Thursday, May 03, 2018

50 வயதினிலே - 4


"சார் நாலைந்து நாட்களாக நெஞ்சு பக்கத்தில் ஒரு பக்கமாக வலிக்கிறது. கொஞ்சம் பயமாயிருக்கு" என்று சொன்ன நண்பரைப் பார்த்த போது எனக்குள் சிரிப்பு வந்தது. 

வெளிப்படையாகச் சிரித்தால் அது விபரீதமாகப் பார்க்கப்படும் என்பதால் "மருத்துவரை போய்ப் பாருங்கள்" என்றேன். 

நான் மனதிற்குள் சிரித்ததற்குக் காரணம் அலுவலகம் முடிந்தவுடன் தினந்தோறும் மது அருந்தாமல் அவர் வீட்டுக்குச் செல்வதில்லை. ஒரு முறை அவர் வயதைச் சுட்டிக்காட்டி "கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்களேன்" என்ற போது நாய் போலக் குறைத்து நக்கல் செய்தவருக்கு இப்போது ஆரோக்கியம் குறித்துக் கவலை வந்துள்ளது. 

இவர் மட்டுமல்ல. வேறெந்த பழக்கமும் இல்லாதவர்களுக்கும் ஆரோக்கியம் குறித்து அதிக ஆர்வம் வந்துள்ளது. அது பயமாகவும் மாறியுள்ளது. இயற்கை உணவுகள் குறித்த அக்கறை அதிகமாகவே உள்ளது. நாம் வாழும் சூழ்நிலை பாதகமாக இருந்தாலும் சாதகமாக மாற்ற முடியுமா? என்று அவசரம் எல்லோருக்கும் உருவாகியுள்ளது. எது உடனடி நிவாரணம்? என்பதில் தொடங்குகின்றது. ஒவ்வொன்றாக முயற்சித்துக் கடைசியில் யோகா, தியான வகுப்புகள் வரைக்கும் பணம் இருப்பவர்களால் கூட்டம் நிரம்பி வழிகின்றது. 

காலம் விசித்திரமானது. இயற்கையை அழித்து நாம் அடைந்த வளர்ச்சி இப்போது தலைகீழ் மாற்றங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. இனி நம்மால் செயற்கையை விட்டு வெளியே வர முடியாது. 

மனிதர்களின் கோணல் புத்தி வித்தியாசமானது மட்டுமல்ல. ஆச்சரியமானதும் கூட. எங்கள் வீட்டுக்கு வெளியே இருந்த வேப்பமரத்தை வெட்டிய வீட்டுக்காரம்மா சொன்ன காரணம் "தினமும் கூட்டி முடிப்பதற்குள் இடுப்பு கழன்று விடுதுப்பா?" என்றார். 

மனிதர்களின் நிறை குறைகளை மீறி இயற்கை ஒவ்வொரு காலகட்டத்திலும் சமநிலையை உருவாக்கி விடுகின்றது. ஐம்பது ஆண்டுகளுக்க முன்னால் உருவான நோய்கள் மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொண்டு போய்ச் சேர்த்தது. இப்போது சற்று வித்தியாசம். எல்லாவற்றையும் கையாள அறிவியல் கற்றுக் கொடுத்து விட்டது. 

இப்போது நோய்கள் மரணத்தைத் தருவதில்லை. ஆயுளை நீட்டித்து ஒவ்வொருவரையும் நுகர்வோராக மாற்றியுள்ளது. உயிருடன் இருக்கும் வரைக்கும் மருந்து தேவை. செத்து செத்து பிழைத்திரு. இது தான் நவீன வளர்ச்சி தந்த பரிசு. 

மற்றொரு வியாபாரம் சமீப காலமாகச் சக்கைப்போடு போட்டுக் கொண்டு இருக்கின்றது. அதற்குப் பெயர் இயற்கைப் பொருட்கள். 

"இயற்கை முறையிலானது", "ஹெர்பல்" என்ற இந்த இரண்டு வார்த்தைகளும் இன்றைய வியாபார உலகில் கோடிகளைக் கொட்டும் மந்திர வார்த்தைகள். 

இயற்கைக்கு மாறிவிட்டால் ஆயுள் கூடும் என்று நம்பிக்கை வைத்து வாழ்பவர்கள் இந்தக் காலம். ஆனால் நடைமுறை எதார்த்தம் எப்படியுள்ளது? 

காலையில் எழுந்து வாயில் வைக்கும் பற்பசை முதல் இரவு படுக்கச் செல்லும் போது பயன்படுத்தும் மெத்தை வரைக்கும் ஒரு நாளில் ஒருவர் பயன்படுத்தும் பொருட்களில் என்பது சதவிகிதமென்பது செயற்கை தான். இது தான் இப்போதைய வாழ்க்கை. 

இங்கே மாற்றம் என்பதை நாம் வாழும் சமூகச் சூழல் தான் தீர்மானிக்கின்றது. 

முன்பு உங்களுக்கு என்ன தேவை? என்பதனை உங்கள் குடும்ப உறுப்பினர்கள் தீர்மானித்தார்கள். இப்போது விளம்பரங்கள் அதனைத் தீர்மானிக்கின்றது. முன்பு உடலுக்கான தளர்ச்சி என்பது வயோதிகத்தின் தொடர்ச்சியாக இருந்தது. இப்போது கருவில் தொடங்குகின்றது. வாலிப பருவத்தில் தொடர்கின்றது. வாழத் தொடங்கும் வயதில் செயல்படாத நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்துகின்றது. இதற்குள் நம்மை நிலைநிறுத்திக் கொள்வது தான் முக்கியம். 

நன்றாகக் கவனித்துப் பாருங்கள். ஆரோக்கியம் குறித்துக் கவலைப்படுபவர்கள் அனைவரும் நாற்பது வயதைக் கடந்தவர்களாக இருக்கின்றார்கள். ஐம்பது வயதில் உள்ளவர்கள் அலறத் தொடங்குகின்றார்கள். அறுபது வயதென்றால் விட்டேற்றி மனப்பான்மை வந்து விடுகின்றது. இனி இருந்து என்ன ஆகப் போகுது என்ற தத்துவம் கூடவே வந்து விடும். 

சர்க்கரை நோய் என்பது அது நோயா? இல்லை உடல் இயக்கத்தில் தோன்றும் குறைபாடா? யாருக்கும் தெரியாது? இன்று ஒவ்வொருவரும் மருத்துவராக மாறிப் பல காரணங்கள் சொல்கின்றனர். ஆனால் இன்று சர்க்கரை நோய்க்குப் பின்னால் இருப்பது பல நூறு மில்லியன் டாலர் வர்த்தகம். நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டேயிருக்கின்றது. 

சமீபகாலமாக முப்பது வயதில் இருப்பவர்களுக்குச் சர்க்கரை என்பதனைக் கேள்விப்படும் போது அது இனிப்பாக இல்லை. மாத்திரை, மேலும் மாத்திரை என்று சுழலுக்குள் சிக்கித் தவிப்பவர்கள் கோடான கோடி பேர்கள். நிரந்தரத் தீர்வு இல்லை என்று தெரிந்தும் இந்த மாயச் சுழல் நம்மைச் சுழல வைத்துக் கொண்டேயிருக்கின்றது. 

அவரவர் பணிபுரியும் வேலைக்கான சூழல் என்பது முற்றிலும் மாறிப் போனதால் 24 மணி நேரமென்பது முழுமையாக உழைப்பதற்கான நேரமாக மாறியுள்ளது. இந்த மாற்றத்தைச் சுருங்கிய உலகின் வளர்ச்சி என்கிறார்கள். ஆனால் வயோதிகத்தில் சுருக்கமடையும் நம் உறுப்புகள் வெகு விரைவில் அதன் தரத்தை இழப்பதால் தகுதியான ஆரோக்கியத்தைத் தடம் மாறித்தான் நாம் பெற வேண்டியதாக உள்ளது. 

நான் வாங்கும் சம்பளம் லட்சம் என்று சொல்பவர்களின் வாழ்க்கை ஆயுளும் நாற்பதுக்குள் முடிந்து விடுகின்றது. அதிகபட்சம் ஐம்பதைத் தொடும் போதே இரத்தம் அழுத்தம், ஆஞ்சியோகிராம், பை பாஸ் சர்ஜரி, சிறுநீரகக் கோளாறு, முட்டு வலி, முதுகு வலி, தீராத ஒற்றைத்தலைவலி என்று நீண்ட பட்டியலிட்டு காட்ட வேண்டிய நோய்கள் பயமுறுத்துகின்றது. 

நாம் வாழ்க்கையைத் தொடங்கும் போது நமக்கு என்ன தேவை என்பதனை நம் மனம் தீர்மானிக்கின்றது. காலத்தின் பிற்பகுதியில் உனக்கு இது தான் தேவை என்பதனை உடல் ஆரோக்கியம் அப்பட்டமாக உணர்த்துகின்றது. 

இந்த வயதில் உள்ளவர்களுடன் உரையாடத் தொடங்கும் போதே இப்படித்தான் தொடங்கும். 

"என்னப்பா ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் இருக்கா?" கடைசியில் இப்படி முடியும்? "லிக்யூட் கேஸ் எவ்வளவு வைத்திருக்கின்றாய்? "

இந்த இரண்டுக்குள் அடக்கப்படும் வார்த்தைகளுக்குள் சொல்லப்படும் பதில் மூலம் உங்களுக்கான பாதி மரியாதை தீர்மானிக்கப்படுகின்றது. 

மீதி மரியாதையும் வேண்டு மென்றால் "சொந்த வீடு தானே?" என்பதில் முடிந்து விடும். 

வரும் வருமானத்திற்குண்டான வாழ்க்கை என்பது குறித்து இங்கே யாருக்கும் அக்கறையில்லை. இவற்றையெல்லாம் அடைந்து விட்டாயா? என்பதில் தான் மொத்த வாழ்க்கையின் வெற்றியும் தோல்வியும் மற்றவர்களால் இங்கே தீர்மானிக்கப்படுகின்றது. ஒவ்வொருவரும் இதைப் பற்றியே பேசிப்பேசி உங்களை மாற்றி மனரீதியான உளைச்சலை உருவாக்கும் போது உங்களை இழந்து விட்டால் அதற்குப் பிறகு உருவாவது தான் நரகம். 

ஒப்பீடு தொடங்கும். உள்ளம் தடுமாறும். நாம் தோற்று விட்டோமோ? என்று எண்ணத் தோன்றும். ஏன் நம்மால் முடியவில்லை? என்று நடு ராத்திரியில் தூக்கமில்லாமல் தவிக்கத் தோன்றும். அடுத்த வருடமாவது அதிர்ஷ்டம் நம் வீட்டை எட்டிப் பார்க்குமா? என்று நிஜத்தை உணர மறுக்கும். 

இதுவொரு தொடர் சங்கிலி. யாரோ ஒருவர் ஒரு முனையில் பற்ற வைத்துப் போய் விடுவார். அது ஒவ்வொரு கண்ணியாக வெடித்துச் சிதறி உங்கள் உள்ளத்தையும் அதன் மூலம் ஆரோக்கியத்தையும் காவு வாங்கி விடும். 

விரும்பியதை அடையாத போது உள்ளம் தவிக்கும் தவிப்பென்பது உங்களின் அன்றாட வாழ்க்கையின் மகிழ்ச்சியைக் கெடுக்கும். நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியாமலும் நிச்சயமாய் இது கிடைக்குமா? என்ற ஏக்கத்தைத் தொலைக்க முடியாமலும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் ஆரோக்கியம் எப்படி நிலையாக இருக்கும்? 

இப்படி வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் பெரும்பான்மையினர் இன்று பெரிய மருத்துவமனைகளின் நிரந்தர வாடிக்கையாளராக இருக்கின்றனர். பலரையும் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன். 

அனைவரும் நம்மை இயக்கும் அளவிற்கு வாழ்க்கை வாழ்ந்தால் அதற்குப் பெயர் வாழ்க்கை அல்ல. அடுத்தவர்களின் அறிவுரை என்பது காற்று போலானது. தூசிகளையும், துர்நாற்றங்களையும் காற்று சுமந்து வரும் போது நாம் நாசியைப் பொத்திக் கொண்டால் தவறில்லை. மற்றவர்களின் புலம்பல் மொழிகளைப் பொருட்படுத்த தேவையில்லை. துணிச்சல் என்பது தேவை. செயல்பாட்டில் மட்டுமல்ல தேர்ந்தெடுப்பதிலும். 

இங்குத் தான் நம் மனம் விழித்துக் கொள்ள வேண்டும். 

நமக்கான பக்குவம் செயல்பட வேண்டும் நம் பக்குவம் என்பது வயதோடு சம்மந்தப்பட்டது என்றே அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

எதையும் துச்சமாக மதிக்கும் இருபது வயது. மோதித்தான் பார்த்து விடுவோம் என்ற முப்பது வயது. நம்மால் முடியுமா? என்று யோசிக்க வைக்கும் நாற்பது வயதைத்தாண்டி ஐம்பது அருகே வந்து நிற்கும் போது பலருக்கும் மூச்சு வாங்கத் தொடங்குகின்றது. நாம் இதைச் செய்யத்தான் வேண்டுமா? என்று யோசிக்க வைக்கின்றது. காரணம் குடும்பம். குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளுக்கும் ஆடம்பரத் தேவைகளின் வித்தியாசங்களை உணர்ந்து கொள்ளாதவர்களின் வாழ்க்கையென்பது வாழும் போதே நரகத்தின் பாதையில் பயணிக்கின்றார்கள் என்று அர்த்தம். 

தற்போதைய நடுத்தரவர்க்கத்தின் முக்கியக் கவலையும் மிகப் பெரிய சுமையும் குழந்தைகளின் கல்வி சார்ந்த செலவுகள். இது முன்பு இருந்ததில்லை. கல்லூரி வரைக்கும் எந்தக் குடும்பமும் குதியாட்டம் போட்டதில்லை. சென்றார்கள். வந்தார்கள் என்று தான் இருந்தது. தனியார் முன்னுக்கு வர அரசாங்கம் பின்னுக்குச் செல்ல இங்கு ஐம்பது வயதைக் கடக்கும் ஒவ்வொருவரும் ஐம்புலன்களையும் அடக்கிக் கொண்டு குழந்தைகளின் கல்விக்குச் செலவளிக்கத் தனியாகச் சம்பாரிக்க வேண்டியதாக உள்ளது. 

இத்துடன் மாதம் தோறும் செலவளிக்க வேண்டிய மருத்துவச் செலவு என்று பட்டியலில் இருந்தால் அந்தக் குடும்பத்தில் என்ன மிஞ்சும்? 

முன்பு வானொலியுடன் மின்விசிறியும் அதிகபட்சமாக இருந்த வீடுகளின் முகம் இப்போது மாறிவிட்டது. வசதிகள் தான் வாழ்க்கை என்று ஒவ்வொரு நவீன கருவிகளும் வீட்டுக்குள் வந்து விட்டது. இவையெல்லாம் வாங்க எவ்வளவு சம்பாரித்தாலும் போதவில்லை என்கிற நிலைக்கு நம்மைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. ஆசைகள் தவறில்லை. 

நம் விருப்பங்கள் முக்கியம். ஆனால் நம் தேவைக்கு மீறிய ஆசைகளும், விருப்பங்களும் நம் வயதுக்கு மீறிய வயோதிகத்தை, ஆரோக்கிய இழப்பை நம் முகத்தில் கொண்டு வந்து நிறுத்துகின்றது என்பது உணர்ந்து இருப்போமா? 

நம்முடன் கவலைகள் இருக்கட்டும். அதை ஒரு கலையாக வைத்திருங்கள். ரசனையுடன் கவனித்துப் பாருங்கள். கணக்கீடு ரீதியாகப் பார்த்தீர்கள் என்றால் வாழ்ந்து கொண்டிருக்கின்ற வாழ்க்கையை வாழ விடாமல் செய்யும் மோகினி போல உங்களுடன் உறவாடத் தொடங்கும். 

வாழ்ந்த வாழ்க்கைக்குரிய அங்கீகாரம் தேவை. அதை அனுபவிக்கவும் வேண்டும் என்றால் எது வேண்டுமோ அதை மட்டும் கவலையாக எடுத்துக் கொள்ளாதீர்கள். தீர்மானமாக மாற்றிக் கொள்ளுங்கள். 

தொடர்வோம்.......

24 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

செத்து செத்து பிழைத்திரு. இது தான் நவீன வளர்ச்சி தந்த பரிசு.


உண்மை
உண்மை ஐயா

திவாண்ணா said...

உண்பது நாழி உடுப்பது நான்கு முழம் இப்ப இல்லை. வயிராற உணவு, கிழியாத உடுப்பு, தலைக்கு மேலே ஒரு ஒழுகாத கூரை - இதுக்கு மேலே எதுவும் அத்தியாவசியம் இல்லை. அதுக்கு மேலே கையில இருக்கற காசு- தேவைகள் தீர்மானிக்கட்டும். தேவைகளை ஆசைகள் தீர்மானிக்க விடாம இருந்தா போதும்.

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country said...

என் நண்பர் ஒருவர் அவ்வப்போது அனைத்துவிதமான மருத்துவ பரிசோதனைகளையும் செய்துகொள்வார். செய்துவிட்டு, தனக்கு நோய் ஒன்றுமேயில்லை என்று கூறிக்கொண்டேயிருப்பார். அண்மையில் உடல்நிலை சரியில்லாமல் அதிகமாக செலவு செய்து தொடர்ந்து புலம்பிக்கொண்டிருக்கிறார். அவரவர் மனதும், சீரிய உடற்பயிற்சியும், தெளிந்த மன நிலையும் உடலை ஓரளவிற்கு சீராக வைத்துக்கொள்ள உதவும்.

G.M Balasubramaniam said...

பலருக்கும் எத்தை தின்றால் பித்தம்தீரும் என்னும்மன நிலையே பெரும்பாலோருக்கும் தெரிந்த விஷயங்கள் தீர்வுதா தெரிவதில்லை கேட்டால் இன்றையநிலை அப்படி என்னும் வாதம்

Unknown said...

எனது அருமை நண்பர் தாயப்பன் என்னும் சித்த வைத்தியர், தனது மனைவிக்கு வந்த மூளைப்புற்று நோயை (Brain Tumor) கூட குணப்படுத்திவிட்டார் ஆனால் தனக்கு வந்த சர்க்கரை நோயை வெற்றி கொள்ளாமல் இறந்துவிட்டார்.

திண்டுக்கல் தனபாலன் said...

பல குறைபாடுகள் நோய்கள் என்று ஆ(க்)கி விட்டன...

Yaathoramani.blogspot.com said...

ஐம்பது வயது ஆதங்கப் பதிவை
தொடர்ந்து படித்து வருகிறேன்
67 இல் நான் இப்போது இதுபோல்
இருப்பதாக நினைப்பது
சந்தோஷமானதா/அல்லது இதுவும்
துயரானதா புரியவில்லை
தொடந்து பதிவைத் தொடர வாழ்த்துக்களுடன்...

Thulasidharan V Thillaiakathu said...

காலம் விசித்திரமானது. இயற்கையை அழித்து நாம் அடைந்த வளர்ச்சி இப்போது தலைகீழ் மாற்றங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. இனி நம்மால் செயற்கையை விட்டு வெளியே வர முடியாது. //

100 சதமானத்திற்கும் மேல் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள் இதுதான் உண்மை.

சரி எப்படி இயற்கை அழிகிறது? ஒருவரே பல வீடுகள் கட்டினால்? இடத்துக்கு எங்கே போவது? ஒரு வீட்டிற்கு 4 பேர் என்றால் நான்கு பேரும் தனிதனி கார், இரு சக்கர வாகனம் என்று இருந்தால் சூழல் பாதிக்கப்படாமல் இருக்குமா? நோய்கள் பெருகத்தான் செய்யும்...அதைத் தங்களுக்குச் சாதகமாகவு பயன்படுத்திக் கொள்கின்றனர் மருத்துவத் துறை..மற்றொரு பக்கம் இயற்கை உணவு, வைத்தியம் யோகா என்பதெல்லாம் இப்போது வணிகம்...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

இப்போது ஆக்ஸிஜன் நிலையங்கள் வந்துவிட்டன. ஆக்ஸிஜன் தாங்கி குப்பிகளும் வந்துவிட்டன லிட்டர் விலை இவ்வளவு என்று வந்துவிட்டது.....என்ன சொல்ல?

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

மற்றொரு வியாபாரம் சமீப காலமாகச் சக்கைப்போடு போட்டுக் கொண்டு இருக்கின்றது. அதற்குப் பெயர் இயற்கைப் பொருட்கள்.

"இயற்கை முறையிலானது", "ஹெர்பல்" என்ற இந்த இரண்டு வார்த்தைகளும் இன்றைய வியாபார உலகில் கோடிகளைக் கொட்டும் மந்திர வார்த்தைகள். //

ஜோதிஜி இந்த வார்த்தையை விட்டுவிட்டீர்களே "பாரம்பர்யம்" ஹையோ இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இயற்கை பொருட்கள், சிறுதானியங்கள் பாராம்பரியம் என்று சொல்லிக் கொண்டு நான் வருடக் கணக்கில் பயன்படுத்தி வந்து கொண்டிருக்கும் பொருட்களின் விலை இப்போது என் பட்ஜெட்டுக்குள் அடங்குவதில்லை. என் வாங்கும் தகுதிக்கு மீறிய விலை. கூடவே இயற்கை முறையில் எந்த கெமிக்கலும் கலக்காமல் என்று ஏமாற்று வேலையும் நடக்கிறது. ஏதோ ஒருவர் ஏதேனும் ஒரு இதழில் தொடர் எழுதிவிட்டுப் போய்விடுகிறார். அதை வியாபாரிகள் சாதகமாக்கிக் கொண்டுவிடுகிறார்கள்.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

சர்க்கரை நோய் என்பது அது நோயா? இல்லை உடல் இயக்கத்தில் தோன்றும் குறைபாடா? யாருக்கும் தெரியாது? இன்று ஒவ்வொருவரும் மருத்துவராக மாறிப் பல காரணங்கள் சொல்கின்றனர். ஆனால் இன்று சர்க்கரை நோய்க்குப் பின்னால் இருப்பது பல நூறு மில்லியன் டாலர் வர்த்தகம். நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டேயிருக்கின்றது. //

உண்மை உண்மை ..
//இந்த இரண்டுக்குள் அடக்கப்படும் வார்த்தைகளுக்குள் சொல்லப்படும் பதில் மூலம் உங்களுக்கான பாதி மரியாதை தீர்மானிக்கப்படுகின்றது.

மீதி மரியாதையும் வேண்டு மென்றால் "சொந்த வீடு தானே?" என்பதில் முடிந்து விடும். // இதில் சிக்காமல் இருப்பது நம் சாமர்த்தியம். அதாவது இப்படியானவர்களிடமிருந்து எட்ட நிற்பதே நல்லது. இதைப் பார்த்துத்தான் இப்போதெல்லாம் உறவுகளே இருக்கிறது ஜி. இதில் சிக்கித் தங்கள் மனதினைப் பாழாக்கிக் கொண்டால் ஆரோக்கியம் அவ்வளவுதான். மன உளைச்சலில் சிக்கிச் சீரழிவது நிச்சயம்.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ரசனையுடன் கவனித்துப் பாருங்கள். கணக்கீடு ரீதியாகப் பார்த்தீர்கள் என்றால் வாழ்ந்து கொண்டிருக்கின்ற வாழ்க்கையை வாழ விடாமல் செய்யும் மோகினி போல உங்களுடன் உறவாடத் தொடங்கும். //

அக்மார்க் வரிகள்! வாழ்க்கையை ரசிக்க வேண்டும். அனுபவித்து ரசித்து வாழ வேண்டும்!

கீதா

ஜோதிஜி said...

ஆங்கில மருத்துவத்துவர்கள் கோவித்துக் கொள்வார்கள். இதன் வியாபார அளவு என்பது பிரமிப்பூட்டுகின்றது.

மருத்துவம் சேவையா? தொழிலா?

சக்கரை வியாதி மருந்துகள் விற்பனை- சுமார் 20 பில்லியன் டாலர் வருடத்திற்கு-அதாவது 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ருபாய்

கான்செர் - chemotheraphy மற்றும் இதர மருந்துகள் விற்பனை மற்றும் மருத்துவ சம்பந்தப்பட்ட விற்பனை- சுமார் 120 பில்லியன் டாலர்கள்- அம்மாடி- ரூபாய நீங்களே கணக்கு போட்டுக்கோங்க

கார்டியோலஜி-இதய நோய் சம்பந்தப்பட்ட மருத்துவம், மருத்துவ சாதனங்கள், அறுவை சிகிச்சை இதர மருத்துவ மார்க்கெட்- சுமார் 25 பில்லியன் டாலர்கள்

cholesterol drugs மார்க்கெட்- 21 பில்லியன் டாலர்கள் ----

இது எல்லாம் விடுங்க- உலகத்துல over the counter drugs மார்க்கெட்- 180 பில்லியன் டாலர்கள்.....

ஜோதிஜி said...

இந்த பதிவு சரியாக வந்துள்ளது என்று நினைக்கிறேன்.

ஜோதிஜி said...

மன அழுத்தம் என்பது இல்லாதபட்சத்தில் உடற்பயிற்சி கூட இரண்டாம் பட்சமே. என் அனுபவம் இது. நாம் உண்ணும் உணவு வகைகள் மிக முக்கியம். கவனத்தில் வைத்திருக்க வேண்டும்.

ஜோதிஜி said...

உடம்பை பாரம் போல சுமந்து கொண்டு திரிபவர்களிடம் சொல்வதற்கு ஆயிரம் கதைகள் உண்டு இங்கு.

ஜோதிஜி said...

வாசிக்கும் போதே வருத்தமாக உள்ளது.

ஜோதிஜி said...

புரிந்து கொண்டேன்.

ஜோதிஜி said...

மனம் என்பதில் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்திருக்கட்டும். அது ஒன்றே போதும்.

ஜோதிஜி said...

வீடு என்பது தற்போது கௌரவத்தின் அடையாளம்.

ஜோதிஜி said...

அதையும் ட்ரடிசன் என்று தான் சொல்கின்றார்கள். பத்திரிக்கை தான் இதனை வளர்கின்றது என்பதும் உண்மை.

ஜோதிஜி said...

ஆங்கில மருத்துவ வியாபாரங்களை கரந்தையாருக்கு பதிலாக அளித்துள்ளேன்.

ஜோதிஜி said...

வாழ்ந்து கொண்டிருப்பதால் எழுத முடிந்தது. இருவருக்கும் நன்றி.

திவாண்ணா said...

நான் கோபித்துக்கொள்ளவில்லை. மருத்துவம் வியாபாரம் ஆகி பல வருஷங்கள் ஆச்சு. சில கெழங்கட்டைகள்தான் இன்னும் அத சர்வீஸ்ன்னு நம்பறாங்க. வியாபாரமா இருந்துட்டு போகட்டும். கொஞ்சம் நேர்மையான வியாபாரமா இருக்கலாம்! ஹும்!