Saturday, March 16, 2019

வலைச்சரம் சீனா அய்யா காலமானார்.

அன்பின் அப்பா !
அடியெடுத்து வைக்கையில்
விரல் பிடித்தாய் !
மடியமர்த்தி எண்ணெழுத்து
எழுத வைத்தாய் !
படிப்படியாய் வாழ்க்கைப்பாடம்
பயிற்றுவித்தாய் !
நொடிப்பொழுதும் கலங்காமல்
துணை நின்றாய் !
தோள் நின்ற தந்தைக்குத்
துணை நின்ற பொழுதுகளும்,
விரல் பிடித்த தந்தைக்கு
வழி காட்டிய நினைவுகளும்,
தனித்திருக்கும் போதிலும்
நினைத்து மகிழ ஆசை !
மாறும் பிறவி யாவினிலும்
மகளாய்ப் பிறக்க ஆசை !
Miss you Appa.....

இந்தக் கவிதையை எழுதியவர் (தற்போது இங்கிலாந்தில் வசிக்கின்றார்) இன்று காலையில் எழுதியிருக்க என் பார்வையில் சில மணி நேரத்திற்கு முன் தான் முகநூல் வாயிலாகத் தெரிந்தது.  எழுதியவர் பெயர் திருமதி சுஜாதா.  அவர் அப்பாவின் பெயர் சிதம்பரம்.   

இந்தப் பெயர் சொன்னால் பலருக்கும் தெரியாது.  சீனா என்றால் கொஞ்சம் பேருக்குத் தெரியும்.  வலைச்சரம் சீனா அய்யா என்றால் உலகமெங்கும் வாழும் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கும் குறிப்பாக இணையத் தொடர்பில் உள்ள அனைவருக்கும் நிச்சயம் தெரிந்த பெயர் தான்.  

சீனா அய்யா காலமான செய்தி சில மணி நேரத்திற்கு முன் தான் எனக்குத் தெரிய வந்தது.  

மற்றொருமொரு சோகம்.  

பல நினைவுகள். பலவித எண்ணங்கள் படிப்படியாக ஒவ்வொன்றாக வந்து கொண்டேயிருக்கின்றது.

++++++++++++++++++

நடிகர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா நடத்திய பத்திரிக்கையாளர் கூட்டத்தில் பத்திரிக்கையாளர்களை ஒருமையில் அழைத்தார் என்று அவரை சகட்டுமேனிக்கு கட்சி அடிப்படையில் பலரும் பொளந்து கட்டிக் கொண்டு இருந்தனர். அதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன் முகநூலில் ஒருவர்  தன் தரப்பு நியாயமாகச் சிலவற்றை எழுதியிருந்தார்.

"பலரும் பத்திரிக்கை சுதந்திரத்தைப் பற்றி எழுதுகின்றார்கள். 

எழுதுகின்றவர்கள் எவரும் களத்தில் இல்லை என்பதும் அவர்களுக்கு இங்குள்ள எதார்த்தம் புரியவில்லை என்பதும் எனக்கு நன்றாகவே தெரியும்.  காரணம் நான் களத்தில் இருப்பதால் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதனை தெளிவாகச் சொல்ல முடியும்.  ஒரு வாரம் முழுக்க என் பெயர் பத்திரிக்கையில் வர வேண்டுமென்றால் குறைந்தபட்சம் ஐயாயிரம் ரூபாய் செலவழித்தே ஆக வேண்டும்.  அதுவே தொலைக்காட்சி மற்றும் ஏனைய மீடியா உலகில் என் பெயர் வர வேண்டுமென்றால் பத்தாயிரம் செலவழித்தே ஆக வேண்டும்.  இது தான் உண்மை.  காரணம் மீடியா என்றால் பணம்.  பணம் மட்டுமே மீடியா" என்று எழுதியிருந்தார்.  

இதை இங்கே எழுதுவதற்குக் காரணம் சீனா அய்யா இறந்துவிட்டார் என்ற செய்தியை நான் வாசித்த போது இவர் நினைத்து இருந்தால், நிச்சயம் பல வழிகளில் சம்பாரித்து இருக்க முடியும்? 

காரணம் இணைய உலகில் குறிப்பிட்ட காலகட்டத்தில் முக்கியமானவராக இருந்தார்.  

குறிப்பிட்ட நபர்கள் நடத்தி வந்த வலைச்சரம் என்ற தளம் இவரிடம் வந்து சேர்ந்தது.  தன்னுடைய வயது மூப்பு, உடல் நலப் பிரச்சனைகள் என்று ஆயிரம் இருந்தாலும் தெரிந்தவர், தெரியாதவர் என்று பாரபட்சமில்லாமல் அனைவருக்கும் ஆசிரியர் பொறுப்பு கொடுத்துக் கௌரவித்தார்.   

முகநூல், ட்விட்டர் என்று தொடங்கி பத்தி எழுத்தாளராக வளர்ந்து எழுத்தாளர் ஆக வளர்ந்தவர்கள் பல பேர்கள்.  ஆனால் ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு வலைச்சரத்தில் தன் தளம் யாராவது அறிமுகம் செய்துள்ளார்களா? என்று ஏங்கிப் பார்த்தவர்கள் எத்தனையோ பேர்கள்.?  எந்த லாப நோக்கமும் இன்றி, எவரிடமும் எதையும் எதிர்பார்க்காமல், தன்னால் முடிந்த அளவுக்கு வலைச்சரத்தை மிகத் தெளிவாக அழகாக நடத்திய சீனா அய்யாவுக்கு என் கண்ணீர் அஞ்சலியை இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன்.

++++++++++++++

நாலைந்து வருடத்திற்கு முன்பு அமெரிக்காவில் உள்ள ஒரு நண்பர் கூறிய வார்த்தையிது.  

"இங்கு எல்லோரும் அவசரப்பட்டு செய்தித்தளம், மற்ற தளங்கள் என்று தொடங்கி விடுகின்றார்கள்.  ஆனால் ஐந்தாண்டுகளில் அந்த தளம் காணாமல் போய்விடும்.  காரணம் நிதி பற்றாக்குறை, கவனிக்க ஆள் இல்லாதது, விருப்பங்கள் மாறிப் போய்விடுவது, அந்த தளத்தைப் படிக்க ஆள் வராமல் தேங்கிப் போய்விட அப்படியே போட்டு விட்டு நகர்ந்து விடுகின்றார்கள்.  அவர்களுக்கும் மன உளைச்சல் தான் மிஞ்சும்" என்றார்.  

கடந்த ஒன்பது வருட இணைய அனுபவத்தில் இதே போலப் பல தளங்களைப் பார்த்துள்ளேன்.  ஆனால் இன்றும் வலைச்சரம் உள்ளது.  ஒரே பிரச்சனை. மக்களின் மனோபாவம் மாறிவிட்டது.  தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வெவ்வேறு பாதைகள் உள்ளது.  

அதனால் வலைச்சரத்தில் எழுத விருப்பமில்லாமல் போய்விட்டது.  

சீனா அய்யாவிற்குப் பிறகு பிரகாஷ் இப்போது நடத்திக் கொண்டிருந்தாலும் பெரிய அளவுக்கு அதனைக் கொண்டு செலுத்த முடியாமைக்குக் காரணம் இப்போதைய சூழல் மாறிவிட்டது.  

அதாவது வலைச்சரம் என்பது பல நூறு பேருக்கு ஏணிப்படியாக இருந்தது. 

ஏணிப்படி மேலேறிப் பார்த்ததுண்டா? அது அப்படியேதான் இருக்கும்.  

சீனா அய்யாவும் அப்படித்தான்.  

அவர் இணைய உலகத்தில் ஆயிரக்கணக்கான பேர்களுக்கு ஏணிப்படியாக இருந்தவர்.  எந்த எதிர்பார்ப்புமின்றி தன்னுடைய ஓய்வு காலத்தைத் தமிழ் இணைய உலகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த காரணமாக இருந்தவர்களில் இவரும் முக்கியமான ஒருவராக இருந்துள்ளார் என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ள முடியும். 

+++++++++++++=

"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" என்பார்கள்.  நிச்சயம் சீனா அய்யாவின் மனைவி என்பவர் அய்யாவைக் கடைசி வரைக்கும் குழந்தை போலவே பார்த்துக் கொண்டிருந்தவர்.  

திருப்பூரில் (2013) டாலர் நகரம் புத்தக வெளியீட்டு விழாவிற்கு இருவரும் வந்து இருந்தனர்.   

விழா மண்டபத்தில் இருந்தவரை அந்தப் பக்கம் இந்தப்பக்கம் என்று நகரவிடாமல், அப்படியே வெளியே நகர்ந்தால் அவரும் பின்னால் சென்று கொண்டிருந்ததை கவனித்துக் கொண்டேயிருந்தேன்.

நானும் அவர்கள் கலாச்சார வாழ்க்கையில் இருந்தவன் என்ற முறையில் நான்,   "என்னம்மா ஜோடி போட்டுத்தான் எங்கேயும் கிளம்புவீர்களோ?  அய்யாவைத் தனியாக விடமாட்டுறீங்களே?" என்று  உரிமையுடன் கிண்டல் செய்து சிரித்தேன்.  

அப்போது தான் அவர் தனியாகச் செல்லும் போது உண்டாகும் பிரச்சனைகளைப் பற்றி என்னுடன் பகிர்ந்து கொண்டார்.  தன் வயதையும் மீறி சீனா அய்யா பலரையும் நேசித்துள்ளார்.  

இதன் காரணமாகவே பல இடங்களுக்குச் சென்று விடுவார். அவ்வப்போது பிரச்சனைகளும் வரத் தொடங்கின.  இதன் காரணமாகவே இவரின் ஆசையின் பொருட்டு அம்மாவும் உடன் செல்லத் துவங்கி உள்ளனர். மனமொத்த தம்பதியினராக வாழ்ந்துள்ளார்கள்.

++++++++

தனக்குத் தெரிந்த வகையில், தன்னால் முடிந்த வரையில், தனக்குப் பிடித்த துறையில் உழைத்துள்ளார். உண்மையாக வாழ்ந்துள்ளார்.

நான் அவருக்கு கடமைப்பட்டுள்ளேன்.  என் எழுத்துலக வளர்ச்சியில் அவரின் பங்களிப்பு மற்றும் ஆசிர்வாதங்களும் உண்டு.  

அவர் ஆலமரம்.  வேர்கள் எப்போதும் மண்ணுக்குள் தான் இருக்கும்.  நாம் கிளைகள்.  இன்று வெளியே தெரிகின்றோம் என்பதற்குக் காரணம் அந்த வேர்கள் தான். 

நான் உயிருள்ள வரைக்கும் சீனா அய்யா மற்றும் அவர் குடும்பத்தினர் குறித்த எண்ணங்கள் என் மனதில் இருந்து கொண்டேயிருக்கும்.  குடும்பத்தில் பிறந்து இருந்தால் குடும்ப உறுப்பினரா? அவரும் தமிழ் இணைய குடும்பத்தில் நிரந்தர தலைவர் தான்.

அவரின் புகழும், நல்லெண்ணங்களும் அவர் தலைமுறையைக் காத்தருள வேண்டுகின்றேன்.

தேவியர் இல்லத்தின் கண்ணீர் அஞ்சலி.

(சீனா அய்யா டாலர் நகரம் புத்தக விழாவில் கலந்து கொண்ட போது நான் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப் படங்களை விட இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. டீச்சர் திருமதி துளசி கோபால் நிகழ்வில் சென்னையில் எடுத்த படம் கம்பீரமாக இருந்த காரணத்தால் இங்கே பிரசுரம் செய்துள்ளேன்)

13 comments:

 1. வருந்துகிறேன். :( அவர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

  ReplyDelete
 2. //அவர் ஆலமரம். வேர்கள் எப்போதும் மண்ணுக்குள் தான் இருக்கும். நாம் கிளைகள். இன்று வெளியே தெரிகின்றோம் என்பதற்குக் காரணம் அந்த வேர்கள் தான். //

  நூற்றுக்கு நூறு உண்மை .ஆத்மார்த்தமான உண்மையான வரிகள் அய்யா அவர்களைப்பற்றி நீங்கள் சொன்னவை அனைத்தும் .என்னையும் ஒரு வாரம் வலைச்சர ஆசிரியராக பொறுப்பு தந்தவர்
  எனது அஞ்சலியையும் இங்கே பதிவு செய்கிறேன் ..

  ReplyDelete
 3. மிகவும் வேதனையான விசயம்.
  மதுரை பதிவர் மாநாட்டில் ஒருமுறையும், தனியாக அவரது வீட்டில் மறுமுறையும் சந்தித்தேன். குழந்தை உள்ளம் படைத்தவர்.
  அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கிறேன்.

  ReplyDelete
 4. உங்கள் ஒவ்வொரு சொல்லும் உண்மையே!

  நாங்கள் அவரைத் தனியாகச் சந்திக்கும் வாய்ப்பு இல்லை என்றாலும் வலைச்சரத்தில் பங்கெடுத்த போது மின் அஞ்சல் வழியாகத்தான் மிக மிக அன்பானவர்.

  எங்களின் ஆழ்ந்த அஞ்சலிகளையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

  துளசிதரன், கீதா

  ReplyDelete
 5. அவருக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்!!!

  ReplyDelete
 6. சீனா ஐயாவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்...

  ReplyDelete
 7. //அவர் ஆலமரம். வேர்கள் எப்போதும் மண்ணுக்குள் தான் இருக்கும். நாம் கிளைகள். இன்று வெளியே தெரிகின்றோம் என்பதற்குக் காரணம் அந்த வேர்கள் தான்//

  நன்றாக சொன்னீர்கள்.

  பதிவு படிக்கும் போது மனம் நெகிழ்ந்து விட்டது.
  நானும் என் அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
  அவர் மகளின் கவிதை கண்ணீர் துளிர்க்க வைத்து விட்டது.

  ReplyDelete
 8. கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறேன்

  ReplyDelete
 9. வலைச்சரம் சீனா அய்யா காலமானார்.- முகநூல், ட்விட்டர் என்று தொடங்கி பத்தி எழுத்தாளராக வளர்ந்து எழுத்தாளர் ஆக வளர்ந்தவர்கள் பல பேர்கள். ஆனால் ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு வலைச்சரத்தில் தன் தளம் யாராவது அறிமுகம் செய்துள்ளார்களா? என்று ஏங்கிப் பார்த்தவர்கள் எத்தனையோ பேர்கள்.? எந்த லாப நோக்கமும் இன்றி, எவரிடமும் எதையும் எதிர்பார்க்காமல், தன்னால் முடிந்த அளவுக்கு வலைச்சரத்தை மிகத் தெளிவாக அழகாக நடத்திய சீனா அய்யாவுக்கு என் கண்ணீர் அஞ்சலியை இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன்.
  - எந்து கண்ணீர் அஞ்சலி - எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி

  ReplyDelete
 10. எங்களுக்கும் வலைச்சரத்தில் வாய்ப்பு கொடுத்தார். அந்த அழைப்பு எப்போது வரும் என்று நாங்கள் ஆவலுடன் காத்திருந்தோம் அப்போது.. இனிமையான மனிதர். அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எங்கள் பிரார்த்தனைகள்.

  ReplyDelete
 11. எனது
  தாயும் தந்தையும்
  திருக்குறளின்
  இரண்டு அடிகள்

  இதுவும் சீனா தானாவின் அன்பு மகள் எழுதிய கவிதைதான்.
  ஈடு செய்ய இயலா இழப்பு

  ReplyDelete
 12. ஆழ்ந்த இரங்கல்கள்...

  ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.