Saturday, June 13, 2020

பத்தாம் வகுப்பு - Corona Batch 2020

சுய ஊரடங்கு 5.0 - 72Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் ஜுன் 30  வரை)

கொரானா குறித்து 71 பதிவுகள் எழுதி முடித்த போது ஐந்தாவது ஊரடங்கு தொடங்கியது.  தொடங்கி இன்றோடு 13 நாட்கள் முடியப் போகின்றது. குரல் வழிப் பதிவு என்றொரு புதிய பாதை அறிமுகம் ஆனதால் தொடர்ந்து எழுதாமல் இருந்த விசயங்களை இப்போது பதிவு செய்து விடுகின்றேன்.

இந்த வருடம் கிண்டில் போட்டியில் கலந்து கொள்ளும் போது நிச்சயம் நம் கல்வித்துறை, கல்விமுறை, ஏற்கனவே இருந்த அமைப்பு, மாறிய அமைப்பு, சாதகம், பாதகம், எதிர்பார்ப்புகள் போன்ற அனைத்தையும் ஆவணப்படுத்தி பெரிய புத்தகமாக எழுத நினைத்து இருந்தேன்.  ஆனால் இந்த வாரம் குரல் பதிவில் ஆன் லைன் கல்வியும் ஆஃப் லைன் தமிழகக் கல்வித்துறையும் என்ற தலைப்பில் இந்த வாரத் தலைப்புச் செய்தியாகப் பேசியுள்ளேன். ஞாயிறு அல்லது திங்கள் அன்று வெளிவரும்.காரணம் ஜூன் 9 அன்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவித்த "ஆல் பாஸ்" என்ற திட்டம் எந்த அளவுக்கு மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் நிம்மதிப் பெருமூச்சு விட வைத்தது என்பதனைப் பார்த்த போது அரசு முடிவெடுத்தது சரியென்றே தோன்றியது.  மகள்கள் இருவர் பத்தாம் வகுப்பு.  தினமும் ஆன் லைன் வகுப்பு  மூலம் படித்துக் கொண்டிருந்தார்கள். மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார்கள்.  இப்போது தான் சுத்தமான சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கி உள்ளனர்.

இப்போது தமிழகச் சுகாதாரச் செயலாளர் பதவிக்கு முன்பு இதே பதவியில் இருந்த ராதாகிருஷ்ணன் வந்துள்ளார்.  குறுகிய காலத்தில் கவனம் பெற்ற திருமதி பீலா ராஜேஷ் வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அரசியலில் பலியாடு என்பது முக்கியமானது.  ஆனால் சென்னையில் உள்ள மக்களில் (பரிசோதனை செய்யும் பட்சத்தில்) பாதிக்குப் பாதி கொரானா பாதிக்கப்பட்டுள்ளது என்பதனை நம்மால் உணர முடியும். ஆனால் அரசாங்க அறிவிப்பு என்பது அது சம்பிரதாயம். என் பார்வையில் அரசாங்கத்தால் இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது என்பது தான் எதார்த்தம். ஆனால் மக்கள் மாறத் தயாராக இல்லை.  மீன் கடைகள், இறைச்சிக் கடைகளில் ஞாயிறு என்றால் ஈ போல மொய்க்கின்றார்கள். கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் அனைத்தையும் காற்றில் பயமின்றி பறக்க விடுகின்றார்கள். நாம் வேடிக்கை பார்க்கலாம்.  விபரீதங்கள் நடக்கும் போது வருத்தப்படலாம். வேறு ஒன்றும் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. 

திருப்பூர் இயல்பு நிலைக்கு வர முயன்று கொண்டிருக்கிறது. உணவகங்கள் இப்போது திறந்துள்ளனர். அரசு பேருந்துகள் ஓடுகின்றது. பேக்கரி கடைகள், கேக் விற்பனை செய்யும் கடைகள் வரைக்கும் செயல்படுகின்றன.  மளிகைக் கடைகள் முதல் சிறிய பூக்கடைகள் வரைக்கும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன. தெருவோரக் கடைகள் கூட தங்கள் வியாபாரத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகின்றனர்.  தனியார் பேருந்துகள் மட்டும் இன்னும் ஓடத் துவங்கவில்லை. மண்டலம் வாரியாக தமிழக அரசு பிரித்துள்ள காரணத்தால் திருப்பூரிலிருந்து திருச்சி, காங்கேயம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி போன்ற ஊர்களுக்குச் செல்ல முடியாது.

கோவை மயிலாடுதுறை மார்க்கமாக இயங்கும் சதாப்தி ரயில் கடந்த ஒரு வாரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.  திருப்பூரில் பணிபுரிந்த வட மாநிலத் தொழிலாளர்களை மாவட்ட நிர்வாகம் மாநிலம் வாரியாகப் பிரித்துத் தொடர்ந்து அவரவர் ஊருக்கு அனுப்பிக் கொண்டே இருக்கின்றார்கள்.

இன்னமும் ஒவ்வொரு தொழிலாளரும் தத்தமது ஊருக்குச் செல்வதில் தான் ஆர்வமாக இருக்கின்றார்கள். ஊருக்குப் போய் என்ன செய்வார்கள்? என்றே புரியவில்லை.  நவம்பர் அக்டோபர் மாதங்களில் இன்னமும் கொரானா தாக்கம் உச்சத்தைத் தொடும் என்று ஒவ்வொருவரும் ஆருடம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

முதல் நான்கு ஊரடங்கின் போது (பத்து வாரங்கள்) மதுப்பழக்கம், புகைப்பழக்கம் உள்ளவர்கள் நிச்சயம் இந்தப் பழக்கத்தை விட்டு வெளியே வந்து விடுவார்கள் என்று தான் நினைத்து இருந்தேன். ஆனால் நடைமுறையில் அப்படி எவரும் மாறியதாகத் தெரியவில்லை.  

மூன்றாவது ஊரடங்கின் இறுதியின் போது தளர்வுகளும் அறிமுகமானது. நான்காவது ஊரடங்கின் போது கூடுதலாகச் சுதந்திரம் கிடைத்தது. ஐந்தாவது ஊரடங்கு என்பது பெயருக்கென்று உள்ளது. இந்தச் சமயத்தில் செய்தித்தாள்களில் வரக்கூடிய க்ரைம் ரேட் என்பது எக்குத் தப்பாக எகிறிக் கொண்டே இருப்பதைப் பார்த்த போது எப்படி இத்தனை நாளும் தமிழகம் அமைதியாக இருந்தது. இந்த வன்முறை, வன்மத்தை எப்படி உள்ளே அடக்கி வைத்திருந்தார்கள் என்று செய்தித்தாள்களை வாசிக்கும் போது ஆச்சரியமாக உள்ளது.

தற்போதைய தலைமுறையில் குறிப்பாகப் பள்ளி, கல்லூரியில் படிக்கும் பெண்கள் சமையல் விசயங்களில் ஆர்வம் செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு.  அதைப் பெருமையாகப் பெற்றோர்கள் சொல்லவும் செய்கின்றார்கள்.  ஆனால் யூ டியுப் புண்ணியத்தில் ஊரடங்கு சமயங்களில் பல பெண்கள் விதவிதமாகச் செய்து அசத்துகின்றார்கள்.  மகள்கள் இருவர் ஆச்சரியப்படுத்தினார்கள்.

கொரானாவிற்கு மருந்துகள் எதுவும் இதுவரையில் கண்டுபிடிக்கப் படவில்லை. தனிமைப்படுத்துகின்றார்கள். எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்துகின்றார்கள். அவ்வளவு தான்.  ஆனால் தனியார் மருத்துவமனைகளில் தொடக்கக்கட்டணம் நாலரை லட்சம் என்று அரசே அதிகாரப்பூர்வமாக அறிவித்து அங்கீகாரமும் கொடுத்துள்ளனர்.

Zinc மாத்திரை -3×8 - 24.00
வைட்டமின் tab-3×2 - 6.00
Arsenic album-30- - 2.00
கபசுரக்குடிநீர். - 10.00
டிஃபன். - 50.00
மீல்ஸ். - 90.00
டிஃபன். - 40.00
பால். - 40.00
பழம். - 20.00
மினரல் வாட்டர். 5லி-150.00
பெட்-சார்ஜ். -1000.00
டாக்டர்-ஃபீஸ். - 500.00
நர்ஸ் ஃபீஸ். -200.00
க்ளீனிங் சார்ஜ். -500.00
சானிடைசர். - 50.00
மாஸ்க். -1500.00
-------------------
ரூ - 4182.00
40% கமிஷன் ரூ-16728.00
நிர்வாக லாபம் ரூ- 2272.00
-------------------
ரூ-23182.00
தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக ஒரு நோயாளிக்கு ஒரு நாளைக்கு 'இந்திய மருத்துவக் கழகத்தின் தமிழகப்பிரிவு' நிர்ணயித்த தொகை ரூ. 23,182.00.

திருப்பூர் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்ய ஆடர்கள் குறைவாக இருப்பதால் மெடிக்கல் டெக்ஸ்டைல் துறையில் (கொரானா ஆடைகள், முகக் கவசம், கையுறை) இறங்கியுள்ளன.

கொரானா சமயத்தில் நம் முகமும் உடலும் எந்த நிலையில் இருந்தது. நம் ஆரோக்கியத்தை எப்படி வைத்திருந்தோம் என்பதற்காக மகளுடன் நடைப்பயிற்சி முடித்து வந்து நின்ற போது மற்றொரு மகள் எடுத்த புகைப்படத்தை ஆவணத்திற்காக இங்கே சேர்த்துள்ளேன். எப்போதும் நான் சொல்வது தான். நன்றாகச் சாப்பிடுங்கள். செரிக்காமல் எதையும் சாப்பிடாதீர்கள். வெளியே அதிகம் சாப்பிடாதீர்கள். வீட்டில் திட்டு விழுந்தாலும் அனுசரித்து வாயைக் கட்டாமல் வயிறார சாப்பிடுங்கள். உணவே மருந்து. உணவு தான் மருந்து.

சராசரி குடும்ப உறுப்பினர்கள் கொண்ட ஒவ்வொரு குடும்பத்திலும் தற்போது ரேசன் கடையின் மூலம் வழங்கப்பட்ட அரிசியென்பது ஏறக்குறைய 100 கிலோ அளவுக்குச் சேர்ந்துள்ளது. அந்த அளவுக்கு மத்திய மாநில அரசாங்கங்கள் தமிழக மக்கள் அரிசியை வழங்கியுள்ளனர். ஆனால் பத்து சதவிகித மக்களுக்குத் தான் இந்த அரிசி முக்கியமான அவசியமானதாக உள்ளது. பெரும்பாலான மக்கள் இட்லி அரிசியாகப் பயன்படுத்துகின்றார்கள்.  ஆனால் 75 சதவிகித மக்கள் கிலோ ஐந்து ரூபாய்க்குத் தான் விற்கின்றார்கள்.  அதையும் கூட வாங்க ஆள் இல்லை என்பதே உண்மை. மத்திய அரசாங்கம் ஒரு கிலோ அரிசிக்கு 33 ரூபாய் மானியம் அளிக்கின்றது.  இதை மாற்றி மளிகைப் பொருட்களாக வழங்கலாம்.

கடந்த 70 நாட்களுக்குப் பிறகு எந்தப் பொருள் வாங்கினாலும் 20 முதல் 30 சதவிகிதம் விலைவாசி அதிகமாகி உள்ளது. ரூபாய் 140க்கு விற்ற கோழி இறைச்சி இன்று ரூபாய் 280க்கு விற்பனை ஆகின்றது.  மக்கள் காசு இல்லாத சமயங்களில் இதனை ஒதுக்குவார்கள் என்று தான் நினைத்தேன். ஆனால் ஞாயிற்றுக்கிழமை கூட்டம் வரிசைகட்டி நிற்கின்றது.  ஒவ்வொரு மீன் கடையிலும் 50 பேர்களுக்குக் குறைவாக வரிசை இல்லை.  

மக்களின் மனோபாவம் முற்றிலும் மாறிப் போய் உள்ளது.  அரசாங்கத்தால் எவரையும் கட்டுப்படுத்த முடியவில்லை. எவரும் கட்டுப்படத் தயாராக இல்லை. அவசியத் தேவைகளுக்கு வெளியே வருபவர்களை விட வீட்டுக்குள் இருக்க முடியாமல் ஆட்டம் போட வெளியே வரும் கூட்டம் தான் அதிகம். எக்கேடு கெட்டுப்போ என்கிற நிலைக்குத் தமிழக அரசு வந்து விட்டது என்றே தோன்றுகின்றது.  அதனால் முழு ஊரடங்கு என்று அறிவிக்கும் எண்ணம் இல்லை என்று நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.


6 comments:

வெங்கட் நாகராஜ் said...

//எக்கேடும் கெட்டுப் போ// - வேதனையான உண்மை.

இடையே எழுத விட்டுப்போன சில விஷயங்களை இங்கே தொகுத்தது நன்று.

திண்டுக்கல் தனபாலன் said...

தகவல்கள் தொகுப்பு அருமை...

திண்டுக்கல் தனபாலன் said...

குரல் வழிப் பதிவு ஆவலுடன் எதிர்பார்த்தேன்...

அண்ணே... ஊர்களின் பெயர் (டமில்) மாற்றம் பற்றி...?

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தொகுத்துப் பகிர்ந்த விதம் அருமை.

அது ஒரு கனாக் காலம் said...

"ஆனால் மக்கள் மாறத் தயாராக இல்லை. மீன் கடைகள், இறைச்சிக் கடைகளில் ஞாயிறு என்றால் ஈ போல மொய்க்கின்றார்கள் " இப்படி எல்லாம் எழுதினா எப்படி - சங்கி என்று முத்திரை குத்தி விடுவார்கள்... அரசாங்கம் ஓரளவு தான் செய்ய முடியும் , எந்த அரசாங்கங்கமானாலும் சரி ...நாம் தான் நம்மை பாதுகாத்து கொள்ளவேண்டும் ....நடை, ஆவி பிடிப்பது , முடி வெட்டி கொள்வது, அடிக்கடி வெந்நீர் குடிப்பது , இஞ்சி, மிளகு , சீரகம், போட்டு கஷாயம் குடிப்பது, குளிர் சாதன அறையை குறைவாக பயன்படுத்துவது , - முக கவசம் அணிவது , விதம் விதமாக ரசம் வைத்து சாப்பிடுவது , யாரவது நல்லது சொன்னால் கேட்பது , முடிந்தால் அதை முயற்சிப்பது ...பிரார்த்தனை செய்வது ....மக்கள் தான் மாற வேண்டும் ...

Rathnavel Natarajan said...

அருமை