Monday, June 15, 2020

திருமதி பீலா ராஜேஷ்பீலா ராஜேஷ் மாற்றம்; தமிழகச் சுகாதாரத்துறைச் செயலராக ஜெ. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டது ஏன்?

தமிழ்நாட்டில் தற்போது சுமார் 44999 கொரோனா நோயாளிகள் இருக்கிறார்கள். 399 நோயாளிகள் இறந்திருக்கிறார்கள். தினமும் சுமார் 1,999 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்படுகிறார்கள். சென்னையில் மட்டும் 29999 நோயாளிகளுக்கு மேல் இருக்கிறார்கள்.முதலில் பீலா ராஜேஷ்

கொரோனா ஆரம்பித்த சீசனில் தினமும் மாலை ஆறு மணி மீடியா பேட்டி கொடுத்துப் பிரபலமானவர் தமிழக முன்னாள் சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் .  சிங்கிள் சோர்ஸ், ஆக்டிவ் கேஸ் என்றெல்லாம் அவரளித்த அந்தப் பேட்டிகள் மிகவும் ரசிக்கப்பட்டன. ஆனால் துறை அமைச்சருக்கு அவ்வளவாக ரசிக்கவில்லை என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. இருந்தாலும் கரோனோ அப்போதெல்லாம் கட்டுக்குள் இருந்தது. அதனால் பிரச்சனை இல்லை. மே மாத மத்தியிலிருந்து தமிழ்நாட்டில் கொரோனா மிக வேகமாகப் பரவ ஆரம்பித்தது. குறிப்பாகத் தலைநகர் சென்னை, கொரோனா கொலை நகரமாக மாறியது.

இந்த நிலையில், 14 நாட்களுக்கு முன்னால் ஜூன் ஒன்றாம் தேதியன்று வருவாய் நிர்வாகத் துறை ஆணையராக இருந்த ஜெ. ராதாகிருஷ்ணன், சென்னை நகரில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு முதன்மை அதிகாரியாக மெதுவாக நகர்த்திக் கொண்டுவரப்பட்டார். அப்பொழுதே சுகாதாரத் துறையில் உறுமி மேளம் வாசிக்கப்பட்டு விட்டது. அதே நேரத்தில் சுகாதாரத் துறையில் தமிழ்நாடு ஹெல்த் சிஸ்டம்ஸ் ப்ராஜக்ட் திட்டத்தின் செயலராக இருந்த இஆப. அதிகாரி எஸ். நாகராஜன் அந்தத் துறையிலிருந்து மாற்றப்பட்டார். இப்பொழுது சுகாதாரத் துறைச் செயலர் பதவியிலிருந்து பீலா ராஜேஷ் மாற்றப்பட்டு, ஜெ. ராதாகிருஷ்ணன் அந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

டாக்டர் பீலா ராஜேஷ் வணிக வரி மற்றும் பதிவுத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இருந்தாலும் படிப்பிலும் கெட்டி, வேலையிலும் சுட்டி என்ற பெயர் பெற்ற பீலாவுக்கு என்ன ஆயிற்று?  "அவர் பிற அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படவில்லை" என்று அதிகாரிகள் மத்தியிலேயே ஒரு வலுவான காரணம் சொல்லப்படுகிறது. மாநில அரசு நோயைத் தடுக்க "கடும் நடவடிக்கைகளை" எடுத்துவருவதாக ஒரு கருத்தை இந்த இடமாற்றத்தின் மூலம் "உருவாக்க" முடியும் என்றொரு காரணமும் சொல்லப் படுகிறது.

செய்திவாசிப்பாளர் வரதராஜன் மீது மாநில பொதுச் சுகாதாரத் துறையே புகார் கொடுத்து அவரை சிவரஞ்சனி ராகம் வாசிக்க விட்டது. சுகாதாரத் துறையை விமர்சித்தவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது தேவையில்லாத ஒன்று என 'மத்தியில் அபிப்ராயப்பட்டார்கள்' என்றும் சொல்லப்படுகிறது.  "வழக்கமான நிர்வாக காரணங்களுக்காகவே பீலா மாற்றப்பட்டதாக" விளக்கமளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் (!) அதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை என்றும் அழுத்திக் கூறினார்.  ஆனால் முக்கியமாக பீலா ராஜேஷ் மாற்றப்படுவதற்கு அவருக்கும் மாநகராட்சி கமிஷனருக்கும் இடையே நடந்த அரசியல்தான் காரணம் என்று துறை உள்வட்டாரத்தில் சொல்லுகிறார்கள். இங்கே தான் விசயம் இருக்கிறது.

மாநகராட்சி கமிஷனர் மாநில சுகாதாரத்துறையின் நிர்வாகத்தின்கீழ் வருகிறவர். இவர் கொஞ்ச நாட்களாக ஆறு மணி மீடியா பேட்டி கொடுக்கும்போது பார்த்திருப்பீர்கள். இந்த வாரம் சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா இறப்பைக் குறைத்துக் காட்டுவதாக ஒரு பகீர் புகார் கிளம்பியது. சென்னையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ஓமந்தூரார் மருத்துவமனை ஆகியவற்றில் ஜூன் 11-ம் தேதி வரை நடந்த பிரேதப் பரிசோதனை அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கோரிக்கை மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

ஆரம்பித்தது வினை. சுமார் 400 கொரோனா இறப்புகள் மறைக்கப்பட்டிருப்பதாகப் பலர் புதிய சந்தேகத்தை எழுப்பினார்கள் . பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் கொரோனாவால் உயிரிழந்த 20 பேர் பற்றிய விவரங்களைச் சுகாதாரத்துறைக்குத் தெரிவிக்கவில்லையாம். மருத்துவமனை தரப்பில் கேட்டால் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தாகச் சொல்கிறார்கள். சென்னை மாநகராட்சி, அதன் மேலிடமான சுகாதாரத்துறைக்குச் சொல்லவில்லை.

அரசு சார்பில் "இது ஒரு கம்யூனிகேசன் கேப். பேரிடர் சமயத்தில் இதெல்லாம் சாதாரணமப்பா " என்று கடந்து போய்க்கொண்டிருந்த வேளையில் சுகாதாரச் செயலர் ஒரு கட்டையைப் போட்டார். பீலா ராஜேஷ் இரண்டு நாட்களுக்கு முன்னர் , இதற்கு ஒரு சிறப்புக் குழுவை அமைத்து இறப்பு எண்ணிக்கையைச் சரிபார்க்க உத்தரவிட்டார். கணக்கு சமர்ப்பிக்கச் சொன்னார். கணக்கு கேட்டாலே நம்ம ஊரு பக்கம் கலக்கம் வரும், கலகம் வரும். ஆனால் கணக்கு மட்டும் வராது. பீலா போட்ட கணக்கு வேறு. ஆனால் அந்த உத்தரவுதான் அவரது பதவிக்கு வேட்டு வைத்துவிட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியே மீடியாக்களிடம் வந்து பேட்டி கொடுக்க வேண்டியதாகி விட்டது. அவர் "கொரோனா இறப்புகளை அரசு மறைக்கவில்லை, அதனால் எங்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது" என்று சொன்னார்.
வாஸ்தவம்தான். அரசன் எந்த முயற்சி எடுத்தாலும் "பலன் ஒன்றும்" கிடைக்க வில்லையென்றால், அந்த முயற்சியை எடுத்து என்ன பயன் என்று வள்ளுவரே சொல்லியிருக்கிறாரே.  ஆக, சிறப்புக் குழுவை அமைப்பது பற்றி முன்கூட்டியே முதல்வரிடம் பீலா ராஜேஷ், ஆலோசனை நடத்தவில்லை. அதனால் முதல்வர் அலுவலகத்துக்கும் சுகாதாரத்துறைக்கும் பிரச்சினை வெடித்தது. அதன் எதிரொலியாகத்தான், பீலா ராஜேஷ் மாற்றப்பட்டதாகக் கோட்டை வட்டாரத்தில் கதைக்கிறார்கள்.

டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன்

திரு. ஜெ. ராதாகிருஷ்ணன் 2012 முதல் 2019 பிப்ரவரி வரை சுகாதாரத் துறை செயலாளராக இருந்தார்.  ராதாகிருஷ்ணன், பேரிடர் நிபுணர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சுனாமி, வெள்ளம் என்று பல பேரழிவுகளின் போது அவரை முன்னணி பணியில் பயன்படுத்தினார். பின்னாட்களில் சில அமைச்சர்களுக்கு இவர் போக்கு பிடிக்கவில்லையென்பதால், போக்குவரத்து செயலாளராக மாற்றப்பட்டார்.  அம்மாவின் இறப்பினால் கமிஷன் (இது வேறு வகையான கமிஷன்) என்றெல்லாம் பேரிடர் வந்த போது கழகத்தினர் அவரை "பயன்படுத்தி" விட்டார்கள். இப்பொழுது ஒரே வருடத்தில் விட்ட இடத்தைப் பிடித்துவிட்டார். மாலை ஆறு மணி மீடியா பேட்டி கொடுக்காதவரை அவருக்கு இந்த இடம்தான்.  தற்போது சென்னையை பழையபடி சிங்கார சென்னையாக மாற்ற வேண்டிய பொறுப்பு ஜெ. ராதாகிருஷ்ணனுக்கு இருக்கிறது.

பீலா ராஜேஷ் மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் மனிதர்களுக்கான மருத்துவம் படித்த டாக்டர்.

ஜெ. ராதாகிருஷ்ணன் பெங்களூரில் கால்நடை மருத்துவம் படித்த டாக்டர்.


பத்தாம் வகுப்பு - Corona Batch 2020


4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

முகநூலிலும் வாசித்து விட்டேன்...

8 மணி பேட்டி ஏன் வருவதில்லை...?

raajsree lkcmb said...

//ஜெ.ராதாகிருஷ்ணன் பெங்களூரில் கால்நடை மருத்துவம் படித்த டாக்டர்.//
ஜோதிஜி ஐயா, பொருத்தமாக தானே மாற்றி இருக்கிறார்கள்?
ஹா ஹா ஹா!
நிற்க, இந்தியா போன்ற சனத்தொகை மிகுந்த நாடுகளில் தொற்று நோய்களை கட்டுப்படுத்துவது அத்தனை இலகுவான வேலை கிடையாதே. இது போன்ற தொற்று நோய் காலங்களில் அரசாங்கத்திற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் தானே ஓரளவாவது கட்டுப்படுத்த முடியும்? நான் இப்படி தான் இருப்பேன் அரசாங்கம் தான் கட்டுப்படுத்த வேண்டும் என்று முட்டாள் தனமாக நடந்து கொண்டால் எந்த அரசாங்கத்தாலும் காப்பாற்ற முடியாது என்பது எனது கருத்து.

Rathnavel Natarajan said...

அருமை

ஜோதிஜி said...

அரசாங்கம் தான் கட்டுப்படுத்த வேண்டும் என்று முட்டாள் தனமாக நடந்து கொண்டால் எந்த அரசாங்கத்தாலும் காப்பாற்ற முடியாது //////// அர்த்தமுள்ள விமர்சனம். உணர்வர் யாருமில்லை என்பது தான் நிதர்சனம்.