Monday, April 30, 2018

50 வயதினிலே - 3

இங்குக் காலாவதி என்ற வார்த்தையுண்டு. அது பொருட்களுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் பொருந்தும். நாம் வைத்துள்ள கருத்துக்கள், கொள்கைகள் என்பதெல்லாம் குறிப்பிட்ட காலம் வரைக்கும் தான் பேசக்கூடியதாக இருக்கும். வயது, பதவி, பணம், அதிகாரம் போன்ற முக்கியக் காரணிகள் இருந்தாலும் காலாவதி என்ற சொல் நிச்சயம் தன் வலிமையைக் காட்டவே செய்யும். எல்லையைக் கடக்கும் போது இங்கு எல்லாமே விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படும் என்பதனை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

மோடி வளர அத்வானி தான் காரணம். இது உங்களுக்கும் எனக்கும் தெரியும். ஆனால் காலம் அவரை இன்று எங்கே நிறுத்தியுள்ளது. மேயர், அமைச்சர், துணை முதலமைச்சர் என்று பல பதவிகள் பார்த்து அனுபவம் இருந்தாலும் எடப்பாடிக்குக் காலம் வழங்கிய வாய்ப்பு ஸ்டாலினுக்கு வழங்கவில்லையே?

சமூகத்தையே மாற்றக்கூடியவர்களுக்கே இந்தக் கதியென்றால் தனி மனிதன் வாழ்க்கை எம்மாத்திரம்? அதிர்ஷ்டம், சூட்சமம், விதி, எல்லையின் முடிவு என்ற ஏதோவொரு வார்த்தையும், அந்த வார்த்தைக்குள் அடங்கிய தத்துவத்தை அவரவர் வாழ்க்கை அனுபவத்தைக் கொண்டு எடுத்துக் கொள்ள முடியும்.

சிலவற்றுக்கு காரணங்களை கண்டு கொள்ள முடியாது. காரணங்களை சொல்லவும் தெரியாது. அது அப்படித்தான் என்று ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

நீங்கள் வாசித்த, சந்தித்த பிரபல்யங்களின் ஒவ்வொரு கால கட்ட வாரிசுகளின் வாழ்க்கையைப் பாருங்கள். ஓராயிரம் ஆச்சரியங்களையும் கேள்விகளும் உங்களுக்குள் தோன்றக்கூடும். நமக்குக் கிடைக்காத அனைத்தும் இவர்களுக்குக் கிடைக்கும். எதையும் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. எல்லாமே கைக்கெட்டும் தூரம் தான். ஆனாலும் எத்தனை பேர்களால் அவரவர் தந்தை, தாய்ப் பெற்றிருந்த புகழின் எல்லையைத் தாண்டிச் செல்ல முடிந்துள்ளது? சமூகம் பாராட்டும் வெற்றியாளர்களாக வர முடிகின்றது?

நாடே கொண்டாடிய நடிகர் திலகத்தின் மகனுக்கு விளம்பரப்படங்களில் நடித்து வயிறு வளர்க்க வேண்டும் என்று வாழ்க்கை அமைந்துள்ளது. மொழியை வைத்தே வளர்ந்த கலைஞரின் மகனுக்கு வாழ்வின் இறுதி வரைக்கும் வார்த்தைகளே வசப்படவில்லையே?.

எதிர்மறை நியாயங்கள் தான் இங்கே நேர்மறை எண்ணங்களுக்கு ஆதாரம். ஏன் இப்படி? என்று உங்கள் எண்ணத்தில் உள்ளவர்களின் வாழ்க்கையைப் பற்றி யோசித்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையென்பது இனிதான வாழ்க்கை என்பதனை உணர முடியும்? நம் பார்வை முக்கியம்? பார்வையில் உணர்தல் அதைவிட முக்கியம்.

மேடு என்பது ஒரு வழிப்பாதை. சிலர் மட்டுமே செல்லக்கூடியதாக இருக்கும். சென்றவர்கள் அருகில் மற்றவர்கள் நிற்க முடியாத அளவிற்குக் குறுகலாக இருக்கும். ஆனால் பள்ளம் என்பது பாதையின் தொடக்கமாக இருக்கும். நாம் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். பள்ளம் என்பது குழி அல்ல. அதுவொரு வழி. இதுபோன்ற சமயங்களில் உங்கள் மனம் ஆசானாக இருக்க வேண்டும்.

ஆசான் என்பவர் அறிவுரை சொல்பவர் அல்ல. வழிகாட்டியாக இருப்பவர். இந்தச் சமயங்களில் தான் காலாவதி என்ற வார்த்தையை உணர்ந்திருக்க வேண்டும். காரணம் நாம் காலாவதியாகி விட்டோம் என்பதனை குறிப்பிட்ட சில சம்பவங்கள் நமக்கு உணர்த்தும்.

திருமண வாழ்க்கை தொடங்கி வைக்கும். குழந்தைகள் வளரும் போது புரிய வைக்கும். மகள்கள் மகன்களாக மாறி கல்லூரிக்கு நுழையும் போது காலமும் வயதும் நீ காலாவதியாகக்கூடிய காலகட்டத்திற்குள் நுழைந்துள்ளாய் என்பதனை அறிவுறுத்தும்.

புரிந்து கொண்டவர்கள் எப்படித் தங்களை மாற்றிக் கொள்கின்றார்கள்?

விவாதத்தைத் தவிர்த்து விடு. விதண்டாவாதம் என்பது எப்போதும் கூடாது. ஆக்ரோஷம் அறவே கூடாது. மன உளைச்சல் உருவாக்கும் காட்சிகளை உள்வாங்க முடியாத போது உனக்கு நீயே திரையிட்டுக் கொள். இனியும் சூரத்தனம் தேவையில்லை. மொக்கைத்தனம் தவறில்லை. அமைதிப்படுத்த ஆன்மீகத்தை நாடு. அது தேவையில்லை எனில் உன்னை உனக்கே உணர்த்தும் வாசிப்பை அதிகப்படுத்து. உரையாடலைக் குறைத்து விடு.

உள்ளர்த்தம் தரும் வார்த்தைகளில் கவனம் செலுத்து. மொத்தத்தில் உன் ஆரோக்கியத்தை அடுத்தவர் அழிக்க அனுமதிக்காதே. நீயே உருவாக்கிக் கொள்ளாதே. ஒரு நாளில் ஒரு நேரம் பட்டினி கிடப்பது தவறல்ல. ஆனால் நாள் முழுக்கப் பட்டினியால் மட்டுமே வந்த நோயைப் போக்க முடியும் என்ற நிலையில் வாழ்க்கை அமைவது கொடுமை என்பதனை உணரும் வயது நிச்சயம் ஐம்பதுக்கு அருகே வந்தவர்களால் புரிந்து கொள்ள முடியும்.

மனைவியின் விருப்பங்கள் ஒரு பக்கம். வளரும் குழந்தைகளின் தேவைகள் மறுபக்கம் என்று காலம் நடத்துப் பாடங்களில் ஒவ்வொரு மாதமும் மர்மக்கதை போலவே இருக்கும். பக்கங்கள் நகர நகரப் படபடப்பு மாறி பயம் உருவாகத் தொடங்கும். காலம் வாசிக்கச் சொல்லும் கதையின் தலைப்புப் பணம்.

எந்த அறிவுரைக்குள்ளும் அடக்க முடியாததும் எவ்விதக் கொள்கைக்குள் அடங்காததும் பணம் என்ற மூன்றெழுத்து. எப்படிச் சேர்ந்தது? என்று சேர்ந்தவர்களுக்கும் விவரிக்கத் தெரியாது. ஏன் இழந்தோம்? என்பதனை இழந்த பின்பு கூட விவரிக்கத் தெரியாதவர்களால் சூழ்ந்த உலகத்திற்குள் நாமும் இருக்கின்றோம். ஆனால் இந்த பணத்தைத் தேடி தான் நாமும் நம்மை இழந்து கொண்டிருக்கின்றோம்.

ஐம்பது வயதில் நம்மை அதிகம் தாக்கும் பிரச்சனைகள் இரண்டு. ஒன்று பாதுகாப்பின்மை. மற்றொன்று பயம். இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்புடைய தோழர்கள். நம் குடும்பத்துக்கு யார் பாதுகாப்பு? நாம் இல்லாது போனால் என்னவாகும்? என்ற கேள்விகளை அதிகம் எதிர்கொள்வது இந்த வயதில் தான். இப்போது தான் பயம் என்ற பூதம் நம் முன்னால் பிரமாண்டாக நிற்கின்றது.

பயமென்பது எளிதில் பரவக்கூடியது. அனுமதிப்பது என்பது அவரவர் மனநிலையைப் பொறுத்தது. கவலையே ஆறுதல் என்று கருதிக் கொள்பவர்களால் சுற்றியுள்ள உலகத்தைப் பார்க்க முடியாது. நம்மையறியாமல் நம்முள் பரவசமாய்ப் பரவும் கவலைகள் தான் ஆரோக்கியத்தை விலையாகக் கேட்கின்றது.

தேவையானது தேவையற்றது என்று பாரபட்சம் பார்க்காமல் கவலைப்படுவது என்பது சிந்திக்க வைப்பது என்று நம்மவர்கள் நம்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
கவலைகள் என்பது காலாவதியாகிப் போன காசோலை. அதனை வைத்து இருப்பவர்களுக்கும் பிரயோஜனமில்லை. கொடுத்துச் சென்றவர்களும் அதனைக் கண்டு கொள்வதுமில்லை.

அதுவொரு காகிதம். நாளாகச் செல்லரித்துப் போய்விடும். உண்மை தான். நம் உள்ளுறுப்புகள் செல்லரிக்க வைப்பதில் முக்கியப் பங்காற்றுவதே இந்தக் கவலைகள் தான். அப்போது தான் நம் உள்ளம் குறித்து, உள்ளத்திற்குள் உள்ள நேர்மையைக் குறித்து யோசிக்கத் தொடங்குகின்றோம்.

நம்மிடம் உள்ள நேர்மையைப் பற்றி அப்போது கவலைப்படுபவர்கள் நம் முன்னால் யாரும் இருக்கப் போவதில்லை.

அதுவரையிலும் சொந்த வாழ்க்கையில் கடைபிடித்த நேர்மை என்ற வார்த்தையே காலாவதியாகி விடும். நம் வாழ்க்கையின் நீள அகலத்தையும் சந்திக்கின்ற ஒவ்வொருவரும் ஆராய்ச்சி பொருளாக எடுத்துக் கொள்ளத் தொடங்குகின்றார்கள். சிலர் அறிவுரையை அள்ளிக் கொடுத்து விட்டு அகன்று விடுவர். பலர் வீழ்ந்த பள்ளத்தை எட்டிப் பார்த்து மனதிற்குள் கணக்கீடு செய்து கொள்வர்.

தனி மனித வாழ்வின் வளர்ச்சி என்பதற்கும் சமூகத்தின் வளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்புண்டு. கற்ற கல்விக்குரிய மரியாதை அதன் மூலம் கிடைக்கும் வேலை மூலம் தான் ஒவ்வொருவருக்கும் இங்கே அங்கீகாரம் கிடைக்கின்றது. ஆனால் மக்கள் தொகைப் பெருக பெருக எல்லாவற்றின் மதிப்பு மாறிக் கொண்டேயிருக்க ஒவ்வொன்றின் கொள்கையும் மாறிவிடுகின்றது.

எவையெல்லாம் நீதிக்குப் புறம்பானதாகச் சொல்லப்பட்டதோ அவையெல்லாம் இங்கே அவரவர் வளர்ச்சிக்கு உதவக்கூடியதாக இருக்கின்றது. ஏற்றுக் கொள்பவர்கள் ஏற்றம் பெறுகின்றனர். ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.

அப்போது தான் வயது காரணமாகக் காட்டப்படுகின்றது. திறமையில் உள்ள நம்பிக்கையின்மை குறித்துப் பேசப்படுகின்றது. இனியாவது அடங்கிப் போய்விடு என்று அறிவுரை அடுத்தடுத்துத் தாக்குகின்றது. மொத்தத்தில் உள்ளார்ந்த கருத்துக்களை உள்ளே வைத்துக் கொள். பெரும்பான்மையினர் சொல்லும் பாதையில் நடக்கப் பழகிக் கொள் என்பதான வாழ்க்கை தத்துவம் உருவாகின்றது.

தன்னை மாற்றிக் கொள்ள முடியாதவர்களின் அன்றாட வாழ்க்கை என்பது திண்டாட்டமாகப் போய்விடுகின்றது. குடும்ப வாழ்க்கையில் தனி மனிதனின் மனதுக்கும் உடலுக்கும் உண்மையான போராட்டமே இங்கிருந்து தான் தொடங்குகின்றது. பிறகெப்படி பக்குவத்தைப் பற்றிப் பேச முடியும்?

கடன் கழுத்தை நெறிக்கின்றது. சேமிப்பு அறவே இல்லை. பணிபுரியும் வேலையோ உத்தரவாதம் இல்லை. அடுத்த மாதம் வேலை இருந்தால் மட்டுமே குடும்பத்தில் மகிழ்ச்சி. இல்லையேல் உருவாகும் பிரச்சனைகள் ஏராளம். அடிப்படைத் தேவைகளுக்கே இங்கே அல்லாட வேண்டியுள்ளது. இதையும் மீறி பக்குவநிலையை எட்ட முடியுமா?

இந்தியாவில் வாழும் மக்கள் தொகையில் முக்கால்வாசி பேர்கள் நிரந்தரமற்று தான் வாழ்கின்றார்கள். சொந்த வீடு இல்லாமல், நிரந்த வேலையில்லாமல், படித்த கல்விக்குத் தொடர்பில்லாத ஏதோவொரு வேலையில், வாழ்ந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் தான் வாழ்கின்றார்கள். அப்படியென்றால் இப்போது இங்கே நாம் பார்க்கும் வளர்ச்சியென்பது?

வளர்ச்சி என்பதனை நாம் தவறாகவே புரிந்து வைத்துள்ளோம். தொழில் நகர வளர்ச்சி என்பது வளரும் ஜனத்தொகை கொண்ட நாட்டுக்கும் அவசியம் தேவை என்பதனை ஒரு பக்கம் எடுத்துக் கொண்டாலும் இங்கு நடக்கும் வளர்ச்சி என்பது வேறு விதமாக உள்ளது. ஒரு தொழிற்சாலை பத்தாயிரம் பேர்களுக்கு நேரிடையாக மறைமுகமாக வேலை அளித்து அவர்கள் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளித்தாலும் சுற்றிலும் உள்ள ஒரு லட்சம் மக்களின் ஆரோக்கியத்தை விலை பேசும் காரியத்தைக் கண ஜோராகச் செய்கின்றது.

மேற்கித்திய சமூகத்தில் நடக்கும் தொழிற் புரட்சி என்பது வேறு. இங்கே லஞ்சம் உழலில் திளைத்து குறிப்பிட்ட அதிகார வர்க்கம் மட்டும் சுகமாக வாழ உருவாக்கப்படும் செயல்பாடுகள் என்பது வேறு. நாம் தான் உணர்ந்து கொள்வதே இல்லை. அன்றாட வாழ்க்கைக்கே ஆளாய் பறக்கும் மனிதனுக்குத் தன் ஆரோக்கியத்தை விலை வைத்துத் தான் வாழ வேண்டும் என்ற சூழ்நிலை வரும் போது அவன் எந்தப் பக்குவத்தைக் கடைப்பிடிக்க முடியும் என்று நம்புகிறீர்கள்?

இதனால் தான் இனி இங்கே வாழ முடியாது. நன்றாகப் படி. தேர்வில் முந்து. வெளிநாட்டுக்கு ஓடி விடு என்ற இடைவிடாத சூட்சம பாடத்தைப் பள்ளிக்கூடத்தில் இருந்தே போதிக்கப்படுகின்றது. போக முடியாதவர்களுக்குப் போக்கிடம் எங்கே? இங்கே தான் தொடங்க வேண்டும்? இங்கே தான் தொடர வேண்டும்.

வாழவே முடியாத நாடல்ல. தேவைக்கும் விருப்பத்திற்கும் உண்டான இடைவெளியை உணர்ந்து கொண்டாலே போதுமானது. அடிப்படைத் தேவைகளை மீறி ஆடம்பரத் தேவைகளை எதிர்பார்த்து வாழும் ஒவ்வொருவருக்கும் இந்த நாடல்ல, எந்த நாடும் மகிழ்ச்சியைத் தந்து விடாது.

கடல் கடந்து, தனிமையை உறவாக்கி, உள்ளம் வேறு. உடம்பு வேறாகப் பிழைப்பதற்காக மட்டுமே வாழும் வெளிநாட்டு வாசிகளிடம் கேட்டுப் பாருங்கள்? பணம் இருந்தும் அடைய முடியாத அனைத்தையும் பக்கம் பக்கமாகப் பட்டியலிட்டு காட்டுவார்கள்.

ஆரோக்கியத்தை விலையாகக் கொடுத்து அடுத்தத் தலைமுறைக்கு ஏணியாக இருந்தவர்களின் வாழ்க்கைப் பக்கங்கள் முழுவதும் உங்களாலும் என்னாலும் உணரப்படாத கண்ணீர் கறை படிந்தே இருக்கும். அது அவர்களின் சொந்த நாட்டை விட்டுப் பிரித்து வைத்திருக்கும் கடலில் உள்ள உப்பை விட அதிகமாகவே இருக்கும்.

நம் தேவைகள் அதிகமாக நாம் தொலைக்க வேண்டியதும் அதிகமாகவே இருக்கும் என்பதனை உங்களால் உங்கள் குடும்பத்துக்கே புரிய வைக்க முடியாது? பிறகெப்படி நீங்கள் வாழும் சமூகத்திற்குப் புரிய வைக்க முடியும்?

புரிந்தவர்கள் இரண்டு விதங்களில் வாழ்கின்றார்கள்.

மற்றவர்களைப் பொருட்படுத்துவதே இல்லை. அதனால் கடைசி வரையிலும் புழுங்குவதே இல்லை. இந்தப் பக்குவத்தை அடைய முடிந்தவர்கள் வாழும் போதே சொர்க்கத்தைக் கண்டவர்கள்.

தொடர்வோம்....... 
23 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

விவாதத்தைத் தவிர்த்து விடு. விதண்டாவாதம் என்பது எப்போதும் கூடாது. ஆக்ரோஷம் அறவே கூடாது. மன உளைச்சல் உருவாக்கும் காட்சிகளை உள்வாங்க முடியாத போது உனக்கு நீயே திரையிட்டுக் கொள். இனியும் சூரத்தனம் தேவையில்லை. மொக்கைத்தனம் தவறில்லை. அமைதிப்படுத்த ஆன்மீகத்தை நாடு. அது தேவையில்லை எனில் உன்னை உனக்கே உணர்த்தும் வாசிப்பை அதிகப்படுத்து. உரையாடலைக் குறைத்து விடு.

அருமை ஐயா
அருமை

Unknown said...

அருமையான பதிவு...

G.M Balasubramaniam said...

முதலில் ஒரு கருத்துரை எழுதி இருந்தேன் பப்லிஷ் பட்டனை சொடுக்க வில்லை உங்கள் சிந்தனை ஓட்டம் நன்றாக இருக்கிறது இத்துடன் இரு சுட்டிகள் அனுப்புகிறேன் இன்னொரு கோணம் http://gmbat1649.blogspot.com/2011/11/blog-post_27.html
http://gmbat1649.blogspot.com/2012/02/blog-post_07.html

திவாண்ணா said...

ம்ம்ம்ம் நிறைய விஷயங்களை தொட்டு இருக்கீங்க. இன்னொரு தரம் படிக்கணும்.

திண்டுக்கல் தனபாலன் said...

இந்த (50 வயதினிலே) தொடர் பதிவுகளால், மனம் மிகவும் பக்குவப்படும் என்பதில் எவ்வித மாற்றுக கருத்தும் இருக்கமுடியாது...

நிகழ்காலத்தில்... said...

ஜோதிஜியின் அனுபவம் பேசிக்கொண்டு இருக்கின்றது.. அவருக்கு மட்டுமல்ல... அனைவருக்குமானதே.. அமைதிப்பாதை :)

Unknown said...

நல்ல விடயங்கள் சரியான பதிவு உங்கள் புத்தகங்களை படித்து முடித்துவிட்டாலும் திரும்பவும் படிக்கிறேன் அண்ணா

Rathnavel Natarajan said...

50 வயதினிலே - 3 - அற்புதம் திரு ஜோதிஜி. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ஒரு பக்கம் யதார்த்தம், மற்றொரு பக்கம் உண்மை. இவை போன்ற அனுபவப் பகிர்வுகள் அருமையான பாடங்கள்.

ஜோதிஜி said...

வாசித்து உள்வாங்கி அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தனபாலன் சொன்னது போல பக்குவம் உருவாகும்.

ஜோதிஜி said...

நன்றி அய்யா.

ஜோதிஜி said...

வாழ்த்துகள்.

ஜோதிஜி said...

இன்னும் சில பதிவுகள் உள்ளது. முழுமையாக படித்து விட்டு உங்கள் கருத்தை அறிய ஆவலாய் உள்ளேன்.

ஜோதிஜி said...

இந்த முறை சுவராசியம் இல்லை என்பதனை புரிந்து கொண்டேன்.

ஜோதிஜி said...

சுட்டிகளை வாசித்தேன்.

ஜோதிஜி said...

நண்பரே நீங்களே எப்போதும் இயல்பாக இணைந்து விடும்படி மாற்றிவிடுங்க.

ஜோதிஜி said...

நன்றி அஷ்வின்.

ஜோதிஜி said...

அடுத்து வரப்போகும் அத்தியாயங்களையும் படித்து முடிந்தவுடன் இருவரும் உங்கள் பார்வையைச் சொல்லுங்க. நன்றி.

அகலிக‌ன் said...

ஐந்தில் வளையாதது இருபத்தி ஐந்தில் வளர்த்து விருட்சமாகி அனுபவ சம்மட்டிகளின் தொடர் அடிகளால் ஐம்பதில் வளையத்தொடங்கி அறுபது எழுபதுகளில் காணாமல்போய்விடுகின்றன.என் தாத்தாவின் 57 வயதிலிருந்து அவரை கவனித்து வந்திருக்கிறேன் அவரின் ரசனைகள் கொள்கைகள் மட்டுமல்லாமல் குடும்பத்திலிருந்தும் அவர் தன்னை விளக்கிக்கொன்டத்தை அல்லது நாங்களாக அவரை விலகியதை உணர்ந்திருக்கிறேன்.

திவாண்ணா said...

:-))) அப்படி இல்லை. too many things. focus பண்ண முடியலை.

ஜோதிஜி said...

கவனத்தில் எடுத்துக் கொள்கிறேன். நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

விவாதத்தைத் தவிர்த்து விடு. விதண்டாவாதம் என்பது எப்போதும் கூடாது. ஆக்ரோஷம் அறவே கூடாது. மன உளைச்சல் உருவாக்கும் காட்சிகளை உள்வாங்க முடியாத போது உனக்கு நீயே திரையிட்டுக் கொள்.//

நிதர்சனம்.

வாழவே முடியாத நாடல்ல. தேவைக்கும் விருப்பத்திற்கும் உண்டான இடைவெளியை உணர்ந்து கொண்டாலே போதுமானது. அடிப்படைத் தேவைகளை மீறி ஆடம்பரத் தேவைகளை எதிர்பார்த்து வாழும் ஒவ்வொருவருக்கும் இந்த நாடல்ல, எந்த நாடும் மகிழ்ச்சியைத் தந்து விடாது.//

இது எல்லா இடத்திற்கும். காலகட்டத்திற்கும் பொருந்தும்.

அருமை தொடர்கிறோம்

---எங்கள் இருவரின் கருத்தும்

Thulasidharan V Thillaiakathu said...

வெளிநாட்டுக்குச் செல்பவர்கள் வெளிநாட்டு மோகம் கொண்டும், அவர்கள் எதிர்பார்க்கும் வாழ்க்கைக்குப் பணம் ஈட்டுவதற்காகவும் செல்கிறார்கள் என்றாலும் சிலர் அவர்கள் படிக்க நினைப்பது அல்லது சாதிக்க நினைப்பது இங்கு நிறைவேறிட வகையில்லாததாலும் கூடச் செல்கிறார்கள். இங்கு அதற்கான கல்வி அறிவு இல்லை என்றோ அல்லது வசதிகள் இல்லை என்றோ இல்லை ஆனால் ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கான கூடங்கள் இல்லாதது அடிப்படையில் ஊழல் மலிந்திருப்பதால். வேதியியலில் நோபல் பரிசு வென்ற நம்மூர் விஞ்ஞானி குறிப்பிட்டதும் இதைத்தான்...

அதே போன்று ஆரோக்கியம் என்பது மிக மிக முக்கியம் என்று நீங்கள் சொல்லியிருப்பது மிக மிக நல்ல கருத்து...தொடர்கிறோம்

கீதா