2020 ல் கடந்த எட்டு மாதங்களில் நான் பார்த்த பழகிய உறவினர்கள், நண்பர்கள் என ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான பிரச்சனைகள். மனம் மற்றும் பணம் இவை இரண்டும் முக்கியமானதாக இருந்தது. ஆனால் பணம் இருந்தவர்கள், இல்லாதவர்கள், அதிகாரத்தில் இருப்பவர்கள் என்று பாரபட்சமில்லாமல் அனைவருக்கும் வினோதமான ஆண்டாக 2020 அமைந்து விட்டது.
இப்போது ஒவ்வொன்றாக யோசித்துப் பார்க்கிறேன்.
தினசரி வாழ்க்கையில் அளவுக்கு மீறிய ஓய்வு அளித்துள்ளது. நம்முடைய புத்திசாலித்தனத்தை, உழைப்பை, திறமையை பயன்படுத்தவே முடியாத சூழலில் நிறுத்தி உள்ளது. வந்த வாய்ப்புகளை நிறுத்தியுள்ளது.
இனி இந்த வருடம் முழுக்க உனக்கு வாய்ப்புகள் இல்லை என்பதனை பட்டவர்த்தனமாகச் சொல்லியது. வாய்ப்பில்லாத சமயங்களில் என்ன செய்ய முடியும்? குழம்பிப் போய் மன உளைச்சலுடன் வாழ்ந்தவர்களும் உண்டு. அப்படியே ஏற்றுக் கொண்டு அமைதியாக தங்களை மாற்றிக் கொண்டு இருந்தவர்களையும் பார்த்தேன்.
எனக்கு இது புது நெருக்கடி அல்ல.
பல நூறு தடைகள் பார்த்தவன் என்ற முறையில் கடந்து வந்த பயணத்தில், ஓடி வந்த பாதையில் இதுவும் ஒன்று.
மிகுந்த நெருக்கடியான சூழலில் என்னை அப்படியே மாற்றிக் கொண்டு வேறொரு பாதையில் பயணிப்பேன். அப்படித்தான் இந்த முறையும் எழுத்தில் கவனம் செலுத்தினேன். கடந்த பத்தாண்டுகளில் இப்படித்தான் ஒவ்வொரு முறையும் செயல்பட்டுள்ளேன். ஆக்கப்பூர்வமான ஆவண சேகரிப்பில் இறங்கி அதனை வெற்றி கரமாகவும் முடித்து விட்டேன்.
புத்தகங்களாகவும் மாற்றியுள்ளேன். குரல் பதிவுகள் என்ற புதிய தடம் அறிமுகமாகி தொடக்கத்தில் தடுமாறி இன்று அதுவும் பழக்கமான ஒன்றாக மாறியுள்ளது.
நிதானம் குறித்து யோசிக்கும் போதெல்லாம் புத்தகங்கள், மற்றவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள், வாசித்த செய்திகள் என்று ஒவ்வொன்றாக நாம் நினைவில் கொண்டு வந்தாலும் நம் வாழ்க்கை குறித்து, நம்முடைய அன்றாட செயல்பாடுகளில் உள்ள தீவிரம், தீவிரமற்ற தன்மை, விருப்பு, வெறுப்பு, அவசரம் போன்றவற்றை நாம் யோசிப்பதில்லை.
எனக்கு இந்த ஆண்டு இதுவரையிலும் இல்லாத அளவில் முழுமையாக அதனை யோசிக்க எனக்கு கற்றுத் தந்துள்ளது.
வயதின் எண்ணிக்கை கூடும் போது பக்குவம் கூட வேண்டும் என்கிறார்கள். நான் பார்த்த பழகியவரையில் பலருக்கும் அது இயல்பாக நடப்பதில்லை.
நிச்சயம் கொரானா தேவைக்கு அதிகமான நிதானத்தை மறைமுகமாக கற்றுத் தந்துள்ளது.
2020 ஜனவரி மாதம் தொடங்கிய போதே இது வரையிலும் வாழ்ந்ததற்கான அங்கீகாரம் கிடைத்தது. கூடவே ரயில் பயணத்தில் கொண்டு வந்த பை காணாமல் போனது. அப்போதே இந்த வருடத்தின் வரவேற்பு புரிந்து விட்டது. அப்போது தொடங்கிய அடியென்பது மாதம் தோறும் வெவ்வேறு விதமாக வழங்கிக் கொண்டேயிருக்க வேடிக்கை பார்க்கும் பழக்கத்தை உருவாக்க மனம் வேறு பக்கம் செல்லத் தொடங்கியது. இழப்புகளின் வலியை உணராமல் இருந்ததற்கும், தொற்று நோய்கள் குடும்பத்தில் உள்ள எவருக்கும் வராமல் இருந்ததும் 2020 கொடுத்த பரிசாகவே கருதுகிறேன்.
காலத்தை வென்று நிற்கும் மரங்களிடம் சென்று காது கொடுத்துக் கேட்டுப் பாருங்கள்? தலைமுறைகள் கடந்து தன் நிறுவனத்தைத் தக்க வைத்துக் கொண்ட மனிதர்களிடம் பேசிப் பாருங்கள்? எத்தனை இடர்ப்பாடுகளை இயல்பாகக் கடந்து வந்து அது கம்பீரமாக நிற்கும் கதை உங்களுக்குப் புரியும்?
முடக்குவாதம் என்பது மனிதர்களின் உறுப்பில் உருவான மாற்றம் என்று நாம் கருதுகின்றோம்.
ஆனால் கை, கால்கள் செயல்படாவிட்டாலும் மூளை என்ற ஓர் உறுப்பில் உருவான சிந்தனைகள் மூலம் தான் இங்கே விஞ்ஞானிகள் இன்று நாம் வாழும் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அளித்து விட்டுச் சென்றுள்ளார்கள் என்பதனையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
சிலருக்கு எப்போது அவர்களின் உண்மையான வாழ்க்கை தொடங்கும் என்றே தெரியாது?
மலேசியா பிரதமர் மகாதீர் முகம்மது (94)
அதிபர் பதவியிலிருந்து விலகக் காத்திருக்கும் ட்ரம்ப் (70)
அதிபர் பதவியில் அமர இருக்கும் பைடன் (78)
பிரதமர் மோடி (60)
நம்மூர் சூப்பர் ஸ்டார் ரஜினி (70)
என்று ஒவ்வொரு மனிதர்களுக்கு வெவ்வேறு விதமான காலகட்டத்தை இங்கே இயற்கை தீர்மானித்துள்ளதாகவே தெரிகின்றது.
சிலரின் லட்சியம் அவரவர் வாழ்ந்த ஊருக்குள் முடிந்து விடும். பலரின் லட்சியங்கள் கண்டங்களைக் கடந்ததாக இருக்கும்.
நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
காத்திரு என்றால் நீ இன்னமும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அர்த்தம்.
5 comments:
வாழ்வின் ருசி தான், வாழ்வின் வெற்றி!!! நாளை என்ன நடக்கும் என்பதை அறியாதது தான் அதன் சூட்சமம்.. 2020 இம் வருடம் எல்லோருக்கும் மறக்க முடியாத ஒன்று!!! தினமும் 12 மணி நேரத்திற்கு மேல் பணி செய்து வரும் என்னை அலுவலகத்தில் 5 மணி நேரம் தான் பணி என கட்டி போட்டது, மாலைக்குள் வீட்டுக்கு செல்ல வேண்டும், இரவு நடமாட்டம் கூடாது, உணவு கட்டுப்பாடு, உயிர் பயம் என பல கட்டுப்பாடுகள் திடீரென வாழ்வில் வந்த போது, பல நாட்கள் தனிமையில், வெறுமையில் தவித்ததுண்டு..
எல்லாவற்றிக்கும் மேலாக எதுவும் நிரந்தரம் இல்லை என ஆழமாக புரிய வைத்தது இந்த ஆண்டு தான்... பொதுவாக நாட்களின் மீதும் / ஆண்டுகளின் மீதும் நம்பிக்கை அற்றவன் நான்.. எல்லா நாளும் இனிய நாளே என்ற கொள்கையை கொண்டவன்.. பொருளாதார ரீதியாக மோசமான பல நிகழ்வுகளை நான் சந்தித்து இருந்தாலும், அதை எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையையும் / தைரியத்தையும் கொடுத்ததும் இந்த ஆண்டு தான்..உங்கள் எழுத்துக்களுக்கு நன்றி..
இரு கோடுகள் தத்துவம், சென்னையில் சுண்டல் விற்கும் சிறுவனிடம் எனது 17 வயதில் அறிந்தேன்...!
தெரிந்ததா இல்லை புரிந்ததா என்றால்...
சற்று பொறுங்கள்...
அறிய காத்திருக்கிறேன்.
உங்களைப் போல பதிவின் வாயிலாக மின் அஞ்சல் வாயிலாக தெரிவித்து உள்ளனர். மகிழ்ச்சி.
அருமை
Post a Comment