Monday, June 08, 2020

அச்சு ஊடகங்களை அலற வைத்த கொரோனா Tamilnadu Head line news



கொரானாவின் நான்காவது ஊரடங்கின் போது தமிழகத்தில் ஒரு அதிசயம் நடந்தது. தமிழகத்திலிருந்து வெளிவரும் அச்சு ஊடக முதலாளிகள் ஒன்று சேர்ந்து பாரபட்சமின்றி தமிழகத்தில் உள்ள ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளைச் சந்தித்து தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். மேலும் சில முதலாளிகள் அதில் கையெழுத்துப் போட்டு இருந்தார்கள். ஒரு நூற்றாண்டுக் காலப் பாரம்பரியம் கொண்டு மக்கள் விருப்பத்தில் முன்னிலையில் இருக்கும் தினசரி பத்திரிக்கைகள் முதல் வாரம் தோறும் சில லட்சம் பிரதிகள் விற்கும் வார இதழ்கள் வரைக்கும் கடந்த பத்து வாரத்தில் மிகப் பெரிய பொருளாதார இழப்பைச் சந்தித்து விட்டன. 

அச்சடித்த பத்திரிக்கைகளும், இதழ்களும் அச்சகத்திலேயே இருக்கும் சூழல் உருவானது. தடைகளைத் தாண்டி தமிழகம் எங்கும் வந்த போதிலும் கொரானா பயத்தால் விநியோகிப்பவர் யாருமில்லாமல் பத்திரிக்கைகள் அங்கங்கே விநியோகிக்காமல் தேங்கிப் போயின.  பல முதலாளிகள் அழாத குறையாகப் பேட்டி கொடுத்தனர்.







எப்போதும் அரசியல்வாதிகள் தான் தங்கள் அறிக்கையைப் பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைப்பார்கள். பத்திரிக்கைகளும் அவர்களின் அரசியல் கொள்கைகளுக்கு ஏற்றாற் போல  வெளியிடுவார்கள்.  ஆனால் கொரனா உருவாக்கிய அழுத்தத்தால் ஒவ்வொரு பத்திரிக்கை முதலாளிகளும் அரசியல்வாதிகளை அவரவர் இருப்பிடத்திற்கே தேடிச் சென்று சந்தித்தனர். காரணம் எப்படியாவது பிரதமர் மோடியிடம் சொல்லி எங்களைக் காப்பாற்றுங்கள் என்று சொல்லி  கோரிக்கை மனுவை அளித்தனர். 
இனி வரும் காலங்களில் அச்சு ஊடகங்கள் இங்கே தப்பிப் பிழைக்க வாய்ப்புள்ளதா? என்று பொது விவாதம் நடத்தும் அளவிற்குச் சூழல் மாறிக்கொண்டேயிருக்கிறது. சோசியல் மீடியா என்றழைக்கப்படும் சமூக வலைதளங்களுக்கும் அச்சு ஊடகங்களுக்கு நடக்கும் யுத்தம் என்ன விளைவை உருவாக்கியுள்ளது? என்பதனை பற்றி இந்த வாரம் பேசுவோம்.

பெயர் சொன்னால் போதும் தரம் எளிதில் விளங்கும் என்பது போல முன்பு பத்திரிக்கைகளின் பெயர்களை மட்டும் தான் வாசகர்கள் சொல்வார்கள். ஆனால் இப்போது தலைகீழாக உள்ளது.  இது திமுக பத்திரிக்கை, அதிமுக பத்திரிக்கை, பாஜக பத்திரிக்கை என்று சொல்லி அழைக்கும் அளவிற்கு நிலைமை மாறியுள்ளது. இது தவிர ஒவ்வொரு கட்சிகளும் தனித்தனியேதஙகளுக்கான தினசரி பத்திரிக்கைகள் மற்றும் வார இதழ்களை வெளியிடுகின்றனர். இதற்கு மேலாக ஒவ்வொருவரும் சில பல தொலைக்காட்சி சேனலும் வைத்து உள்ளார்கள். மொத்தத்தில் எது உண்மையான செய்தி? யார் சொல்வதைத் தான் நம்புவது? என்று வாசிப்பவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் குழப்பத்தில் தடுமாறிப் போய் உள்ளனர். 

விலைவாசி உயர்வு சார்ந்த போட்டி ஒரு பக்கம், கொரானா உருவாக்கிய சீரழிவு மறுபக்கம் என்று இன்று ஒவ்வொரு பத்திரிக்கையும் விற்பனையில் டல்லடித்துப் போய் உள்ளனர்.  மோடியின் கடந்த ஆறு ஆண்டுக் கால ஆட்சியில் ஊடகங்களின் அனைத்துச் சிறகுகளும் பிடுங்கப்பட்டு விட்டது. அரசாங்க விளம்பரங்கள் என்ற கற்பகத்தரு பசுவின் பாலை பத்திரிக்கை முதலாளிகள் பருக முடியாத சூழலை மோடி உருவாக்கி விட்டார்.  எனவே தான் இந்தக் கோரிக்கை மனு. 

இந்த மனுவில் என்ன தான் எழுதியிருந்தார்கள்?  

1. செய்தித்தாள்களை அச்சிடுவதற்கான நியூஸ் பிரிண்ட் காகிதம் மீதான வரியை ரத்து செய்ய வேண்டும்.

2. அச்சு ஊடகங்களில் வெளியிடப்பட்ட மத்திய, மாநில அரசுகளின் விளம்பரங்களுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
3. அரசு ஊடகங்களின் விளம்பரக் கட்டணத்தை 100% அதிகரிக்க வேண்டும்

கோரிக்கைகளை நிறைவேற்றும்படி மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் வலியுறுத்த வேண்டும் என்று தாங்கள் சந்தித்த அரசியல்வாதிகளைக் கேட்டுக்கொண்டனர்.

நிஜ உலகில் என்ன தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது?. 

இரண்டு தமிழ் மற்றும் ஒரு ஆங்கிலத் தினசரித் தாள் வாங்கும் எனக்குச் செய்தித்தாள்களை விநியோகிக்கும் இளைஞன் சொன்னது இன்னமும் அப்படியே  காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

"திருப்பூருக்குள் மட்டும் ஒரு பத்திரிக்கை 3 லட்சம் பேப்பர் வருகிறது சார். அந்தப் பத்திரிக்கை தான் கொங்கு மண்டலத்தில் நம்பர் ஒன்ல போயிக்கிட்டுருக்கு. வேறு எந்தப் பத்திரிக்கைகளும் அதனுடன் போட்டிப் போடவே முடியவில்லை. ஆனால் கொரனா ஊரடங்கு சமயங்களில் பாதிக்குப் பாதி குறைந்து விட்டது.  அதே போல மற்ற பத்திரிக்கைகளும் பலத்த அடி வாங்கி விட்டது. அனைவரும் வேண்டாம் என்று ஒற்றை வார்த்தையில் செய்தித்தாள்களின் ஆயுளை முடித்து விட்டனர்" என்றார்.  

இது போன்ற நிலைமை பத்திரிக்கைகளுக்கு உருவாக முக்கியக் காரணம் கொரோனா மட்டும் அல்ல. வேறு சில காரணங்களும் உண்டு.  

இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாக விளங்கும் ஊடகம் என்பது தங்கள் சுயலாபங்களுக்காக மட்டுமே இப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்னும் வெளிப்படையாகச் சொல்லப் போனால் புரோக்கர் வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறது.

குறிப்பிட்ட பத்திரிக்கையின் பெயரைச் சொன்னால் பெருமையுடன் பார்த்த காலம் மாறி எந்தக் கட்சியை ஆதரிக்கும் பத்திரிக்கை என்று சொல்லும் அளவிற்கு ஊடக தர்மம் விலை போயுள்ளது. 

முக்கிய செய்திகளைக் கூட தங்கள் விருப்பப்படி எழுதி மக்களைத் திசை திருப்பும் கேவலமான பாதைக்கு அச்சு ஊடகங்கள் சென்று பல வருடங்களாகிவிட்டது.

அரசியல்வாதிகள் மக்களைச் சார்ந்து இருப்பதை விடப் பத்திரிக்கைகளைச் சார்ந்து இருக்க வேண்டியவர்களாகவே உள்ளனர்.  காரணம் ஒரு அரசியல்வாதி தான் சேர்த்து வைத்த இமேஜ் என்ற சொத்தை ஒரு பத்திரிக்கை நினைத்தால் ஒரு நாள் காலைப் பொழுதில் மாற்றி விடும்.  இப்படித்தான் இங்கே இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

இவற்றையெல்லாம் விட மிக முக்கியமானதொன்று சோசியல் மீடியா. மற்ற விசயங்களை விட பிரிண்ட் மீடியாவின் உண்மையான வில்லன் இவர் தான்.

இணையம், இண்டர் நெட், வெப் என்ற வார்த்தை இந்த உலகத்திற்கு அறிமுகமான தினத்திலிருந்தே உலகின் போக்கு முற்றிலும் மாற்றத் தொடங்கியது. 18 ஆம் நூற்றாண்டில் நடந்த தொழிற் புரட்சி போல 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் நடந்த கணினிப் புரட்சி என்பது மனிதர்களால் நினைத்துப் பார்க்க முடியாத மாற்றங்களை உருவாக்கியது.  தொழில்கள் மாறத் தொடங்கியது.  புதிய புதிய துறைகள் இங்கே உருவாகத் தொடங்கியது. நம்ப முடியாத ஆச்சரியங்கள் உருவானது.  இன்று மொத்த உலக ஜனத்தொகையில் நாலில் ஒரு பங்கு மனிதர்கள் தங்களுக்கான  ஃபேஸ்புக் ஐடி வைத்துள்ளனர்.  கூகுள் என்ற வார்த்தை உலகப் பொதுமறையாக மாறியுள்ளது.  ட்விட்டர் என்பது  சர்வதேச அரசியலின் சகாவரம் பெற்ற வார்த்தையாக மாறியுள்ளது. இதனை மீறி ஒன்றுமே செயல்படாது.  இனி வரும் காலத்தில் செயல்படவும் முடியாது என்பது தான் உண்மை.

இணைய அரட்டை, இணையக் குழுமங்கள் உருவாகத் தொடங்கிய போதே அச்சு ஊடகத்தை விட்டு வாசகர்கள் வெளியேறத் தொடங்கி விட்டனர்.

ஆனால் அன்று ஊடக முதலாளிகள் எவரும் இதனைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. வலைபதிவுகள் வந்தது. எல்லோரும் எழுத்தாளர்களாக மாறினார்கள்.  உடனடி அங்கீகாரம். உடனடி புகழ் என்று எல்லாவகையிலும் எழுதுபவனுக்கு வலைபதிவு எழுத்துக்கள் மகுடம் சூட்டியது.   நொடிப் பொழுதில் அனைத்துக் கண்டங்களை இணைத்தது. ஆனால் ஃபேஸ்புக் என்ற சுனாமி வந்தது. கூடவே ட்விட்டர் என்ற சூறைக்காற்றும் வந்து சேர அச்சு ஊடகம் அனைத்தும் அலறத் துவங்கியது. இன்று உலகில் வெளியாகும் எந்தவொரு அச்சு ஊடகத்தையும் சந்தா கட்டாமல் டெலிகிராம் செயலி மூலம் நீங்கள் படிக்க முடியும். பெறவும் முடியும்.







11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அச்சு ஊடகமும் இனி சிரமம் தான்...

திண்டுக்கல் தனபாலன் said...

குரல்வழிப் பதிவு - இந்த முறை :-

வீட்டில் : யாரது... உங்க நண்பர் தானே...?

கரந்தை ஜெயக்குமார் said...

அச்சு ஊடகத்தின் நிலை கவலைக்கிடம்தான்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

குரல் வழிப் பதிவு நல்ல முயற்சி. குரலும் கணீரென்று உள்ளது. செய்திகள் வாசிப்பது போன்ற முறையில் அல்லாது சற்று மாற்றி அமைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். முதல் வீடியோவை விட நல்ல முன்னேற்றம் உள்ளது.போகப் போக உங்களுக்கென்று தனிப்பாணி உருவாகிவிடும் என்பதில் ஐயமில்லை. அனைத்து வகை டிஜிட்டல் ஃபார்மேட்களில் அசத்தி வரும் தங்களுக்கு வாழ்த்துகள்

ஜோதிஜி said...

இவர்களுக்கு மனசாட்சி என்பதே இல்லாமல் போய்விட்டது.

ஜோதிஜி said...

ஆகா.........

ஜோதிஜி said...

ஒரு டேப்லெட் பிசி இருந்தால் போதும். பல வசதிகள் உள்ளது. வாசிக்க அலைபேசி உகந்த கருவி அல்ல. அகல திரை உள்ள டேப் மிக சிறப்பு.

ஜோதிஜி said...

மிக்க நன்றி முரளி.

saidaiazeez.blogspot.in said...

உண்மைதான்.
ஒரு காலத்தில் பத்திரிக்கையில் வந்துவிட்டாலே அது *வேதமாக* கருதப்பட்ட நிலை. ஆனால் இன்றோ பரிதாபம்.
இன்றைய பத்திரிக்கையின் தலையங்கங்களை பற்றி நீங்கள் கூறியது, அவர்களின் எதார்த்தம்.
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்... ஒரு காலத்தில் வாசிப்பவர்கள் தேடித்தேடி வாசித்ததை இவர்களில் பலர் தங்களை மட்டுமே வாசிக்க வைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி வாசிப்பின் *துகிலுரித்தனர்* என்றே சொல்லலாம்.
வாசிப்பவனும் தனக்கு வேறு வாய்ப்புகளை தேடி அலைவதை விட்டுவிட்டு கிடைப்பதை புசிக்க ஆரம்பித்தான்.
காட்டுப்புலியை அடைத்து கண்காட்சியில் வைத்து பசியாற்றி தங்களின் பசியையும் ஆற்றிக்கொண்டார்கள். அவர்கள் ஒன்றை மட்டும் மறந்துவிட்டனர். புலி பசித்தாலும் புல்லை தின்னாது. ஆனால் இவர்களோ புல்லையல்ல பதரை அதற்கு கொடுத்தனர். ஆனால் நடந்ததோ, புலி வாய்ப்பு கிடைத்தபோது தனது உள்ளுணர்வை (instinct) உபயோகித்து உணவளித்தவனையே அடித்து தின்றது. ஆனால் உணவளித்தவனோ தனது உள்ளுணர்வை முற்றிலுமாக மறந்து பதர்களோடு நிற்கின்றனர்.
இன்னும் நிறைய கூறும் அளவுக்கு உங்களின் இந்த உறை உந்துகிறது என்னை. என்றாலும் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.
நன்றிகளுடன்...

வெங்கட் நாகராஜ் said...

அச்சு ஊடகங்கள் நிலை பரிதாபம் தான். இன்னும் எத்தனை மாற்றங்களை உண்டாக்கப் போகிறதோ இந்த கொரோனா.

Rathnavel Natarajan said...

அருமை