உங்களை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்பாதீர்கள். அனைவரும் பாராட்டினால், பாராட்டிக் கொண்டேயிருந்தால் தவறான பாதையில் சென்று கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
சொந்த வாழ்க்கையில் உங்கள் எண்ணங்களை அப்படியே வெளிப்படுத்தாதீர்கள். மனைவிக்குக்கூட உங்களைப் பிடிக்காமல் போக வாய்ப்புண்டு. இணைய வாழ்க்கை அதற்கு வசதி செய்து தந்துள்ளது. வாசிப்பவர்களுக்கு வெறுப்பாக இருந்தாலும் மனதளவில் இது உண்மை தான் என்று அவர் மனம் எண்ணக்கூடும்.
உங்கள் கருத்துக்களை இணையத்தில் எழுதும் போது உங்களுடன் தொடர்பில் இருக்கும் நண்பர்கள், உங்கள் எழுத்துக்களை விரும்பிப் படிப்பவர்கள் காரசாரமாக விமர்சனம் செய்தாலும் அதனை இயல்பாக எடுத்துக் கொள்ளுங்கள். அவர் சொன்னதில் ஏதாவது சில உண்மைகள் இருக்கக்கூடும். கருத்துச் சுதந்திரம் என்பதற்கும் எதனையும் இயல்பாக ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்திற்கும் இடையே தான் மன அழுத்தம் என்ற மகத்தான பள்ளம் உள்ளது.
சிறிய விசயமாக இருந்தாலும் சொந்த வாழ்க்கையில், இணைய வாழ்க்கையில் மனதாரப் பாராட்டுங்கள். கடந்த கால கசப்புகளை உள்ளே வைத்துக் கொண்டு மருகிக் கொண்டேயிருக்காதீர்கள். 2021 டிசம்பர் 31 நாம் இருப்போம் என்ற உறுதிப்பாடு உண்டா?
மதவாதம் என்பதற்கும், மதத்தை வைத்து ஆதாயம் அடைபவர்கள் என்பதற்கும் வித்தியாசத்தைப் புரிந்த கொள்ளுங்கள். சாதிக் கலவரம் என்பது குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் தாக்கும். ஆனால் மத தீவிரவாதம் என்பது மொத்த நாட்டையும் நாசமாக்கும். இந்தியாவில் எந்த அரசியல்வாதிகளாலும் முழுமையாக நல்லது செய்ய முடியாது. காரணம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்களின் மனோபாவம் முற்றிலும் வேறு விதமானது.
மதம், சாதியை வைத்து அரசியல் செய்து கொண்டிருப்பவர்கள் எவரேனும் என் மதம், சாதிக்காரர்கள் அனைவரும் நான் நடத்தும் பள்ளிக்கூடங்களில் இலவசமாக, கட்டணச் சலுகையில் படிக்கலாம் என்று சொல்கின்றார்களா? மைனாரிட்டி சலுகைகள் பெற்று நடந்தும் கல்விக்கூடங்கள் அனைத்தும் தங்கள் மதம் சார்ந்த மாணவர்களுக்கு முழுமையாகக் கல்விக்கட்டணச் சலுகைகள் வழங்கி உள்ளார்களா? என்று உங்கள் அருகே இருக்கும் கல்விக்கூடங்கள் மற்றும் அவர்கள் நடத்திக் கொண்டிருக்கும் மருத்துவமனைகளில் சென்று பாருங்கள். வார்த்தைகள் வேறு. வாழும் வாழ்க்கை வேறு. காரணம் அதிகாரத்தைக் கைப்பற்றிட அவர்களுக்கு உங்கள் உணர்ச்சி தான் முக்கியம். உங்கள் வாழ்க்கையல்ல.
எல்லாவற்றுக்கும் அரசியல்வாதிகளையே குறை சொல்லிக் கொண்டேயிருக்காதீர்கள். அவர்கள் சங்கிலியில் கடைசியாக நமக்குத் தெரிகின்றவர்கள். சங்கிலியில் ஒவ்வொரு பகுதியிலும் பல இணைப்புகள் உள்ளது. அரசியல்வாதிகளை விட அதிகாரிகளும், பல துறைகளை தங்கள் கைக்குள் வைத்திருக்கும் மக்களும் காலம் முழுக்க நாசமாக்கும் நாசக்காரக் கூட்டம் ஒவ்வொரு கால கட்டத்திலும் இங்கே இருக்கின்றார்கள் என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் மகன் மகள் கல்வி வாழ்க்கையில் கல்லூரிப்படிப்பு தான் மிக முக்கியம். பள்ளி வாழ்க்கை என்பது அவர்களின் சமூக வாழ்க்கையோடு தொடர்பு உடையது. அளவுக்கு அதிகமாக, தகுதிக்கு மீறி பணம் செலவழிக்காதீர்கள். தேவைப்படும் போது செலவழிக்கப் பணம் இருக்காது.
மகன் மகளுக்கு நான் செலவழித்தேன். சீராட்டி, பாலூட்டி வளர்த்தேன். என்னைக் கண்டு கொள்ளவில்லை என்று இறுதிக் காலத்தில் புலம்பும் நிலைக்கு ஆளாகாதீர்கள். உங்களை நீங்களே கவனித்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமை. உங்கள் வாரிசுகளுக்குச் சரியான பாதை அமைத்துக் கொடுக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. வட்டி கணக்குப் பார்த்தால் சட்டி கூட மிஞ்சாது என்ற எதார்த்தத்தை உணர்ந்து வைத்திருங்கள்.
பதின்ம வயது தொடங்கிய மகன் மகளிடம் பத்தடி தள்ளி நின்று பழக உங்களை நீங்களே மாற்றிக் கொள்ளுங்கள். அது உங்கள் ஆரோக்கியத்தைக் காக்கும் வல்லமை கொண்டது.
இணையத்தில் யாரோ ஒருவர் எழுதியதை நீங்கள் கோபமாக விமர்சிப்பதற்கு முன்பு அது உண்மைதானா என்று அதன் ஆதாரத்தை மற்ற செய்தித்தாள்கள் மூலம் பொறுமையாகத் தேடி அறிந்த பின்பு கோபப்படுங்கள். தவறு என்றால் அந்த ஆதாரத்தையும் கொடுத்துப் பேசும் போது எழுதியவர் அடுத்த முறை பயந்து கொண்டு பின்வாங்கி விடுவார்.
பெரிய எழுத்தாளர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகளை முழுமையாகப் பின்பற்றாதீர்கள். அவர்கள் வணிக வலைக்குள் வாழ்பவர்கள். இந்த மூன்று பேர்களும் உங்களை எந்தக் காலத்திலும் ஆதரிக்க மாட்டார்கள். அவர்கள் வாழ்க்கை முழுக்க கணக்கியல் அடிப்படையில் கொண்டது.
தங்கள் சாதி சார்ந்த கொள்கைகள், தங்கள் குடும்பத்தில் கடைப்பிடிக்கும் ஆச்சாரமான விசயங்கள், தன் எண்ணம் சார்ந்த விருப்பங்கள் அனைத்துக்கும் மாறுபட்டு அதனை எந்த இடத்திலும் காட்டிக் கொள்ளாமல் கச்சிதமாகச் செயல்படும் எழுத்தாளர்கள் இன்று இணையம் முழுக்க நிரம்பி வழிகின்றார்கள். இணையத்தில் பெரும்பான்மையாக எந்தக்கூட்டம் வலிமையாக இருக்கின்றார்களோ அவர்களுடன் அனுசரித்து அவர்கள் போக்கில் போகக்கூடிய வணிக எழுத்தாளர்கள் சூழ்ந்தது தான் இணையம். காரணம் வணிகம் என்பது கொள்கையைச் சார்ந்தது அல்ல. கொண்டாடும் கூட்டங்களுடன் ஒன்றிணைந்து தங்கள் பொருளை விற்றுக் காசாக்கும் கலையை கற்றவர்கள். இவர்கள் மறந்தும் கூட எவரையும் ஆதரிக்க மாட்டார்கள். கண்டும் காணாமல் நகர்ந்து விடுவார்கள். சமூகத்தில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகள் குறித்து எந்தக் கருத்துக்களையும் இவர்கள் சொல்லவே மாட்டார்கள். இவர் நம் கட்சிக் கொள்கையை ஆதரிப்பவர். இவர் நம் தலைவரை மரியாதையாகப் பார்ப்பவர் என்று சந்தை ஏமாறும் வரையிலும் எழுத்தாளர் வங்கிக் கணக்கில் வந்து விழுந்து கொண்டேயிருக்கும்.
சமூகம் விரும்பாத கருத்துக்களை எழுதியவர்கள், படைப்புகளை உருவாக்கியவர்கள் அனைவரும் அடுத்தடுத்த தலைமுறையினரால் காலம் கடந்தும் கொண்டாடப்படுவார்கள் என்பதனை கடந்த கால சரித்திரத்தில் இருந்து புரிந்து கொள்ள முடியும். (உதாரணம் ஆனந்த ரங்கம் பிள்ளை, உ.வே.சா )எழுதியவர் வாழ்நாள் முழுக்க வறுமையில் வாழ்ந்து மறைந்திருப்பார். வாழ்ந்த காலத்தில் போலி அங்கீகாரத்தில் வாழ்ந்தவர்கள் அவர்கள் பேரன் பேத்தி காலத்தில் கூட நினைக்கக்கூடிய இடத்தில் இருப்பார்களா? என்பது சந்தேகமே?
திறமை, உழைப்பு, தன்னம்பிக்கை, ஆர்வம், ஒழுக்கம் இந்த ஐந்தும் முக்கியம் தான். ஆனால் இவை அனைத்தையும் பின்பற்றாதவர்கள், விரும்பாதவர்கள் வாழ்வில் முக்கிய இடத்தை அடையும் போது ஆச்சரியப்படாதீர்கள். வாழ்க்கையென்பது அடுத்த நொடி ஆச்சரியங்களைக் கொண்டது.
மனைவி, மகள்கள், மகன்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் உருவானால் நீங்கள் நேரிடையாக வார்த்தையாகச் சொல்ல முயலாதீர்கள். அது தொடர்பான காணொளிக் காட்சி இருந்தால் அல்லது தேடிக் கண்டுபிடித்து இதைப் பார்த்து உன் கருத்தைச் சொல்? என்று கொடுத்து விட்டு ஒதுங்கி விடுங்கள்.
முன்பு கல்வியென்பது 75 சதவிகித அர்ப்பணிப்பு 25 சதவிகித தொழில் நுட்ப வசதிகள் என்று இருந்தது. இப்போது 90 சதவிகித தொழில்நுட்பம். 10 சதவிகித கவனிப்பு என்பதாக மாறியுள்ளது என்பதனை நீங்கள் புரிந்து கொண்டால் உங்கள் வாரிசுகளின் செயல்பாடுகள் எரிச்சலை உருவாக்காது.
இரவு பத்து மணிக்கு மேல் நீங்கள் இணையத்தைத் தொடர்ந்து பயன்படுத்தும் பழக்கத்திற்கு அடிமையாக இருப்பீர்களேயானால் உங்களுக்குப் பாடை கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். பாடையில் படுப்பதற்கு முன்பு பலரையும் படுத்தி எடுத்து விட்டு நீ எப்போது தான் சாவாயோ? என்பது போன்ற ஆசீர்வாதங்களுடன் உங்களைச் சுற்றியிருப்பவர்கள் கவனிப்பார்கள் என்பதனை எப்போதும் நினைவில் வைத்திருங்கள்.
காட்சி ஊடகங்களுக்கு அடிமை என்பதற்கும் காட்சி ஊடகங்களையும் நான் கவனிப்பதுண்டு என்பதற்கு உண்டான வித்தியாசங்கள் புரிந்தால் உங்கள் நியூரான்கள் இயல்பாக உள்ளது என்று அர்த்தம். இது மாறும் போது உங்கள் மனநலம் அடிப்படைக் குணங்களை மாற்றிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.
ஒரு வருடம் வீணாகிவிட்டது. முடக்கிப் போட்டு விட்டது. வருமானம் எதுவுமேயில்லை என்று யோசிப்பவர்கள் 2 முதல் 12 லட்சம் வரைக்கும் மருத்துவமனையில் செலவழித்து இந்த வருடம் உயிரைக் காப்பாற்றிக் கொண்டேன் என்று சொன்ன வார்த்தைகளை உள்வாங்குங்கள்.
கழிப்பறையில் சென்று அமர்ந்தால் சில நிமிடங்களில் என் கழிவுகள் வெளியேறுகின்றது. தரையில் அமர்ந்தாலும் என்னால் உடனே எழ முடியும். ஐந்து கிலோ மீட்டர் விரைவாக நடந்தாலும் எனக்கு மூச்சிரைப்பு இல்லை. மூன்று வேளையும் பசி என்பது சரியான நேரத்தில் உருவாகின்றது. தினமும் மருந்து மாத்திரைகள் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் என்று சொல்வீர்கள் எனில்
2021 உங்களுக்குத் தான் வாய்ப்புகளை, ஆச்சரியங்களை வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறது.💪
6 comments:
ஒரு வருடம் வீணாகிவிட்டது. முடக்கிப் போட்டு விட்டது. வருமானம் எதுவுமேயில்லை என்று யோசிப்பவர்கள் 2 முதல் 12 லட்சம் வரைக்கும் மருத்துவமனையில் செலவழித்து இந்த வருடம் உயிரைக் காப்பாற்றிக் கொண்டேன் என்று சொன்ன வார்த்தைகளை உள்வாங்குங்கள். - அருமை. நிஜம். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நண்பர்கள் பதிவு முழுவதையும் ஆழ்ந்து படித்து சிந்திக்க வேண்டுகிறேன். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் - தொடர்ந்து எழுதுங்கள். நன்றி திரு ஜோதிஜி
Super sir.nice
வார்த்தைகள் என்று சொல்ல வேண்டாம்... இவை முத்துக்கள்...
இந்த ஒற்றை புகைப்படமே எல்லாவற்றையும் சொல்லி விட்டது.. உடலுக்கு தான் வயது, அனுபவித்திற்கும், மனதிற்கும் வயது இல்லை என்பதை உங்கள் எழுத்துக்கள் மீண்டும் மீண்டும் பறைசாற்றி கொண்டே இருக்கிறது..
ஜோதிஜியின் மிகுந்த ஆசீர்வாதத்துடன் 2020 விடைபெறுகிறது .
வாழ்க வளமுடன் .
அத்தனையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய கருத்துகள்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
Post a Comment