Tuesday, April 24, 2018

50 வயதினிலே

"நீங்க எப்படிச் சார் முடிவு செய்ய முடியும்? ஐம்பது வயசாச்சுன்னா சுறுசுறுப்பா வேலை செய்ய முடியாதென்று?" 

என் முன்னால் அமர்ந்திருந்தவர் மூச்சு விடாமல் பேசிக் கொண்டிருந்தார். 

சில மாதங்களுக்கு முன்பு நான் பணியில் இருக்கும் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வு நடந்து கொண்டிருந்தது. பல்வேறு துறைக்குப் பல நபர்கள் வந்து கொண்டேயிருந்தனர். பல முகங்கள். பல பேச்சுகள். பலவிதமான எதிர்பார்ப்புகள். நிறுவனம் அறிவுறுத்தி இருந்த அடிப்படை விசயங்களை வைத்துக் கொண்டு ஆடு புலி ஆட்டம் ஆட வேண்டும். சுருக்கமாகச் சொல்லப் போனால் குறைவான சம்பளத்தில் அதிக உழைப்புக்குத் தயாராக இருப்பவர்களைக் கண்டறிய வேண்டும். 

இது போன்ற நேர்முகத்தேர்வில் நிச்சயம் ஒன்றைப் பார்க்க முடியும். நிகழ்கால இளைஞர் சமூகத்தின் மொத்த அவலத்தையும் வருகின்றவர்கள் மூலம் கண்டறிய முடியும். கல்லூரி முடித்து வெளியே வந்தவர்கள் தொடங்கி அறுபது வயது வரைக்கும் உள்ளவர்கள் இன்னமும் வேலை தேடிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடியும். 

இப்போது என்னுடன் பேசிக் கொண்டிருந்தவரின் வார்த்தைகள் நமக்கு முக்கியம்? 

"எங்களைப் போன்ற அனுபவசாலிகள் இந்த உலகத்திற்குத் தேவையில்லையா?" என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்தார்.

நேர்முகத் தேர்வில் கடைசி நபராக அவர் உள்ளே வந்தார். தோற்றமும், பேச்சும் அவரின் முதிர்ச்சியை உணர்த்தியது. 

அவரின் வயது 51 கடந்து சில மாதங்கள் ஆகியிருந்தது. ஆனால் வார்த்தைகளில் இளைஞனின் வேகம் இருந்தது. அவர் பேசிய ஐந்து நிமிடத்திலும் நான் குறுக்கிடவே இல்லை. அமைதியாகவே கேட்டுக் கொண்டிருந்தேன். 

நிறுவனம் எதிர்பார்த்த திறமைகள் அவரிடம் அதிகமாகவே இருந்தது. ஆனால் அதே அளவுக்குக் கோபமும் ஆதங்கமும் கொப்பளித்து. ஒவ்வொரு இடங்களிலும் அவரைப் புறக்கணித்த வலியின் வேதனைகள் அவர் வார்த்தைகளில் சினமாகச் சீறியது. 

நான் எப்போதும் போல "இறுதிகட்ட தேர்வுக்கு உங்களை அழைப்பார்கள்" என்று சொல்லி அனுப்பி வைத்தேன். 

அடுத்து சில நாட்கள் அவர் பேசிய ஒவ்வொன்றும் என் மனதில் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டேயிருந்தது. ஐம்பது வயது என்பது தொழில் உலகத்தில் ஒதுக்கப்பட வேண்டிய வயதா? வாழ்க்கையில் ஒதுங்கியிருக்க வேண்டிய வயதா? இன்னும் இது போன்ற பல கேள்விகள் என்னுள் எழுந்து கொண்டேயிருந்தது. 

காரணம் என் வயதை ஒற்றிய நபர்களின் வாழ்க்கையை அதிகம் கவனித்துக் கொண்டிருப்பதால் ஐம்பது வயது குறித்து அதிகம் யோசிக்க வேண்டியதாக உள்ளது. 

விவசாயம் சார்ந்த வேலைகளும், அதற்கு உதவக்கூடியதாக இருந்த துணை வேலைகளும் சமூக மாற்றத்தில் காணாமல் போய்விட்டது. மக்கள் தொகை பெருகவில்லை. பிதுங்கி எல்லையைத்தாண்டி வெளியே வந்து விட்டது. கிராமங்களின் முகம் மாறிவிட்டது. மாறாத இடங்களை அரசாங்கமே கூறு போட்டுக் கொள்கை ரீதியாக மாற்றிக் கொண்டிருக்கிறது. தனி மனிதர்களின் வாழ்க்கையும் நெல்லிக்காய் போலச் சிதறிக் கிடக்கின்றது. ஏதோவொரு ஊர். ஏதொவொரு இடமென உலகமே சுருங்கிவிட்டது. 

தற்போது ஐம்பது வயதைத் தொட்டவர்கள் பிறந்த போது இருந்த ஜனத்தொகை என்பது அப்படியே இரட்டிப்பாக மாறியுள்ளது. உருவான, உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகள் என்பது வேறொரு தளத்திற்குச் சென்று விட்டது. விரும்பிய வாழ்க்கை கிடைக்காதவர்களும், விருப்பமில்லாமலே வாழும் வாழ்க்கையை வாழ்பவர்களும் தான் இங்கே அதிகம். 

ஆட்கள் தேவையில்லை. எந்திரங்கள் போதும் என்ற சூழலில் உருவான தலைகீழ் மாற்றங்கள் சமூக விதிகளையே புரட்டிப் போட்டு விட்டது. இங்குத் தான் வளர்ச்சியும் அதற்குப் பின்னால் உள்ள மனங்களின் வீழ்ச்சியும் தொடங்கியது. 

அரசு வேலைகள், அரசு சார்ந்த வேலைகள், முறைப்படுத்தப்பட்ட பெரிய தனியார்கள் நிறுவனங்கள், இதனைச் சார்ந்து செயல்படும் துணை நிறுவனங்கள் தாண்டி மீதி இருப்பது சிறு, குறு தொழில்கள் மட்டுமே. சுய பொருளாதாரக் காவு கொடுக்கப்பட்டு விட்டது. தன் சுயத்தையே இழந்து சுகமாய் வாழ்வது எப்படி? என்பதே இங்கே முக்கியமாக மாறியுள்ளது. 

இங்கேயிருந்து தான் பிரச்சனை தொடங்குகின்றது. அந்தப் பிரச்சனை விஸ்ரூபமாக எடுத்து நிற்பது அவரவர் ஐம்பது வயதில் தான் தெரியத் தொடங்குகின்றது. 

அரசு சார்ந்த நிறுவனங்களில் அறுபது வயதுக்கு அருகே வந்தவர்களைச் சகல மரியாதையுடன் அனுப்பி வைக்கின்றார்கள். அவரவர் சம்பளத்தில் பிடித்து வைத்துள்ள பாக்கித் தொகையைக் கொடுத்து "இனி உன் சொந்த வாழ்க்கையை வாழ்ந்து கொள்" என்பது போன்று வழியனுப்பி வைக்கின்றார்கள். 

ஆனால் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் கதி? முறைப்படுத்தப்பட்டு இருக்கும் தனியார் நிறுவனங்கள் என்பது வேறு. சிறு, குறு தொழிற்சாலைகளின் நிர்வாக அமைப்பு என்பது வேறு. சக்கை போலப் பிழியப்பட்டு ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதர்கள் குப்பையாக வெளியே எறியப்படுகின்றார்கள். 

இப்படியொரு நிலைதான் ஆயத்த ஆடைத்துறையும். 

ஆயத்த ஆடைத்துறையில் தேவைப்படும் ஒவ்வொரு பணியிடங்களுக்கும் தேவைப்படும் தகுதியை குறிப்பிட்டு வயதையும் குறிப்பிடும் பழக்கம் உண்டு. அதிக பட்சம் நாற்பது வயதுக்கு மேல் வேண்டாம் என்று குறிப்பிடுவார்கள். சில விதிவிலக்குள் உண்டு. ஆனால் நிறுவனங்கள் உருவாக்கியுள்ள பொது விதிகள் மாறுவதில்லை. இந்த இடத்தில் தான் நான் வாழும் சமூகத்தின் நிகழ்காலப் போக்கின் கொடுமைகளும் கொடூரங்களையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. 

ஒருவரின் இளமைப் பருவம் எப்போது முடிகின்றது? நாற்பதா? ஐம்பதா? ஏதேனும் வரையறை உண்டா? 

வாழும் போது குறிப்பிட்ட காலத்திற்குள் எல்லோராலும் தங்கள் வாழ்க்கைச் செலவுகளை மீறிச் சேமிக்க முடிவதில்லை. அவரவர் அடிப்படை வாழ்க்கை வாழ்விற்கே சம்பாரிக்கும் பணம் சரியாக இருக்கும்பட்சத்தில் சேமிப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் சவாலாகவே உள்ளது? தங்கள் ஓய்வு காலத்திற்கெனச் சேமிக்க முடியாத பணப் பிரச்சனைகளின் காரணமாக மீதி காலமும் உழைத்துத் தான் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை முழுமையாக எழுதிப் புரிந்து வைத்து விட முடியாது. அதுவொரு நரக வாழ்க்கையின் தொடக்கம். 

வயதின் காரணமாகத் திறமை இருந்தாலும் மதிப்பு இருக்காது. மதிப்பு இருந்தாலும் ஆரோக்கியம் ஒத்துழைக்காது. 

இருபது முதல் இருபத்தைந்து வயதிற்குள் துறை சார்ந்த கல்வித்திறமையை வைத்துக் குறிப்பிட்ட சிலருக்குத் தான் தொழில் வாழ்க்கையின் தொடக்கப்புள்ளி கிடைத்து ஏற்றப் பாதை தொடங்குகின்றது. படிப்படியாக வளர்கின்றார்கள். தொடர்ந்து திருமணம், சேமிப்பு, விரும்பிய வீடு வசதிகள் அமைகின்றது. குழந்தைகளின் கல்வியும் அவர்களின் வாழ்க்கைக்குத் தேவைப்படுகின்ற பாதையையும் உருவாக்க முடிகின்றது. வழிகாட்டியாக இருந்து செயல்பட முடிகின்றது. இந்த நிலைக்கு வரும் போதே ஏறக்குறைய ஐம்பது வயதுக்கு அருகே வாழ்க்கை வந்து நிற்கும். 

ஆனால் இங்கே எல்லோருக்கும் இந்த வாழ்க்கை அமைவதில்லை. கல்வி வாழ்க்கை முடிந்து அடுத்த ஐந்து வருடங்களில் சரியான பாதை அமையாதவர்களுக்கும், அமைத்துக் கொள்ள முடியாதவர்களுக்கும் கடைசி வரைக்கும் நித்தமும் பிரச்சனை தான். எதிர்காலம் என்பது எப்போதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. இதுவே சமூகத்தில் கேலிப்பார்வையில் கொண்டு வந்து நிறுத்துகின்றது. 

ஐம்பது வயதுக்கு அருகே வந்தவர்களும், கடந்து சென்று கொண்டு இருப்பவர்களின் வாழ்க்கை எப்படியுள்ளது?அவர்களின் மனநிலை, வாழ்நிலை அவர்கள் தினந்தோறும் சந்திக்கும் சூழ்நிலைகள் எப்படி உள்ளது? 

தனி மனித வாழ்க்கையில் பொருளாதாரப் பலம் என்பது முக்கியமானது. இதுவே முதன்மையானது. ஆனால் இதிலும் சில ஆச்சரியங்கள் உண்டு. பணம் என்ற மாயமானை துரத்திக் கொண்டு தன் வாழ்க்கையில் தேடிக் கொண்டு இருப்பவர்களும், தேவையான பணத்தைச் சேர்த்து அதனைக் காப்பாற்றிக் கொள்வது மட்டுமே வாழ்க்கை என்பதாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களையும் பார்க்கும் போது பல கேள்விகள் என்னுள் எழுகின்றது. 

கடந்த சில மாதங்களாகப் பல தளங்களில் இருந்து அவரவர் வாழ்க்கையின் வாயிலாகக் கவனிக்கும் ஆர்வம் வந்தது. உறவுகள், நண்பர்கள் என்று தொடங்கி நான் தினந்தோறும் சந்திக்கும் தொழிலாள வர்க்கம் வரைக்கும் பலரையும் பார்த்தேன். பேசினேன். பலவற்றையும் உள்வாங்கிக் கொண்டேன். 

அடிப்படை வசதிகளுக்குப் பிரச்சனையில்லாமல் வாழ்பவர்கள் தொடங்கி அன்றாட வாழ்க்கையில் அல்லாடிக் கொண்டிருப்பவர்கள் வாழும் விதங்களை அலசி ஆராய முடிந்தது. 

உடல்நலம், மனநலம், மாறும் சிந்தனை மாற்றங்கள், ஆரோக்கியம் இவை எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டு ஆராய்ந்த போது சில ஆச்சரியங்களும் பல அதிர்ச்சிகளும் கிடைத்து. குடும்பமும், சுற்றியுள்ள சமூகமும் கொடுக்கும் அழுத்த விதிகள் தற்போதைய சமூகச் சூழலில் எந்த அளவுக்கு ஐம்பது வயதில் இருப்பவர்களைப் பாதிக்கின்றது? அவர்களின் வாழ்க்கை எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்படுகின்றது? வாழ்வுக்கும் சாவுக்கும் உண்டான மெல்லிய கோட்டில் அவர்கள் பயணம் செய்யும் வித்தைகளைப் புரிந்து கொள்ள முடிந்தது. 

பொருளாதார ரீதியில் வளர்ந்த நாடுகளில் கூட முதியோர்களுக்கு அரசாங்க பாதுகாப்பு இருந்த போதிலும் அவர்கள் மன, உடல் ரீதியாக அடையும் துன்பங்கள் கணக்கில் அடங்கா. ஆனால் வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளில் கல்லூரி முடித்து வெளியே வந்த பிறகு தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கும் ஒவ்வொரு ஆண், பெண்ணின் செயல்பாட்டிலும் வெளியே தெரியாத இரத்தக் கசிவு கட்டாயம் இருக்கும். 

ஆனால் இந்தியாவில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், மனநலம் குன்றியவர்கள் போன்ற வகையில் வரும் அத்தனைபேர்களும் இங்கே எந்நாளும் நிம்மதியாக வாழ முடியாத சூழ்நிலையைத் தான் இந்தச் சமூகம் உருவாக்கியுள்ளது. 

இதனையும் தாண்டி தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர்கள் சந்திக்கும் ஐம்பது வயது பிரச்சனைகள் ஏராளம். 

ஐம்பது வயதென்பது வெறும் வயதல்ல. நாம் அதுவரையிலும் சரியான நேரத்தில் எடுக்காத முடிவுகள் தந்த பரிசு. தன் கொள்கைகள் தான் பெரிது என்று தன்மானத்தைக் கடைப்பிடித்த பிடிவாதம் தந்த வெகுமானம் . மனைவி ஒரு பக்கம். வளரும் குழந்தைகள் மறுபக்கம் என அவர்களின் தேவைகள் தரும் அழுத்தம் என்று மொத்தமாக நம்மை மூழ்கடித்து நமக்குள் உருவாகும் ரசாயன மாற்றங்களில் தான் புதிய சிந்தனைகள் உருவாகின்றது. கடைபிடித்த கொள்கைகள் காற்றில் கலந்து விடுகின்றது. காணும் காட்சிகளில் அதுவரையிலும் பார்த்த பார்வைகளின் எண்ணமும் மாறுகின்றது. நாம் விரும்பிய அனைத்தும் தொடர்பு எல்லைக்கு வெளியே போய் விடுகின்றது. விரும்பாத அனைத்தும் நம் தோளில் வந்து அமர்ந்து விடுகின்றது. 

மொத்தமாக வாழும் சமூகத்தின் சராசரி பிரதிபலிப்பாக நாமும் மாறத் தொடங்குகின்றோம். 

இதுவரையிலும் இந்தச் சமூகத்துடன் எப்படி வாழ்ந்தோம்? என்பதற்கு இந்தச் சமூகம் தரும் கேள்வித்தாளை அப்போது தான் வாசிக்கத் தொடங்குகின்றோம். சிலருக்கு முதியோர் கல்வித்திட்டம் போன்று தோன்றலாம். பலருக்கு முதிர்ந்த ஞானத்திற்குப் பிறகு உருவாகும் வெற்றியின் தொடக்கப் பாதையாகவும் மாறலாம். 

இந்த வயதில் குறைந்தபட்சம் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தால் அதுவே பெரிய வரமாக இருக்கும். காரணம் அதுவரையிலும் கற்று வைத்திருந்த பழக்கங்கள், விட முடியாத கொள்கைகள், நிராசை கனவுகள் என ஒவ்வொன்றும் பலருக்கும் முகத்தின் வழியாகத் தெரியும். சிலருக்கு அவரவர் உடல் ஆரோக்கியத்தின் வாயிலாகத் தெரியும். 

இந்த வயதில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இது போன்ற சூழ்நிலைகளை எப்படிக் கையாள வேண்டும் என்பதனை பலவிதங்களில் யோசித்த போது இந்தத் தொடரை எழுத வேண்டும் என்று தோன்றியது. 

ஐம்பது வயதென்பது சாதிக்க முடியாத வயதா? இல்லை வாழ்நாள் ஆசையின் முடிவா? 

தொடர்வோம்............
20 comments:

முகுந்த்; Amma said...

Very thoughtful and well written. All are facts, These were lingering in my mind for few years now. Very true about interviewing older people. In US it’s against the law to explicitly do discrimination by age. But under the hood, they still practice age discrimination.

திவாண்ணா said...

நல்லா ஆரம்பிச்சிருக்கு. அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.

Avargal Unmaigal said...
This comment has been removed by the author.
Avargal Unmaigal said...

ஜோதிஜி இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் இதே பிரச்சனைகள்தான் ஆனால் இங்கு யாரிடம் என்ன வயது என்று எங்கும் கேட்கமுடியாதுஇருந்தாலும் முகுந்த அம்மா சொல்வது போலத்தான் இங்கும் நடந்து கொண்டிருக்கிறது....

பல சயங்களில் இண்டர்வீயூ டெலிபோனிலே முடிந்துவிடும்.... வயதும் தெரியாமல் ஆளையும் நேரில் பார்க்காமல் இருந்தாலும் இண்டர்வீயூ செய்தாலும் அவர்களின் படிப்பின் கால அளவு இதற்கு முன்னால் அவர்கள வேலை செய்த இடங்களில் உள்ள எக்ஸ்பிரிய்ன்ஸின் கால அளவையும் வைத்து எடை போட்டு கழித்துவிடுவார்கள் இப்படித்தான் இங்கும் நடக்கிறது.. இளம் வய்திலே நல்ல வேலையை தேடி நன்றாக சம்பாதித்து அதை நல்ல முறையில் சேமித்து வைத்து கொள்ளா விட்டால் எதிர்காலத்தில் பிரச்சனைதான்

எம்.ஞானசேகரன் said...

மனதில் அவ்வப்போது தோன்றும் எண்ணங்களை அருமையாக வார்த்தைகளாக்கியிருக்கிறீர்கள் ஜோதிஜி. எனக்குள் ஏற்படும் எண்ணங்கள் கூட எண்ணிலடங்கா. கட்டுரை தொடரட்டும் என்னுடைய எண்ணங்களையும் பகிர்கிறேன்

ப.கந்தசாமி said...

நல்ல ஆரம்பம், ஜோதிஜி. பிரச்சினைகளை அடையாளம் காண்பதுவும் அவைகளின் காரணங்களை அலசுவதும் பிரச்சினையை தீர்ப்பதற்கு முந்தின படிகள். இதை உங்களைப் போன்ற நிர்வாகத்துறையில் இருப்பவர்கள் நனகு ஆராய்ந்து சொல்ல தகுதியுள்ளவர்கள் என்பதில் சந்தேகமில்லை. அடுத்த படிதான் மிகவும் சோகமான ஒன்று. இந்தப் பிரச்சினைக்கு என்ன தீர்வு என்று யோசிக்கும்போது மலைப்புத் தட்டுகிறதே தவிர ஆக்க பூர்வமான உபாயங்கள் என் அறிவிற்கு எட்டவில்லை. உங்கள் பதிவுகளில் அதைப்பற்றி ஏதாவது எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

Rathnavel Natarajan said...

ஐம்பது வயதுக்கு அருகே வந்தவர்களும், கடந்து சென்று கொண்டு இருப்பவர்களின் வாழ்க்கை எப்படியுள்ளது?அவர்களின் மனநிலை, வாழ்நிலை அவர்கள் தினந்தோறும் சந்திக்கும் சூழ்நிலைகள் எப்படி உள்ளது? -அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள் திரு ஜோதிஜி.

ஜோதிஜி said...

நன்றி. இதில் எழுத முடியாத ஒரு விசயத்தை சொல்ல விரும்புகின்றேன். மனைவி இல்லாமல் வாழும் கணவன் கடைசி காலத்தில் ரொம்பவே அவஸ்த்தைபடுகின்றார்கள். மேலும் ஒரு முக்கிய தகவல். நாற்பது வயதுக்கு மேல் ஆண்கள் எப்படியாகினும் மீண்டும் ஒரு காதல் பயணத்தை (முறையற்ற வழியில்) தொடங்கி விடவும் செய்கின்றார்கள். மற்றபடி வேலை வாய்ப்புகள் என்கிற ரீதியில் பார்த்தால் உடல் உழைப்பு சார்ந்தவர்களுக்கு அவரவர் தகுதிக்கு ஏற்ப இங்கே எந்நாளும் வாய்ப்பு உள்ளது. மற்றபடி ஒயிட்காலர் ஜாப் என்கிற ரீதியில் நோகாமல் வாழ விரும்புகின்றவர்களின் வாழ்க்கை தான் திண்டாட்டமாக உள்ளது.

ஜோதிஜி said...

இது தான் என் வலைபதிவில் நீங்க தரும் முதல் விமர்சனம் என்று நினைக்கின்றேன். சரியா?

ஜோதிஜி said...

இங்கேயும் அப்படித்தான் நண்பா. வாழ்வதற்கே சம்பாரிக்கும் பணம் போதாமல் இருக்கும் போது எப்படி சேமிப்பது? தொழிலாளர் வர்க்கம் மட்டுமே அதிலும் பெண்கள் மட்டுமே கொஞ்சம் உசாராக இருக்கின்றார்கள். தன் அளவில் முடிந்த அளவுக்கு சேமிப்பு விசயங்களில் கவனம் செலுத்துகின்றார்கள். மேலும் ஒரு தகவல். பெரும்பாலும் உழைக்க முடியாதவர்கள், வாய்ப்பு இல்லாதவர்கள் தங்கள் தேவைகளை மிகவும் குறைத்துக் கொள்கின்றார்கள். உயிர்வாழ்வதற்கான உணவுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது. வாடகைப் பணம் இது இரண்டுக்கும் மட்டும் போதுமான அளவுக்கு உழைத்து விடுகின்றார்கள். நான் சந்தித்த பெரும்பாலான மக்கள் அவரவர் நிலையில் மகிழ்ச்சியில் தான் இருக்கின்றார். பெரிய ஆசைகள் இன்றி வாழ்க்கை முடிந்து போகின்றது. வெளி உலகத்திற்கும் அவர்களுக்கும் கடைசி வரைக்கும் எவ்வித தொடர்பும் இருப்பதில்லை. எந்த பெரிய நகரங்களில் வாழ்ந்தால் அவர்கள் வாழ்க்கை அந்த நகரத்துடன் ஒட்டும் உறவும் இல்லாமல் தனித்த வாழ்க்கை போலவே இருக்கின்றது. இவர்களுக்கு உடல் ஆரோக்கியம் பெரிய நோய்கள் தாக்கும் போது தான் மொத்த பிரச்சனையும் உருவாகின்றது. அது வரையில் அவர்கள் வாழ்க்கை இனியதாகவே உள்ளது. பெருநகரங்களில், தொழில் நகரங்களில் அடித்தட்டு மக்களுக்கு ஏதோவொரு வகையில் தேவை இருந்து கொண்டேதான் இருக்கின்றது. சொல்லப்போனால் பற்றாக்குறை தான் நிலவுகின்றது. நீங்க சொன்னது போல எந்த நேர்முகத் தேர்வும் இருப்பதில்லை.

ஜோதிஜி said...

நன்றி. உங்கள் விமர்சனங்களை எழுதுங்க.

ஜோதிஜி said...

தீர்வு என்பது இங்கே எதுவும் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை. நான் எழுதும் ஒவ்வொரு பதிவின் வாயிலாகவும் அனுபவங்களை, அது சார்ந்த நேர்மறை எதிர்மறை எண்ணங்களை மட்டுமே எழுதப் போகின்றேன். அதை வாசிக்கும் போது உங்களுக்கு ஒரு வேளை சில புரிதல் ஏற்பட்டால் மகிழ்ச்சி.

ஜோதிஜி said...

நன்றி அய்யா.

திவாண்ணா said...

ம்ம்ம்ம்? இல்லைன்னு நினைக்கிறேன். ஒரு தொடர் முழுக்க படிச்சிருக்கேனே?

திவாண்ணா said...

உண்மை!

G.M Balasubramaniam said...

ஐம்பது வயது வருவதற்குள் அவர்கள் சண்டிக்க வேண்டி இருக்கும் சோதனைகள் ஏராளம் ஒரு பணிக்கு ஆட்களை மூன்று கட்டத்துக்கு தேர்வு செய்கிறார்கள்தொழிலாளி மேற்பார்வையாளன் அதிகாரி இவர்கள் மூவரும்தேர்வு சமயத்தில் ஏறத்தாழ ஒரே வயது ஒரே பின்பிலம் ஒரெ கனவுக்சள் ஆனால் கீழ் மட்டத்தில் தேர்வாகுபவன் மேல்மட்ட அதிகாரியாக பணிக்கு வரும் முன் ஐம்பதைத்தாண்டி கிழவனாகி விடுகிறான் அவன்வயதொத்த முதல் நிலை அதிகாரி அனுபவிக்கு எந்த ஏற்றமும் இவனுக்கு இந்த ஐம்பதுவயதிலும் கிடைக்காதுஆனால்பொறுப்புகளின் சுமை ஏறிக் கொண்டே இருக்கும் இத்தனைக்கும் வேலையில்சேரும்போது இவர்களிடம் இருக்கும் வித்தியாசம் ஏதோ பட்டப் படிப்புதான் எல்லா மட்டங்களிலும் தாழ்த்தபட்டே கவனிக்கப்பட்டே வந்திருக்கும் இவர்கள் வேலையையு மிழந்தால் .... இந்த நிலையில் இருக்கும் இவர்களைப்பற்றிசிந்தித்து இருக்கிறீர்களா

கிரி said...

இப்பெல்லாம் 40 தாண்டினால் இப்பிரச்சனை வந்து விடுகிறது.

ஐடி துறையில் 40 தாண்டினால் வேலை கிடைப்பதில்லை. நீங்க என்ன தான் திறமையானவராக இருந்தாலும், சம்பளம் நந்தி மாதிரி முன்னே நிற்கிறது.

இதற்கு குறைந்த சம்பளத்துடன் அதிகம் பிரச்சனை செய்யாத ஜூனியர் போதும் என்று நிறுவனம் நினைக்கிறது.

இது போதாதற்கு Automation வேறு.. இன்னும் கொஞ்ச வருடங்கள் சென்றால் 40 வயதினிலே! என்று கட்டுரை எழுத உங்களுக்கு தோன்றலாம் :-) .

அகலிக‌ன் said...

காடேன்பது வெறும் சிங்கம் புலி மட்டுமல்லதானே. கண்ணுக்கு தெரியாத எண்ணற்ற உயிரினங்களிலிருந்து காலுக்கு அடியில் மிதிபடும் புழூ பூச்சிகளும் சேர்ந்ததும்தானே. ஒவ்வொன்றின் தேவைக்கேற்ப அவை வெட்டியாடிக்கொள்கின்றன.நாட்டிலும் அப்படியே அவர் அவர் ஆசைகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்றப்படி அவரவர் வாழ்வை அமைத்துக்கொள்கிறனர்.

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான கட்டுரை ஜோதிஜி. உங்கள் பதிவுகள் எங்கள் பெட்டிக்கு வரும். படித்தும் விடுவதுண்டு. சமீபத்தில் குறிப்பாக இந்தத் தொடருக்குக் கருத்து பதியமுடியாமல் போனது.

நான் இப்போதுதான் சென்ற மாதம் தான் ரிட்டையர் ஆனேன். இப்போது அடுத்து வீட்டின் அருகிலுள்ள கல்லூரியில் உதவிப்பேராசிரியர் வேலையும் கிடைத்துள்ளது.

என்னைப் போன்றல்லாதோருக்கு வயது தொழில் என்பது எத்தனை பிரச்சனை என்பது நன்றாக அறிவேன். கேரளத்தில் பொதுவாகவே எல்லோருமே எதேனும் ஒரு பணியில் அரசுப்பணியில் (தனியார் பணிகள் சமீபகாலம் தான் அரசுப் பணி, அல்லது அரசு சார்ந்த பணிகளே அதிகம்... என்பதாலும் இங்கு ஏதேனும் ஒரு வழியில் சொத்துகள் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் வந்துவிடும் என்பதாலும் அத்தனை கஷ்டமில்லை எனலாம். ஆனால் தமிழ்நாட்டிலும் பிற இடங்களிலும் குறிப்பாகத் தனியார் வேலைகள் மற்றும் பிற பணிகளில் வயது ரொம்பவே பிரச்சனைதான்.

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

வயது நிச்சயமாகத் தடையாகத்தான் இருக்கிறது.

குறிப்பிட்ட வயதிற்குள் சேமிப்பு இல்லை என்றால் வாழ்க்கை மிகக் கடினம் என்பது தெள்ளத் தெளிவு. உங்கள் கட்டுரை பல நேர்காணலின் கருத்துக்களைத் தாங்கிவருவது சிறப்பு. தொடர்கிறோம்..

கீதா