவறு செய்தவரா? எதிர்ப்பவர்கள் சொல்லும் காரணம் ஏன் தியாகம் என்ற வார்த்தை கொச்சைப்படுத்துகிறாய்? முடிவே இல்லாமல் மாறிய சமூகத்தின் மனிதர்களின் எண்ணமும் நோக்கம் வெவ்வேறு பாதையில் சென்று கொண்டிருக்கும் போது அவர்களிடம் சென்று அறிவுரை சொல்ல முற்பட்டால் நீ இந்தச் சமுகத்தில் வாழத் தகுதியற்றவன் என்றே முத்திரை குத்தப்படுவாய். 

மாறிக் கொண்டிருக்கும் மக்களாட்சி தத்துவத்தை கவனித்துக் கொள். 

அது போதும்.

அதிகாரத்தில் இருப்பவர்கள் அடியாட்களைத் தான் விரும்புவார்கள். அவர்களுக்கான எல்லையைத் தாண்டாத வரைக்கும்.  கலைஞர் மாறன் குடும்பத்தை அப்படித்தான் வைத்தார். வளர்த்தார்.  தாயம்மா சசிகலாவை அப்படித்தான் முகமூடியாக வைத்திருந்தார். எடப்பாடி அமைச்சர்களை இப்படித்தான் வளர்த்துக் கொண்டு வருகின்றார். 

"தெரு முனைக்கு வாம்மா" என்று சொல்லி உன்னத காரியத்தை வயதுக்கு மீறி நடத்திக் காட்டியவரின் அப்பா 1972ல்  அக் மார்க் அதி தீவிர திமுக கவுன்சிலர். எம்ஜிஆரின் படத்தை திரையரங்கத்தில் வெளியிட முடியாத அளவுக்கு ரகளை செய்தவர்களில் முக்கியமானவர்.  மகன் பேசும் பேச்சை சசிகலா புரிந்து கொள்ளாமலா இருப்பார்?

அமைச்சர்கள் ஏன் இந்த அளவுக்கு உளறுகின்றார்கள்? பயப்படுகின்றார்கள்?  காரணம் அந்தரங்கம் அனைத்தும் ஒருவரிடம் சிக்கியிருந்தால் நீங்களும் மட்டையாக மடங்கத்தான் செய்வீர்கள்? அரசியலில் மேலே செல்லச் செல்ல அந்தரங்கம் என்பது கோடிகளில் விலை போகக்கூடிய பொருளாக இருக்கும். அது சுரக்கச் சுரக்க வந்து கொண்டேயிருக்கும்.  கறக்கக் கறக்க வெளியே இருந்து கொண்டே அதிகாரச் சுவையை அடைய முடியும். 

உணர்ந்து கொண்டவர்கள் அதிகம் பேச மாட்டார்கள். ஒப்பந்தம் போட்டு ஓர் ஒழுங்குக்குள் கொண்டு வர முடியுமா? என்று உள் அரசியல் பேச்சு வார்த்தைகளைத் தான் தொடங்குவார்கள். உன் எல்லை இது? என் எல்லை இது? என்று வெள்ளைக் கொடி காட்டிக் கொள்வார்கள். உங்களுக்கும் எனக்கும் தெரியாது. ஊடகத்திற்குத் தெரியும். அவர்கள் காரண காரியத்தோடு அதனை அணுகுவார்கள்.  

கடந்த நான்கு வருடங்களாக மிடாஸ் சாராய ஆலை கொள்முதலைத் தமிழக அரசு நிறுத்தவே இல்லையே? எடப்பாடி அதைத்தான் இப்போது செய்து கொண்டு இருப்பார்.

முன்பு இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம் என்று கட்சி சார்ந்த பேச்சாளர்கள் தமிழகம் எங்கும் பேசிக் கொண்டிருந்தார்கள். கடந்த ஒரு மாதமாகக் கவனித்துப் பாருங்கள். முக்கிய தலைகளைத் தவிர வேறு எங்கும் எவரின் முகமும் ஊடகங்களில் தெரிவது கூட இல்லையே? 

திமுக வில் பேச்சாளர்களுக்குப் பஞ்சமா? என்ன காரணம்? இது தான் மாறிய தமிழக அரசியலின் புதுப் பாதை. 

சசிகலா வருகையை நேரிடை ஒளிபரப்பாக ஓர் ஊடகம் செய்வதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்.  

ஒப்பந்த அடிப்படையில் வாங்கிய பணத்திற்குச் செய்யும் கடமை.  
ஆளுங்கட்சியை வலிமை குன்றச் செய்ய இதுவரையிலும் எதிர்க்கட்சிகள் செய்ய எந்தக் காரியங்களும் பெரிய அளவில் பேசு பொருளாக மாறவில்லை. இதில் மூலமாகச் செய்ய முடியுமா? என்றொரு நப்பாசை.

மத்திய அரசின் விருப்பப்படி சசிகலா எந்தக் காலத்திலும் செயல்பட விரும்ப மாட்டார். காரணம் அதற்கான பயிற்சி அவரிடம் இல்லை. அவரின் இயல்பான குணத்திலும் அது இல்லை. அவர் தலைக்கு மேல் ஓராயிரம் கத்திகள் தொங்கிக் கொண்டிருக்கிறது. 

ஆனாலும் இதுவரையிலும் கிடைத்த வெளிச்சமும் கிங் மேக்கராக வாழ்ந்த வாழ்க்கையைப் போல இனி ஏதாவதொரு வழியில் கிடைக்குமா? என்று முயல்வது அவரின் தனிப்பட்ட ஆசையாக இருக்கலாம். அவர் எதார்த்தம் தெரிந்த பெண்மணி.  நிஜ அரசியலைப் புரிந்த ஆளுமை நிறைந்த பெண்மணி.  இப்போது அதிமுக வில் இருக்கும் ஒவ்வொருவரின் உண்மையான திறமைகளை அறிந்த பெண்மணி. எங்கு தட்டினால், எதை வெளியிட்டால் மண்டியிடுவார்கள் என்பதனை அறிந்தவர். 

ஆனால் மத்திய அரசு குறித்துத் தான் அவரின் எண்ணமும் நோக்கமும் முக்கியமாக இருக்கும்.  அவர்கள் விரும்பும் பொம்மை போல இருக்க வேண்டுமா? என்ற மன உளைச்சலைத்தான் அவர் இனி அதிகம் எதிர்கொள்ள வேண்டும்? இதுவே அவருக்கு என்ன மாறுதல்களை இனி இங்கே உருவாக்கும் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி?

அவர் உண்மையை மட்டும் பேச விரும்பினாலும் அவர் உறவுகள் சார்ந்த கூட்டத்தின் பசிக்குத் தமிழ்நாடு இரையாவதை மத்திய அரசு அனுமதிக்க வாய்ப்பும் இல்லை.

சொந்தக் கவலைகளை மறக்க திரையரங்கம் சென்றோம். அது மாறி இணைய தளங்கள் வாயிலாக இன்று பல படங்கள் பார்க்கின்றோம். இதைப் போல இன்று சசிகலாவின் காட்சிகளைச் சுவராசியமாகப் பார்க்க கற்றுக் கொள்ளுங்கள். 

இதற்கும் நிஜமான சமூகத்திற்கும் தொடர்பே இல்லை. உங்களிடம் நூறு கோடி இருந்தால், அதனைச் செலவழிக்க பிஆர்ஓ கூட்டம் இருந்தால் நீங்கள் சுடுகாடு செல்லும் காட்சியைக்கூட நம் ஊடகங்கள் நேரிடையான ஒளிபரப்பில் காட்டத் தயாராக இருப்பார்கள்.

காரணம் ஒவ்வொன்றும் வணிகம் சார்ந்த செயல்பாடுகள். இன்று அரசியல் என்பது வணிகம்.

*****

நீங்கள் கேட்டே ஆக வேண்டிய கசிந்த உரையாடல் 2020/21

6 comments:

ஸ்ரீராம். said...

நிதர்சனத்தைச்  சொல்கிறீர்களா? ஆறுதல் சொல்கிறீர்களா?  அறிவுரை சொல்கிறீர்களா?  எல்லாம்தான் இல்லையா? வெறுப்பாக இருக்கிறது.  பற்றற்றார் பற்றினைப் பற்றிட ஆசை!

Rathnavel Natarajan said...

இவர்களிடம் இருக்கும் பணத்தை வைத்து ஊடகம் முதல் உச்ச நீதிமன்றம் வரைக்கும் உள்ளே நுழைந்து வெளியே வர முடியும். அவர்களின் விருப்பத்தை மக்கள் விருப்பமாக மாற்ற முடியும். ஆசையை வெளிப்படுத்த முடியும். அதுவே உண்மையென்று நம்ப முடியும். காரணம் நம் இபிகோ இப்படித்தான் உள்ளது.
அதிகாரத்தை அடைய ஆசைப்படாதவர்கள் இங்கு யாராவது இருக்கின்றார்களா? - அருமை. சரியான நேரத்தில் சரியான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். எழுதுங்கள் திரு ஜோதிஜி

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் ஜோதிஜி. எத்தனை ஆர்பாட்டம்... எத்தனை அமர்க்களம்... அழுக்கு அரசியலாக இருக்கிறது.

ஜோதிஜி said...

நீங்கள் சொன்ன அனைத்தும் சேர்ந்தது தான் சமூகம். நான் சமூகத்தை பிரதிபலிக்கின்றேன்.

ஜோதிஜி said...

நன்றி.

ஜோதிஜி said...

நன்றி