Tuesday, February 23, 2021

தாய்மொழி தினம்

 எஸ்.ஜானகி அம்மா, சுசீலா அம்மா இவர்களின் தாய் மொழி தமிழ் அல்ல என்று இப்போதுள்ளவர்களுக்குத் தெரியுமா? என்று தெரியவில்லை. இரண்டு வருடங்கள் தமிழ் உச்சரிப்பு நன்றாக வந்த பின்பு என்னை வந்து பார் என்று எம்எஸ்வி அனுப்பியவர் எஸ்பிபி. 



இவர் தாய்மொழி தெலுங்கு என்றால் சூடம் ஏற்றினாலும் எவரும் நம்பமாட்டார்கள். மலையாள ஜென்சி முதல் ஸ்வர்ணலதா வரைக்கும் பாடிய பாடலைக் கேட்டு முடிந்தால் மனதிற்குள் இருந்த கவலைகள் பத்து நிமிடங்கள் காற்றில் கலந்து காணாமல் போய்விடும்.

இது போல மற்ற மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்ட பல பாடகர் என்று பட்டியலிட்டால் பழைய பாடகர் ஸ்ரீனிவாஸ் என்பதிலிருந்து தொடங்கும்.

உச்சரிப்பில் மாற்றம் காண முடியாத அளவிற்கு அவர்களின் உழைப்பு, ஈடுபாடு, தொழில் பக்தி என்று தமிழ்மொழியைச் சாதாரணப் பாமரனுக்கும் கொண்டு சேர்த்தது.

ஆனால் இன்று நாம் தாய்மொழி தினம் வெட்கமில்லாமல் கொண்டாடும்  நாம் காண்பது என்ன?

எந்தவொரு இசையமைப்பாளரும் தமிழ் மொழியை வைத்து கோடீஸ்வரர்களாக வாழ்கின்றார்களே தவிர அவர்கள் செய்யும் மொழிக் கொலை என்பதனை நேரிடையான இமான் ஒலிப்பதிவு கூடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னால் முழுமையாக அமர்ந்து பார்த்துள்ளேன். அருகே இருந்த யுக பாரதி எழுதிய வரிகளை வட இந்தியாவிலிருந்து அழைத்து வந்த பெண்மணி வாயில் சிக்கி சின்னாபின்னாப்பட்டு நொந்து வெந்து வெளியே துப்பி அதனை இசைக்கோர்வையாக மாற்றியதைப் பார்த்தேன். 

ஒவ்வொரு இடத்திலும் இப்படித்தான்.

வெள்ளைத்தாளில் அழகாக எழுதிய வரிகளை வாசித்து உள்வாங்கிப் புரிந்து பாடிய பாடகர்கள் இப்போது இல்லை. வைரமுத்து போலக் கண்டிப்பு காட்டி கடைசி வரைக்கும் வாத்தியார் போலச் செயல்படும் கவிஞர்கள் இல்லை. 

தன் அலைபேசியில் தங்கீலீஸ் ல் எழுதி வைத்துக் கொண்டு அதனை உயர கையில் பிடித்துக் கொண்டே வரிகள் மறந்து விடுமோ? மாறி விடுமோ? என்ற பதட்டத்தில் வாய்க்கு வந்தபடி பாடி முடித்து விட அதன் மேல் சப்தமான இசைக்கோர்வையை நுழைத்து நீ கேட்டுத்தான் ஆக வேண்டும் என்ற சூழலுக்குத் தமிழ் இசையுலகம் வந்து நிற்கின்றது.

இதற்கு மேலாக மற்றொரு கொடுமை. 

பாடல் உரிமைகளை வாங்கும் நிறுவனங்கள் பாடல் வரிகளை தங்கீலிஸ் ல் வெட்கமில்லாமல் வரிவரியாக வெளியிட்டு எத்தனை மில்லியன் பார்வையாளர்கள் தெரியுமா? என்று உதார் விடுகின்றார்கள்.

தற்போது கவிஞர் தாமரை Kavignar thamarai தவிர மற்ற அனைவரும் சுடுகாட்டில் எரியும் போது வரும் போது கெட்ட காற்றைச் சுவாசிக்கும் மிருகங்கள். அதைத்தான் சமூகம் விரும்புகின்றது என்று நம்பும் அற்ப ஜீவன்கள்.

கண்டா வரச் சொல்லுங்க. அவங்களை எல்லாம் காலில் போட்டு இருப்பதை கழட்டி அடிக்க...... ☹️

******

பள்ளிப் பருவத்தில் மறைந்த ஞாநி அவர்களின் ஓ.. பக்கங்கள் மூலம் அரசியல் மற்றும் சமூகத்தை புரிந்து கொள்ளத் துவங்கிய என் வாசிப்புப் பயணம் இப்போது ஜோ பக்கம் என்ற மின்னூல் வழியாக உங்களை சந்திக்க வருகின்றேன்.  இன்று முதல் இலவசமாக வாசிக்க முடியும். உங்களைச் சுற்றியுள்ள சமூகத்தை அரசியல் பார்வையுடன் வாசித்து முடிக்கும் போது உங்களை உங்களுக்கே வேறொரு விதமாக அடையாளம் காட்டும்.

இன்று முதல் இலவசம்.

வெளிநாடு


(இந்தியாவிற்குள்)

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இன்னும் வாசித்து முடிக்கவில்லை அண்ணே...

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு பகிர்வு.

ஜோ பக்கங்கள் - புதிய மின்னூல் - வாழ்த்துகள் ஜோதிஜி.

ஸ்ரீராம். said...

தமிழை கன்றாவியாக உச்சரித்துப் பாடுவதுதான் ஸ்டைல் என்று நினைக்கிறார்கள் போல..   ஜோ பக்கங்களுக்கு வாழ்த்துகள்.