Friday, March 01, 2019

வாழ்த்துக் குறிப்புகள்



வாழ்த்துகள்  - ஒன்று

இந்த நிகழ்வு மட்டும் எனக்கு இன்றும் நன்றாக நினைவில் உள்ளது.  அக்கா கையில் அந்தப் புகைப்படம் இருந்தது. என்னிடம் காண்பித்து பெண் அழகாக இருக்கின்றார் என்றார்.  நடிகையின் தோற்றப் பொழிவு இருந்து. எனக்கு அப்போது திருமணம் குறித்து எண்ணம் தோன்றவே இல்லை.  

27 வயதுக்குண்டான எண்ணங்களில் "வேகம்" மட்டும் தான் அதிகம் இருந்தது.  வாசித்த புத்தகங்களின் தாக்கத்தின் காரணமாக எதையும் முழுமையாகத் திருப்பிப் போட்டு விட முடியும் என்ற ஆழமான நம்பிக்கை. திருப்பூர் வாழ்க்கை அதிக நம்பிக்கை அளித்த காலமது. மிகப் பெரிய இடத்தில் அமர்ந்து விடுவோம் என்ற எண்ணமும் ஒரு காரணம். சில நாட்கள் கழித்து பெண்ணின் அப்பா வந்து என்னைப் பார்த்தார். அவர் முடிவே எடுத்து விட்டார். சில வாரங்கள் போராடிப் பார்த்திருப்பார் போல. நான் திருப்பூர் வந்து விட்டேன். மறுத்து விட்டேன். 

இதனைத் தொடர்ந்து பலரும் வந்து கொண்டேயிருந்தார்கள். அதில் ஒரு குடும்பத்தில் அச்சாரம் என்கிற நிலைக்கு வந்து நின்றார்கள்.

அடுத்த ஐந்தாண்டுக் காலம் எங்கங்கே என்னை நகர்த்திச் சென்றது. வெளிநாடு வரைக்கும் அழைத்துச் சென்றது.  குடும்பத்தினரின் ஆசைகளை, குறிப்பாக அப்பாவின் விருப்பங்களை நிறைவேற்ற முடியவில்லை.  

அப்பா இறந்து விட்டார் என்ற செய்தி வந்த போது முதல்முறையாகக் குற்ற உணர்ச்சி வந்தது.  இறந்த தினத்தைக் கணக்கில் வைத்துக் கொண்டு ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ள அப்போது தேடி வந்த என் மாமனாரிடம் சம்மதம் சொல்லியிருந்தேன்.  எப்படி நடந்தது? என்று யோசித்து முடிவதற்குள் திருமணமும் முடிந்து விட்டது. 

குழந்தைகள் வந்தார்கள். வளர்ந்தார்கள். என்னுள் மாற்றத்தை உருவாக்கினார்கள்.  உருமாறிக் கொண்டேயிருந்தேன். 

குழந்தைகள் விசயத்தில் மருத்துவம் சாதிக்காத விசயங்களை எல்லாம் அவர்களின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்திச் சாதித்துக் காட்டினேன்.  பாசம் என்பதற்கு அப்பாற்பட்டு கடமை என்ற ஒரு சொல்லில் என் வாழ்க்கை தடம் புரளாமல் இன்று வரையிலும் அழகாக நதி போல ஓடிக் கொண்டிருக்கின்றது. 

நான் எடுத்த என் திருமண முடிவென்பது  என்னுடன் உடன்பிறந்தோர்களின் வாழ்க்கையில் இல்லாத அனைத்து விதமான மகிழ்ச்சியையும் அமைதியையும் எனக்குத் தந்துள்ளது.  

அதற்கு மேலாக ஆரோக்கியத்தையும் வழங்கியுள்ளது. ஆனால் பலவற்றுக்கு இன்னமும் காலம் காத்திருக்கச் சொல்லியுள்ளது.  

என் எழுத்துப் பயணத்திற்குப் பிறகு என் வாழ்க்கையில் நுழைந்தவர் என் நண்பர் இராஜராஜன்.  என் சொந்த வாழ்க்கையில் ஒவ்வொரு அடியிலும் சம்மந்தப்பட்டவருக்கு ஏப்ரல் 28 அன்று சென்னையில் திருமணம் நடக்க உள்ளது.  இராஜராஜன் தற்போது சிங்கப்பூரில் இருக்கின்றார். பெண் பர்மாவைச் சேர்ந்தவர்.  காதல் திருமணம்.

திருமணம் என்பது என் வாழ்வில் இல்லை என்பதனை உறுதியாகக் கொள்கை போல கடைப்பிடித்து வந்தவர். என்னைப் போலவே பலவற்றிலும் பிடிவாதமான கொள்கை கொண்டவர். இன்று சற்று தளர்ந்துள்ளது.  காதலுக்கு அப்பாற்பட்ட நேசத்தைப் பொழிந்த அந்தப் பெண் பாராட்டுக்குரியவர்.

நேரம் காலம் பார்க்காமல், தமிழ் முறைப்படி ஓதுவார்கள் தமிழ் மறைகளை ஓத இத்திருமணம் நடக்கவுள்ளது.

இது எங்கள் குடும்ப திருமண விழா.  இந்த நிகழ்வு என் பதிவில் இருக்க வேண்டும் என்பதற்காகத் திருமண அழைப்பிதழை இங்கே எழுதி வைத்திட தோன்றியது.

+++++++

(முகநூலில் எழுதிய) வாழ்த்துகள் - இரண்டு

இன்னும் அறுபது நாட்கள் உள்ளது.

காலசக்கரம் உருவாக்கும் மாற்றங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். இப்படியொரு நிகழ்வு இவர் வாழ்வில் நடக்குமா? என்று யோசித்த காலம் மாறி இப்போது நடக்கப் போகின்றது என்பதற்கான அச்சாரம் இது.

இது எனக்கு, எங்கள் குடும்பத்தினர்க்கு முக்கிய நிகழ்வு. இதற்கான முன்னேற்பாடுகளை இப்பொழுதே செய்யத் தொடங்கியுள்ளோம்.

எனது இன்றைய வலிமையின் ஆதாரமாக, நான் மகிழ்ச்சியாக, வாழ்ந்து கொண்டிருப்பதற்கும், என் குடும்பம் வாழ்வதற்காக இவர் தன் வாழ்வை அர்ப்பணித்துள்ளார்.

என் வாழ்வின் ஒவ்வொரு அடியிலும், எங்கள் குழந்தைகளின் வளர்ச்சியிலும் துணையாக இருந்தவரின் வாழ்க்கை இனி வரும் காலத்தில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ எங்கள் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துகள்.

அனுபவங்கள் தான் திசைகாட்டி. வாழ்க்கை கற்றுக் கொடுக்கும். நாம் நம்பும் கொள்கைகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் காலாவதியாகும். புதுப்புது வடிவங்கள் உருவாகும். மாறும். மாற்றங்கள் நம்மைப் புது மனிதராக அடையாளம் காட்டும். ஆனாலும் தம்மை இழக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கும் என் நண்பருக்கு என் இனிய வாழ்த்துகள்.

பத்து வருடத் தொடர்பில் எப்போதும் இவர் குணத்தால் மேலே இருக்கின்றார். நான் எப்போதும் போல இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டேயிருக்கின்றேன். நான் நிறைய மாறியுள்ளேன். இவர் என் வாழ்க்கையை மாற்றியுள்ளார்.

இது திருமண அழைப்பு மட்டும் அல்ல. என்றும் எங்கள் குடும்ப நினைவு பொக்கிஷத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக இன்றைய நாளில் முதல் கடமையாக இங்கே பதிவேற்றி வைக்கின்றேன்.

வாழ்த்துகள் இராஜ ராஜன்





+++++++++

எங்களுடன் நெருக்கமான தொடர்பில் இருக்கும் நண்பர் எழுதிய வாழ்த்து.

Ramu Palaniappan நான் இது வரை பார்த்த திருமண அழைப்புகளிலேயே மிக சிறப்பான ஒன்று. திருமண நாளில் தான் கதாநாயகனாக இருக்க வேண்டும் என்பது, இயல்பான, நியாயமான எதிர்பார்ப்பு. ஆனால், அன்றும் தான் நம்பும் சித்தாந்தத்தை முன்னிறுத்தி, அந்த சித்தாந்தத்தை வடிவமைத்த நாயகர்களின் இணையர்களோடு இருக்கும் சித்திரத்தோடு அழைப்பினை வடிவமைத்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. இணையர்களுக்கு அன்பும் வாழ்த்துக்களும்.

+++++




21 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

நண்பருக்கு வாழ்த்துகள்

திண்டுக்கல் தனபாலன் said...

அன்பு நண்பருக்கு வாழ்த்துக்கள்...

குறள்கள் இரண்டும் சிறப்பு...

ஜோதிஜி said...

நன்றியும் அன்பும்.

ஜோதிஜி said...

தஞ்சாவூரில் நண்பர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொண்டேன். ஒரு ஹால். மொத்தம் முப்பது பேர்கள். இரண்டு மாலைகள். இருவரும் மாற்றிக் கொண்டார்கள். திருமணம் முடிந்தது. மொத்தச் செலவு பத்தாயிரம். அடுத்த நாள் இருவரும் வேலைக்குச் சென்று விட்டார்கள்.

KILLERGEE Devakottai said...

தங்களது நண்பருக்கு எமது இதயப்பூர்வமான வாழ்த்துகள்.

கிருஷ்ண மூர்த்தி S said...

நண்பருக்குத் திருமண வாழ்த்துகள் ஜோதிஜி!

திருமணங்களில் வீண்செலவைத் தவிர்த்த தஞ்சை நண்பர்களுக்கு என் இனிய வாழ்த்துகளும் அன்பும்!

G.M Balasubramaniam said...

ஒருவரது சித்தாந்தங்களையும் தாங்கி வரும் திருமண அழைப்பிதழ் முதன் முதலாகப் பார்க்கிறேன் வாழ்த்துகள்

M.Thevesh said...

ஜோதிஜி; முதற் கண் நட்புக்கு இலக்கணம் காட்டும் உங்கள் இருவர்
நட்புக்கும் என் மனங்கனிந்த வாழ்த்துகள்.நண்பரின் திருமணத்திற்கு
நெஞ்சம் நிறைந்த மங்கல வாழ்த்துகள்

த. சீனிவாசன் said...

இராஜராஜன், மகிழினி இணையருக்கு பல்லாயிரம் வாழ்த்துகள்

ஸ்ரீராம். said...

நண்பருக்கு எங்கள் வாழ்த்துகளும்.

ஜோதிஜி said...

சீனிவாசன் இந்த விழாவில் நாம் சந்திக்க வாய்ப்புள்ளதா? வரவேற்கிறேன்.

ஜோதிஜி said...

நன்ற ராம்.

ஜோதிஜி said...

ஆகா எத்தனை நாளாச்சு. சுகமா இருக்கீங்களா? நன்றி நண்பா.

ஜோதிஜி said...

அவர் எல்லாவிதங்களிலும் வித்தியாசம் தான். நன்றி

ஜோதிஜி said...

விமர்சனப் பெட்டியை திறந்து வைங்க தலைவரே. இன்று தான் மின் அஞ்சல் வழியாக பதிவை பெறும் வாய்ப்பு உள்ளதைப் பார்த்தேன். மகனுக்கு வாழ்த்துகள். நன்றி.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நண்பருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். நட்பின் ஆழத்தை உங்கள் எழுத்துகள் மூலமாக வெளிப்படுத்திய விதம் மிகவும் அருமை.

Rathnavel Natarajan said...

வாழ்த்துகள்

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

நன்றி

Thulasidharan V Thillaiakathu said...

அட! வித்தியாசமான அழைப்பிதழ்! தங்கள் நண்பருக்கும் அவர் இணையருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்!

துளசிதரன், கீதா

கீதா: //குழந்தைகள் வந்தார்கள். வளர்ந்தார்கள். என்னுள் மாற்றத்தை உருவாக்கினார்கள். உருமாறிக் கொண்டேயிருந்தேன்.//

இது ஒவ்வொருவரது வாழ்விலும் ஒவ்வொரு காலக்கட்டத்தில் வருகிறது இல்லையா? இந்த உருமாற்றம். அதாவது பெறும் அனுபவங்கள் நம்மைப் புடம்போட்டு பக்குவப்படுத்திக் கொண்டே போவது நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. கற்கும் பாடங்களில் நம் சிந்தனைகளும் மாறிக் கொண்டும் அதற்கேற்ப நம் உரு மாற்றமும். மாற்றம் ஒன்றே மாறாதது என்பது போல.


Amudhavan said...

தமிழுக்கு அச்சு நூலும் வேண்டும், மின் நூலும் வேண்டும். இரண்டுமே தேவைப்படுகின்ற மொழி தான் தமிழ்.
தங்களின் டாலர் நகரம் சிறப்பான புத்தகம்.
நான் என்னுடைய நூல்களைக்கூட கிண்டிலில் கொண்டுவரலாம் என்றிருக்கிறேன்.