Wednesday, February 03, 2021

இங்கே இனி ஒவ்வொன்றுக்கும் விலையுண்டு?

ஒரு கட்சி தேர்தலுக்கு முன் தங்கள் கொள்கைகள் என்று வாக்குறுதிகள் அடங்கிய சிறிய புத்தகம் போன்ற ஒன்றை வெளியிடுவார்கள். ஒரு வேளை ஆட்சிக்கு வந்தால் அதில் சொல்லப்பட்டது அனைத்தும் முழுமையாக உண்மையாகவே நிறைவேற்றப் பட்டுள்ளதா? என்பதனை யோசிக்கும், கவனிக்கும் அளவிற்கு மக்களுக்கு அரசியல் புரிதல் இல்லாத காரணத்தால் இன்னமும் ஒரு சடங்கு போலவே தேர்தல் வாக்குறுதிகள் என்பதனை ஒவ்வொரு கட்சியினரும் இன்று வரையிலும் கர்மசிரத்தையாக வெளியிட்டுக் கொண்டு வருகின்றனர்.இதே போல வருடந்தோறும் வெளியாகும் பட்ஜெட் என்பது நம் நாட்டைப் பொறுத்தவரை ஒரு சடங்கு சம்பிரதாயம் போலத்தான். யார் படிப்பார்கள்? யாருக்குப் புரியும்? என்பதெல்லாம் பரமனுக்கே வெளிச்சம்.
130 கோடி மக்கள் தொகை உள்ள இந்தியாவில் 90 சதவிகித மக்களுக்குப் பங்குச் சந்தை குறித்துத் தெரியாது. மியூச்சுவல் பண்ட் குறித்துப் புரியாது. கச்சா எண்ணெய் க்கு பின்னால் உள்ள அரசியல் அறிய வாய்ப்பில்லை. பெருநிறுவனங்களின் செயல்பாடுகள் பற்றி யோசித்திருக்க வாய்ப்பே இல்லை. தங்கம் வாங்கும் ஒவ்வொருவருக்கும் அது எங்கே எதன் அடிப்படையில் விலை ஏறுகின்றது? ஏற்றப்படுகின்றது என்பதெல்லாம் அநாவசியம்.
மைக்ரோ எக்னாமிக்ஸ், மேக்ரோ எக்னாமிக்ஸ் போன்ற வார்த்தைகளெல்லாம் கேட்கும் பட்சத்தில் பையனுக்குச் சித்தபிரமை போல என்று மெதுவாக நகர்ந்து சென்றுவிட வாய்ப்புண்டு. பணவீக்கம், பணமதிப்பு, டாலருக்கு நிகரான போன்ற சொற்றொடர்களை பனிரெண்டாம் வகுப்பு மாணவிகள் கூடப் பொருட்படுத்தவில்லை என்பதே எதார்த்தம். ஒரு மாணவி இந்தக் கேள்வி பரிட்சைக்கு வருமா? என்று தான் கேட்கின்றார்.
இதுபோன்ற புரிதல் உள்ள சூழலில் தான் கடந்த சில நாட்களாக பட்ஜெட் குறித்து வெவ்வேறு தளங்களில் அவரவர் விரும்பிய வண்ணம் உரையாடிக் கொண்டேயிருக்கின்றார்கள்.
"எல்லாவற்றையும் விற்றுக் கொண்டேயிருக்கின்றார்கள்" என்கிறவர்கள் ஓர் அணியாகவும்
"இனி இங்கே எல்லாவற்றுக்கும் ஒரு விலை கொடுத்தே ஆக வேண்டும்" என்பவர்கள் மற்றொரு அணியாகவும் இருப்பதையும் கவனித்தேன்.
மகளுக்காக, அவருடன் உரையாடுவதற்காக, அவருக்குப் புரிய வைப்பதற்காகச் சிலருடன் பேசி, பல கட்டுரைகளை வாசித்து அறிந்து கொண்ட போது குறிப்பிட்ட சில விசயங்கள் ஆச்சரியப்படுத்தியது.
பட்ஜெட் 2020/21 எளிதாகப் புரிந்து கொள்ள சில தகவல்கள்..
1. எல்லாவற்றையும் மேலே இருப்பவன் பார்த்துக் கொள்வான் என்பது போல எல்லாவற்றையும் பெருந்தொற்று கணக்கில் கொண்டு வர முடிகின்றது. கடந்த வருடம் இந்தியா மீண்டு வந்தது சாதனை என்றாலும் அதற்கான காரண காரியங்கள் இன்னமும் பட்டியல் வரியாக எந்த இடத்திலும் விளக்கப்படவில்லை. குறிப்பிட்ட எண்கள் கொடுக்கப்பட்டால் போதும் என்கிற அளவில் உள்ளது. அம்மையார் நிதித்துறைக்கு வந்த பின்பு நான் கவனித்த ஆச்சரியமான ஒரு விசயம் என்னவெனில் ஏற்கனவே என்ன திட்டமிடப்பட்டது? எவ்வளவு செலவு ஆனது? எவ்வளவு மீதி? எவ்வளவு அதிகம்? என்ன செய்தார்கள்? போன்ற எந்த தகவலும் எதிலும் சிறிய அறிவிப்பாகக்கூட வருவதே இல்லை. இது கட்சியில் உள்ள பெருந்தலைகளின் கொள்கை முடிவா? இல்லை அம்மையாரின் தீர்க்கதரிசன பார்வையின் விளைவா? என்று என்னால் யோசிக்க முடியவில்லை.
2. கோவிட் முன்னால் கோவிட் பின்னால் இந்த இரண்டு வார்த்தைக்குள்ளும் இருப்பது தான் இப்போதைய இந்தியப் பொருளாதாரம். ஏன் இது நடக்கவில்லை என்பதும் ஏன் இந்தத்துறை எதிர்பார்த்த அளவிற்கு வளரவில்லை என்பதற்கும் சுட்டிக்காட்டப்படும் ஒரே சொல் கோவிட் 19.
3. இயல்பான இந்தியப் பொருளாதாரம் வந்தடைய 2024/25 ஆகலாம் என்று உண்மையான சர்வதேசப் பொருளாதார வல்லுநர்கள் சொல்லி உள்ளனர். ஆனால் எவரும் இதனை உரக்கப் பேசுவதில்லை.
4. அதற்கு முன்னேற்பாடுகள், முயற்சிகள், திட்டங்கள் போன்ற அனைத்தும் அறிவிப்புகளாக இந்த பட்ஜெட் ல் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
5. நடப்பு ஆண்டில் மத்திய அரசின் முதலீடு நான்கு லட்சத்து முப்பத்தி ஒன்பதாயிரம் கோடி. அடுத்த ஆண்டு ஐந்து லட்சத்து ஐம்பத்தி நான்கு ஆயிரம் கோடி. ஆனால் அரசு வெளியிட்டுள்ள தொகையின் அளவு 15 லட்சம் கோடி. இந்த இடத்தில் கணக்கு இடிக்கின்றது?
6. சென்ற ஆண்டு திட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் உள்கட்டுமான அமைப்புக்கு என அறிவித்த அறிவிப்பின்படி முப்பது லட்சத்து நாற்பத்தி இரண்டாயிரம் கோடி ரூபாய் செலவழிக்கத் திட்டமிட்டது என்பதற்கு இப்போது வந்துள்ள கணக்கு முப்பத்தி நான்கு லட்சம் ஐம்பதாயிரம் கோடி ரூபாய் இதுவரை செலவழிக்கப்பட்டுள்ளதாகக் கணக்கு காட்டியுள்ளனர்.
7. சென்ற ஆண்டு கூடுதலாகக் கடன் வாங்கிய தொகையின் அளவு 11 லட்சம் கோடி.
ஒரு வருடத்தில் நாம் வாங்கியுள்ள கடனுக்கு எத்தனை ஆயிரம் கோடிகள் வட்டி கட்டிக் கொண்டிருக்கின்றோம் என்பதற்கு நண்பர் சொன்ன எளிமையான பதில் அஸ்ஸாம் போன்ற மாநிலத்தின் ஒரு வருட முழுமையான பட்ஜெட் தொகையை வட்டியாகக் கட்டிக் கொண்டிருக்கின்றோம்.
8. சென்ற ஆண்டு இருபது லட்சத்து இருபது ஆயிரம் கோடி ரூபாய் வரி வசூல் செய்வதாகக் கணக்குக் காட்டியதில் வசூலித்த தொகை 15 லட்சத்தி ஐம்பதாயிரம் கோடி ரூபாய் மட்டுமே.
9. பாதுகாப்புத் துறைக்காக நடப்பு ஆண்டில் ஒதுக்கப்பட்ட தொகை 3 லட்சத்து 43 ஆயிரத்து 820 கோடி. அடுத்த ஆண்டுக்குத் திட்டமிடப்பட்டுள்ள தொகை 3 லட்சத்து 7000 ஆயிரம் கோடி.
10. பட்ஜெட் ல் அறிவித்துள்ளபடி தேர்தல் நடக்கப் போகும் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சில சிறப்புத் திட்டங்களின் அடிப்படையில் சொல்லப்பட்ட பெரிய தொகையில் எவ்வளவு மத்திய அரசு பங்கு? எவ்வளவு வெளியே இருந்து கடன் வாங்கும் தொகை? மாநில அரசின் தொகை என்ன? என்பது போன்ற பிரேக் அப் எதுவும் எங்கும் இல்லை. குன்ஸாக ஒரு பெரிய தொகை என்று தோரணம் கட்டப்பட்டு வாணவேடிக்கை காட்டப்பட்டுள்ளது. அத்துடன் குறிப்பிட்ட ஒவ்வொரு திட்டமும் எப்போது தொடங்கி எப்போது முடியும் என்ற திட்ட வரையறை என்பது எங்கும் சுட்டிக்காட்டப்படவில்லை.
சில துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகை நாலைந்து அமைச்சகத்தை ஒன்றாகச் சேர்த்துக் கொடுத்துள்ள காரணத்தால் யாருக்கு எவ்வளவு பங்கு? எந்தத் துறைக்கு முன்னுரிமை போன்ற அதீத ஆராய்ச்சியில் எவரும் இறங்கிவிடக்கூடாது என்கிற நிலையில் புதிர்கள் நிறைந்த பட்ஜெட் இது.
மற்றொரு ஆச்சரியம் என்னவெனில் நிதின் கட்காரி 2022ல் சுங்க கட்டணம் இல்லா சாலைப் பயணம் என்பதனை உறுதிமொழியாகக் கொடுத்துள்ளார். அதாவது டோல் கேட் அனைத்தும் இருக்காது அல்லது அதற்கு மாற்று ஏற்பாடு என்பதாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இப்போது உள்கட்டுமானத்துறை சார்ந்த அனைத்தும் (சாலைகள், துறைமுகம், ஸ்டேடியம், உணவு தானிய குடோன் இன்னும் பல) தனியாருக்கு வழங்கப்படுகின்றது. சாலைகள் கூட அவர்கள் வசம் செல்லும்பட்சத்தில் அய்யா அடுத்த அறிக்கையில் என்ன சொல்வார் என்பதனை கவனிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.


10 comments:

KILLERGEE Devakottai said...

யாரு வேண்டுமானாலும் ஆயிரக்கணக்கன கோடிகளை சுருட்டலாம்.

நமக்கு தேவை ஓட்டுக்கு 2000 ரூபாய் கூடுதல் எவன் தருகிறானோ அவனுக்கே ஓட்டு. மக்கள் சொன்ன "வாக்கு" மாறுவதில்லை

Avargal Unmaigal said...


பட்ஜெட் பற்றி நான் படித்த இரண்டாம் பதிவு இது... வழக்கம் போல இல்லாமல் மாறுப்பட பதிவாக இருக்கிறது

ஜோதிஜி said...

இது தான் இன்றைய மக்களின் சத்திய வாக்கு. சில இடங்களில் சாதிய வாக்கு.

ஜோதிஜி said...

எந்த அரசு இங்கே வந்து அமர்ந்தாலும் நடுத்தரவர்க்கம் முதல் கீழே உள்ள அனைத்து பிரிவுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்வதே இல்லை. ஆனால் இவர்களால் தான் இந்தியா இயங்குகின்றது.

வெங்கட் நாகராஜ் said...

பட்ஜெட் குறித்த கட்டுரை நன்று. அவரவர் வீட்டு பட்ஜெட் போடுவதற்கே திண்டாடும் பலர் இங்கே உண்டு.

திண்டுக்கல் தனபாலன் said...

எல்லாமே குன்ஸூ தான்...

ஸ்ரீராம். said...

எனக்கு இந்த பட்ஜெட் விஷயங்களே பிடிபடுவதில்லை.  எல்லாம் ஒரு பார்மாலிட்டி போல இருக்கும்!

ஜோதிஜி said...

எண்களில் நிகழ்த்தப்படும் வர்ண ஜாலம் ராம்.

ஜோதிஜி said...

ஒரு வங்கி அதிகாரி இரண்டு நாட்களாக இதனை ஆராய்ந்து படித்து முடித்து உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.

ஜோதிஜி said...

நன்றி