Wednesday, January 22, 2020

கிண்டில் மொழி 2019

அமேசான் பென் டூ பப்ளிஷ் 2019 போட்டியில் நெடுங்கதை பிரிவில் 5 முதலாளிகளின் கதையை எழுதி வெளியிட்டேன். போட்டி முடியும் நேரமாக நிர்ணயிக்கப்பட்ட டிசம்பர் 31 அன்று வரை 59 விமர்சனங்கள் வந்தது. விலை ரூபாய் 59 ரூபாய் நிர்ணயம் செய்து இருந்தேன்.
முதல் முதலாக வாசித்தவர் 3 ஸ்டார் கொடுத்து இருந்தார். அதற்குப் பிறகு மற்ற இருவர்கள் 4 ஸ்டார்கள் கொடுத்து இருந்தார்கள். 56 பேர்கள் 5 ஸ்டார் கொடுத்து இருந்தார்கள். போட்டிக்கான நேரம் முடிந்த பிறகும் பலரும் வந்து விமர்சனமும் ஸ்டார் ரேட்டிங் கொடுத்துக் கொண்டேயிருக்கின்றார்கள்.



ஒவ்வொருவரும் படித்த புத்தகத்திற்கான விமர்சனம் என்கிற ரீதியில் எழுதாமல் ஆத்மார்த்தமாக தங்கள் எண்ணங்களை எழுதியிருந்தார்கள். நண்பர் எழுதிய விமர்சனம் ஐரோப்பா வரைக்கும் சென்று சேர்ந்து அங்குள்ள பல குழுமங்களில் பகிர்ந்து பல நல்ல விளைவுகளை உருவாக்கியது. வலையுலக பெரியாருக்கு நன்றி.
நவம்பர் 2 அன்று வெளியிட்டேன். அப்போதே நான் செயல்படத் துவங்கியது தாமதம் தான். ஆனால் என்னை விடக் கடைசி 15 நாட்களில் அசுரப் பாய்ச்சலில் களம் புகுந்தவர்களும் உண்டு. வென்றும் உள்ளனர். எத்தனை பேர்கள் படித்தார்கள்? கணக்கு வழக்கு? வந்த ராயல்டி போன்றவற்றை எழுதியுள்ளேன். அள்ளிக் குவித்து விடுகின்றார்கள் என்று கற்பனையில் இருப்பவர்களுக்கு இதன் மூலம் கண் திறக்கும்?
முதல் கட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நெடுங்கதை மற்றும் குறுங்கதை 5 தலைப்புகள் எழுதியவர்களுக்கு வாழ்த்துகள்.
கொள்கை அரசியல், சித்தாந்த அரசியல், வன்ம அரசியல், பொறாமை அரசியல், தொழில் நுட்ப அரசியல் போன்றவற்றை அடுத்த முறை கலந்து கொள்ள விரும்புகின்றவர்கள் எனக்குத் தெரிந்த நான் இதன் மூலம் கற்றுக் கொண்ட சிலவற்றை இந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளேன்.
கொம்பு முளைத்தவர்கள், அந்தக் கொம்பு தான் அங்கீகாரம் என்று கருதிக் கொண்டு இருப்பவர்களை இந்தப் போட்டி மண்ணில் போட்டுப் புரட்டி எடுத்துள்ளது. சந்தை முக்கியம். சப்தம் முக்கியமில்லை என்பதனை அமேசான் எப்படி வடிவமைத்துள்ளது என்பதனைப் பற்றி எழுதியுள்ளேன்.
ஆனால் எனக்கு இந்தப் போட்டியில் கலந்து கொண்டதன் வாயிலாக அமெரிக்கன் டாலர் மதிப்பில் பெரிய தொகை கிடைத்துள்ளது. அமேசான் புதிய வாழ்க்கையைத் தந்துள்ளது. வென்றுள்ளேன். விரிவாக இந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளேன்.
என்னை விட என் மகள் இந்தப் போட்டியில் ஆர்வமாக இருந்தார். மனைவி எப்போதும் போல கட்டுப்பாடுகள் இல்லாத ஆதரவினை வழங்கினார். தொழில் சார்ந்து நினைத்த மாதிரி வாழ்க்கை வாழும் என் செயல்பாடுகளை என்னுடைய குணாதிசயங்களைத் தெரிந்த காரணத்தால் களங்கமில்லாமல் என்னை அப்படியே ஏற்றுக் கொண்டும் வாழும் என் மனைவிக்கு, எழுதப் போகின்ற நாட்களுக்கும் சேர்த்து அவருக்கு ஒரு லட்சம் அமெரிக்கன் டாலர் மதிப்புள்ள வாழ்த்துகளை இங்கே எழுதி வைத்து விடுகின்றேன்.
மகளும் நானும் படித்த, எங்கள் இருவருக்கும் மிகவும் பிடித்த நீண்ட நாளைக்குப் பிறகு மனைவியும் படித்த தலைப்பு வென்றுள்ளதா? நண்பர் தான் முதல் கட்ட தேர்வு வெளிவந்ததும் எனக்கு இணைப்பு அனுப்பினார். மகளிடம் தான் முதலில் காட்டினேன். இணைப்பைத் திறப்பதற்கு முன்பு அவர் வென்று இருப்பார் தானே? என்று கேட்டுக் கொண்டே அவர் தான் இணைப்பைத் திறந்தார். மனைவியும் மகளும் என்னைப் பற்றிக் கண்டு கொள்ளவே இல்லை. "எடுத்தவுடன் ஓட நினைக்காதீர்கள். தவழ்ந்து நடந்து அதன் பிறகு ஓடலாம்" என்றார்கள். எங்கள் மனம் கவர்ந்த புத்தகம் குறித்து இதில் எழுதியுள்ளேன்.
திருப்பூர் அறிந்த பெரிய முதலாளி அவர் குடும்பத்தினர் என் 5 முதலாளிகளின் கதை முழுமையாக வாசித்துள்ளனர். அழைத்தார்கள். மனைவியும் மகள்களும் பயந்தனர். "அப்பாவுக்கு ஆபரேசன் தியேட்டர் ரெடி செய்து வைங்கடா" என்றார் மனைவி. திரும்பி வந்த போது திகைப்பாகப் பார்த்தனர். என்ன நடந்தது?
நேற்று இரவு மகள் இந்திய ரூபாயில் விலையை நிர்ணயம் செய்ய மறந்து அமெரிக்கன் டாலரில் வைத்து விட்டுத் தூங்கி விட்டார். காலையில் எழுந்து பார்த்தால் விலை 5000க்கு மேல் காட்டிய போது பயந்து போய் சிரித்தேன். பிறகு மாற்றினேன். ஆனால் அறிமுகம் செய்யாமல் இருந்த போது நண்பர்களின் ஆர்வக்கோளாறு, கிண்டில் அன் லிமிட் வைத்துள்ள தீவிர வாசிப்பாளர்கள் (அவர்களுக்கு இலவசம் தான்) எனக்கு ஒரு இரவுக்குள் பெரிய தொகையைப் பரிசாகத் தந்துள்ளனர். இந்தப் போட்டியில் அரசியல் இல்லை என்று தொடர்ந்து பரிந்துரைப்பதைக் கடமையாகவே வைத்துள்ள நண்பர்களுக்கு என் வாழ்த்துகள்.
ஜனவரி 6 நான் படித்த பள்ளியில் நூற்றாண்டு விழா தொடக்கச் சொற்பொழிவு பேச அழைத்திருந்தனர். 49 நிமிடங்கள் பேசினேன். முதல் பொது மேடை. பொன்னாடை போர்த்தி கௌரவம் செய்தனர். நான் எதிர்பார்க்காத வாழ்நாள் சாதனையாளர் கேடயம் வழங்கினர். முனைவர் பழ. முத்தப்பன் மற்றும் முனைவர் மு. பழனியப்பன் அவர்களுக்கு நன்றி.
எதையும் காலம் (தான்) தீர்மானிக்கும். அறிவும் ஆர்ப்பாட்டமும், ஆரோக்கியமும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அடங்கி விடும்.


இதனையும் பிடிஎப் மாற்றக் காத்திருக்கும் தொழில் நுட்பம் அறிந்த நண்பர்களுக்கு என் வாழ்த்துகள் இப்பொழுதே இங்கேயே முன் கூட்டிய புரிந்துணர்வுடன் நன்றியுடன் எழுதி வைத்துவிடுகிறேன்.🙏





SRI SARASWATHI GIRLS HIGHER SECONDARY SCHOOL.SPORTS DAY. 05.01.2020. PUDUVAYAL


6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துகள் அண்ணே...

Rathnavel Natarajan said...

மகிழ்ச்சி. வாழ்த்துகள்

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துகள் நண்பரே...

ஜோதிஜி said...

நன்றி வெங்கட்.

ஜோதிஜி said...

நன்றி அய்யா

ஜோதிஜி said...

நன்றி தனபாலன்.