Wednesday, December 09, 2020

வணிக சூத்திரங்கள் 5

அலிபாபா. அமேசானையே விரட்டி அடித்த பிரம்மாண்ட இ காமர்ஸ் நிறுவனம். இதன் நிறுவனர் ஜாக் மாவிடம் தொழில் பற்றிக் கேட்டால் எப்போதும் ஓர் உதாரணத்தைச் சொல்வார். "ஒரு குழந்தைக்கு முன்னால் ஓர் ஐஸ்கிரீமையும், 2000 ரூபாய் நோட்டையும் காட்டினால், அது ஐஸ்கிரீமைத் தான் எடுத்துக் கொள்ளும். அந்தக் குழந்தைக்கு 2,000 ரூபாயில் எத்தனை ஐஸ்கிரீம்களை, எத்தனை வகையான ஐஸ் க்ரீம்களை வாங்க முடியும் எனத் தெரியாது". "அதே போல, இன்றைய உலகில் இருக்கும் இளைஞர்களிடம் ஒரு நல்ல வேலைக்கான அப்பாயிண்ட்மென்ட் லெட்டர் மற்றும் ஒரு நல்ல Business-க்கான ஐடியாவைக் கொடுத்தால், அவர்கள் நல்ல வேலையைத் தான் தேர்வு செய்கிறார்கள், அந்தப் பச்சைக் குழந்தையைப் போல" என்கிறார் ஜாக் மா.



இரண்டும் இலவசமாகக் கிடைக்குமா? என்கிற எண்ண ஓட்டத்திற்கு நம் இளையர்களைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது நம் சமூக அமைப்பு.  தொழிலில் லாபம் என்பது எப்படியோ அதே போல அரசியலில் இலவசம் என்பது முக்கியம். முன்னது வளர்ச்சி. பின்னது குறிப்பிட்ட காலத்திற்கும் பிறகும் தொடர்ந்தால் வீழ்ச்சி. தொழில் என்பது வேறு. அறக்கட்டளை என்பது வேறு. லாபத்தோடு செய்ய வேண்டியதையும் அறத்தோடு செய்ய வேண்டியதை நம்மவர்கள் குழப்பிக் கொள்வதால் தான் நம்மவர்கள் தொழில் சமூகத்தை ஏளனமாகப் பார்க்கும் சூழல் இப்போது உருவாகியுள்ளது. கூடவே அவர்கள் கொள்ளையடித்து வாழ்கின்றார்கள் என்ற தத்துவத்தை விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

நான் இந்த தொடரை தொடங்கியதன் முக்கிய நோக்கம் தொழிலதிபர்களின் வெற்றி என்பது லாபத்துடன் கூடிய வளர்ச்சி மட்டுமல்ல. உருவான வளர்ச்சியில் சமூகத்தில் எப்படியெல்லாம் மாற்றங்கள் உருவாகின்றது? சிறிய தொழில், பெரிய தொழில், குடும்பத் தொழில் என்பதெல்லாம் பிரிவினையே இல்லை. மாற்றங்களை தொடர்ந்து வளர்த்துக் கொண்டிருக்கும் தொழில். தேங்கிப் போய் நிற்கும் தொழில் என்ற இரண்டு வகை தான் உள்ளது.

ஒருவர் உருவாக்கிய தொழில் சிந்தனை என்பது உள்ளூருக்குள் வெல்வது அல்லது உள்நாட்டிற்குள் வெல்வது என்ற இரண்டு நிலையில் தான் இந்தியாவில் உருவாகும் தொழில்கள் உள்ளது. ஆனால் வெளிநாட்டில் உருவாகும் தொழில் சிந்தனைகள் குறுகிய காலத்திற்கு உலகம் முழுக்க தேவையானதாக மாறிவிடுகின்றது.

தொழில் சமூகத்தின் பல்வேறு கூறுகளை இடையிடையே சொல்லிக் கொண்டே வருகிறேன். நாம் அனைவரும் வெளிநாட்டு நபர்களையே முன் உதாரணமாக எடுத்துக் கொள்கின்றோம். அவர்களின் தத்துவங்களையே சரியானது என்று நம்புகின்றோம். ஏன் காரணம் என்பதனை யோசித்துப் பார்த்தால் நம்மிடம் உள்ள வறட்டுக் கௌரவம் தான் இன்று வரையிலும் நம்மை ஆட்சி செய்வதை உணர்ந்து கொள்ள முடியும்.

ஆதங்கம் எந்த அளவுக்கு உண்மையோ அதே போல நம்மவர்களிடம் உள்ள பிற்போக்குத் தனங்களையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் ஐந்து தலைமுறையாக தொழில் செய்த குழுமம் இல்லையா? என்று உங்களுக்கு கேள்வி வரும்? இருக்கின்றார்கள். என்ன சாதித்தார்கள் என்றால் அவர்கள் அளவில் தொழிலை விரிவு செய்தார்கள். ஐந்தாவது தலைமுறையில் மாறிய சிந்தனைகளுடன் தாக்குப் பிடிக்க முடியாமல் நீதிமன்றங்களின் வாசல்களில் தவம் இருக்கவும் தொடங்குகின்றார்கள்.

இடையே ஒரு சின்ன ப்ளாஷ் பேக்.

25 வருடங்களுக்கு முன்பு நான் பணிபுரிந்த நிறுவனமிது. இவர் மண்ணின் மைந்தர். எங்கள் ஊர் பாணியில் சொல்லப் போனால் அக் மார்க் காட்டான். பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காதவர். ஆங்கிலம் தெரியாது. ஆனால் திரண்ட சொத்து. மாதம் பல கோடிகள் ஏற்றுமதி செய்து கொண்டிருந்த நிறுவனம். வெளிநாட்டிலிருந்து வருபவர்களுடன் அவர் பேசும் அழகே தனி. அது பட்லர் ஆங்கிலத்திலும் சேராது. குழந்தை மொழி போல சைகையில் தான் பெரும்பாலும் உரையாடல் இருக்கும். நான் ஒவ்வொன்றையும் அருகே இருந்து உன்னிப்பாக பார்த்தவன். ஒரே ஒரு மகன். கல்லூரிக்குச் சென்றவர் முதல் ஆண்டில் என்னால் படிக்க முடியவில்லை என்று வந்தவரை முதன்மைப் பொறுப்பில் அமர வைத்தார்.

அப்போது தான் முதல் தலைமுறைக்கும் இரண்டாவது தலைமுறைக்கும் முழுமையான வித்தியாசத்தை உணர்ந்து கொண்டேன். அனுபவ அறிவின் மூலம் சகலத்தையும் தன் விரல் நுனியில் வைத்திருந்தவரின் நிர்வாகத்தில் அஷ்ட லஷ்மிகளும் அருள் பாலித்து அள்ளிக் கொடுத்துக் கொண்டேயிருந்தார்கள். 21 வயதில் வந்தமர்ந்த மகன் அடுத்த 15 ஆண்டுகளில் முக்கால் வாசி சொத்துக்களை வங்கியில் இருந்து மீட்க முடியாமல் தற்கொலையும் செய்து கொண்டார்.

என் மனதில் ஆழமாக தாக்கம் உருவாக்கிய சம்பவமிது. எங்கே தவறு நடந்தது என்றால் தொழில் என்பதனை முதல் தலைமுறை உயிராக நினைத்தது. இரண்டாவது தலைமுறை பொழுது போக்காக நினைத்தது. மூன்றாவது தலைமுறை அனுபவிக்க எடுத்துக் கொள்ள காசு கிடைக்கின்றது என்பதாகப் பார்த்தது. மொத்ததில் இங்கே மூன்று தலைமுறைக்குள் முழுமையாக மங்கலம் பாடி முடிக்கும் சூழலில் தான் ஒவ்வொரு தொழிலும் நடந்து வருகின்றது.

அனுபவித்தல் என்பதனை நம்மவர்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதனை இங்கே உள்ள பல முதலாளிகளின் தனிப்பட்ட வாழ்க்கை முறையைப் பார்த்து வருத்தப்பட்டுள்ளேன். நம் உடல் உறுப்புகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் செயல் இழந்து விடும் தன்மை கொண்டது என்பதனையே இவர்கள் உணர மறுக்கின்றார்கள். அதிலிருந்து தான் பிரச்சனை தொடங்குகின்றது. அதுவே தான் பல சாம்ராஜ்யங்களை கவிழ்க்கவும் காரணமாகவும் இருக்கின்றது.

மனைவியிடம் பெற வேண்டியதை நாய்கள் போல அலைந்து பெறுவதை கௌரவமாக நினைப்பதும், ராஜ போதை என்பது அந்தஸ்த்தின் அடையாளம் என்பது நம்பத் தொடங்குவதும் இங்குள்ள தொழில் சமூகத்தின் முக்கியக் கொள்கையாக உள்ளது. கழுதை போல சுமக்கும் கல்லீரல். கடைசியில் துப்பி விடும் என்று உணரத் தலைப்படும் போது நம் கண் எதிரே நம் சொத்துக்களை யார் யாரோ பங்கு போட்டு பங்காளிகள் போல அனுபவித்தைப் பார்த்து பரலோகம் செல்லும் இவர்களின் கொள்கை என்பது வாழும் போதே நடைபிணமாக வாழ்ந்து தங்கள் தொழில் சம்ராஜ்யத்தையும் முடித்து விடுகின்றார்கள்.

வெளிநாட்டு கலாச்சாரத்தை நாம் ஏற்றுக் கொண்டு அவர்களைப் போல விரைவாக நம்மை மாற்றிக் கொள்ள விரும்புகின்றோம். ஆனால் அவர்களின் தொழில் கலாச்சாரத்தை கண்டும் காணாமல் கடந்து வந்துவிடவே விரும்புகின்றோம். எட்டு மணி நேரம் ஒரு நாளில் முழுமையாக உழைத்து அதன் பிறகு அந்தப் பக்கமே திரும்பிப் பார்க்காமல் கடந்து போகும் அவர்களின் வாழ்க்கைக்கும் நாம் 365 நாட்களும் 24 மணி நேரமும் தொழில் பின்னால் அலைந்து கொண்டிருந்தாலும் நமக்கு கிடைப்பது ஏமாற்றமே. 

தொழிலோடு குடும்பத்தையும், குடும்பத்தோடு தொழிலையும் ஒன்றாக சேர்த்துப் பார்க்கின்றோம். வளரும் நாடுகளில் எல்லாமே அதீத போட்டிகள் தான். அனைவருமே போட்டியாளர்கள் தான். ஆனால் இயல்பாக செய்ய வேண்டிய காரியங்கள் தான் நமக்கு மலை போலவே தெரிகின்றது.  அரசியல் சூழல் நம்மை அவஸ்த்தைக்குள்ளாக்குகின்றது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு நம் தெளிவற்ற சிந்தனைகளும் அதிக குழப்பங்களையும் உருவாக்குகின்றது என்பதனை எத்தனை பேர்களால் நேர்மையாக ஏற்றுக் கொள்ள முடியும் நம்புகின்றீர்கள்?

எல்லாத் திறமைகளுக்கும் அப்பாற்பட்ட உழைத்தே ஆக வேண்டிய உழைப்பு. நாம் உழைப்பு இல்லாமல் மந்திரத்தில் மாங்காய் கொத்து கொத்தாக விழுந்து விடாதா? என்ற ஏக்கத்தில் வாழ்வது தான் பலரின் வாழ்க்கையை காவு வாங்குகின்றது.

நாம் உருவாக்கும் தொழில் நம்மை நமக்கு முதலில் அடையாளப்படுத்துவதாக இருக்க வேண்டும். சந்தைக்கு தேவைப்பட்டதாக இருக்க வேண்டும். மாற்றங்கள் தேவையெனில் அதனை அனுமதிக்க தராள மனம் இருக்க வேண்டும். அது எல்லை கடந்து செல்லும் வாய்ப்பு வசதிகளை உருவாக்கத் தெரிந்திருக்க வேண்டும் அல்லது அந்த சூழலை உருவாக்கத் தெரிந்தவர்களை அருகில் வைத்திருக்க தெரிந்திருக்க வேண்டும். அவரை கண்காணிக்க கவனிக்க கட்டுப்படுத்த ஆற்றலையும் வளர்த்திருக்க தெரிந்திருக்க வேண்டும்.  தொழில் சிந்தனை என்பது குறிப்பிட்ட நேரத்திற்குள் கதை எழுதுவது போல வந்து போவது போல. அது நள்ளிரவு தூக்கத்தில் கூட உங்களை தூங்க விடாமல் செய்யக்கூடியது. உள்ளும் புறமும் உங்களை உண்டு இல்லையென்று பாடாய் படுத்தி அதன் அரூபமாக மாறி நீங்களே உங்களை வழிகாட்டியாக மாற்றிக் கொள்ள ஆற்றலை உருவாக்கும் மனப் பக்குவம் வந்தால் உங்கள் தொழில் சிந்தனை உலகம் முழுக்க பரவும்.

தொழில் சிந்தனை என்பது பாதுகாப்பற்றது என்று கருதியே நாம் அதனை தவிர்க்க விரும்புகின்றோம். ஒரு தலைமுறையில் முடிந்து விடக்கூடியதல்ல. அதுவொரு தொடர் நிகழ்வு. உங்கள் தோல்வி உங்கள் வாரிசுகளுக்கு உன்னதமான பாடத்தை வழங்கக்கூடிய ஆசிரியர்களாக நீங்கள் மாறக்கூடிய வாய்ப்பும் அமையலாம். மனதளவில் சோர்ந்து போகத் தேவையில்லை. உள்ளுற எரியும் தீயென்பது நீண்ட காலம் ஒளிவெள்ளம் பாய்ச்சக்கூடியது என்பதனை உறுதியாக உங்கள் ஆழ்மனதிலிருந்து நம்புங்கள். நான் தோற்று விட்டேன். என் மகன் மகள் ஏன் இதில் இறங்கி வாழ்க்கையை பணயம் வைக்க வேண்டும் என்று எண்ணாதீர்கள்.

மாற்றங்களை கவனியுங்கள். உள்வாங்குங்கள். உங்களை நீங்களே உற்சாகமாக வைத்துக் கொள்ளுங்கள். நான்கு இட்லி சாப்பிட்டால் போதும்.  அதற்கு மேல் நமக்கு எதற்கு? என்று யோசிக்காதீர்கள். ஐந்தாவது இட்லி என்பது உங்கள் பசிக்கு போதுமானதாக இருக்கலாம். ஆனால் அது மற்றவர்களின் பசிக்கு தேவையானதாக இருக்கலாம் தானே?  நீங்கள் செய்ய முடியக்கூடிய காரியங்கள் மற்றவர்களால் செய்ய முடியாதததாக இருக்கக்கூடும். உங்கள் தெளிவற்ற சிந்தனைகளும் உழைக்க மறுக்கும் சோம்பேறித் தனங்களும் உங்களுக்கு மட்டும் எதிரியல்ல. உங்கள் தலைமுறைக்கே எதிர்மறையை உருவாக்கக்கூடும்.

சுகமாய் வாழ்ந்து மடிவதென்பது வாழ்க்கையின் ஒரு அங்கமெனில் உலகமே உற்று நோக்குகின்றது. உலகமே தவிர்க்க முடியாத இடத்தையும் அடைய முடியும் என்பதனை இங்கே வாழ்ந்த பலரும் நிரூபித்து உள்ளனரே?

அப்படி உருவானவர் தன்னை உருவாக்கிக் கொண்டவர்  பில்கேட்ஸ். 

பில்கேட்ஸ் இடம் இயல்பாகவே இரண்டு விசயங்கள் இருந்தது. 

எதையும் வியாபாராமாகமே பார்க்கும் வழக்கம் இருந்தது. தான் செய்த ஒவ்வொரு காரியங்களின் இறுதி நோக்கம் லாபம் என்பதில் கொண்டு போய் நிறுத்தினார். ஆனால் அவருக்கு அமைந்த பொன்னான காலம் அதீத லாபத்தில் அவரைக் கொழிக்க வைத்தது. திட்டம் எதுவோ? 

அதனை செயலாக்கப்படுத்தினார். 

செயலாக்கம் எதுவோ அதுவாகவே தன்னை மாற்றிக் கொண்டார். 

நம்மூரில் சொல்வார்களே? எண்ணம் தான் வாழ்க்கை என்ற கொள்கை பிரகடனத்தை அவர் வெளியே சொல்லிக் கொண்டு திரியவில்லை. எல்லாவற்றையும் விடச் செயல் முக்கியம் என்பதாக தன் வணிக சாம்ராஜ்யத்தைக் கட்டமைத்தார். வெற்றி பெற்றார்.  

அவரின் ஒவ்வொரு அடியும் வெற்றியாக மாறியது. வெற்றி சகலத்தையும் கொண்டு வந்து அவர் காலடியில் கொட்டியது. நாம் கவனிக்க வேண்டியது, இதே காலகட்டத்தில் இவரைப் போல உலகம் முழுக்க எத்தனையோ தொழில் அதிபர்கள் வெற்றிக் கொடி நாட்டினார்கள். அவர்கள் செய்து கொண்டிருந்த தொழில்கள் எதுவும் சமூக மாற்றத்தை உருவாக்கவில்லை. தனி மனித வாழ்க்கை வசதிகளைத்தான் மாற்றியது. அதுவும் பணம் இருப்பவர்கள் இல்லாதவர்கள் என்ற பாரபட்சத்தையும் உருவாக்கியது. ஆனால் பில்கேட்ஸ் உருவாக்கிய சாம்ராஜ்யம் உலகில் உள்ள ஒவ்வொரு அரசையும் அசைத்துப் பார்த்தது. கலிபோர்னியா முதல் காரைக்குடி வரைக்கும் ஊடுருவியது.

அமெரிக்காவின் முதல் தலைமுறை கோடீஸ்வரர்கள் குறித்து இன்று எத்தனை பேர்களுக்குத் தெரியும். அவர்களும் பணக்காரர்கள் தானே? ஏன் இன்று வரைக்கும் பில்கேட்ஸ் மட்டும் பள்ளி, கல்லூரிகள் தொடங்கி வணிக நிறுவனங்கள் வரைக்கும் ஆதர்ஷப் புருஷராக இருப்பதற்குக் காரணம் அவர் உருவாக்கிய சமூக மாற்றம்.

அவரின் வெற்றி பணத்தை மட்டும் அவருக்குத் தரவில்லை. உலகியல் மாற்றத்திற்கும் காரணமாக இருந்தார். ஒவ்வொரு  இளையர்களுக்கு உத்வேகம் அளிக்கும் ஆசானாகவும் இருக்கின்றார். வல்லவன் கடைசி வரைக்கும் வல்லவனாக வாழ முடியாது என்பது உலக நியதி. அப்படித்தான் இருவர் வந்தனர். ஐபிஎம், போன்ற பல ஜாம்பவான்களை பின்னுக்குத் தள்ளிய பில்கேட்ஸ், எளிய சாதாரண நடுத்தர மக்களிடம் தன்னை கொண்டு சேர்த்து நிரூபித்துக் கொண்டவர் இவர்களிடம் தோற்றுப் போனார்.

மாற்றம் என்பது மாறாதது தானே. அப்படித்தான் கூகுள் உலகத்திற்கு அறிமுகம் ஆனது. மைக்கேராசாப்ட் ஒரே மூச்சில் பத்தாயிரம் அடி வைத்தது என்று நாம் சொன்னால் கூகுள் பல லட்சம் அடிகள் தாண்டி நின்றது. 

ஆனால் கூகுள் நிறுவனர்கள் பில்கேட்ஸ் குணாதிசயத்திலிருந்து முற்றிலும் வித்தியாசமானவர்கள்.

அவர்கள் தொடங்கிய தொடக்கம் விளையாட்டுத் தனமாகவே இருந்தது. ஆர்வம் உந்தித் தள்ளியது. அக்கறையுடன் செயல்பட்டார்கள். தாங்கள் நிற்பது நீண்டதொரு தங்கச் சுரங்கத்தின் தொடக்கத்தின் இருக்கின்றோம் என்பதே தெரியாமல் செயல்பட்டார்கள்.

கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள், வழிகாட்டும் ஆசான்கள் தங்கள் மாணவர்கள் தங்களைக் கடந்து மேலே வந்து விடுவார்கள் என்று பொறாமைப்படுவதில்லை. தங்களிடம் பாடம் கற்றுக் கொள்ள வரும் ஒவ்வொருவரும் உச்ச இடத்திற்குச் செல்வது என்பது அவர்களைப் பொறுத்தவரையிலும் அதிகப்பட்ச அங்கீகாரம் என்று தானே செயல்படுவார்கள். பில்கேட்ஸ் ம் அப்படித்தான் வளர்ந்து கொண்டிருந்த சமயத்தில் தன் நிறுவனம் சார்பாக கூகுள் நிறுவனர்களாகப் பின்னாளில் மாறிய  லாரி பேஜ்  மற்றும் செர்ஜி பிரினிம் தங்கிப் படித்த (ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம்) கல்லூரி அறைகள் என்பது பில்கேட்ஸ் நன்கொடையாக வழங்கியது.  அந்த அறைகளிலிருந்து தான் செரின் தன் ஆய்வுக் கட்டுரைக்காகக் கல்லூரியிலிருந்து நூலகத்திற்குச் சென்று தனக்குத் தேவையான நூலைத் தேடிய போது தான் அவர் சிந்தனையில் மாற்றம் உருவானது. ஒரு புத்தகத்தைத் தேட எவ்வளவு மணி நேரம்? எவ்வளவு மனித உழைப்பு? இப்படி வீணாவதைத் தடுக்க அனைத்தையும் கணினி வழியே உள்ளீடு செய்தால் சிறப்பாக இருக்குமே? என்ற அந்த ஒற்றைச் சிந்தனை தான் இன்று உலகத்தை அளக்கும் சர்வேஸ்வரனாக மாறி உள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல.  

தான் நினைத்ததையே ஆய்வுக் கட்டுரையாக எடுத்துக் கொண்டு உடன் படித்த நண்பர் (கணிதப் பாடத்தில் புலி) லாரி பேஜ் துணையுடன் முடித்த போது கூட இதன் முக்கியத்துவத்தை இருவருமே உணரவில்லை. 1998ல் தொடங்கியது பயணம். வளர்ந்தது. வடிவம் மாறியது. ஆனால் Yahoo 3 பில்லியன் டாலர் தான் என்று விற்க வந்த பங்காளிகளிடம் கறாராக தொழில் பேச 5 பில்லியன் தந்தால் தான் விற்போம் என்று இவர்கள் முரண்டு பிடிக்க அந்த தோல்வியடைந்த தொழில் ஒப்பந்தம் தான் இன்று இவர்களை உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தியது. 2004 ல் பங்குகளை வெளியிட்டு பொது நிறுவனமாக மாறியது. (In 2019, Google accounted for the majority of parent companyAlphabet's revenues with 113.26 billion U.S. dollars in Google)

இந்திய ரூபாய்க்கு 83,74,71,62,24,000.00 என்று யோசித்துச் சொல்ல வேண்டிய தொகைக்கு அவர்களின் வருமானம் நமக்குப் பெருமூச்சு விட வைத்தாலும் இன்று நான்கு வருடம் முன்பு தமிழ் நாட்டு அரசியல்வாதி எப்படிப் பேசினார்? இன்று அவர் எப்படி மாற்றிப் பேசுகின்றார் என்று உடனே எடுத்துப் பார்க்க முடிவதற்குக் காரணம் கூகுள் தானே?

சங்க கால இலக்கியம், பக்தி இலக்கியம் முதல் பரிதவித்த நடிகையின் அந்தரங்கம் வரைக்கும் அலசி ஆராய உதவும் இவர்கள் உருவாக்கியது சாம்ராஜ்யம் என்பீர்களா? நான் முக்காலம் உணர்ந்த முனிவர்கள் என்பேன். நீங்கள் இவர்களை வெற்றி பெற்ற தொழிலதிபர்கள் என்றால் நான் அனைத்துக் கண்டங்களையும் ஆட்டிப்படைக்கும் தேவேந்திர குல வம்சம் என்பேன். இவர்கள் தான் சமூகத்தின் சிற்பிகள். இது போன்ற தொழில் சிந்தனைகள் தான் ஏழேழு பதினான்கு லோகங்களையும் ஆட்டிப் படைக்கும் வல்லமை கொண்டது. அப்படிப்பட்ட சிந்தனைகள் கொண்ட இளைய சமூகம் தான் இனி இங்கே தேவை. பில்கேட்ஸ் வளர்ந்து கொண்டிருந்த அலைபேசி சந்தையை கணிக்க கவனிக்க தவறிய நிலையில் இருந்த போது அதனையும் கவனித்து கண்காணித்து வளர்ந்த இரட்டையரின் வெற்றி என்பது சான் மாடியே உருவாக்கிய யூ டியுப் தளத்தை தங்கள் சாம்ராஜ்யத்தில் 2006ல் சேர்த்துக் கொண்டது தான் கூகுள் என்ற தலைக்கு மணிமகுடம் போலானது.

(சுபம்)

வணிக சூத்திரங்கள்

வணிக சூத்திரங்கள் 2

வணிக சூத்திரங்கள் 3

வணிக சூத்திரங்கள் 4

ஒரு நகரின் கதை - 35 000 கோடி

மனிதர்களின் கதை 3 - தொழில் என்பது முதலைகள் வாழுமிடம் 


 

16 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஒவ்வொரு பத்தியும் பலவற்றை சிந்திக்க வைக்கிறது...

இந்த தொடர் முழுவதுமே அவ்வாறு தான் இருந்தது...

ரா.சிவானந்தம் said...

வார்த்தைகளில் அபாரமான அனுபவம் வெளிப்படுகிறது. இது (வணிக சூத்திரங்கள்) நிச்சயம் விற்கப்படவேண்டிய புத்தகம்.

இங்கே இந்தியாவில் பணக்காரன் என்றால் பேராசை பிடித்தவன் என்ற பிம்பத்தை உருவாக்கிவிட்டார்கள். அவர்கள் திறமைசாலிகள், சாதனையாளர்கள் என்பதை என்று இந்தியர்கள் உணருவார்களோ அன்றுதான் இந்தியா வளர்ச்சிப்பாதையில் நடைபோடும்.

ஜோதிஜி said...

நலமா? நீண்ட வருடங்கள் ஆகி விட்டதே?

ஜோதிஜி said...

அவவ்போது இவ்வாறு எழுதி பிராசித்தம் தேடிக் கொள்ள வேண்டியதாகி உள்ளது.

Mohamed Yasin said...

100 புத்தகங்ககள் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷியங்களை மிக சாதாரணமாக ஒரு தொடரில் எழுதி உள்ளீர்கள்..வாழ்த்துக்கள்.. ஜாக் மாவின் விளக்கம் செம்ம!!!! இன்னும் 100 ஆண்டுகளுக்கு கூட இது பொருந்தும்..ஐந்தாவது தலைமுறை (அவசர தலைமுறை) யின் வேகம் (வீழ்ச்சி), 15 ஆண்டுகளில் மொத்த நிறுவனத்தை முடித்த முதலாளியின் மகன், 365 நாட்களும் 24 மணி நேரமும் நமது உழைப்பும், ரிசல்ட்ம் , (ராஜ போதை முதன் முறை வாசிக்கிறேன்.. எவ்வளவு பொறுத்தமான வார்த்தை, திரைப்பட பெயராக கூட பதிந்தது வைக்கலாம்..) காரைக்குடிக்கும், கலிஃபோர்னியாவுக்குமான தொடர்பு , மைக்கேராசாப்ட் & கூகிள் வளர்ச்சி, நூலகத்தில் உதித்த ஒற்றைச் சிந்தனை இன்று உலகை ஆளும் அசுரன், 2 பில்லியன் வித்தியாசம் இன்று பரங்கி மலைக்கும், இமய மலைக்கும் இடையே உள்ள தூரம்.. (பில்கேட்ஸ் வளர்ந்து கொண்டிருந்த அலைபேசி சந்தையை கணிக்க கவனிக்க.. இது தான் தலைமுறையின் வித்தியாசமாக கூட இருக்கலாம்.. பில்கேட்ஸ் & மார்க்).. நன்றாக அலசி எளிதில் புரியும் போது எழுதி இருக்கீங்க!!! எதிர்காலத்தில் எனக்கும் ஒரு பக்கம் ஒதுக்க வேண்டி இருக்கும்..நன்றி..

ஜோதிஜி said...

என் எழுத்தை வாசித்து ஒவ்வொரு மின் நூலையும் சுவாசித்து எழுதக் கற்றுக் கொண்டு (இத்தனைக்கு வளைகுடா நாட்டில் பணிபுரிந்து கொண்டு அலைபேசி வாயிலாக எழுத கற்றுக் கொண்டு) இன்று எனக்கு சவால் விடக்கூடிய எழுத்தாளர் போல மாறியுள்ளார் ஜோஸ் என்ற தம்பி. நாம் விதையை ஊன்றிக் கொண்டே போக வேண்டியது தான். திரும்பிப் பார்க்கத் தேவையில்லை. எனக்குப் பின்னால் யாராவது ஒருவர் என் குழந்தைகளிடம் என்னைப் பற்றி பேசினால் போதுமானது. உங்களுக்கு என் முன் கூட்டிய வாழ்த்துகள்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ஓர் ஆய்வுக்கட்டுரையினைப் படித்த உணர்வு ஏற்பட்டது. வணிகம் தொடர்பான கருதுகோள்களை நீங்கள் அலசுகின்ற விதம் வியக்க வைக்கின்றது. வணிகவியல் மற்றும் மேலாண்மையியல் துறைகளில் ஆய்வு செய்வோருக்கு இதுபோன்ற பதிவுகள் மிகவும் துணை நிற்கும்.

ஜோதிஜி said...

என் எழுத்தை வணிகத்தில் உள்ளவர்கள் விரும்ப மாட்டார்கள். காரணம் அது மறைபொருள் கொண்ட வாழ்க்கை. நன்றி.

Unknown said...

அண்ணா உங்கள் எழுத்துக்கள் எப்பொழுதும் சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளது, உங்கள் அரசியல் வணிகம் மற்றும் மனிதர்களை நீங்கள் பார்க்கும் பார்வை மிக மிக வித்தியாசமாக பயன்வுள்ளதாக இருக்கிறது. தினம்தோறும் காலையில் என் அலுவலக வேலை துவங்கும் முன் தேநீருடன் உங்கள் ப்லோக் படித்துவிட்டுத்தான் என் வேலையை துவங்குவேன் நீங்கள் என்று எழுத வில்லையோ அன்றைய தினம் சிறு நெருடலான நாளாக கழிக்கிறேன் . காரணம் எனக்கு வயது இப்பொழுது 33 இதுவரை நான் நான் நிறைய புத்தகம் செய்தித்தாள்கள் படித்து இருக்கிறேன் , தங்கள் எழுத்துக்கள் இயல்பாக இருக்கிறது, எனக்குள் மனிதர்கள் மற்றும் என்னையே பார்க்கும் பார்வையின் சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

மிக்க நன்றி அண்ணா...

ஜோதிஜி said...

மகிழ்ச்சி. நன்றி. உங்கள் பெயரில் ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளவும். அல்லது கீழே உங்கள் பெயரைப் போடவும்.

Unknown said...

கணேஷ்.
தங்கள் சொந்த ஊரின் (புதுவயல் ) அருகில் உள்ள அரிமளம் என் ஊர்.

ஜோதிஜி said...

ப்லோக் என்று எழுதியவுடன் ஈழத் தமிழர் என்று நினைத்தேன். ஏற்கனவே ஒரு முறை உரையாடியிருக்கிறோம். சிங்கப்பூரில் இருக்கீங்க என்று நினைக்கிறேன். சரியா?

Unknown said...

ஆமாம் அண்ணா சிங்கப்பூரில் வேலை செய்து கொண்டு இருக்கிறேன். இதுவரை தங்களிடம் நான் பேசியது இல்லை, தங்களை
நேரில் சந்தித்தது பேச வேண்டும் என தங்கள் அனுமதிக்கும் காலத்திற்கும் காத்துகொண்டு இருக்கிறேன்.

ஜோதிஜி said...

ஊருக்கு வரும் போது தகவல் தரவும்.

Unknown said...

மிக்க நன்றி அண்ணா...

Yakshita said...

mahadbt